அறிமுகம்

2021 இல் தொடங்கி ஐந்து ஆண்டுகளாக கம்பனை தொடர் வாசிப்பு செய்து கொண்டிருக்கும் வாசகர் குழுமம். ஸ்ரீநிவாஸ் மற்றும் ச.பார்கவி இணைந்து ஒருங்கிணைக்கின்றனர். வாரம் மூன்று அமர்வுகள் என்று ஆரம்பித்து தற்பொழுது இரு அமர்வுகளாக கிளப்ஹவுஸ் செயலியில் அமர்வுகள் தொடர்கின்றன. முதன்மையாக கோவை கம்பன் கழகம் (New Century Book House) வெளியிட்ட உரையைப் பின்பற்றி வாசித்து வருகிறோம். பிற உரைகளையும் எங்கள் விரிவான புரிதலுக்கு பயன்படுத்துகிறோம்.

ஆசிரியர் ஒருவர் வழிநடத்தி மாணவர் பின்தொடரும் பாணி இல்லாமல் நவீன இலக்கிய வாசிப்பின் போக்கில் விவாதங்களாக முன்னெடுக்கப்படுகிறது.

காண்டத்தின் முடிவில் ‘வாசிப்புக் களியாட்டு’ நிகழும், அதில் நாடக பாணியில் பாடல்களை வாசித்தும் பாடியும் குரல் வழி நடித்தும் காண்டம் முற்றோதப்படும். தொடர்ந்து உரைகளும் உரையாடல்களும் நிகழும். குறிப்பாக, கூட்டு உரை என்ற வகைமையில் இருவர் இணைந்து ஒரு தலைப்பில் ஆற்றும் உரை கவனம் பெற்றிருக்கிறது.

காவியத்தை முழுமையாக வாசிப்பது எங்கள் முதல் இலக்கு. கூட்டு வாசிப்பின் மூலமாக செவ்விலக்கியங்களை தொடர்ந்து ரசிக்கும் திறனை வளர்த்துக் கொண்டு அதன் நீண்ட மரபை பேணித் தொடரவும் முயன்று வருகிறோம்.

பொதுவாக காவியங்களிலும், குறிப்பாக கம்பனுக்காகவும் எழுந்த பழைய நூல்களை முறையாக மீட்டுத் தொகுத்து வருங்கால வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்காக காப்பகப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

தொடர்புக்கு – imbarvari@gmail.com