தமிழகம் என்ற கருத்து உருவான காலம் முதலே சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று சேரநாட்டை முதலில் வைத்துக் கூறுவதே வழக்கமாக இருந்தது. சங்க இலக்கியங்களில் சேர நாட்டின் பங்கு அளப்பரியது. தமிழின் முதல் காவியமான சிலம்பு தோன்றியதும் சேர மண்ணிலிருந்தே. சங்கம் மருவிய காலத்தில் சேரத்தின் கிழக்குப்பகுதி கொங்கு நாடாக மருவிய பிறகும் மேற்கு மலைத்தொடருக்கு அப்பாலிருந்த மேற்குப் பகுதி சேர நாடாகவே நெடுங்காலம் நீடித்தது. காலப்போக்கில் மூவேந்தர் குலமும் மறைய, சேரநாட்டு மொழியும் ‘மலையாளம்’ என்று உருக்கொள்ள பின்னாளில் மேற்குமலைத்தொடரே தமிழக எல்லை என்றாகியது.
கம்பனின் காலம் வரை மேற்குமலையின் இரு புறமுமுள்ள நிலங்கள் பொதுமொழியையே கொண்டிருந்தன. மலையாளத்தின் முதல் காவியமாகக் கருதலாமென கூறப்படும் சீராமகவியால் இயற்றப்பட்ட ‘ராமசரிதம்’ ஏறக்குறைய கம்பனின் காலத்தில் எழுதப்பட்டது, கம்பனின் மொழிக்கு மிகவும் அணுக்கமானது. அதன் மொழி தமிழா மலையாளமா என்று நிர்ணயித்துக் கூறிவிட முடியாத நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த நூலை கம்பராமாயணம் போட்ட குட்டி என்பார் ஒரு கட்டுரையில். மேலும் மூன்று நூற்றாண்டுகள் கழித்தே துஞ்சத்து எழுத்தச்சனின் வருகைக்குப் பிறகு மலையாளம் தன் முழு வடிவை எய்துகிறது.
ஆகவே இந்த பொதுப்பின்புலத்தில் எழுந்த கம்பகாவியத்தின் மொழி சில இடங்களில் சேரநாட்டு மொழிக்கு அணுக்கமாக இருப்பதாகத் தோன்றும். அல்லது அன்றிருந்த பொதுமொழியின் சில கூறுகளை சேரநாட்டுமொழி இன்று வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றும் கூறலாம். இன்று தமிழிலும் மலையாளத்திலும் ஒரே போல பயன்பாட்டில் உள்ள கூறுகள் ஏராளம். ஆகவே அவற்றை விடுத்து தமிழில் வழக்கற்றுப் போன ஆனால் மலையாளத்தில் இன்றும் நீடிக்கும் சில இடங்களை மட்டும் இங்கு தொட்டுச்செல்வோம்.
முதலாவதாக பாயிரத்திலேயே நான்காம் பாடலில் ஒரு சொல் வருகிறது.
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!
‘உயரத்தில் விளங்கும் பாற்கடலை அடைந்து ஒரு பூனை அந்த முழுக் கடலையும் நக்கியே குடித்துவிடலாம் என்று எண்ணுவதைப் போல இக்குற்றமற்ற இராமனின் கதையைக் கூற வேண்டும் என்று ஆசை பற்றியதால் கூறத் தொடங்குகிறேன்’ என்பதே பாடலின் பொருள். கம்பன் இங்கு பூனையைச் சுட்ட ‘பூசை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்.
மலையாளப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு தெரிந்த ஒன்றாகவும் இருக்கலாம். மலையாளத்தில் பூனையை ‘பூச்ச’ என்று விளிக்கிறார்கள். இதைப் போன்று தமிழிலிருந்து சற்று மாறுபட்டு ஒலிக்கும் சொற்களைக் கேட்கும்போது தமிழ் மலையாளமாக மாறும்வேளையில் ‘பூனை’ என்ற சொல் மருவி ‘பூச்ச’ என்று ஆகிவிட்டதாகவே நம் பொதுப்புரிதல் கூறும். ஆனால் ‘பூச்ச’ என்ற சொல்லின் வரலாறோ ஈராயிரமாண்டுப் பழமை கொண்டது.
தொல்காப்பியத்திலேயே பூனையைக் குறிக்கும் ஒரு சொல்லாக ‘பூசை’ என்ற சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தின் பொருளதிகாரப் பகுதியில் மரபியலில் கீழ்க்கண்ட வரிகளைக் காணலாம்.
‘குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ் வாய் வெருகினை பூசை என்றலும்’
இது விலங்குகளின் ஆண் இனத்தைக் குறிக்கும் சொற்களைக் கூறும் இலக்கணப் பகுதி (மேலும் ‘குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும், இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும்’ என்று அது நீளும்!).
மேற்சொன்ன நான்கு வரிகளுக்கு ‘குரங்கில் ஆணினைக் கடுவன் என்றும், மரத்தில் வாழும் கூகையில் (ஆந்தை) ஆணினைக் கோட்டான் என்றும், சிவந்த வாயை உடைய கிளியில் ஆணினைத் தத்தை என்றும், வெளிறிய வாய் கொண்ட வெருகில் (வெருகு என்பது பூனையைக் குறிக்கும் பண்டைய தமிழ்ச் சொல்) ஆணினைப் பூசை என்றும்’ கூற வேண்டும் என்று பொருள்கொள்ளலாம்.
பண்டைய இலக்கியங்களில் பூனை என்ற சொல் காணப்படுவதில்லை. பூசை என்ற சொல் கூட தொல்லிலக்கியங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் பூனைக்கு நிகரான சொல்லாக சங்க இலக்கியங்களில் எங்கும் விரவிக் கிடப்பது ‘வெருகு’ என்ற சொல்லே. அதன் முடிமுதல் காலடி வரை பலவாறு உவமித்தும் பாடியுள்ளனர் சங்கக்கவிகள்.
பெரும்பாலும் அதன் கூரிய பற்களை முல்லை அல்லது அதிரல் போன்ற மலர்களுக்கு உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
‘இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை
வெருகு சிரித்தன்ன பசுவீ மென்பிணிக்
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்’ (குறுந்தொகை 220)
‘பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்’ (புறநானூறு 117)
‘பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்’ (அகநானூறு 391)
என்று அதன் பற்களை உவமித்துக் கூறுகிறது.
‘எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை’ (அகநானூறு 297)
என்று அதன் முடியை பூளைப் பூவின் மென்மையோடு ஒப்பிடுகிறது.
‘வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க’ (அகநானூறு 73)
என்று அதன் இருளில் ஒளிரும் கண்களையும் வர்ணிக்கிறது.
‘குவி அடி வெருகின் பைங்கண் ஏற்றை’ (அகநானூறு 367)
என அதன் குவிந்துள்ள காலடியைய வர்ணிக்கிறது.
‘நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி’ (குறுந்தொகை 107)
என்று வீட்டில் உள்ள எலிகளை நள்ளிரவில் வேட்டையாட அது பார்த்திருப்பதையும் கூறுகிறது.
பழந்தமிழில் பூனைக்கான பொதுப்பெயர் ‘வெருகு’ என்பதே. இன்றும் மற்றொரு திராவிட மொழியான கன்னடத்தில் வழங்கப்பட்டும் பூனைக்கான (ஆண் பெண் என்ற பேதமின்றி) பொதுச்சொல் வெருகின் மறுவடிவமே. கன்னடத்தில் இதனை ‘பெக்கு’ என்கிறார்கள். ‘வ’ ‘ப(ba)’ வாக மாறுவது கன்னடத்தின் இயல்பு (எனவே வெருகு- பெருகு). மேலும் இடையில் உள்ள ‘ரு’ ‘ழு’ போன்ற எழுத்துக்கள் மறைந்து ஈற்றெழுத்து இரட்டி வருவதும் கன்னடத்தின் இயல்பு (எருமை – எம்மே, கழுதை- கத்தே என ஆகும்). ஆகவே பெருகு – பெக்கு ஆகிறது.
மேலும் ‘வெருகு’ என்பதனை ‘வெருக்கு’ என்று சொல்லும் வழக்கத்தையும் சங்க இலக்கியங்களில் காணலாம்.
‘வெருக்கு பல் உருவின் முல்லையொடு’ (குறுந்தொகை 240)
‘வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை’ (அகநானூறு 267)
‘வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு’ (புறநானூறு 324)
என்பன போல. ஆகவே வெருக்கு-பெருக்கு – பெக்கு (கருப்பு – கப்பு என ஆவதைப் போல) எனவும் ஆகலாம்.
ஆகவே ஆண் மற்றும் பெண் பாலுக்கு உரிய பொதுப்பெயர் ‘வெருகு’. அதில் ஆண் வெருகினை ‘பூசை’ என்று சொல்லலாம் என்கிறார் தொல்காப்பியர். ஆணுக்கான சொற்கள் காலப்போக்கில் பொதுப்பெயராக மாறுவதும் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. அத்தகு மாற்றங்கள் மலையாளத்தில் அதிகம். மேற்சொன்ன தொல்காப்பியச் சூத்திரத்தில் உள்ள ஆண்கிளியைக் குறிக்கும் ‘தத்தை’ என்ற சொல்லையே மலையாளத்தில் கிளியின் பொதுப்பெயராக பயன்படுத்துகிறார்கள் (இன்று மலையாளத்தில் வெறுமனே கிளி என்றால் அது எல்லாப் பறவைகளையும் குறிக்கக்கூடிய ஒரு சொல்லாகவே கருதப்படுகிறது).
‘பெற்றம் எருமை புலி புல்வாய் மற்றும் இவையெல்லாம் போத்து எனப்படுமே’
என்று எருமைக்கான ஆண் பெயர்களில் ‘போத்து’ என்பதும் அடங்கும் என்கிறார் தொல்காப்பியர் (மேலும் ஏறு, கண்டி போன்றவையும் ஆண் எருமைக்கு பொருந்துவன என்பார்). ஆனால் ஆண் எருமைக்கான போத்து எனும் சொல்லே இன்று மலையாளத்தில் எருமைக்கான பொதுப்பெயராக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல கடுவன் என்பது ஆணுக்கானச் சொல், இது ஆண்குரங்கினைக் குறிக்கும் என்கிறது தொல்காப்பியம். இந்த கடுவன் என்ற ஆண்பால்பெயர் புலியைக் குறிக்கும் பொதுச்சொல்லாக மலையாளத்தில் ‘கடுவ’ எனப் பயன்படுத்தப்படுகிறது (மலையாளத்தில் ‘புலி’ என்ற சொல் பொதுவாக சிறுத்தையையே குறிக்கும).
தமிழிலும் சில நேரங்களில் ஆண்பால் பெயர் பொதுப்பெயராக மாறி வரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பூசையைக் கூறலாம். மற்றொரு எடுத்துக்காட்டு கோட்டான் என்ற சொல்லைக் கூறலாம். ஆண் கூகையைக் குறிக்கும் சொல்லென தொல்காப்பியர் கூறும் ‘கோட்டான்’ இன்றும் தமிழில் பயன்பாட்டில் உள்ளது, ஆனால் ஆண்கூகைகக்கென என்றில்லாமல் ஒரு பொதுச்சொல்லாகவே.
ஆகவே மத்திய காலகட்டத்தில் ‘பூசை’ என்ற சொல்லும் தொல்காப்பியர் கூறும் ஆண்பூனை என்ற பொருளில் இல்லாமல் ஆண் பெண் இரண்டையும் குறிக்கும் பொதுச்சொல்லாக மாறிவிட்டிருக்கிறது (வெருகு என்ற சொல்லின் பயன்பாடு வெகுவாகக் குறைந்தும் விட்டிருக்கிறது). இம்மாற்றம் மலையாளம் தனி மொழியாக உருவெடுக்கும் முன்பே நிகழ்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இன்றும் மலையாளம் அச்சொல்லின் பண்டைய ஒலிப்பிலேயே புழங்கியும் வருகிறது. தலை -தல என பேச்சுவழக்கில் ஆவது போல பூசை-பூச என்றாகிறது. ச என்ற எழுத்தை அவர்கள் அதன் மூல வடிவத்திலேயே ஒலிப்பதால் (ச்+அ =cha; ‘ச’ வல்லினம் என்பதை அவர்கள் இன்னும் மறக்கவில்லை!), அதனை ‘poocha’ என்று விளிக்கிறார்கள் (அதேபோல ஓசையை ‘ஒச்ச’ என்பார்கள்). பூசை என்ற சொல் மேலும் இரண்டுமுறை ஒலிமாற்றம் அடைந்து (பூசை – பூஞை – பூனை என்றானது என்பது அறிஞர்கள் கருத்து) இன்றைய தமிழில் ‘பூனை’ என்று அழைக்கப்படுகிறது.
இன்று சங்க இலக்கியத்திற்கு உரை எழுதும் நம் அறிஞர்கள் ‘வெருகு’ என்ற சொல்லுக்கு இரண்டு விளக்கங்களை அளிக்கிறார்கள். ஒன்று ஆண்பூனை என்பது. சங்ககாலத்தில் ‘வெருகு’ என்பது பொதுப்பெயராகவும் ‘பூசை (பூனை)’ என்பது ஆணுக்கான சிறப்புப்பெயராகவும் இருந்ததிலிருந்து, நாம் இன்று பூனை என்பதை பொதுச்சொல்லாகவும் வெருகு என்பது ஆண்பாலுக்கு உரியது என்றும் எடுத்துக் கொள்ள நேர்ந்திருப்பது காலத்தின் முரண்தான்!. பூசை என்ற சொல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தும் கூட சங்க இலக்கியம் பூசையைப் பயன்படுத்தாமல் வெருகினைப் பயன்படுத்தி இருப்பது இந்த ஆண் பெண் சார்ந்த பொருள் வேறுபாட்டினால்தான் என்று தோன்றுகிறது. மேலும் வெருகு என்பது பொதுப்பெயராதலால், ஆணைத் தனியாகக் குறிக்கத் தேவையுள்ள இடங்களில் ‘வெருகின் ஏற்றை’ ‘வெருக்கு விடை’ என்றெல்லாம் பயின்றும் வந்துள்ளன.
மற்றொரு விளக்கம் காட்டுப்பூனை என்பது. இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ‘யானை’ என்று குறிப்பிடும்போது எப்படி காட்டு யானையையும் நாம் கொட்டிலில் கட்டி வைத்துள்ள யானையையும் குறிக்குமோ அதேபோல ‘வெருகு’ என்பதும் காட்டுப்பூனையையும் வீட்டுபூனையையும் குறிக்கும் ஒரு பொதுச்சொல்லே. பூனை என்ற சொல் சங்க இலக்கியத்தில் பயன்பாட்டில் இல்லாததால் சங்க காலத்தில் தமிழர்கள் பூனையை வளர்க்கவே இல்லை என்னும் அளவுக்கு சில அறிஞர்கள் எழுதியும் இருக்கிறார்கள் (தென்னை என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லாததால் சங்ககாலத்தில் தமிழர்கள் தேங்காயைப் பயன்படுத்தவில்லை என்று கூறியது போல!). மனித இனம் பூனையை வளர்க்கத் தொடங்கி சுமார் 10,000 ஆண்டுகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே பூனைகள் மக்களின் வாழ்விடத்தைச் சுற்றி இருந்ததற்கான தடயங்கள் உள்ளதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ‘நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு‘ என்ற அடியில் நள்ளிரவில் வீட்டில் எலியை வேட்டையாடும் வெருகினைப் பற்றி குறிப்பு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டால்கூட சங்ககாலத்தில் வீடுகளில் பூனை புழங்கியிருப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவே தோன்றுகிறது.
இதைப்போல பல சொற்களைக் கூறலாம். மலையாளத்தில் கொசுவைக் ‘கொதுகு’ என்பர். இங்கும் கொசு என்ற சொல் திரிந்து கொதுகு என ஆகியிருக்கும் என்றே நம் பொதுப்புரிதல் கூறும். அயோத்தியின் மதிலை வர்ணிக்கும் போது
‘கொதுகின் இனத்தையும் உவணத்து இறையையும்’
என்கிறார் கம்பர். அயோத்தியின் மதிலில் உள்ள பலவிதக் கருவிகள் பகைவீரர்களையும் யானை குதிரை போன்றவைகளையும் தாக்குவதோடு மட்டுமல்லாமல் எதிரி கொசுவாக (அத்தனைச் சிறிய வடிவில்) வந்தாலும்கூட விட்டுவைக்காமல் தாக்கும் என்கிறார். இதில் கொசுவைக் ‘கொதுகு’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். சொல்லப்போனால் தொல்காப்பியத்தின் படி ‘கொசு’ என்ற சொல் பயின்று வருதல் தமிழில் இயலாத ஒன்று என்றுகூட கூறலாம்.
‘உச் சகாரம் இருமொழிக்கு உரித்தே’ (தொல்காப்பியம் 75)
என்பது தொல்காப்பியச் சூத்திரம். இது முற்றியலுகரம் பற்றி கூறுகிறது. ஈரெழுத்துச் சொற்களில் தனிக்குறிலை அடுத்து உகாரம் வரின் முற்றியலுகரமாக வரும். அத்தகையச் சொற்களில் சகாரத்தோடு (அதாவது ‘சு’ என) முடியும் சொற்கள் இரண்டு மட்டுமே தமிழில் உள்ளன என்கிறது தொல்காப்பியம். இளம்பூரணர் உரையில் அவற்றை ‘உசு’ (‘உளு’வின் பெயர்; இது ஒரு வகைப் புழு) மற்றும் ‘முசு’ (ஒருவகைக் குரங்கு) என்கிறார். அவ்வாறு சு என முடியும் மற்ற ஒரேயொரு அக்காலத்தையச் சொல் ‘பசு’, அதனை ‘பசு என்பதோவெனின், அஃது ஆரியச்சிதைவு’ என்கிறார் இளம்பூரணர். ஆகவே ‘கொசு’ என்ற சொல் இளம்பூரணர் காலம் வரை புழக்கத்தில் இல்லை எனலாம். கொதுகு என்ற சொல்லே அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க கூடும் என்பதைக் கம்பனின் இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. மலையாளம் இன்றும் அதன் பழைய வடிவில் ‘கொதுகு’ என்றே கூறி வருகிறது. கொதுகு கடைக்குறையாகி ‘கொது’ என்றும் பின் கொது – கொசு (புதிது- புதுசு; ஓதை – ஓசை; வதி- வசி என்பவை போல) என்றும் உருக்கொண்டதோ?
மேலும் பலாப்பழம் ‘சக்க’ என மலையாளத்தில் வழங்கப்படுவதை திரைப்படங்களின் மூலம் நாம் அறிந்ததே. அதனை ‘ப்லாவு’ என்றும் அழைப்பர். ‘பலவு’ என்று சங்ககாலம் முதல் கம்பன் வரை பயன்படுத்தும் சொல்லின் மறு வடிவம் (இதே போல புறாவை ‘ப்றாவு’ என்கின்றனர். அது புறவு என்ற சொல்லின் மறு வடிவம்; கம்பனும் மணிப்புறாவை அழகாக ‘புள்ளி அம் புறவு’ என்பார்). கலைக்கோட்டு முனிவனை அழைத்து வருவதற்காக உரோமபத மன்னன் அனுப்பி வைத்த பெண்கள் அம்முனிவனுக்கு முக்கனிகள் படைப்பதைப் பின்வருமாறு கூறுகிறார் கம்பர்.
‘மருந்தினும் இனியன் வருக்கை வாழை மா’
இங்கு மாவும் வாழையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நாம் அறிந்த ‘பலா’ அல்லது ‘பலவு’ என்ற சொல்லைக் காண முடியவில்லை. மலையாளத்தின் சக்க என்ற சொல்லும்கூட இங்கில்லை (அது பிற்காலத்தில் அங்கு வந்து சேர்ந்த சொல்லாகவும் இருக்கலாம்). ஆனால் மலையாளத்தில் வெகுவாக புழக்கத்தில் இருப்பதும் வெளியுலகம் அதிகம் அறியாததுமான ‘வருக்கை’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளார் கம்பர் இங்கு. மலையாளத்தில் பலாப்பழங்கள் பல வகைகளில் உள்ளன. பொதுவாக இரண்டு பெரும் பிரிவுகளாக ‘கூழச்சக்க’ (நன்றாகப் பழுத்தால் குழைந்து விடும் என்பதால் இப்பெயர் பெற்றதாம்) மற்றும் ‘வரிக்கச் சக்க’ எனப் பிரிக்கிறார்கள். மேலும் இந்த வரிக்கச் சக்கயில் ‘தேன் வரிக்க, செந்தூர வரிக்க’ என பலவகைகள் உண்டு.
மேற்சொன்ன பாடலின் அடுத்த வரிகளாக ‘தருங் கனி பலவோடு தாழை இன்கனி அருந்தவ, அருந்து என அருந்தினான் அரோ’ என்று வருகின்றன. இங்கு வரும் ‘பலவோடு’ என்ற சொல் ‘with many’ என்ற பொருளில் வருகிறது. அச்சொல் மீண்டும் வராமல் இருப்பதற்காகவோ என்னவோ கம்பர் தான் பொதுவாகப் பயன்படுத்தும் ‘பலவு’ என்று சொல்லை விடுத்து ‘வருக்கை’ என்ற சொல்லைத் தேடிப் பயன்படுத்தியிருக்கிறார்.
ப்லாவு/ ப்றாவு போன்ற மற்றொரு ஒலிப்பு கொண்ட சொல் ‘வாவு’. இது பழந்தமிழில் ‘உவா/ உவவு’ (நிலா/ நிலவு) என்றழைக்கப்படும் சொல்லின் மறுவடிவம். வாவு என்பதைப் பொதுவாக அவர்கள் அமாவாசைக்கு (கர்க்கிடக வாவு – ஆடி அமாவாசை அங்கு வெகுபிரபலம்) பயன்படுத்தினாலும், நிலவைக் குறிக்கும் பொதுச்சொல்லாகவும் அது பயன்பாட்டில் உள்ளது (பௌர்ணமியை ‘வெளுத்தவாவு’ என்றும் அமாவாசையை ‘கறுத்தவாவு’ என்றும் கூறும் வழக்கமும் உண்டு). இராமன் சிவதனுசை முறித்த போது அந்நகர மக்கள் மகிழ்ச்சியால் கிளர்ந்து ஆரவாரித்ததை
‘முந்நீர்
ஓல் கிளர்ந்து உவா உற்றென்ன
ஒலிநகர் கிளர்ந்தது அன்றே!’
என பௌர்ணமி நாளில் பொங்கும் கடலுக்கு ஒப்பாகக் கூறுகிறார் கம்பர்.
கேரள ஆலயங்களுக்குச் சென்றவர்கள் கண்டிருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்புள்ள சொல்தான் ‘ஊட்டுப்புர’ என்பது. உணவங்களுக்கும் இப்பெயர் சூட்டப்படுவதுண்டு. உணவு பரிமாறப்படும் இடம் (dining hall / room) என்பதனை ‘ஊட்டுப்புர’ என்கிறார்கள். கோசல நாட்டின் அன்னசாலைகளை வர்ணிக்கும் போது
குறை நறைக் கறிக் குப்பை பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை
உறைவ- கொட்பின் ஊட்டிடம் தோறெலாம்
என்கிறார் கம்பர். அன்னச்சத்திரத்தை ஊட்டிடம் என்கிறார். புரை (புர) என்ற சொல்லையும் அறை அல்லது சாலை என்ற பொருளில் கம்பர் பயன்படுத்துகிறார். கலைக்கோட்டு முனிவனை உபசரித்தபின் அப்பெண்கள் தம் பன்னசாலைக்குச் செல்வதை கீழ்க்கண்ட வரிகளால் குறிப்பிடுகிறார்.
‘முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர்’
மலையாளப் பாடல்களைக் கேட்கும் போது காதில் அடிக்கடி விழும் சொற்கள் புளகம், களபம் சந்தம் போன்றவை. புளகம் என்றால் புல்லரித்தல் அல்லது மயிர்க் கூச்செறிதல் எனலாம். இராமன் முதலியோர் பிறந்ததை வள்ளுவன் யானைமீது சென்று பறை அறைந்து தெரிவித்தபோது அந்நாட்டு மக்கள் அடைந்த இன்பத்தை கீழ்க்கண்ட வரிகளால் கம்பர் கூறுகிறார்
‘ஆர்த்தனர் முறை முறை அன்பினால்; உடல்
போர்த்தன புளகம்’
மலையாள பக்திப் பாடல்களில் மீண்டும் மீண்டும் வருவது ‘களபம் சார்த்தி’ என்பது. சந்தனம் முதலியவை சேர்ந்த நறுமணக் கலவைச் சாந்தை ‘களபம்’ என்கின்றனர். இராமன் பிறந்ததைக் கொண்டாடும் மக்கள் பலவற்றையும் வீதியில் தூவி ஆரவாரிப்பதைப் பின்வருமாறு கூறுகிறார்.
‘எண்ணெயும் களபமும் இழுதும் தானமும்
சுண்ணமும் தூவினார் வீதிதோறுமே’
அதேபோல ‘சந்தம்’ என்ற சொல்லை மலையாளத்தில் பயன்படுத்துவதைப் போலவே ‘அழகு’ என்ற பொருளில் பற்பல இடங்களில் குறிப்பிடுகிறார் கம்பர் (‘சந்தக் காவெலாம் களிவண்டு ஈட்டம்’ ‘சந்த நுண் துகிலும் வீழ’ ‘சந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்’ போன்றவை அவற்றுள் சில).
சில உடல் பாகங்களின் பெயர்களையும் கம்பனில் சேரநாட்டுச் சாயலோடு காணமுடிகிறது. மலையாளத் திரைப்பாடல்களில் மீண்டும் மீண்டும் வருவன சுண்டு (உதடு) மற்றும் கவிள் (கன்னம்) என்னும் சொற்கள். மலையாளத்தில் நான்கு காதல் பாடல்களைக் கேட்டால் இவ்விரண்டு சொற்களில் ஒன்றையேனும் காதில் விழாமல் நாம் கடக்க முடியாது. எழுச்சிப் படலத்தில் மிதிலைக்குச் செல்லும் யானைகளை வர்ணிக்கும் போது ‘அருவி பெய் கவுள்’ (அருவி போல மதநீர் பாயும் கன்னம்) என்கிறார் கம்பர். மற்றொரு இடத்தில் ‘அஞ்சனக் கிரியின் அன்ன அழி கவுள் யானை’ என்பார்.
மலையாள வாய்ச்சண்டைகளில் தவறாமல் இடம்பெறும் சொல் ‘சோர’ என்பது. இது இரத்தத்தைக் குறிக்கும் சொல். தாடகை வதைப் படலத்தில் அரக்கர்களின் நிணமும் இரத்தமும் வேள்வி குண்டத்தில் வீழாமலிருக்க அம்புகளாலான ஒரு கூடத்தை அமைக்கிறான் இராமன். அதைக் கூறும்போது
‘தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும் என்று உன்னி’
என்று இரத்தத்தை ‘சோரி’ என்கிறார் கம்பர்.
மேலும் பல வினைச்சொற்களின் பயன்பாடுகளும் மலையாளச் சாயலில் காணலாம். சுற்றுதல் அல்லது சுழல்தல் என்பதனை ‘கறங்கு’ என்பர் மலையாளத்தில் (ஒவ்வொரு நாளும் காதில் விழும் சொற்களில் ஒன்று இது). பெண் என்பதால் தாடகையைக் கொல்லத் தயங்கி நிற்கும் இராமனைப் பார்த்து அவளைக் கொல்லுமாறு ‘அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமே?’ என்று விசுவாமித்திரன் கூறும் புகழ்பெற்ற பாடலின் முதலடி ‘கறங்கு அடல் திகிரி’ எனத் தொடங்குகிறது (கறங்கு திகிரி – சுழலும் சக்கரம்).
தாடகையின் கொடுமைகளால் அந்த வனமே பாலைவனமாக எரிந்து கருகுகிறது. இதனைக் கண்ட இராமன் குற்றமற்ற தசரதனின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த நிலம் ஏன் இவ்வாறு பாலையானது என்பதனை விசுவாமித்திரனிடம் கேட்கிறான்,
‘பழி படா மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம் அறிஞ! கூறு’
என்று. இதில் மன்னவன் ‘ஆள்கிற’ என்பதனை ‘பரித்த’ என்கிறார். தொலைக்காட்சிகளில் அன்றாடம் கேட்கும் சொல் இது (பரித்தல்- ஆட்சி செய்தல்).
மலையாளத்தின் சிறார் கதைகளில்கூட சரளமாகப் பயின்று வரும் ‘பொருதுதல்’ (கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ‘நமுக்கு பொருதாம் வா’ என்று அழைக்கும்) என்ற சொல்லை கம்பனில் எங்கும் காணலாம் (‘மாதிரம் பொருத திண் தோள் மன்ன!’ ‘வாரணம் பொருத மார்பும்’ போல). மேலும் மலையாளத்தில் ‘களி’ என்றால் ‘விளையாடுதல்’ என்று பொருள். சந்திரசயில மலையிலுள்ள முன்றில்களில் சிங்கக் குருளைகளும் யானைக் கன்றுகளும் ஒன்றாக விளையாடும் என்பதனை ‘பேணுதற்கு அரிய கோலக் குருளை அம் பிடிகள் ஈன்ற காணுதற்கு இனிய வேழக் கன்றொடு களிக்கும் முன்றில்’ என்கிறார்.
வினைச்சொற்களின் ஒலிப்பு முறையும் பல இடங்களில் மலையாளத்தை போன்றே கேட்கும். ‘ஆன’ என்பதனை ‘ஆய’ என்றும் ‘போன’ என்பதனை ‘போய’ என்றும் கூறுவதைப்போன்ற அடிப்படை மாற்றங்களைத் தாண்டியும் சில சொற்களைக் கூறலாம். ‘உறங்க வைக்கும்’ என்பதனை எளிமையாக ‘உறக்கும்’ என்பர் மலையாளத்தில் (மயங்க வைத்தலை மயக்கும் என்பது போல; ‘கன்னிவயல் காற்றே நீ, கண்மணியெ உறக்கான் வா’ என்று தென்றலை அழைக்கும் ஒரு திரைப்பாடல்). கோசலநாட்டை வர்ணிக்கும்போது மருத நிலத்திலுள்ள கடைசியரின் குரவைப் பாடலும் நெய்தல் நிலத்திலுள்ள நுளைச்சியரின் செவ்வழிப் பண்ணும் முல்லை நிலத்து ‘கோவலர் முன்றில் கன்று உறக்கும்’ (இடையர்களின் வீட்டு முற்றத்தில் கன்றுகளை உறங்க வைக்கும்) என்கிறார் ஒரு பாடலில் (கோசலநாட்டுத் திணைகளின் கூட்டமைப்பு போலும்!).
வேகும் வேகாது என்பதை வேவும் வேவில்ல என்பர் மலையாளத்தில். தாடகை வசிக்கும் பாலையின் வெம்மையைக் கூறும்போது ‘அதைக் கூறும் நா வேம் (வேகும்), வான் முகடும், வெயிலும், மேகமும் மழையும், மின்னலும் இடியும் எல்லாம்கூட வேம்’ எனில் ‘வேறு யாவை வேவாதவே?’ என்கிறார் கம்பர். இந்த ‘வேவாதவே’ என்பது மலையாளத்தின் ‘வேவாத்தவ’ என்பதற்கு மிக நெருக்கமானது.
வினைச்சொற்களின் விகுதியும் சில இடங்களில் மலையாளச்சாயலில் உள்ளதைக் காணலாம். ‘இல்’ என்பதற்கு பதிலாக ‘அத்து’ என முடியும் இடங்கள் கம்பனில் பல. ‘பைம்பொன் பீடத்து ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி’ ‘அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள்’ ‘மலை முகட்டு இடத்து உகு மழைக்கண் ஆலிபோல்’ என்று வரும் இடங்களில் பீடத்து, மாடத்து மற்றும் இடத்து என்பவை பீடத்தில், மாடத்தில் மற்றும் இடத்தில் என்றே பொருள் தரும். இன்றும் மலையாளத்தில் அத்து எனும் விகுதி வெகுவாக பயன்பாட்டில் உள்ளது (‘தேன்மாவின் கொம்பத்து’ எனில் ‘தேன்மாவின் கொம்பில்’ என்றே பொருள்). மேலும் ‘கதம் கொள் சீற்றத்து ஆற்றுவான் இனியன கழறி’ ‘தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல, வரம்பு இல் பேரழகினாளை மணம் செய்வான் வருகின்றான்’ ‘உய்வான் உற இப்பழி பூண உன்னொடு எனக்குப் பகை உண்டோ?’ என்ற கம்பனின் வரிகளில் ‘ஆற்றுவான், செய்வான் மற்றும் உய்வான்’ என்ற சொற்கள் ஆண்பால் விகுதி கொண்டவையல்ல, மாறாக அவை ‘ஆற்றுவதற்கு, செய்வதற்கு மற்றும் உய்வதற்கு’ என்ற பொருளிலேயே வரும். இதுபோல நான்காம் வேற்றுமை உருபின் (கு) பணியைச் செய்யும் ‘வான்’ விகுதியை பல இடங்களில் காணலாம் (மலையாளத்தில் ‘காணுவான்’ என்றால் காண்பதற்கு ‘பாடுவான்’ என்றால் பாடுவதற்கு என்றே பொருள்).
கடைசியாக வடமொழிச் சொற்களைக் கையாளும் விதத்தில் சில இடங்களைக் கூறி முடிக்கலாம். பல வடமொழிச் சொற்கள் மலையாளத்தில் பயன்படுத்தப்படுவதை அறிவோம். இன்றைய தமிழில் நாம் அவற்றில் பலவற்றை பயன்படுத்துவதில்லை என்றாலும் கம்பன் சில இடங்களில் மலையாளத்தில் இன்றும் பொதுப் பயன்பாட்டிலுள்ள சொற்களுக்கு நிகரான வடமொழிச் சொற்களை தமிழ்ப்படுத்தி பயன்படுத்தியிருக்கிறார்.
மிதிலைக் காட்சிப் படலத்தில்,
‘வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே’
என்று மார்பகத்தை ‘தனம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் கம்பர். பெண்களின் மார்பகங்களை (அச்சடி) மலையாளத்தில் ‘ஸ்தனம்’ என்கிறார்கள் (மார்பகப் புற்றுநோயை ஸ்தனார்புதம் என்பர்).
பொறுமை என்பதை மலையாளத்தில் ‘க்ஷம’ என்கிறார்கள். அதனைக் கம்பர் ‘கமை’ (க்ஷமை- கமை; க்ஷணம் – கணம் போல) என்ற சொல்லாகப் பயன்படுத்துகிறார். ‘மலர் மேல் கமைப் பெருஞ் செல்வக் கடவுளும்’ என்று பிரம்மனைக் கூறுவதும், இராமனின் அழகை வர்ணிக்கும் போது ‘கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?’ என்றும் கூறுவது போல பல இடங்களில் இச்சொல்லைக் காணலாம்.
மேலும் நாம் இன்றும் புழங்கிவரும் சில வடமொழிச் சொற்களை கம்பர் தமிழ்ப்படுத்தியிருப்பது இன்றைய தமிழில் உள்ளதை விட அவை மலையாளத்திற்கு அணுக்கமாக உள்ளதையும் காணமுடிகிறது. ராசிகளில் ஒன்றான கடகம் என்பதனை ‘கர்கிடகம்’ என்பர் மலையாளத்தில். இராமனின் பிறப்பு நட்சத்திரத்தையும் ராசியையும் கூறும்போது
‘வேய் புனர்பூசமும் விண்ணுளோர்களும்
தூய கற்கடகமும் எழுந்து துள்ளவே’ என்கிறார் கம்பர்.
மகாபலிச் சக்கரவர்த்தியைக் கூறும்போது
‘ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் ஏற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்’ என்பார் கம்பர்.
இந்த ‘மாவலி’ என்ற சொல்லில் அவர் மலையாளத்தில் நிறைந்துத் ததும்பும் ‘மாவேலி’த் தம்புரானுக்கே மிகவும் அணுக்கமாக ஒலிக்கிறார். ஒருவகையில் கம்பனும் ஒரு மாவலி தான். இருவரும் தம்மளவில் உயர்ந்தோர். வள்ளண்மையில் உச்சம் தொட்டோர். ஒருவன் மூவடியில் இருநிலமும் மணிமுடியும் ஈந்தான், மற்றவன் நான்கடியில் சொற்கடலும் கவியமுதும் ஈந்தான். ஒருவன் சேரநாட்டு மண்ணாண்ட சக்கரவர்த்தி; மற்றவன் சோழநாட்டில் சொல்லாண்ட சக்கரவர்த்தி. கள்ளவுரு பூண்டோ கால்விரல் கொண்டோ ஒட்டக்கூத்து ஆடியோ கம்பரசம் பாடியோ பாதாளத்தில் ஆழ்த்த நினைத்தாலும் காலம்காலமாக மீண்டு வரும் வல்லாண்மையும் வாய்த்தவர்கள். மக்களால் என்றைக்கும் கொண்டாடப்படுபவர்கள்.
ஆம்,
வீந்தவர் என்பவர் வீந்தவரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே?
*****
ஆசிரியர் குறிப்பு:

இரா. செந்தில் தர்மபுரியைச் சேர்ந்தவர். கேரள மாநிலம் கொச்சி நகரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் இவரது சில கட்டுரைகள் (தருதலும் கொடுத்தலும் – தமிழும் மலையாளமும், ஆட்கொள்ளும் கொற்றவை போன்றவை) வெளியாகியுள்ளன. வரலாறு, தத்துவம் மற்றும் ஆலயக்கலையில் ஈடுபாடு உண்டு. நண்பர்களுடன் இணைந்து கம்ப இராமாயண வாசிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply