
நன்றி: விக்கிப்பீடியா
நான் இம்பர்வாரி குழுவில் அதிகாயன் வதைப் படலம் குறித்து ஒரு உரை ஆற்றுவதற்காக அதிகாயனை பற்றிய குறிப்புகள் நூல்களில் தேடிக்கொண்டிருந்தேன். கும்பகர்ணன், வாலி, இந்திரஜித்தின் போன்ற பெரும் வீரர்களை பற்றி குறிப்புகள் கிடைத்தது. ஆனால் மாயத்தை பயன்படுத்தாமல் நேர்வழியில் போரிட்ட அதிகாயன் பற்றி யாரும் அதிகமாக எழுதவில்லை. எனக்கு அது வருத்தமாக இருந்தது. இதுவரை கம்பராமாயணம் குறித்து எழுதும் தைரியம் இல்லாத நான் அதிகாயனுக்காக எழுதுகிறேன்.
ஒரு மன்னனிடம் அறம் இருந்தால் மட்டுமே அவன் நிலையான அரசை நிறுவ முடியும் என்பதை புறநானூற்றிலும் பார்க்கலாம்
கடுஞ்சினத்த கொல்களிரும்,கதழ்பரிய கலிமாவும்,
நெடுங்கொடிய நிமிர்த்தேரும்,நெஞ்சுடைய புகல்மறவரும்,என
நான்குடன் மாண்டது ஆயினும்,மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்.
இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், ஒப்பற்ற யானைப்படையும், விரைவில் பாய்கின்ற குதிரைப்படையும் தேர் மற்றும் சிறந்த காலாட்படையும் இருந்தாலும் உன்னுடைய வெற்றி இவற்றால் அன்று அறத்தின் வழியை அடிப்படையாக கொண்டது உன் வெற்றி என்பதாகும். அதிகாயன் வதை படலத்தின் சாராம்சத்தை இந்த ஒரு புறநானுறு பாடல் கூறுகிறதோ என்று இந்த பாடலை வாசித்த பொழுது தோன்றியது.
அதிகாயன் வதைப் படலம் முழுவதிலும் யானைகள் விதவிதமாக கொல்லப்படுவதை மிக நீண்ட விவரணைகளுடன் கம்பர் எழுதியுள்ளார். மதம் கொண்ட யானை என்பது அரக்கர்களின் குறியீடு என்பதை நாம் சுந்தர காண்டத்தில் திரிசிடையின் கனவில், இரு சிங்கங்கள் ஒரு புலி கூட்டத்துடன் இலங்கை நோக்கி வருகிறது, முகபடாம் அணிந்த யானையின் தந்தம் தானே விழுகிறது, மயில் அந்த வனத்தை விட்டு செல்கிறது. இந்த கனவில் அரக்கர்களின் வீழ்ச்சியை யானையின் தந்தம் உதிர்வதின் மூலம் கூறப்பட்டிருப்பதுடன் ஒப்பு நோக்கலாம்.
வரம்பு இலா மதகரி உரையும் அவ்வனம்
நிரம்புற வளைந்தன; நெருக்கி நேர்ந்தன;
வரம்புஅறு பிணம்படக் கொன்ற; மாறுஇலாப்
புரம்புக இருந்தது ஓர் மயிலும், போயதால்.
ஆயிரம் யானைகளை கொன்ற ஒரு வீரனுக்குதான் பரணி பாடப்படுகிறது, ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி.
இலக்குவன், அங்கதன் மற்றும் அனுமனின் வீரத்திற்கும், போரின் உக்கிரத்திற்கும் சான்றாக இந்த யானை வதை பாடல்கள் அமைந்திருக்கிறது. இராவணன் மீண்டும் மற்றொரு யானைப்படையை தீர தீர அனுப்பி வைப்பது அவனது செல்வ நிலையும் எப்படி ஒரு வலுவான படைபலம் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துகிறது.
வான்மீகத்திலிருந்து அதிகாயன் வதைப் படலம் கம்பராமாயணத்தில் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
வான்மீகத்தில் திரிசரன் தானே அடுத்துப் போருக்கு செல்வதாக கும்பகர்ணனை இழந்த சோகத்தில் இருக்கும் இராவணனிடம் கூறி செல்கிறான். ஆனால் கம்பராமாயணத்தில் அதிகாயன் ஒரு வீர வசனத்தைப் பேசி அதாவது யாரை வேண்டுமானாலும் பயந்தவர்கள் என்று கூறுங்கள், ஏன் நீங்களே கூட பயந்து போயிருக்கலாம், ஆனால் என்னை அவ்வாறு சொல்லாதீர்கள் என்று தந்தையிடம் கூறி இலக்குவனை கொன்று வருகிறேன் என்று சூளுரைத்து செல்கிறான்.
வான்மீகத்தில் நராந்தகன், திரிசிரன், மகோதரன், தேவாந்தகன், மஹாபார்சுவன் எல்லாம் இறந்த பிறகு கடைசியாக அதிகாயன் இலக்குவனனால் கொல்லப்படுகிறான். கம்பராமாயணத்தில் அதிகாயன் கொல்லப்பட்ட பின்புதான் கும்பன், நிகும்பன், போர்மத்தன், வயமத்தன் மற்றும் நராந்தகன் கொல்லப்படுகிறார்கள். கம்பர் அதிகாயன் அதாவது ஒரு படையை தலைமை ஏற்று வந்த தலைவன் இறந்தப் பின்னும் பின்னடைந்து போகாமல் போரிடும் வீரத்தை பறைசாற்றும் அரக்கர்களின் மாண்பை காட்டுகிறார்.
அதிகாயன் ராமனிடம் நேரடியாக தைரியமான வீரர்கள் என்னுடன் போருக்கு வரலாம் என்று அழைப்பை விடுகிறான் வான்மீகத்தில், ஆனால் கம்பராமாயணத்தில் அதிகாயன் இலக்குவனுக்கு மயிடன் மூலம் தூது அனுப்புகிறான். தன் தம்பியை இழந்து எவ்வாறு இராவணன் வருந்துகிறானோ அதைப்போலவே இலக்குவனை இழந்து ராமன் வருந்த வேண்டும், எனவே தன்னுடைய போர் இலக்குவனனோடு தான் என்று நேரடியான செய்தியை அனுப்புகிறான். மேலும் அந்த செய்தியை எடுத்துச்சென்று இலக்குவனை அழைத்து வந்தால் மயிடனுக்கு பொன்னும் பொருளும் கள்ளும் யானையும் நாட்டையும் கொடுப்பதாக கூறுகிறான். கம்பர் அதிகாயன் மயிடனிடம் என்னவெல்லாம் கொடுப்பதாக சொல்கிறான் என்பதற்கு மட்டும் 13 பாடல்கள் வைத்து உள்ளார். அவன் கூறிய அனைத்தும் சுகபோக வாழ்விற்கானது. அரக்கர்கள் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை நாம் காணலாம். மேலும் அதிகாயன் இலக்குவன் தனியாக வந்தாலும் சரி தன்னுடன் யாரை வேண்டுமானாலும் அழைத்துக்கொண்டு வந்தாலும் சரி தான் காத்திருப்பதாக கூறுகிறான். அதிகாயனின் வீரத்தை கம்பர் உயர்த்திக் காட்டுவதைப் பார்க்க முடிகிறது .
வான்மீகம் மற்றும் கம்பராமாயணம் இரண்டிலுமே அதிகாயன் தன்னை விட வலிமையில் எளியவரிடம் போரிடுவதில்லை. வாலியிடம் இராமன் குற்றமாக வைத்தது அவனைவிட எளிய சுக்ரீவனிடம் தன் வீரத்தை காண்பித்தான் என்பதே .
