புதுப்புனல் 566
நேற்றைய அமர்வில் படைக்காட்சிப் படலத்தை தொடங்கி அதன் முதல் 28 பாடல்களை பேசினோம். முன்னரே வாசித்துவரச் சொல்லப்பட்டிருந்ததால் பாடல்களை முழுமையாக தொடக்கத்திலேயே வாசித்து நேரடியாக உரையாடலுக்குள் நுழைந்தோம். Lakshmi Narayanan அமர்வை மட்டுறுத்தினார்.
முதற்போர் புரி படலத்தில் இராவணன் அனுப்பிய தூதர் உலகம் முழுதும் இருந்து அரக்கர் என இருப்பவர் அனைவரையும் படையெனத் திரட்டி அழைத்து வந்துள்ளனர். மைந்தன் இறப்புக்குப் பின்பான மனநிலையில் இருக்கும் இராவணன் சிறிய உற்சாகத்துடன் கோபுரமேறி அவர்கள் இலங்கை நுழைவதை காண்பதும், தூதர்கள் வரும் அரக்கர்களின் பின்னணியை அவனுக்குச் சொல்வதும் நேற்றைய பாடல்கள். இரண்டு பகுதிகளாகப் பேசினோம்.
1.
9247-9255
‘எங்கு வந்துள்ளது?’ என வினவும் இராவணனிடம், ‘இன்ன இடமென்றில்லை, ஊழியிறுதியில் கடலேழும் பொங்கி உலகில் இடமில்லை என்பதுபோல வந்து நிறைகின்றன’ என்கிறார்கள் தூதுவர். அதன் புழுதி விண்ணைத் தொட வானவர் மண்ணில் நடப்பதாக உணர்கிறார்கள். கண்ணுற அருமை காணாக் கற்பத்தின் முடிவில் கார்போல் அந்தச் சேனை இலங்கை நோக்கி வந்தது.
மேருவென திகழும் வாயில்களினூடாக நுழையும் அச்சேனை யமன் கார்க்கருங்கடலை உலகம் சுமை தாங்காது என ஓரிடத்தில் சேமிப்பது போன்றது. வாயில் வழி செல்ல காத்திருக்கவேண்டுமென மதில் வழி தாவி உள்செல்லும் சேனை அண்டம் முழுதும் நிறைந்த கருக்கிளர்மேகங்கள் ஒன்றாக கலந்ததென்றானது.
நுழைந்து சேரும் சேனையை கோபுரமேறி காணும் இராவணன் அதை வரன்முறை பார்த்து முழுதாக காண்பேன் எனும் வேட்கை கொண்டிருக்கிறான். ஏழுவேலைகளையும் கணத்தில் பார்ப்பேன் எனும் ஆவல் கொண்ட பேதை அவன். வேத வேதாந்தங்களின் பொருளைக் கூறுவது போல உணர்வு கூட்டி இராவணனுக்கு அச்சேனையை தூதுவர் சொல்லத் தொடங்குகின்றனர்.
*
*உலகினுக்கு உலகு போய்ப்போய், ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற என்ற இடம் பலருக்கும் யோசிக்க வைத்தது. இருக்கும் உலகிற்குள் இன்னொரு புதிய உலகம் என இச்சேனை வந்து நிறைய பழையது ஒதுங்குகிறது. நிலவும் மீன்களும் நீங்க, கதிரோன் அஞ்சி தன் வழி மாற்றி அப்பால் செல்கிறான். கணக்கற்ற கருங்கடலும் கார்மேகமும் என இச்சேனை மாறி மாறி சொல்லப்படுகிறது. வழியிலுள்ள அனைத்தையும் அலைத்துப் புரட்டிக்கொண்டு அழிவின் ஓலத்துடன் நிலம் நிறையும் சாகரம். அணைவதும் அசைவதும் நிகழ்வதும் நுழைவதும் தெரியாமல் செறிந்து ஒளிவான் மறைக்கும் கருமேகப்பொதிகள். ஒதுங்கும் உலகில் பெருகும் உலகமானது இராவணன் மனம். பெருகுவது சேனை ஒதுங்குவது எது?
