கம்பன் கனவு

மதிப்பிற்குரிய ஜெ,

இம்பர்வாரி வாசகர் வட்டத்தின் சார்பில் வணக்கம். சில நாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டபடியால் கடிதம் சற்று நீளமாக அமைந்துவிட்டது.

கடந்த ஜூலை 14, 2021-இல் உங்களுடைய சீவகசிந்தாமணி உரையின் விளைவாக காவியம் வாசிக்கும் ஆவல் எழுந்தது. புதிய வாசகர் சந்திப்பு’21 மூலம் அறிமுகமான நண்பர் ஸ்ரீனிவாசுடன் – ஆங்கில வழியில் வெண்முரசின் கூறுமுறையினூடாக கீதையின் தத்துவக்கட்டமைப்பை ஆராய்ச்சி செய்யும் முனைவர் பட்ட மாணவர் அவர் – இணைந்து கிளப்ஹவுஸ் செயலி வழியாக ‘புதுப்புனல்’ என்ற பெயரில் தொடர்ந்து அமர்வுகளை நிகழ்த்தி வருகின்றோம். வாரத்திற்கு மூன்று அமர்வுகள் என்று வகுத்துக்கொண்டபோது இதை நம்மால் தொடர்ந்து செயல்படுத்திவிட முடியுமா என்ற ஐயம் இருந்தது. கம்பன் வரிகளில் கூறுவதென்றால் பாற்கடலை நக்கிக்குடிக்க எண்ணும் பூனை போல ஆசைப்பற்ற குதித்துவிட்டோம். வாசக நண்பர்கள் இயல்பாக இணைந்து அமர்வை செறிவாக்க உதவுகின்றார்கள். குழுமத்தில் சிலர் கம்பனுக்குப் புதிய வாசகர்கள். சிலர் கம்பனை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் மூலம் அறிமுகம் செய்து கொண்டவர்கள், நாஞ்சில் நாடனின் அம்புறாத்தூணியைப் பிடித்து வந்தவர்கள் சிலர். சிலர் பள்ளி கல்லூரி பாட புத்தகங்களில் வாசித்தவர், இன்னும் சிலர் வெண்முரசு நாவல்களை முழுமையாக வாசித்து முடித்தவர்கள். அனைவருமே காத்திருந்த அகலில் விழுந்த நெய் போல கம்பனை கையிலெடுத்திருபவர்கள்.