கம்பராமாயணத்தில் மட்டுமே அதிகாயன் கைடபனின் மறுபிறப்பு என்று கூறப்படுகிறது. வான்மீகத்தில் அதிகாயன் போர்களத்தினுள் நுழைந்ததுமே கும்பகர்ணனே மீண்டும் உயிர்த்து வந்துவிட்டானோ என்று வானர வீரர்கள் அலறிக்கொண்டு ஓடுகிறார்கள். அதிகாயனின் உடல் கும்பகர்ணனின் உடலைப் போல பெரியது. இருவருக்குமான இந்த உருவ ஒற்றுமையை இன்னும் ஒரு படி மேல்சென்று கம்பன் ஒரு காலத்தில் அதிகாயனும் கும்பகர்ணனும், மது கைடபன் என்ற இரட்டையர்கள். அந்த வீரர்களின் வீரத்திற்கு உணவாக முடிவில்லாத போரை விரும்புகிறவர்கள். திருமாலிடமும் போர் செய்து அவருக்கே வரமும் தந்தவர்கள் என்றும், அவ்விருவருக்கான குண ஒற்றுமையை இந்த பிறவியிலும் காணும்படி செய்கிறார். கும்பகர்ணன் மற்றும் அதிகாயன் இருவருக்குமே குலமானம் பெரியதாக இருந்தது .
உயிர் போகும் நிலை வந்தாலும் உடன்பிறந்தவனை விட்டுவிட்டு எதிரியிடம் சேர மாட்டேன் அறத்தின் பொருட்டாக இருந்தாலும் சரி என்ற தன்னறம் உடையவனாக கும்பகர்ணன் இருந்தான் என்றால், அதிகாயனும் இறக்கும் கதி வந்தாலும் மாயத்தை போரில் பயன்படுத்துவதில்லை என்ற தன்னறம் உடையவனாக இருந்தான்.
கும்பகர்ணன் மரணத்தின் விளிம்பிலும் வெளிப்படுத்திய வீரத்தை கீழுள்ள வரிகளில் காணலாம்,
அற்று வீழ்ந்த கை அறாத வெங்கையினால்
எடுத்து அவன் ஆர்த்து ஓடிஎற்ற வீழ்ந்தன
எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம் ?
பின் நின்றார் முன் நின்றாரைக் காணலாம் பெற்றித்து ஆக,
மின் நின்ற வயிர வாளி திறந்தன ,மேனி முற்றும்;
அந் நின்ற நிலையின்,ஆற்றல் குறைந்திலன், ஆவி நீங்கான்,
பொன் நின்ற வடிம்பின் வாளிமழை எனப் பொழியும் வில்லான்
மேலே கூறப்பெற்ற வீரப் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியவன் அதிகாயன்.
வான் எலாம் பகழி, வானின் வரம்பு எலாம் பகழி,
தான் எலாம் பகழி, குன்றின் தலை எலாம் பகழி, சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி, நின்றோர் உயிர் எலாம் பகழி,
அதிகாயன் ஆகாயம், ஆகாய எல்லை, நிலவுலகம், மலை உச்சி, கடல், உயிர்கள் என்று அனைத்திலும் அவனது அம்புகளை விதைத்தான். அவனது அம்புகளால் திசைகளும் மறைந்தது.
அதிகாயனின் வீரத்தைப் பற்றி இராமனிற்கு வீடணன்தான் எடுத்துரைக்கிறான். இராவணன் படையில் உள்ள ஒவ்வொரு வீரர்களைப் பற்றியும் வீடணனே இராமனிற்கு கூறி எதிரியின் முழுத் தகவல்களைப் பகிர்ந்து தன்னுடைய முக்கிய பங்களிப்பைக் கொடுக்கிறான். வீடணன், அதிகாயன் இறந்தபொழுது அடுத்து இந்திரஜித்தனும் இறப்பான் என்று நினைக்கும் அந்த வரிகளை வாசித்தபோது வீடணனை ஒரு கல் நெஞ்சக்காரனாகத்தான் கருதினேன். ஆனால் அ.ச.ஞா அவர்கள் வீடணன் இராமனிடம் சரணடைந்தப் பின்பு அவனை இராவணனின் தம்பியாக பார்க்கக்கூடாது, அவன் இராமனிற்கு உண்மையாக இருப்பதுதான் அவனின் அறம் என்கிறார். மில்டனின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால் “THEY ALSO SERVE WHO STAND AND WAIT” இப்படி வீடணன் இராமனிற்கு பக்கபலமாக இருக்கிறான்.
இந்த படலத்தில் இலக்குவனின் அம்பைப் பற்றி கம்பர் கூறும்போது வய்வன முனிவர் சொல் அணைய வாளிகள் என்று சொல்கிறார். முனிவரின் சாபச் சொற்கள் போல அந்த அம்புகள் இருந்தது, மேலும் ஒரு குடும்பத்தை சார்ந்த அத்துணை ஆண்களும் ஒரு அம்பினால் இறக்கிறார்கள். பெண்பாவம் குலநாசம் என்பதே அதிகாயன் வதை படலத்தின் முக்கிய கருவாக பார்க்கலாம். தாருகன், காலன், குலிசன், காலசங்கன், மாலி, மருத்தன், தேவாந்தகன், நராந்தகன், திரிசரன், கும்பன், நிகும்பன், அதிகாயன் என்று இந்திரஜித்தனை தவிர ஒரு தலைமுறை முற்றிலும் அழிந்ததைப் பார்க்கலாம்.
தாதையை ,தம்முனை, தம்பியை, தனிக்
காதலை ,பேரனை, மருகனை, களத்து
ஊதையின் ஒரு கணை உருவ ,மாண்டனர்
சீதை என்று ஒரு கொடுங்க் கூற்றம் தேடினார்.
முனிவரின் சாபச் சொற்கள் என்பதை சீதையின் சாபச் சொற்கள் என்றே பொருள் கொள்ளலாம். அனுமன் சுந்தர காண்டத்தில் சீதையை பற்றி,
வெங்கணல் முழுகியும் புலன்கள் வீக்கியும்
நுங்குவ , அருந்துவ, நீக்கி நோற்பவர்
எங்கு உளர்? குலத்தில் வந்து, இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதோ?
என்று சீதையின் மனத்தவம் முனிவர்களின் தவத்திற்கும் மேலானது என்கிறார். இலக்குவனின் வில்லிலிருந்து நான்மறைகளின் ஆரவாரம் போல நாணொலி வெளிப்பட்டதோடு அல்லாமல் சீதையின் சாபச்சொற்களும் அம்புகளாக வெளிப்பட்டது. அதிகாயனின் உடலை சல்லடைப் போல அம்புகள் துளைத்தது எனினும் அவன் பின்னடையவில்லை, வாயுதேவன் இலக்குவனிடம் அதிகாயன் பிரம்மனது படைக்கலத்தால் மட்டுமே சாவான் என்று சொன்னான். இலக்குவன் அதற்கு பின் அப்படைக்கலத்தை பயன்படுத்தி அதிகாயனின் தலையை துண்டித்தான். மாயத்தின் உதவியோ யாருடைய வழிகாட்டலோ இன்றி நேருக்கு நேர் போர் செய்த அதிகாயனின் இறப்பு இலங்கை மக்களை துயரில் ஆழ்த்துகிறது. அந்த துயர் இராமன் அயோத்தியை விட்டு நீங்கிய போது அயோத்தி மக்கள் அடைந்த துயரோடு கம்பரால் ஒப்பிடப்பட்டது.
தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி
பேர, உலகு உற்றது உற்றதால், பேர் இலங்கை ;
தந்தைக்காக ஒரு மகன் காடு சென்றான் இன்னொருவன் இடுகாடு சென்றான் அதனால் இந்த ஒப்புமையோ !
அறன் அல்லது நல்லது மாறு அறியான்;
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்;
இப்படி ஒருவன் இராமனோடு ஒப்பிடப்பட வேண்டியவன் என்று கம்பர் கருதினாரோ!

Leave a Reply