*படைப்புறப்பாடுகள் பலமுறை பார்த்திருந்தாலும் ஓரிடத்தில் வந்து குழுமும் சேனையை அரிதாகவே காண்கிறோம். பிரம்ம சிரங்கள் வழியாக வெளிவரும் வேதமாக, குறுமுனி பருகி முறையென உமிழ்ந்த வாரியாக சேனைகள் சொல்லப்பட்டுள்ளது. அந்தணன் சொல்லாக, படைப்போன் தொன்மை கொண்டதாக, அறிவோன் சமைத்த ஞானமாக, முடிவிலாது பிறப்பதாக பண்டு அவற்றை பேசினோம். உலகம் தாங்காது யமன் ஓரிடம் சேர்க்கும் இந்தச் சேனை என்ற குறிப்பு எதிர்த்திசையில் அதை நிகழ்த்துகிறது. காலத்தின் சேகரம்! இறப்பின் காலத்தின் அறத்தின் தேவன் என்ன எடையை உலகம் தாங்கதென்றெண்ணி இந்த சேமிப்பை நிகழ்த்தினான். இதுவரை காலம் சேர்த்தது. ‘இதுவரை’யை ‘இனியில்லை’யை காலம் ஓரிடம் கொண்டுவந்து கொட்டுகிறது.
*மதில் ஏறி கடப்பது முதல்போர் புரி படலத்தில் வானரர் மதிலேறி கடப்பதை நினைவூட்டுவதை கெளரி குறிப்பிட்டார்.
*கோபுரமேறிய இராவணன் சேனையை முழுதும் காணும் மனநிலையுடன் பேதையென காட்டப்படுவதும், அரக்கச்சேனையின் வருகை ஞானோபதேசம் போல வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார் போல் தூதுவர் விவரிப்பதும் ஏன் என கேட்கப்பட்டது. கிட்கிந்தா காண்டத்தின் தானை காண் படலத்தில் வானரச் சேனையின் வருகையைக் காணும் இராமன் இலக்குவனிடம் சொல்வது இது புலன்களால் அறியமுடியாதது, பிரக்ஞையால் தொகுத்துக்கொள்ள இயலாதது, தருமம் வெல்லும், சீதையை மீட்போம், தாமதமின்றி ஆவதைச் செய்வோம் என சொல்லும் மனநிலையிலிருந்து இது வேறுவகையில் சொல்லப்பட்டுள்ளது. தலைவன் சேனையைக் காணும் தருணம் இப்படி வரையறுக்கப்பட்டு கையாளப்படுவதும், அதில் இங்கு இராவணன் மனநிலையின் தனித்தன்மையும் என்ன ஏன் என்பது கேட்கப்பட்டது.
மகன் இறப்பிற்குப் பின் தனித்து கலங்கி நிற்பவனுக்கு, கடைசி நம்பிக்கையாக இச்சேனையை எதிர்நோக்குபவனுக்கு அதன் வருகை எளியதல்ல. ஞானமாக, தொடக்கமும் முடிவும் இல்லாததாக, எத்தனை சொல்லியும் சொல்லிமுடிக்கப்படாதாக, உலக சாரத்தை விளக்குவதாக என்றெல்லாம் நண்பர்கள் அதற்கு பொருள் சேர்த்தனர். அந்தத் தருணம் இன்னும் விரிந்துகொண்டேயுள்ளது.
2.
தூதுவர்கள் ஒவ்வொரு சேனையாக அறிமுகப்படுத்திச் செல்லும் பகுதி.
விவாதம் எப்போதுமே முக்கியமற்றதென தோன்றும் வரிகள், அவதானிப்புகளில் இருந்து தொடங்கி பேசப்பேச விரிந்த நோக்குக்கு வகுத்துரைத்தல்களுக்குச் செல்லும்.
9256-9274, வரையான 19 பாடல்களின் முதல் சுருக்க மதிப்பீட்டை பார்கவி அளித்தார். பல வண்ணங்களிலான அசுர குலத்தவர் பல மூலங்கள் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். பெரும்பகுதி விவாதம் இப்பகுதிக்கென நிகழ்ந்தது.
தனிப்பட்ட குணாதிசயங்கள், மெய்ப்பாடுகள், படைக்கலன்கள், போர்முகம் ஏறிவரும் உணர்வுநிலை என அசுரர் சித்திரம் பிற படலங்களில் சொல்லப்படுகையில் இப்படலம் இன்னும் விரிந்த அருவமான நிலைகளில் இவர்களைக் காட்டுகிறது. எங்கிருந்து வருகின்றனர், பிறப்பின் மூலம், தேவர்களுடன் கொண்ட முரண் போன்றவைச் சொல்லப்பட்டாலும் அவை தாண்டி இவர்கள் எழுப்பும் உணர்வுநிலை என்ன என்பதை பேச முயன்றோம்.
சில பிரத்யேகமான சித்தரிப்புகள் தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு அசுர குலமும் தேவர்களுடன் ஒருவகை போரில் முரண்பாட்டில் இருப்பதாக காட்டப்படுவது. சிலர் அன்னையின் மைந்தர்களாக வர, சிலர் முதுதாதை பிரம்மன் எழுப்பும் கோரிக்கைக்கு மனமிரங்கி விலகி வேறிடம் செல்கின்றார்கள். எமன் வந்து கொண்டேயிருக்கிறான். அன்னையை கொல்லும் பாவிகள் ஒரு எல்லை என்றால், அத்தனை தீதிலாத பாற்கடல் அருந்தும் அரக்கரில் ஆதித்யர் போன்றவர் மறு எல்லை.
ஏழு பெருந்தீவுகளில் தொடங்கும் சித்தரிப்பு, பாதாளத்துடன் தொடர்புடையவர்கள் நோக்கிச் சென்று, காளியின் சினத்திலும் ஈசன் மிதிக்க எழுந்த காலனின் இரத்தத்திலும் எழுந்தவர்கள் என இன்னும் தூய கருத்துநிலைகளுக்குச் சென்றது. நிருதி, வராகன், நெற்றிக்கண் போன்ற ஊற்றுகள். இப்பகுதி கற்பனைகளின் உக்கிரம் அனைவரிலும் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்ததை காண முடிந்தது. வடவை அனலும் ஆலகாலமும் முயங்கி எழுந்தவர்களை பேசும்போது பார்கவி அக்னியின் தத்துவமும் நஞ்சின் தத்துவமும் இணைந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.
இக்காவியம் நன்று தீதென அறுதியாக பிரிக்க ஆற்றாத விழுமிய முயக்கங்கள் வழி கதை நடத்துவது என்றாலும், நன்று தீது அசுரர் தேவர் போன்ற இருமைகள் இருந்துகொண்டுமிருக்கிறது. இந்தப் பகுதி முழுமுற்றான தீமை இருள் என ஒன்றிருந்தால் அதை எப்படியெல்லாம் உருவகிக்கவும் தத்துவப்படுத்தவும் இயலும் என முயன்றிருப்பதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு தனிப் பாடலும் தீமை மற்றும் இருளின் தனிப் பிரபஞ்சமாக இன்னும் பெரியக் கதைக்கான விதை போன்ற வடிவமாக மட்டும் அளிக்கப்பட்டிருப்பதும் அதைக் காட்டுகிறது.
பார்கவி இதன் கூறுகளுக்கு மேலதிக வாசிப்பை முன்வைத்து கேள்விகளை எழுப்பினார். மீண்டும் தீவு மக்களைச் சொல்லும் முதல் பாடல்களில் என்ன உள்ளது என பேச முற்பட்டோம். ஒவ்வொருருவரும் தேவருக்கு எதிராக ஏதேனும் ஆற்றி வென்றிருந்தனர், கை ஓங்கியிருந்தனர். முன்னர் அவ்விடங்கள் பூகோள ரீதியான துல்லியம் கொண்டவை அல்ல, தொன்ம அடிப்படை மட்டுமே கொண்டவை எனக் கடந்திருந்தோம். மறுமுறை வரும்போது அந்தத் தீவுகளின் பெயர்களுக்கும் அவர்களின் இயல்புக்கும் உள்ளார்ந்த இணைப்பொன்றிருப்பதை கவனிக்க முடிந்தது. பின்னர் வரும் முறைமீறி அசுரகுரு வெள்ளியில் பிறந்தவர்களைச் சொல்லும் பாடலை முன்னர் கொண்டுவந்தால் இதில் ஒரு வரிசை உருவாகிறாதா என பார்கவி வினவினார். எதிர்மறை அம்சங்களின் தத்துவமாக இது விரிந்து கிடப்பதும், அதில் வெண்மையும் நன்மையும் கண் சிமிட்டுவதும் என பிரமிப்பூட்டுபவையாக, தீமை பற்றி யோசிக்கும் அடிப்படைகளை வினவுவதாக சென்றுகொண்டிருந்தது இப்பகுதி.
அதையே நீட்டி ஒரு rhetoric கேள்வியாக எண்ணங்களாக பார்கவி முன்வைத்தார். “ஏன் இவ்வசுரர்கள் வெளிவராது அவர்களிடத்தில் இருந்தார்கள் என்பதற்கு காரணங்கள் சொல்லப்பட்டன. பிரம்மன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறார் என்பது போன்று. மறுபுறம், ஏன் வெளிவராது இருக்கிறோம் என்பதற்கான முடிவை தாங்களே எடுப்பவர்கள் போல சிலர் இருக்கின்றனர். தனையனை இழந்த இராவணன் இத்தனை வகை கீழ்மைகளுடன் இருளுடன் அசுரரை பழிக்கு திரட்டிக் கொள்கிறான் என்பதே அவனது உளநிலையைக் காட்டும் ஒரு பெரிய metaphor எனத் தோன்றுகிறது.
இப்போர் சீதைக்கென நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இங்கு காட்டப்படும் அசுரர்கள் அவர்களின் சமூகம் தன்னளவில் முழுமை கொண்டதெனக் காட்டப்படுகிறது. சீதை இல்லாவிட்டால் இவர்கள் தங்களுக்குள் இணக்கமான ஒரு வாழ்வை பிரபஞ்சத்தை நிகழ்த்திக் கொண்டிருந்திருப்பார்களா? இங்கு இவர்களது தவமும் ஞானமுமாக சொல்லப்படுவதெல்லாம் உண்மையில் அப்படி பொருள்படுபவைதானா?“ என்றார்.
இவ்வுலகம் நெறிகள் சிலவற்றை வகுத்து இயைவாழ்வொன்றை வாழ எண்ண, அவற்றுக்கு மறுதிசையில் அதை அறைகூவலாக கொண்டிருக்கிறார்கள் இவர்கள். மீண்டும் மீண்டும் சொல்லப்படும் தேவாசுரப் போருக்கு நாம் அளிக்கும் பொருள் என்ன? வாழ்க்கையை வாழ விதித்தது இங்கு இந்தப் பிரிவையும் ஆக்கிவைத்தது, அல்லது அப்படி காணவைத்தது. இதன் ஒவ்வொரு கற்பனையும் நம் மனதில் எப்படி விரிகிறதென பேசவேண்டும் எனக் கேட்டோம்.
சில தனிச்சொற்களை விவரிப்புகளை கவனித்தோம். முதலை நக்கரமாக வந்தது. கூந்தலுக்கு ஐம்பால். மூன்று கரங்கள் கொண்டவர்கள். வேதாளக் கரத்தினர். நிருதியின் புதல்வர் என சில அரக்கர்கள் வருகின்றனர். புதிதாகச் சொல்லப்படும் அந்த திசைதேவனின் பின்னணி, குணம் என்ன என கேட்டுக்கொண்டோம். அன்றிலுக்கும் மேருவுக்கும் என்ன தொடர்பு? பரசுராமப் படலத்திலும் இதைப் பார்த்தோமே…
நிறைவில் கவர்ந்த பாடல் சித்தரிப்புகளை பகிர்ந்துகொண்டோம். மந்தமாருதம் ஊரும் கந்தமாதனத்தில் ஆலகாலத்துடன் தோன்றும் அரக்கர் சித்திரம் பற்றி பேசினோம். இருப்பது அறியாமல் இனிமையும் அப்பாவித்தனமும் நிறைந்த இடத்திலிருந்து, நாமே அறியாது நம்மை அச்சுறுத்தியபடி எழும் நஞ்சாக பார்கவி அதை விவரித்தார். பலருக்கும் அக்கற்பனை திறப்பாக இருந்தது. இராவணன் தனியாக கோபுரமேறி அவ்வருகையை காணும் காட்சி வடிவமைப்பு என்னைக் கவர்ந்திருந்தது. அவன் மனத்தை அதிகமும் சொல்லாமல் சென்றுகொண்டிருக்கிறார். நான் அதை படை வழியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவனது மூதாதையர் என எண்ணவைக்கின்றனர்.
நல்லதொரு அமர்வு. எனவே இதன் recordingஐ clubhouse சேமிக்கவில்லை.
***
புதுப்புனல் 567
இன்றும் நல்லதொரு அமர்வு. படைக்காட்சிப் படலத்தை முழுமை செய்தோம். பாடல் வாசிப்பில்லாமல் நேரடி விவாதம் மட்டுமான அமர்வு. நான் மட்டுறுத்தினேன்.
9275 – 9298. படை விவரத்தை இராவணனுக்குச் சொல்லி முடிக்க, அவன் படைத்தலைவர்களை வரச்செய்து வரச்சொன்னதன் போர்க்காரணத்தை சொல்வதும், மாலியவான் பகைவர் தரப்பை விவரிப்பதும், இனியும் போரே என்ற முடிவு எட்டப்படுவதும் இன்றைக்கான பகுதி.
எதை விவாதிப்பதற்கான கவனத்தில் கொள்வது என சில இடங்களை தொடக்கத்திலே குறித்துக்கொண்டோம். இம்முறை பின்னாலிருந்து. இந்தப் படலம் இத்தனைக்குப் பிறகும் போரே என்ற அந்த முடிவு எட்டப்படுவது சரியா தவறா என்ற ஒற்றைப்படையான கேள்வியை முன்வைத்து ஒவ்வொருவரும் தங்கள் முதற்கட்ட எண்ணங்களைச் சொல்லலாயினர்.
இனி வேறு முடிவு எடுக்கவியலாது என்ற நிலையிலிருந்து அதைத் தேர்ந்திருப்பதாக, இராவணன் நிலையில் ஒவ்வொருவரும் தங்களை உணர்ந்து சொல்வதாகப் பட்டது. கண்முன் இருப்பது மைந்தன் அற்று தனிமை சூழ்ந்த இராவணன்.
*
அவ்விடத்திலிருந்து தாவி நாளின் முதல் சில பாடல்களுக்கு வந்தோம். 1000 வெள்ளத்திற்கும் மேல் என தானை எண்ணிக்கை சொல்லப்பட்ட பின்னர், படைத்தலைவர்களை வரச்சொல்லும் இராவணன் அவர்களை இனிது உபசரித்து, அவர்களின் குடும்ப நலன் உசாவுகிறான். தருணத்திற்கு புறம்பாகவும், இராவணனின் ஆளுமைக்கு விசித்திரமானதாகவும் வரும் இடம் இது.
படலம் நிறைவுறுகையில் மாலியவான் பகைவரின் திறம் சொல்வதை முழுக்க மூலபல அவை ஆழ்ந்து கேட்டறிகிறது. அதன் பிரதிநிதியான வன்னி இராவணனின் இதுவரையிலான பங்கேற்பின்மை குறித்து கேட்க இராவணன் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. மூதோன் மாலியவான் சீதையை விடல் எனச் சொல்வதை போரின் துவக்கத்தில் சரியான உபாயம் என அடிக்கோடிடும் அவர்கள், இத்தனை முதன்மை வீரரை இழந்த பிறகு, மைந்தன் இந்திரசித்தனும் சென்ற பிறகு, இனி அவர்கள் மீளமாட்டர்கள், இழக்க ஏதுமில்லை என்றான பிறகு சீதையை விடுவது பொருளற்றது என்றும் இனி முழு அழிவை முனைப்புடன் நிகழ்த்துவதே என்றும் உறுதி பூண்கிறார்கள்.
மூலபலத் தானைக்கும் இராவணனுக்குமான உறவு எத்தகையது என்பது அடுத்த கேள்வி.
பல கோணங்களிலும் அதைப் பேச முயன்றோம். முதலில் அந்த விருந்தோம்பல். இப்படியான நெருக்கடியிலும் முறைமைகளை விரும்பி செய்யும் மனம் கொண்டவனாக, இனிய உபச்சாரங்கள் இயற்றுபவனாக இவன் காட்டப்படுவது எதனால்?
தன் விழைவு நிறைவேற குழையும் இராவணனை மாரீசன், சீதை, அங்கதன், கும்பன் முதலியோர் முன் கண்டுள்ளோம். அப்படியொரு குழைவா இது? இனியும் பகை முடிக்க விரும்பும் தலைவன் தன் சேனை முன் சமநிலையை நடிப்பதா?
தன் மகனை இழந்தபிறகு அவர்களின் குடும்பத்தினரைப் பற்றி எப்படி அவனால் கேட்க முடிகிறது? நல்வரவும் சொல்கிறான். தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு இவற்றை ஆற்றுகிறானா? ஆம். தந்தை எனும் நிலையிலிருந்து நோக்குகையில் உண்மையிலேயே இந்தப் படைசம்பத்து திறந்து இங்கு குழுமியிருப்பது மைந்தனை இழந்த மனதிற்கு மூதாதையர் துணையென வந்திருக்கலாம். கோபுரமேறி காணும் பேதைத்தன்மையும், முகமன்களும் எல்லாம் அவன் மனம் உவந்தே இதைச் செய்கிறான் என்பதாக உள்ளது.
ஆனால் அந்த மனம் கல் அல்ல. விண்கிழிய அழுததை முந்தையப் படலத்தில் பார்க்கிறோம். இத்தனை நீட்டி இராம துயரத்தை காவியம் முழுதும் பரத்தி வைக்கும் ஆசிரியன், இராவணன் அடைந்த துயரை அடைந்தவர் யார் என்கிறான். இதிலிருப்பது அத்துன்பங்களிலிருந்தும் நன்கு அடங்கி ஆழமான அமைதியும் சமநிலை என காட்சிதரும் அவனது மேலுள்ளம் மட்டுமே. ஆழத்தில் துயரம் அப்படியே தான் இருக்கிறது. பிறர் நெருங்கவே முடியாத அனைத்தும் சென்று மறையும் கருந்துளை என ஆகிவிட்ட ஆழத்தில். சேனை உள்நுழைகையில் உலகிற்கு உலகம் ஒதுங்கி நுழைய, ஒதுங்குவது அந்த ஆழம்தான். ஆனால் அவன் பொருட்டு வந்து அலையடிப்பவர்களிடம் இனி செய்வதற்குரியன தேரும் சூழும் மனதுடன் வந்து அமர்ந்திருக்கிறான்.
*
இராவணன் மூலபலத் தானை உறவு. நண்பர்கள் தேவர்கள் இவர்களுக்கு பொது எதிரிகள் என்றானவர்கள், அவன் வெற்றியில் உதவியவர்கள் என்று பலவகையிலும் இவ்வுறவை விளக்க முற்பட்டனர்.
இராவணனே விரும்பி முறைமைகள் செய்ய எதிர்நோக்குவது மூலபலத்தவரின் குலமுதன்மையை காட்டுவது. அவர்களின் சொல்லுரிமை வருவதும் அப்படியே. வருபவர்கள் தன் துயரை புரிந்துகொள்ள வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இராவணனில் எழுந்திருக்கலாம். அவன் வினவ தங்கள் நலமுரைத்த பின்னர், அவன் கருத்தை உணர விழைபவர்களாய் அவன் தரப்பு மாதரார் பிள்ளைகள் உட்பட அவனும் வருந்தியிருப்பதை வினவுகின்றனர். விவாதம் தொடங்கி முடிவு எட்டப்படுகிறது.
தனிப்பட்டவர்களாக இராவணன் தாள் பணிபவர்களாகவும், ஒட்டுமொத்தமாக முக்கியத் தருணங்கள் மீது இறுதிச்சொல் சிலவற்றை சொல்லும் குலமுதன்மை கொண்டவர்களாகவும் இவர்கள் காட்சியளிக்கின்றனர். Race வழியான ஒருங்கிணைப்பு. அதற்கு மட்டுமே உரித்தான இரத்தபந்தனத்தின் தீவிரம். முதல் போரின் வீழ்ச்சிக்குப் பிறகே இவர்களை தருவிக்க ஆளனுப்பிவிட்டான் எனினும், இந்திரசித்தன் மறைந்த பிறகு இவர்கள் வருகை தருவது தருணத்தின் தீவிரத்திற்கேற்ப பொருள் மீவது.
பொருளற்றவையாக இருக்கலாம், இவற்றையும் பேசிக்கொண்டோம். தானையின் குலமுதன்மை, இராவணனின் உள்ளார்ந்த பணிவு என இவ்வுறவில் பரஸ்பர மரியாதை தென்படுகிறதே. ஒருவேளை இந்தச் சேனை முன்னரே வந்திருந்தால், மாலியவான் அறிவுரையை அங்கீகரிக்கும் மூலபலத்தினர் இராவணன் சீதையை விட வேண்டும் என அவனுக்கு அறிவுருத்தியிருப்பார்களா? குலம் கொடிவழி நாசமாகும். கிளையோடும் அழிவாய் என அவனுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. தனது கான்முளையையும் இழந்தவன் முன்பெப்போதையும் விட இப்போது இதை நன்கு உணர்ந்திருக்கக்கூடும். மூலபலத்தர் தனி மனிதனின் காமம் குலத்தை விட மேம்பட்டதல்ல என்று சொல்லியிருப்பார்களா? அதை இராவணன் கேட்டிருக்கக்கூடுமா?
இல்லை எனும் பதிலே இராவணன் அளிப்பது. நண்பர்களால் உணர்வுகள் கலந்தே இதை பேச இயன்றது. அக்ககுமாரன் போன்ற புதல்வரில் கடைக்குட்டி ஒருவன் மடிய அது இராவணனுக்கு மனதில் பதியாதது, இந்திரசித்தன் போல தோன்றல் ஒருவன் இருப்பதனால் (பார்கவி). அவன் இறப்பின் பாதிப்பு எப்படி ஆட்கொள்கிறது என சொல்லிமுடியாதது. இத்தருணத்தில் சீதையை விட்டால், மகனின் ஈமக்கடன் முடித்து, அரசு துறந்து காடேகலாம். செய்வதற்கிருப்பது அதுவே. ஆம் அத்துடன் இராவணன் தற்பம் அழிந்து இராவணன் அல்லாமலாவான். இப்போதும் எஞ்சுவதொன்றுமில்லை தான். அவன் தரப்பில் நின்று பார்க்கையில் அதுதான் முறையானது என்று தங்களுக்குத் தோன்றுவதாக பலரும் சொல்லினர். இங்கிருந்து அச்சோகத்தின் மையமெனத் திகழும் இடத்தை சென்றடைந்தோம்.
*
அருமை பெத்த மகன். அவன் போரில் இறந்ததுடன் முடிந்திருந்தால், அது வீரமரணம், அழுகையுடன் கடந்து சென்றிருக்கலாம். இன்னொரு இழப்பாக ஆகியிருக்கலாம். ஆனால் தலையை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இறுதிக்கடன்கள் முடிக்காமல் விண்ணுலகம் ஏறாது இங்கு எங்கோ அவனைச் சூழ்ந்திருக்கிறான். தன் கையால் தன் ஆன்மத்தொடர்ச்சியின் பூத உடலை ஏந்தி ஊர் நுழைந்தவன். உடலை தைலத்தில் போட்டுவிட்டு வந்து இவர்களிடம் மனைவியும் மக்களும் நலமா எனக் கேட்பவன் யார்?
இந்திரசித்தனின் தலையை எடுத்து வருவது மூலத்தில் இல்லாதது. மூலத்தில் இல்லாத ஒன்றை மீள எழுதுபவனுக்கு இன்னும் மனவிரிவும் ஆழமான புரிதல்களுமே வேண்டும். குகனில் வீடணனில் அனுமனில் எல்லாம் அதைக் காட்டியவன், எதிரிக்கும் வரலாகாது என்று நடுங்க வைக்கும் துயரை அளிப்பவனாக நாயகனை காட்டுகிறான். சீதையை இழந்தவன், இலக்குவன் இறக்கக் கண்டவன் இதைச் செய்ய காரணங்கள் இருக்கலாம். அறம் தன்னை பின்தொடரக் கண்டவன் இதை ஏற்பதை எப்படி புரிந்துகொள்வது?
இலியட்டில் ட்ராய் அரசன் ப்ரியம் தன் மகனைக் கொன்ற அக்கிலீசிடம் தனித்து வந்து பேசி அவன் சடலத்தை இறுதிச் சடங்குகளுக்காக பெற்றுச் செல்கிறான். அக்கிலீஸ் உடலை அளித்து இரவின் தனிமையில் புதல்வனை இழந்தவனுடன் இருக்கிறான். மைந்தனைக் கொன்றவனிடம் ப்ரியம் கேட்க சில இருந்ததாக அது சொல்கிறது. கடவுளரே காமமும் தடுமாற்றங்களும் கொண்டவர்களாக சித்தரிக்கப்படுவதும், இராமாயணத்துக்கும் நூற்றாண்டுகள் தொன்மை கொண்ட காட்டுமிராண்டித் தன்மைகள் நிறைந்ததுமான காப்பியத்தின் உச்சதுயரில் இரு பாத்திரங்கள் தங்கள் விலங்குத்தன்மையைத் துறந்து, மற்றவர் துயரை பரஸ்பரம் புரிந்துகொள்கின்றனர். மீண்டும் போரே என்றாலும் மீறமுடியாத எல்லைகள், பணியவேண்டிய இடங்கள் மனிதனுக்கு உள்ளது.
வேறு காப்பியம், வேறு பாத்திரங்கள் தான். ஆனால் இத்தனை உன்னதமாக்கலுக்கு இடையில் ஆதி விலங்கொன்று இதன் சிறந்த பாத்திரங்கள் வழியாக கம்பனில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறதே? தலை எடுத்து வருவதாக மாற்றி எழுதுபவன் உத்தேசிப்பது என்ன?
இந்திரசித்தன் செய்தவற்றை மீள யோசித்துப் பார்க்க வேண்டியதுதான். ஆனால்… என்ற வகையில் இவ்விவாதம் சென்றது.
*
இதனிடையே மாலியவானின் உரை குறித்தும் உரையாடினோம். காரணம் வினவுபவர்களிடம் ஒற்றை வரியில் சீதை காதலில் விழுந்த விவரத்தை எல்லாம் இராவணன் மூலபலத் தரப்பினரிடம் சொன்னான். என்ன சொன்னான் எப்படி சொல்லியிருப்பான் என்பதை அவர் கற்பனைக்கு விட்டிருப்பது மிக முக்கியமானது.
அவையை அடக்கி வன்னி எதிர்த்தரப்பினர் குறித்து கேட்க மாலியவான் விரித்துரைக்கிறார். உரையின் உள்ளடக்கம் ஏற்கனவே நாமறிந்த பராக்கிரமங்களின் தொகையாக சொல்லப்படுகிறது. இங்கு இவர்களுக்கு சொல்லப்படவேண்டும் என்பது கடந்து கூறுமுறையிலும் நோக்கிலும் இதற்கு தனித்துவம் ஏதுமுண்டா எனப் பேசிக்கொண்டோம். இடையில் வந்திருக்கும் மூலபலத் தரப்பையும் அங்கீகரித்து அதற்கு இணையாக குரங்குகளின் செயல்களையும் சொல்கிறார். நீங்கள் அறிந்திலீரோ போன்ற வெளிப்பாட்டில் இருக்கும் அழகை நண்பர்கள் சுட்டிக்காட்டினர்.
நிறைவில் சீதையெனும் பத்தினிப் பொருட்டால் இது இங்கு விதி விளைவித்தது என்று சொல்லி, நீங்களோ அவர்களோ வெல்க, வேறு என்ன என முடிக்கும் உரையில் உள்ளார்ந்த விலகல் ஒன்று இங்கு குடியேறியிருக்கிறது. முதுதாதை சொல்லவேண்டும் என்பதற்காக மட்டும் சொல்கிறேன். இனிச் சொல்லி பயனில்லை, அயலிருந்து பார்க்கத் தொடங்கி நீணாளாகிறது எனும் முதியவனின் விலகல். இனி தானும் அவனும் மட்டுமே இருக்கிறோம். ஆனால் இராவணன் படும் துயரம் அனைத்தையும் அருகிருந்து பார்த்து, இரக்கமும் கொண்டு, தடுக்கவியலாத அழிவை ஒன்றும் செய்யவொண்ணாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பாத்திரம்.
*
அவனது மைந்தன் துயரை எங்கோ ஆழ்ந்து அறிகிறது அச்சேனை என்பதே என் புரிதல்.
மதுநீகா இந்திரசித்து கும்பன் முதலான வீரர்களை இராவணனின் பத்து முகங்களாக வைத்துப் பார்க்கும் நோக்கை ஜெ பரிந்துரைத்ததை கூறினார். மாலியவான் உரையின் விராதன் உள்ளிட்ட மறைந்த வீரர் பட்டியலுடன் அதை இணைத்துக்கொள்வதாகச் சொன்னார்.
தீர்ப்பு நாள் வருகையில் அறத்தின் நிறம் மாறுவதையும், மறம் அறத்திற்கு அடிப்படை ஆவதையும், தலை எடுத்துச் செல்வது இராவணனை உயிரோடு கொல்வதான போர் உத்தி என்றும், இராமன் இராவணன் எனும் இரு நாணயங்களின் எதிரெதிர் பாதையின் வழிகள் இவை என்றும் சங்கரன் தன் தரப்பை விரிவாக முன்வைத்தார். அதிலிருக்கும் இருமைகள் சார்ந்த அடிப்படைப் புரிதல்களில் அது அத்தனை தெளிவானது இல்லை எனச் சொன்னேன். விரிவாக பேசப்படவேண்டியது.
மூலபலத் தானை எனும் உருவகம் இப்படலம் வழியாக உருவாக்கப்பட்டிருப்பதையும் அது தொடர்ந்து வளர்வதையும், அடுத்த நான்கு ஐந்து படலங்களுக்கு இப்போரின் கதை நடத்தப்படுவதையும் கவனிக்கவேண்டும் எனவும் பேசிக்கொண்டோம்.
நல்ல அமர்வு.

Leave a Reply