இராமாயணம் உள்ளபடியே பாரதத்தை போல்  உவக்கக்கூடியது அல்ல.அதிலும் கம்பராமாயணம் ஓர் ஒழுக்கச்சித்திரம். வாசிக்கத் தொடங்கிய போது கம்பன் காட்டும் நிலங்களை ஒரு விதமான எதிர்பார்ப்புடன் கவனித்தோம். நில வர்ணனைகளை நீட்டிச் சொல்லும் கம்பன் உச்ச நாடகத் தருணங்களை ஓரிரு பாடல்களில் அவசரமாக கடந்து செல்லும் பாவனையில் கூர்மையாகச் சொல்லிச் செல்கிறார். லதா மங்கேஷ்கரை வடக்கத்தி சுஷீலா என்பது போல ’பொன்னியைப் பொருவும் கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி’ என்கிறார்.  உத்திர பிரதேசத்தில் இல்லாத மாகடலை இழுத்து வந்து அதில் அகில் மணம் கமழும் என்கிறார். தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் வண்டலிட்டு ஓட மண்ணும் என அயோத்தியில் வீற்றிருக்கும் மருதம் தஞ்சையிலிருந்து பெறப்பட்டது. ஆனால்  நாம் காணும் தஞ்சையோ உத்திரபிரதேசமோ விதேஹமோ இங்கில்லை. வெண்முரசில் காட்டப்படும் துல்லியமான நிலக்காட்சிகளும் இல்லை. இதில் வரும் நிலங்கள் கம்பன் ஒருபோதும் கால்பதிக்காத நிலம். கோசலம் நெறியின் புறம் செலாதது. அருந்தவத்தின் சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் தழைத்து அது இன்ப நிலையாக மாறிய ஊர் அது. அங்கு பொழியும் மேகம் ‘உள்ளி உள்ளதெல்லாம் உவந்தீயும் வள்ளியோர்’ போலப் பொழியும் தன்மையது. அதன் அரசன் வெள்ளத்தையும் வேசையர் உள்ளத்தையும் தான் சொல்லுமொரு வழியில் ஓட வைப்பவன். நன்மை பயக்காத்தை ஒருவர் நினைத்தால் அந்த நினைப்பையும் சேர்த்தே அழிக்கும் படைகொண்டவன். இவை எல்லாம் ஒரு பார்வைக்கு வழக்கமான அடக்குமுறைகளை கொண்ட மன்னராட்சியும் கூட. ஆனால் கம்பன் அரசறிவியல் அறிஞனாக இதை முன்வைக்கவில்லை. அவர் கொண்டாடுவது தாமரையில் தூங்கிக் கிடக்கும் அன்னத்தின் சொகுசு வாழ்வை என்பதை மனதில் இறுத்தினால் அவர் காட்டும் ஒழுக்கத்தையும் கலை காட்டும் ஒழுக்கமாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. புறவயமான சில தகவல்களின் மேல் அவர் கட்டி எழுப்பி இருப்பது விழுமியங்களால் ஆன ஒரு நகரம்.  இலக்கியம் என்பது நாம் அறியாத ஒத்திசைவுள்ள பிரபஞ்சத்திலிருந்து அறிந்த ஒத்திசைவு கொண்ட ஒன்று என நித்யா வரையறுக்கிறார். அதீதங்களும் விதிவிலக்குகளும் விதிகளாக்கப்பட்ட அதிசய நகரமாக ஒன்றை கம்பன் உருவாக்குகின்றார். இந்த ஒத்திசைவும் கட்டமைப்பும் காவிய ஒருமைக்கு வித்திடுகிறது. சூரியன் அயோத்தியாளின் நிழல் எனப் பொலிந்திருக்கக்கூடியது. நிலவை அழித்து வளரச்செய்யும் கொடிகள் கொண்டது அவ்வூர். முற்றாகக் கற்றவர் கல்வியை அசை போட்டு போட்டு அதில் நுட்பமான சொல்லுக்குள் சிக்காத ஒரு பெருநிலையை அடைந்தார் என்றால் நுவல்வதற்கு அரியதான அந்த உச்சத்தில் அமைந்தன அங்கிருக்கும் மதில்கள். அந்த மதிலைச் சுற்றிய அகழி  – அதன் மதிப்பிட ஓண்ணாத ஆழத்திற்கு விலைமகளிரின் மனம், கலங்கல் தன்மைக்கு இருண்மை நிறைந்த கவிதை, காவல் அரணுக்கு பெண்ணின் கன்னிமை, முதலைகளுக்கு நெறியிலிருந்து விலக்கும் ஐம்பொறிகளென குறிப்பேற்றிச்சொல்ல அவர் எடுத்த கலங்களின் கச்சிதம் அசர வைக்கிறது. நிலத்து வழியில் அம்மக்களும் அம்மக்களின் வழி நிலமும் இதில் காணக்கிடைக்கின்றன. இதே புற அமைப்புகளை இயற்கை வஸ்துக்களை அக நிலையின் மாறுபாடுகளுக்கேற்ப தலைகீழாக்கியும் பல இடங்களில் காட்டுகிறார். இராமனைக் காணாத இரவில் சீதை நிலவை கரு நெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே என்று திட்டுவது நினைவில் எழுகிறது.

இந்த பொருளேற்றத்தை வ வே சு ஒரு விமர்சனமாகவே முன்வைக்கிறார். கம்பனின் இயற்கை வர்ணனைகள் பட்டணத்தான் ஒருவன் எழுதியது போலுள்ளது, “அவன் லயித்துப்போன மனதோடு அனுபவித்திருக்கிறான் என்று சொல்ல முடியவில்லை”என்கிறார். இயற்கையை அதன் தன்மைக்காக மட்டும் துல்லியமாக விவரிக்காமல் அதன் மேலொன்றை ஏற்றிச் சொல்கிறார். சுருக்கமாக, ஸ்வபாவோக்தியே இல்லை என்கிறார். சான்றாக, இருளாகிய இரணியனைக் கிழிக்க நரசிம்மம் தூண்பிளந்து வருவது போல் சூரியன் உதிக்கின்றான் என்று கம்பன் எழுதுவதைச் சுட்டுகிறார். சமீபத்தில் நுண்நோக்கி வழியாக கட்டெறும்பு ஒற்றை நீர்த்துளியை உட்கொள்ளும் ஒரு காணொளியை பார்த்தேன், அந்த எறும்பின் கண் வழியாக அந்தத் துளியைப் பார்த்தாலன்றி அக்கொழுந்துளியில் திண்மையை உணரந்து கொள்ள முடியாது என்று தோன்றிற்று. நான் பிரகலாதனை மொட்டை மாடியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவனாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.  நண்பர்கள் தூங்கி வழிய இவன் மட்டும் விடியல் வரும் வரும் என்று உறுதியாகக் காத்திருக்கிறான். அவன் விழிகளுக்கென்று எழும் வெய்யோன் எத்தனை மிடுக்குடன் வேகத்துடன்  வெடித்தெழுந்து பரவுவான்? அதிசயோக்தி கூடிய இந்த மாயாஜாலத்தைப் பார்க்கத் தானே காவியத்தை வாசிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு மாறாக எழுச்சிப்படலத்தில் ஒரு எதார்த்தக்காட்சியை இயற்கைக் காட்சியோடு பொருத்துகிறார் – பெருஞ்சேனை புறப்பட வெண்கொற்றக்குடைகள் கம்பி விட்டு எழுந்து விரிகின்றன,  அவை இவருக்கு கணக்கிலாத அன்னப்பறவைகள் பால் வண்ணச் சிறகுகள படபடக்கப் பறப்பது போல் காட்சி அளிக்கிறது. உவமையை புரிந்துகொள்ளும்வரைக்கும் தான் வெண்குடையும் சேனையும் நினைவில் நிற்கும், ஆனால் எண்ணில் ஓதிமங்கள் பறப்பது அழியாக்கனவு, இயற்கையில் திளைப்பதென்பது இது தானே?

கம்பனின் மாந்தர்களில் சிறப்பாக தெரிவது அவர்களுடைய நிமிர்வே. நன்மையும் தீமையும் இரண்டுமே அழுத்தமான சொற்களால் கொண்டாடப்படுகின்றன. சூழியானை போல் சிரித்த பங்கயம் போல் வேள்விக்கலத்தில் நெய்யிட பொங்கி எழும் கொழுங்கனலாக இராமன் தோன்றினானென்றால் பெருமுலைகளோடும் அதில் பிறந்த நஞ்சோடும் தாடகை தோன்றுகிறாள். தன்னேரில்லாத் தீயவளாக கைகேயி நிற்கிறாள். இதை முன்னிறுத்தியே மூல நூலை ஒப்பிடும் போது கம்பனிடம் தனித்துவமாக வெளிப்படுவது காம்பீர்ய பாவம் என்று வ வே சு குறிப்பிடுகிறார். நிமிர்வுக்கு நிகரான குழைவை சேர்ப்பதில் தான் காவியத்தின் சுவை வெளிப்படுகிறது, இராமன் அருகில் நின்று காரணமில்லமல் கண்ணீர் விடும் மக்களைக் காட்டுகிறார். உலாவியல் படலம் முழுக்க இவன் என்னைப் பார்க்கமாட்டானா என்று தன்னையே தாங்கமாட்டாது ஏங்கித் தவிக்கும் பெண்களைக் காட்டுகிறார், இது வால்மீகி காணாத ஆனால் ஆழ்வார்களும் ஜெயதேவரும் கண்ட காட்சிகள்.

இத்தகைய இராமன் சூழ்நிலைகளால் நெருக்கப்படும் துன்பியல் நாயகனும் கூட. அவனெதிரில் கடும் சூழல்களை தவிர்த்துச் செல்லும் அல்லது தகர்த்து விடும் பாதைகள் திறந்தே இருக்கின்றன. உதாரணமாக தாடகையை வதைக்கச் சொல்லி கோசிகமுனி அறிவுறுத்துமிடத்தில் பெண்ணைக் கொல்வது அறமன்று என்றாலும் அதைச் செய்வேன் என்கின்றான். குருவின் ஒரு சொல் அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது. இதற்கு மாறாக மாவலி தன் குருவான சுக்ரச்சாரியார் தடுத்தும் கேளாமல் வந்திருப்பவன் திருமால் என்றறிந்தே மூவடி நிலம் தர ஒப்புக்கொள்வதையும் கம்பன் காட்டுகிறார். சுக்ரர் மாவலிக்கு மந்திரியும் கூட. மாவலியின் ஈகைத் திறம் போற்றுதலுக்குரியதாக இருந்தாலும் நாட்டையும் உள்ளடங்கிய மக்களையும் ஈவதற்கு அவை அம்மன்னனுடையது அல்லவே. இதை சுக்ரர் உணர்த்த முற்படும் போது மாவலி அழியாப்புகழை தேர்ந்தெடுத்து அவர் மீது பழிச்சொற்களை வீசுகிறான். வேத நெறிப்படி செல்லும் இராமனையும் அசுரனான மாவலியையும் ஓர் அலைவரிசையின் இரு துருவமெனக்கொள்ளலாம் – கலக்ககாரனாக இருப்பவனால் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் துன்பம், ஏற்பு மனம் கொண்டவனென்றால் துன்பம் அவன் வரையில் கட்டுப்படுத்தப்படுகிறது, controlled fission போல. அதாவது மறம் எனப்படுவது தியாகம், தன்னலமின்மை என்ற இடத்தை நோக்கிச் செல்லும் பயணம். கம்பன் மாவலியின் புகழை விதந்தோதவில்லை என்றாலும், வாமனனின் மூன்றாம் அடியைத் தன் தலையில் வாங்கி எதிர்ப்பாளன் என்ற இடத்திலிருந்து அவன் ஏற்பாளனாகி புகழ் பெறுகிறான் என்று வாசிக்கலாம். வெண்முரசு வாசிப்பில் ஷாத்ரமும் ராஜசமும் இணைந்த கோடுகளாகக் காண்கிறோம். இராமனுக்கு அவை சந்தித்துக்கொள்ளாத தனித்தியங்கக்கூடிய  இணைகோடுகளென்றேத் தோன்றும் விதமாக அவன் சாத்வீகமே உருவாக உலவுகிறான். கம்பன் அதை “பொய்மை இல் சிறுமையில் புரிந்த ஆண் தொழில்” என்று ஆண்மையின் இலக்கணமாக்குகிறார்.  மணிமுடி கொடுக்கப்படும் போதும் அதை அரசாணையாக் கொள்கின்றான் பறிக்கப்படும்போதும் அன்றலர்ந்த தாமரையாக அமைகிறான், அவன் தொடர்ச்சியாக குறைந்த எதிர்ப்புகளுடைய பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டே வருகின்றான் (path of least resistance). பல்லாயிரம் பேர் தூக்கி வந்த சிவதனுசை மலர்மாலை போல் இயல்பாக கையில் எடுக்கிறான், ஊழிமுடிவு போல் வந்து நிற்கும் பரசுராமனை கிட்டதட்ட இடது கையால் முறியடிக்கின்றான். வீரம் வெளிப்படும் போதும் ராஜசம் வெளிப்படவில்லை, குணங்களின் மோதல் ஏற்படுவதற்கு முன்பே இராமன்  நிச்சலனமாக நேரடித்தீர்வாக நின்று விடுகிறான். இனி வரும் காண்டங்களின் வாசிப்பினூடே சீதை மீதிருக்கும் காதல் அவன் சமநிலையை குலைக்கும் போதெல்லாம் என்ன செய்கின்றான் என்பதை மட்டுமே கூட இராமகாதையாக பார்க்கலாமோ என்று தோன்றுகிறது.

இப்படி மாறி மாறிப் பறந்துகொண்டும் தர்க்கப்பூர்வமாகவும் சொல்லெண்ணியும் கோர்த்திருக்கும் பாடல்களை கால ஓட்டத்தில் மாறிய ஒழுக்கங்களை, விழுமியங்களை மறுபரிசீலனை செய்யும் நோக்கோடுஅணுகிப்பார்க்கலாம் என்று தோன்றியது. பெரியார் “வால்மீகி கண்ட ஸீதை” என்ற கட்டுரையில் சீதை இராமனின் ஆண்மையை பழிப்பதிலிருந்து தொடங்கி இலவ குசர்கள் இராவணனின் வாரிசுகள் என்று முடிக்கிறார். இதற்கு வான்மீகத்திற்குப் போவானேன், “சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே” என்று பாலகாண்டத்திலேயே புலம்புகிறாள் சீதை. இத்தனைக்கும் சீதை கன்னிமாடத்திலிருந்து உயரத்திலிருந்து இராமனைப் பார்ப்பது ஒரே ஒரு முறை தான். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவின் நீளத்தை தாள ஒட்டாமல் சீதை இராமனைவிட அதிகம் துடித்துப்போகிறாள். இந்த சீதையைப் பிரிந்து இராமன் காடு செல்ல முற்பட்டப்போது அவள் சொன்னதை ஒரு தகவு போல் பெரியார் எடுத்துக்கொண்டிருக்கிறார். சத்வ இராமனிடமிருந்து ராஜச ராவணனின் கையில் சிக்கிக் கடைசியில் இரு குணங்களையும் உதாசித்து நிலம் புகும் சீதையின் கதையாக வாசிக்கலாமா என்று தெரியவில்லை. எப்படி வாசித்தால் அவள் கற்பின் மீது பாய்ச்சப்படும் தேவையற்ற  நிலையொளி விலகும் எனவும் தெரியவில்லை. உண்மையில் சீதையின் கற்பெனப்படுவது இராமனின் ஆண்மை தான், இல்லையா? பெரியார் நேரடியாக விமர்சிக்கிறார் என்றால் அண்ணா கொஞ்சம் சுற்றி வளைத்து கம்பரசத்தை காமரசம் என்று மாற்றிப்போடுகிறார். “அல்குல்” என்ற சொல்லை “கண்ட்ரோல் + எஃப்” இல்லாத காலத்திலேயே தேடி வனைந்த கட்டுரை அது. தெளிவாகவே அரசியல் நோக்கத்துடன் எழுதப்பட்டது. சங்க இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கும் அண்ணாவிற்கு தமிழ் மரபில் அகத்துறை பாடும் முறைமையைச்  சுட்டிக்காட்டவேண்டியதில்லை. இப்படிப்பட்ட புத்தக்கத்தில் வருபவன் தான் நீங்கள் தொழும் தெய்வமா என்ற கேள்வி எல்லாக் காலத்தும் கேட்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அங்க வர்ணனையும் ஆண்-பெண் உறவும் தான் அண்ணாவின் சிக்கல் என்றால் அது முற்போக்கு அல்ல, விக்டோரிய ஒழுக்கம். இதை பக்தியாகச் சுருக்குபவர்கள் ஒரு வகையான அடிப்படைவாதிகள். இராம இராஜ்ஜியத்தைத் தூக்கிப்பிடித்திருந்த நாட்களவை என்றாலும் ஒழுக்கவியல் சார்ந்த சர்ச்சையாக காவியத்தைச் சுருக்கி இருப்பது வன்முறை தான். அல்லது, நுட்பங்களை வலிந்து விலக்கி வாசித்திருப்பதன் பிண்ணனியை நான் இன்னும் சரிவர புரிந்துகொள்ளவில்லை.

அதன் மூலம் கம்பனை  கணிசமான தமிழர்கள் வாசிப்பதிலிருந்து இரத்து செய்திருக்கிறார் என்பது கூட என்னை வியப்பிலாழ்த்தவில்லை. இன்றும் நாம் ஒழுக்கத்தையும் மீறல்களையும் பற்றிய ஒடுக்கமான பார்வைகளைத் தாங்கி இருக்கின்றோம். கம்பனின் அகத்துறைப் பாடல்களை கொஞ்சம் விலக்கிப் பார்த்தால் வழக்கமான குறுகல்களை அவற்றிலேயே கண்டுகொள்ள முடியும். ஆனால் அண்ணா அதை நேரடியாகச் சாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. கம்பன் காட்டும் ஏகாதிபத்ய அரசை சாடி இருக்கலாம்.  பொன் முதல் போது முடிய கண் மலர்ந்து ஒளிரும் ஒன்பது பொருட்களை கம்பன் வரிசைப்படுத்தும் போது பொருட்களின் நிறையோடு ஒன்றாக “கடைசியர் “ முகத்தை வைக்கிறார். உடனடியாக  ”பேசாதவர்கள்” சிறுகதையின் டம்மி கண்ணில் வந்து மறைகிறது. வேறொரு இடத்தில் சற்று ஆரவாரமாக புனலெறிந்து விளையாடுபவர் உயர்குடி மகளிரெனவும் அன்னமென்னடையிட்டு கொஞ்சம் அடக்கி வாசிக்கப் பழகியவர் கடைசியர் எனவும் ஒரு சித்திரம் வருகிறது. கம்பன்  காலத்தில் ஏற்றத் தாழ்வுகளை உன்னதப்படுத்தும் நோக்கு இருந்தது எனத் தொடங்கி மனு நீதி சொல்லும் அறம் வரை ஒரு கோடு இழுத்துக்கொள்ளலாம். ”அந்தோ கொடிதே அறம்” என்ற தசரதனின் புலம்பலை மேற்பாலிருப்பவன் ஒருவனின் புலம்பலாகத் திரித்து தலைகீழாக்கம் செய்யலாம். கம்பன் தேவருலகத்தைவிட அயோத்தி மேலானது என்று சொல்லி சில படலங்களுக்குள்ளாகவே இந்திரன் அகலிகையைக் கவரும் பாடல்கள் அமைகின்றன, தேவருலகத்தின் அறம் எத்தகையது என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.  தசரதன் அவை அமைச்சர்களின் மாண்பை சொல்லும் போது “பிறப்பின் மேன்மைப் பெரியவர், அரிய நூலும் கற்றவர்” என்ற வரி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, சமூக நீதிக்கொள்கையை ஏளனம் செய்வது. அதிலிருந்து எத்தனையோ மீம்களை புனையலாம்.

ஆனால் அண்ணா தகர்க்க முயல்வது தெய்வமெனும் பிம்பத்தை, அது உடைக்கப்படட்டும், என்றைக்கும் அது உடைந்தவற்றிலிருந்து எஞ்சி வேறொன்றாகத் தன்னை ஆக்கித் தான் நின்று கொண்டிருக்கின்றது. வான்மீகத்திலிருந்து கம்பன் வரை இராமன் பல கோணல்களையுடைய மனிதன் தான். திருமாலின் அவதாரம் என்று நடையின் உயர் நாயகனென்று கம்பன் சொல்லுமிடத்தும் அவன் மானுடன் என்பது விளங்கத்தோன்றுமாறும் பாடல்களை புனைகிறார். ஓர் இலட்சிய மனிதனைப் இழைத்துச் செதுக்கும் கதையில் அங்கங்கு அவன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறான், கம்பன் இராமனுக்காக நிலை விளக்கங்கள் அளித்து வாதாடுகிறார்.  அவர் கூறும் வாதங்களை வைத்தே இராமனின் பிம்பத்தை ஒழிக்க முடியும். மாகாவியங்கள் இரண்டு இருக்க கம்பன் காசு இல் கொற்றத்து இராமன் கதையை தேர்ந்தெடுத்ததன் காரணம் அதன் சவால்களாக இருக்கலாம்,. அறத்தை ஒரு சட்ட நூல் நிறுவுவதற்கும் இலக்கியம் நிறுவுவதற்கும் பேதமுள்ளது. சட்டத்தின் பார்வையில் சமரசங்களுக்கு இடமில்லை, பிழைகளும் குறைகளும் குற்றம்.  பிழைகளோ நோக்க நோக்கப் பெருகுபவை. இலக்கியத்தில் பிழைக்குப்பையின் மீதேறிச்சென்று ஒளி நோக்கிச் செல்லும் துணிவு தேவைப்படுகிறது. அது குறைபாடுகளின் வழியாக முழுமையை உணரும் கிண்ட்சுகி முறை. குறையுள்ள தெய்வங்களை, தன்னிலை விளக்கமளிக்கும் தெய்வங்களை நம்மால் பொருத்துக்கொள்ளமுடியவில்லை என்பதில் மனிதனுக்கும் தெய்வத்திற்கும் அறத்திற்குமான உறவு அமைந்துள்ளது. உன்னதமாக்கலின் ஒரு அங்கமாக தெய்வமாக்கலும் தெய்வமாக்கலின் பேரங்கமாக மானுடமாக்கலும் காவியத்தின் அடிநாதம் எனத் தோன்றுகிறது. மாறி வரும் அழகியல்/ஒழுக்கக் கூறுகளை மட்டும் வைத்து விமர்சனம் செய்திருப்பது ஒரு சருக்கல் தான். காழ்ப்பின் காரணத்தால் கலையை புறக்கணிப்பது நம் காலத்தில் ஆகப் பெரும் வீழ்ச்சி அல்லாமல் என்னது? பிரிவினைகளால் பிளந்திருக்கும் இவ்வுலகத்தை கட்டி எழுப்பியதற்கு சரி நிகரான கீழ்மை அல்ல, ஆனால் அந்த நிரையின் முக்கியமான இடத்தில் பொருந்தக்கூடியதே தான்.

இலக்கியத்தில் மேற்சொன்ன முரண்களையும் எழுத்தாளனின் நேர்மையை நொய்மையை நீர்மையைக் காட்டுவதாகவும் வாசிக்க இடமிருக்கிறது. வாசிப்பின் தொடக்கத்திலேயே விவாதம் பன்முகத்தன்மையோடு இருப்பதற்கு முட்டுக்கட்டையிட்டுக்கொள்ளக்கூடாது என்று விதி அமைத்துக்கொண்டதனால் இத்தகைய சமகால கருத்தியல்கள் கொண்டு அரசியல் செயற்களத்தில் வைத்து அமர்வுகளை முன்னெடுத்துச் செல்ல முடிகிறது. இயல்பாகவே நேர்மறைத்தன்மை கொண்ட பெண்கள் – சீதை முதலானோர் – அழகிகள். வெறிந்த மயிரோடும் குகை போன்ற வாயோடும் பெரிய உருவினளாக, ஒரு ஆணின் ஆகிருதியோடு – தாடகை. இன்னும் விரித்து ஆண் – வீரம், பெண் – அழகு என்ற பாகுபாடு காவிய இலக்கணமென்ற இடத்திலிருந்து இன்று எங்கு நிற்கிறது என்று உரையாடல் நீண்டது. சமகாலத்தில் தருணப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் சில சிக்கல்களையும் அவதானிக்கின்றோம். முன் தீர்மானங்களும், மன மயக்கங்களும், ஒற்றைப்படையான பார்வைகளும் பக்கச்சார்புள்ள திணிப்புகளும் படைப்பாளி காட்டும் உண்மையிலிருந்து நம்மை அப்பாலிட்டுவிடுகின்றன. அவ்வுண்மையை ஏற்றுக்கொள்வதா என்பது இரண்டாம் கேள்வி, முதாலவது, உள்ளது இது தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வது.  இரண்டாவது கருத்தியல் எதிர் நிலை எடுத்தல் முறையான இலக்கிய விமர்சனமாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற உள்ளார்ந்த அச்சம், கேட்பதற்கு தகுதி இல்லை என்ற தாழ்வுணர்ச்சி, கிளப்ஹவுஸ் போன்ற பொதுத் தளத்தில் பேசுவதால் எதையும் சர்ச்சையாக்கிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வு. அப்படி உள்ளார்ந்த அச்சத்தையும் அகங்காரத்தையும் முற்றொதுக்கி ஒன்றை வாசிக்க சாத்தியமில்லை என்றாலும் படைப்பாளிக்கு ஓரிடத்தைக் கொடுக்காமல் வாசிக்க இயலாது. அல்லது நல்ல படைப்பு தனக்குண்டான பீடத்தை தானே தேடிக்கொள்ளும். மூன்றாவது ஜெ அடிக்கடி குறிப்பிடுவது போல படைப்பிலக்கிய உண்மைகள் அன்றாட உண்மைகள் இயங்கும் அதே தளத்தில் வீரியத்தில் பொருள்படுபவை அல்ல. சில அந்தரங்கமானவை என்பதாலேயே ஒத்துக்கொள்ள முடியாதவை சில இடங்களில் அது பித்து நிலையின் அகக்குமுறலின் வெளிப்பாடு. மொழியின் பல சாத்தியங்களில் ஒரு கீற்று, அதில் காலத்தோடு தொடர்பு கொண்டதும் காலாதீதமாக நிலைத்து நிற்பதுமாக பல கூறுகளை உள்ளடக்கியிருக்கும். கம்பனில் இரண்டுமாக எனக்குத் தோன்றுவது அதில் பயின்று வரும் ஒலிகள். பேராசிரியர் ஜேசுதாசன் சொல்வது போல இது நேரடி இசையல்ல இசைத்தன்மை. பண்ணிசை அல்ல சொல்லிசை.

கடக்கரும் வலத்தெனது காவலிதில் யாவும்

கெடக்கரு வறுத்தனன் இனிச் சுவை கிடக்கும்

விடக்கரிதெனக் கருதியோ விதி கொடுந்தப்

பட கருதியோ பகர்மின் வந்த பரிசு என்றே

என்ற பாடலை ”தனத்தன தானதன தானதன தான” என்ற மெட்டில் வாசிப்பதிலடையும் உவகை மொழியின் அந்தரங்க அலகாக தாளம் மாறும் புள்ளியில் அமைகிறது. ஒவ்வொரு ஐநூறு பாடல்களின் முடிவிலும் காண்டத்தின் நிறைவிலும் முற்றோதல் மூலமாக சந்தத்தின் அழகையும் இயன்றவரை சேர்த்து பயில்கிறோம். அதன் வழியாக கதைக்களம் மாறும் போது கம்பன் அதற்கேற்ப சந்தத்தையும் இலாகவமாக மாற்றுகிறார் என்று கண்டுகொண்டோம். மெட்டுகளிட்டு சிலவற்றைப் பாடியும் பார்க்கிறோம். சிலவற்றை நாடகப் பாங்கில் வாசிக்கிறோம். மிக நீண்ட பயணத்தை எளிமையாக்கும் இனிமையாக்கும் முயற்சி இது.  ஒட்டுமொத்தமாக காவியத்தின் பெருந்தொகுதி ஒன்றைப் பார்ப்பதற்கு மலைப்பாகவும் உள்ளது. அமர்வுகளின் போது எவ்வளவுக்கெவ்வளவு எங்கள் அறிவின்பாற்பட்ட அரசியலாக்கப்பட்ட ஆளுமை வெளிப்படுகிறதோ நேர்மாறாக முற்றோதலின் போது  வேறொரு ஆளுமை எழுவதை பார்க்கிறோம். அது அகத்துறைப் பாடல்களின் நீளத்தைச் சலித்துக்கொண்டே இராமன் – சீதை திருமணம் எப்போது எவ்விதம் என்று தேடும் மனம். அது பாமர மனமா அல்லது மனித மனமென்றால் அவ்வளவு தானா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

முற்றோதலைத் தவிர பாலகாண்ட நிறைவையொட்டி முக்கியமான சில தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஒருங்கமைத்தோம். இதில் ஒருக்கம் என்பதில் ஒன்றுமில்லை என்று தோன்றுமளவிற்கு நேரக்கட்டுப்பாடிலிருந்து பேச்சில் தீவிரம் வரை  நண்பர்கள் ஆதரவினால் அத்தனையும் அமைந்து தானாக நிகந்தேறியிருக்கிறது. மார்ச் 18, 2022 அன்று எங்கள் புதுப்புனல் நிகழ்வுகள் 100-ஆவது அமர்வை எட்டியது. பங்குனி உத்திரத்தில் அந்நாள் அமைந்தது முழுவதுமே தற்செயலான ஒன்று. அதை விடப் பெரிய தற்செயல் நிகழ்வு என்பது அதற்கடுத்த நாள் (பங்குனி ஹஸ்தம்) எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன், எழுத்தாளர் சுந்தரவடிவேலன், பிரபுவுடன் சேர்ந்து நாட்டரசன்கோட்டையில் இருக்கும் கம்பன் சமாதியில் எங்கள் மரியாதையை செலுத்தியது. கம்பன் காவியத்தை அரங்கேற்றிய நாளை அத்தத் திரு நாளாக அங்கு கொண்டாடுகிறார்கள். அங்கு செல்லும் வரை அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. சுனீல் அண்ணாவின் வீட்டினுள் நுழைந்தால் அங்கும் அயோத்தியின் தமனியத் தகடுகள் வேய்ந்திருந்தன, மொட்டைமாடியில் செய்ய வெய்யோன் சிவந்திருந்தான். வழியில் கண்ணாத்தாளைப் பார்த்தால் பிறைக்கடை வாய் அரக்கி தாடகையின் முகம் நினைவில் எழுகிறது. சமாதி செல்லும் பாதை நெடுஞ்சுரமே தான், கல்லும் கள்ளிச்செடியுமாக கொடும்பாதை அது. இந்தத் தெருவில் நடந்து வந்த களைப்பில் கம்பன் வானேகியிருப்பான் என்ற சொல்லிக்கொண்டோம். சமாதி/கோவில் வளாகத்தில் நுழைந்தால் சம்பந்தமே இல்லாமல் “தணிகையிலே சம்சாரி பழனியிலே சன்யாசி உங்கணக்கு புரியலையே முருகா” என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதை அணைத்துவிட்டு பூசை முடிந்த மணம் வீசும் கருவறைக்குள் நுழைந்து பாடல்களை வாசிக்கத் தொடங்கினோம், பாடினோம். நெற்றி வியர்வை வழிய மேற்சட்டை நனைந்து  சம்மனமிட்டு அமர்ந்து கவிஞனுக்கு சில பாமாலைகளை சூட்டினோம். கவிஞனின் அருகமர்ந்திருந்த நிறைவை எழுத சொல் தடுமாறுகிறது.

இந்த சில மாதங்களில் கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் மிக அரிதானவை. இருக்க இருக்க நண்பர்கள் கூடிக்கொண்டே இருக்கின்றார்கள், கடும் உலகியல் சிக்கல்களுக்கிடையில் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருப்பதை கொஞ்சம் பெருமையோடல்லாமல் என்னால் பார்க்கமுடியவில்லை. கூடவே இதை இன்னும் சிறப்பாக தீவிரமாக கூர்ந்து ஆழ்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் வலு கொள்கிறது. முற்றோதலுக்கு பாடலை ஒதுக்கும் போது அனைவருக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமே என்ற எண்ணம் துரத்துகின்றது. கம்பனின் வரிகளைப் பாடுவதற்கு எங்களுக்குள் போட்டா போட்டியாக இருப்பதைக் காண நகைப்பாக இருக்கிறது, உள்ளூர நெஞ்சம் குளிர்ந்து விடுகிறது. நிகழ்வுக்கு நாள் குறித்து விட்டால் பள்ளி/கல்லூரி ஆண்டுவிழா மன நிலையுடன் அத்தனை மகிழ்வும் கொண்டாட்டமுமாக நண்பர்கள் கூடுகின்றோம். யாரைக்கேட்டாலும் முதல் நாள் இரவு தூங்கவில்லை, கடும் பயிற்சியில் இருந்தோம் என்று உற்சாகமாகச் சொல்லச் சொல்ல ஸ்ரீனிவாசுக்கும் எனக்கும் பதற்றம் கலந்த இனிமை தொற்றிக்கொள்கிறது.

இந்த தருணத்தில் இந்தப் பயணத்தை சாத்தியமாக்கிய இம்பர்வாரி வாசகர் வட்டத்தின் வாராந்திர அமர்வின் மட்டுறுத்துநராக வழி நடத்தும் ஆனந்த் சுவாமி, ஆழ்வார்கள் பாடல் லட்சுமி நாராயணன், எழுத்தாளர் (குழும இசை ஆசிரியர்) சுனீல் கிருஷ்ணன், தொடர்ந்து உற்சாகமூட்டும் எழுத்தாளர் கா.சிவா, தொன்ம விளக்கங்களுக்கு எழுத்தாளர் சுந்தரவடிவேலன், கச்சிதமான திரை மேற்கோள்களுக்கு எழுத்தாளர் காளிப்பிரசாத்,  சுக்கிரி குழுமத்திலிருந்து இணைந்து கொண்ட விஜி,  வெண்முரசு குறிப்புகளுக்கு சிவமீனாட்சி, கமலநாதன், ராஜேஷ், பாடி அசத்தும் ஜமீலா, ஆஸ்திரேலிய நேரத்தில் தனி அமர்வை நடத்தும் கலாதேவி, எங்கள் ஆஸ்தான ஒலி இயக்குநர் பிரபு, திரைப்பட இயக்குநர் மருதுபாண்டியன், அவர்கள் நேரத்திற்கு பின்னிரவு ஆனாலும் விடாப்பிடியாக முற்றோதலில் கலந்து கொள்ளும் எழுத்தாளர் டோக்யோ செந்தில், கவிஞர் வேணு தயா நிதி, சொல்லாராய்ச்சி நுட்பங்களுக்கு தமிழ் பேராசிரியர் கு. பத்மனாபன், சோஹோ வெங்கட்ரமணன் ஆகியோருக்கும் மற்றும் புதிதாக இணைந்து தொடர்ந்து பயணிக்கும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம். முறைசார் கல்வியாக இலக்கியத்தைப் பயிலும் ஸ்ரீனிவாஸ் எங்கள் அமர்வுகளின் அச்சாணி என்றால் அது மிகையல்ல. பல நண்பர்களுக்கு தூக்கத்தில் கூட அவர் குரலில் “அந்த டிராமாவைத்தான்…” என்று ஒலிப்பதாக கேள்வி. அவருக்கும் என் வாழ்த்துகள்.

இந்தப்பாதைக்கு விதையிட்ட உங்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியும் வணக்கமும். அஞ்சனக் கருமுகில் கொழுந்தின் காவிய எழிலைக்காணச் செய்த கம்பனுக்கு என் பேரன்பு.

பார்கவி.



One response to “கம்பன் கனவு”

  1. […] கம்பன் கனவு- பார்கவி […]

Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading