[1]
காந்தி வலதுசாரியா, இடதுசாரியா? இன்றைய நிலையில் அவர் தீவிரமான, முற்போக்கு இடதுசாரியாகவே அறியப்படுவார். காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள் அவரை இடதுசாரி சாய்வுள்ளவராகக் காட்டினாலும் அவர் நிச்சயமாக வலதுசாரி சிந்தனைகளையோ, கொள்கைகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல என அவரை அறிந்த, வாசித்த எவராலும் உறுதியாகக் கூறவியலும். ஆனால் காந்தியும் வலதுசாரி என அழைக்கப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருடைய கருத்துக்களை, கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அவரது நெருங்கிய பிற காங்கிரஸ் சகாக்களான பட்டேல், ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப் பந்த், ராஜாஜி போன்றோரும் அவ்வாறே அடையாளப்பட்டிருந்தனர், ஒருவரால். அவர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1939ஆம் ஆண்டில் நேருவுடனான அவரது கடிதங்கள் மற்றும் உரையாடல்களில் நேதாஜியின் இப்பார்வை வெளிப்பட்டிருக்கிறது. எதனால் காந்தி வலதுசாரி ஆனார்? உண்மையில் நேதாஜி காந்தியை இன்று நாம் சொல்லும் முற்போக்கு / பிற்போக்கு, நவீனத்துவம் / பழமைவாதம் சார்ந்த இடது / வலது கண்ணோட்டத்தில் அந்த பகுப்பாய்வை நிகழ்த்தவில்லை. அன்றிருந்த காங்கரஸில் வெள்ளைய அரசாங்கத்தை புரட்சி மூலம் துரத்திவிடலாம் என்ற எண்ண ஓட்டங்கள் கொண்ட தீவிரவாதிகளும், வெள்ளைய அரசாங்கத்தோடு சமாதான வழிகளில் முரண்பட்ட மிதவாதிகளும் இரு குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். காங்கிரஸின் உள்ளேயே இந்திய சோஷலிஸ்ட் கட்சி என்னும் தீவிர இடதுசாரி குழுவும் இருந்தது. ஆனால் போஸ் மிக எளிமையாக காந்தி மற்றும் அவரை ஆதரிப்போரை வலதுசாரிகள் என்றும், காந்தியுடனும் அவரது கொள்கைகளுடனும் முரண்படுவோர் அனைவரையும் இடதுசாரிகள் எனவும் வரையறுத்திருந்தார். இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த வலதுசாரிகளில் சிலர் வெள்ளையர்களோடு ரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இவையெல்லாம் நடந்தது 1939 ஆம் ஆண்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில். நேதாஜி தன்னுடைய சார்பில் வெளியிட்ட அறிக்கைகள், நேருவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அவருடனான உரையாடல்கள் போன்றவற்றில் இப்பார்வை மிகத் தெளிவாகவே முன்வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைப் பதவிக்கான தேர்தலை ஒட்டித்தான் பேசப்பட்டிருந்தன.
இந்த இடத்தில் அன்றைய இந்திய தேசிய காங்கிரஸின் அமைப்பு முறைகளை அறிவது அவசியம். அதன் தலைவர் வருடந்தோறும் தேர்ந்தெடுக்கப்படுவார். தேசமெங்கும் இருக்கும் பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸின் மைய அதிகாரக் குழுவான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தலைவரைத் தேர்ந்தெடுப்பர். பெரும்பாலான சமயங்களில் இந்த தேர்தல் என்பது நிகழாமலேயே ஒருமனதாக தலைவர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இது காங்கிரஸ் துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே இருக்கும் நடைமுறை. நம் நாடாளுமன்ற முறைப்படி பார்த்தால் இம்முறை சற்று பலவீனமாக ஒன்றாகத் தோன்றும். வருடாவருடம் தலைவர் மாறிக்கொண்டிருப்பது என்பது வெறும் அலுவல் சார்ந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதிலேயே நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகத் தோன்றும். இப்படி தலைமை மாறிக்கொண்டே இருந்தால் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் விதங்கள் ஆகியவற்றுக்கு எப்படி போதுமான சமயமும், முக்கியத்துவமும் அளிக்க இயலும்? அதைவிட முக்கியம் கட்சியின் கொள்கைகள் மற்றும் வெள்ளையர் எதிர்ப்பு ஆகியவற்றை வரையறுப்பது, முறை செய்வது யார்? காங்கிரஸ் காரிய கமிட்டி. காங்கிரஸின் தலைவர் என்பவர் இந்த காரிய கமிட்டியின் முடிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒற்றைத் தலைவர். ஒருவகை சட்டத்தால் மட்டுறுத்தப்பட்ட முடியாட்சி முறை. தற்போதைய நிலையை வைத்துச் சொல்ல வேண்டுமானால் நம்முடைய குடியரசுத் தலைவருக்கு நிகரான பதவி. காங்கிரஸின் தலைவர்கள் காரிய கமிட்டியில் குறிப்பிடத் தகுந்த செல்வாக்கைப் செலுத்த இயலும். ஆனால் முடிவுகளில் கமிட்டிக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. இந்த காரிய கமிட்டியின் உறுப்பினர்களும் காங்கிரஸ் தலைவரைப் போலவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவர். காந்தியின் அபரிமிதமான மக்கள் செல்வாக்கு, ஆளுமை, வசீகரம், தொலைநோக்குப் பார்வை, தலைமைப் பண்பு, மக்கள் இயக்கங்களை வழிநடத்திய அனுபவம், காங்கிரஸின் கொள்கைத் திட்டங்களிலும் அவற்றை மக்கள் பங்களிப்புடன் அவற்றின் இலக்கு நோக்கி நிகழ்த்திக் காட்டுவதிலும் அவருக்கு இருந்த தெளிவு மற்றும் வெள்ளையர் உட்பட அனைத்துலக தலைவர்களிடமும் அவர் பெற்றிருந்த மரியாதைக்குரிய இடம் ஆகியவை அவருக்கு காங்கிரஸ் கட்சியில் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுத் தந்திருந்தன. சுருக்கமாக சொல்வதானால் காந்தி இல்லாத ஒரு காங்கிரஸ் கட்சி என்பது சூரியன் இல்லாத பூமி. அந்த இடம் காந்திக்கு இந்த தலைவர் பதவி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர் தேர்வுகளில் மிகப் பெரும் செல்வாக்கை இயல்பாகவே உருவாக்கி அளித்திருந்தது. ஆனால் காந்தி அந்த செல்வாக்கை ஒருபோதும் தன் சுயநலத்திற்காகவோ, ஆணவ நிறைவிற்காகவோ, தன் அதிகாரத்தை பிறருக்கு காட்டுவதற்காகவே பயன்படுத்தியதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
இந்த பின்னணியில் இருந்து தான் 1939 ஆம் ஆண்டின் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை கவனிக்க வேண்டும். 1938 ஆம் ஆண்டின் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார். 1939 ஆம் ஆண்டில் மீண்டும் தலைவராக அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரே தொடர வேண்டும் என ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பல பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். தாகூருக்கு காங்கிரஸின் தலைவராக ஒரு நவீனத்துவர் வர வேண்டும் என்ற கருத்து இருந்தது. அவரைப் பொறுத்த வரை காங்கிரஸில் இருந்த நவீனத்துவர்கள் என்றால் அது நேதாஜி மற்றும் நேரு இருவரும் தாம். நேரு முன்பே இருமுறை காங்கிரஸ் தலைவராக இருந்தமையால் இம்முறை நேதாஜியே தொடரட்டும் என தாகூர் காந்திக்கு எழுதினார். காந்தியோ தன்னளவில் சுபாஷ் இந்த தலைவர் பொறுப்பின் சுமைகளில் இருந்து விடுபட்டால் ஒழிய அவர் விரும்பிய படி பெங்கால் மாகாணத்தை ஊழலின் பிடியில் இருந்து விடுவிக்க இயலாது எனக் கருதுவதாக பதில் எழுதினார். காந்திக்கு சுபாஷ் இரண்டாவது முறை நிற்பதில் விருப்பம் இல்லை. 1939 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் நர்மதை நதிக்கரையோரமாக இருந்த திரிப்பூரி என்ற சிறிய கிராமத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸின் அவ்வாண்டுக் கூட்டத்தில் அதன் தலைவராக மௌலானா அபுல் கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என காந்தி விரும்பினார். அப்போதிருந்த அரசியல் சூழல் அப்படிப்பட்டது. 1937 ஆம் ஆண்டு நடந்த பதினோரு மாகாண தேர்தல்களில் காங்கிரஸ் 5 மாகாணங்களில் அறுதி பெரும்பான்மையையும், இரண்டு மாகாணங்களில் கூட்டணி கட்சிகளோடு ஆட்சி அமைக்கும் அளவிலும் பெரு வெற்றி பெற்றிருந்தது. ஆனால் முஸ்லீம் லீக் அவர்கள் சொல்லிக்கொண்டதைப் போல இந்தியாவின் அனைத்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதியாக தன்னை நிறுவிக்கொள்ள தோற்றிருந்தது. இத்தனைக்கும் முஸ்லீம் பெரும்பான்மை மாகாணங்களான பஞ்சாப், பெங்கால் இரண்டிலும் அது தோல்வி அடைந்திருந்தது. பஞ்சாபில் தேசிய ஒன்றிய கட்சியிடம் (நேஷனல் யூனியனிஸ்ட் பார்ட்டி) அது படுதோல்வி அடைந்திருந்தது. அதே போல் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸும் பெருவாரியான முஸ்லீம் வாக்குகளைப் பெறுவதில் சற்று பின்தங்கி இருந்தது. அந்த தேர்தல்களில் பிராந்திய காட்சிகளே பெருவாரியான இஸ்லாமிய வாக்குகளைப் பெற்றிருந்தனர். எனவே 1938, 39 மற்றும் நாற்பதுகளின் முற்பகுதி வரை இஸ்லாமிய வாக்குவங்கியை தொகுப்பதில் இரு கட்சிகளும் முனைப்பு காட்டிக்கொண்டிருந்தன. இந்த பின்னணியில் தான் காந்தி காங்கிரஸின் தலைவராக ஒரு இஸ்லாமியர் இருப்பது முஸ்லிம்களை தேசிய கட்சியின் பின் அணிவகுக்கச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கும் எனக் கருதினார். (அவர் விரும்பியது போன்றே 1940 துவங்கி 46 வரை காங்கிரசின் தலைவராக மௌலானா அபுல் கலாம் ஆசாத் இருந்தார்.) குஜராத் மாநிலம் பர்தோலியில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி மௌலானாவை அடுத்த காங்கிரஸ் தலைவராக முன்மொழிந்து இருந்தது. அதை மீறியே சுபாஷ் தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்து தேர்தலுக்கு தயாரானார். ஆனால் மௌலானா தன் வேட்புமனுவை பின்வாங்கினார். காரணம் தெளிவானது. நேதாஜி, மௌலானா இருவருமே வங்கத்தைச் சேர்ந்தவர்கள். வங்கத்தில் நேதாஜியின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்து கொண்டிருந்தது. மேலும் நேதாஜிக்கு காங்கிரஸில் ஒரு நட்சத்திர அந்தஸ்து இருந்தது. எனவே மௌலானா தன் வேட்புமனுவை பின்வாங்கினார். இது காந்திக்கு தர்மசங்கடத்தை அளித்தது. காந்தி யார் தலைவராக வேண்டும் என்பதை விட யார் ஆகக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவர் நேருவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “மௌலானா சாஹிபிற்கு இந்த முள் கிரீடத்தில் விருப்பம் இல்லை. நீங்கள் வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை முயலுங்களேன். உங்களுக்கும் விருப்பம் இல்லையென்றால், அவரும் (சுபாஷ்) நான் சொல்வதை செவி மடுக்கப் போவதில்லையென்றால் எனக்கு பட்டாபியை (சீதாராமையா) தவிர வேறு ஆள் இல்லை.”, என எழுதுகிறார் காந்தி. நேரு 1939 க்கு முன்பே நான்கு முறை (1929, 30, 36 மற்றும் 37) காங்கிரஸின் தலைவராக இருந்திருக்கிறார். மேலும் நேரு இப்படி ஒரு போட்டியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனவே அவரும் தயங்கினார். வேறு வழியே இன்றி பட்டாபி சீதாராமையா நேதாஜிக்கு எதிராக நின்றார். பட்டாபி சீதாராமையாவை பொறுத்தவரை அவரிடம் விருப்பம் இருக்கிறதா என்ற ஒரு கேள்வியே கேட்கப்படவில்லை!! காரிய கமிட்டியின் பரிந்துரைக்கு எதிராக நேதாஜி தன் வேட்புமனுவை தாக்கல் செய்தது காரிய கமிட்டிக்கும் அவருக்கும் இடையே ஒரு பிளவை இயல்பாகவே உருவாக்கியது. இரு தரப்புகளும் அறிக்கைகளை மாறி மாறி அனுப்பி கொண்டனர். இறுதியாக ஜனவரி 29, 1939 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நேதாஜி 1580 வாக்குகளும், பட்டாபி சீதாராமையா 1377 வாக்குகளும் பெற்றிருந்தனர். வங்கம், மைசூர், பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் மதராஸ் மாகாணங்கள் நேதாஜியின் வெற்றியை உறுதி செய்திருந்தன.

Photographer Unknown. Source Wikipedia.)
காந்தி இதைத் தன் தோல்வியாகவே கண்டார். அதை அவரது வழக்கப்படி வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். காங்கிரஸ் காரிய கமிட்டியினர் கூண்டோடு ராஜினாமா செய்தால் என்ன என்று கூட விவாதித்தார் என நேருவிற்க்கு காந்தி எழுதிய கடிதம் மூலம் ஊகிக்கலாம். பிப்ரவரி 22 ஆம் தேதி வார்தாவில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் அது தான் நடந்தது. நேரு மற்றும் சரத் போஸ் தவிர பிற காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். நேரு தனியாக, பிறிதொரு நாளில் ராஜினாமா செய்தார். தீவிர காய்ச்சல் கண்டிருந்ததால் இந்த கூட்டத்திற்கு நேதாஜியால் வர இயலவில்லை. இந்த கூட்டத்தை ஒத்திப் போடுமாறு நேதாஜி காந்திக்கு கடிதம் எழுதினார். ஆனாலும் கூட்டம் நடந்தது, தலைவர் இல்லாமலேயே. இந்த கூட்டத்திற்கு முன்பு, அதாவது பிப்ரவரி 15 அன்று வார்தாவில் வைத்து காந்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் நேதாஜி. அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது வருடாந்திர கூட்டத்தை மார்ச் 10 முதல் 12 வரை நர்மதை நதிக்கரையோரமாக அமைந்த திரிபூரியில் நடத்த முடிவு செய்திருந்தது. இன்னும் காய்ச்சல் குணமாகாத நிலையிலும் கூட போஸ், மருத்துவர்கள் உத்தரவையும் மீறி நெடும்பயணம் செய்து கலந்து கொண்டார். காந்தி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ராஜ்கோட்டில் உண்ணாநோன்பில் ஈடுபட்டிருந்தார். ஆனால் பதவி விலகிய அத்தனை காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த போட்டியின் உச்சக்கட்டம் அந்த கூட்டத்தில் நிகழ்ந்தது, கோவிந்த வல்லப பந்த் கொண்டு வந்த ஒரு தீர்மானம் மூலம். காங்கிரஸின் அடிப்படை கொள்கைகள் மற்றும் செயல் வரைவுகளில் காந்தியின் மீதான பரிபூரண நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்த அந்த தீர்மானம், அவரின் வழிகாட்டுதலில் செயல்பட்ட முந்தைய காங்கிரஸ் காரிய கமிட்டியின் செயல்பாடுகளின் மீதான நன்மதிப்பையும் பதிவு செய்தது. கூடவே தற்போதைய தலைவரான சுபாஷையும் காந்தியின் வழிகாட்டலின் படி நடக்கக் கூடிய ஒரு காரிய கமிட்டியை நியமிக்கும் படி வேண்டுகோளும் விடுத்தது. நேதாஜியால் அவர் சொன்ன படி காங்கிரசில் இருந்த பிற அனைத்து இடதுசாரிகளை ஒன்றிணைக்க இயலவில்லை. காங்கிரஸில் இருந்த பெரிய இடதுசாரி குழுவான காங்கிரஸ் சோஷியலிஸ்ட் கட்சி இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது. பிற இடதுசாரிகளோ தீர்மானத்தில் சில திருத்தங்களை பரிந்துரைத்தனர். மாறாக காந்தியின் ஆதரவாளர்களோ ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்தனர். ஒரு காற்புள்ளி கூட மாற்றப்பட கூடாது என்பதில் பட்டேல் உறுதியாக இருந்தார். இதை ஆதரித்துப் பேசிய, தீர்மானத்தை வடிவமைத்த, ராஜாஜி, “நம்மிடம் இரண்டு படகுகள் இருக்கின்றன. ஒன்று பழைய படகு, காந்திஜியால் செலுத்தப்படுவது. இன்னொன்று புதிய படகு, புதிய ஓடக்காரரும் கூட. காந்தி என்ற பழைய ஓடக்காரர் நெடுங்காலமாக நம் பயணத்தை மிகப் பாதுகாப்பாக நிகழ்த்தி தந்திருக்கிறார். ஆனால் அந்த புதிய படகு ஒழுகக் கூடியது. இது எனக்கு நன்றாகவே தெரிகிறது. அப்படகில் ஏறினோம் என்றால் நாம் அனைவரும் மூழ்குவது உறுதி. நர்மதையின் ஆழம் நாம் அனைவரும் அறிந்தது தானே. அந்த புதிய படகுக்காரரோ நாம் அவர் படகில் ஏறாவிட்டாலும் பரவாயில்லை, நம் படகில் அவரது படகையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். ஆனால் அதுவும் நமக்கு சாத்தியம் இல்லை. ஓட்டை படகை இணைத்துக் கொண்டால் நம் படகும் மூழ்கும் அபாயத்தை நாமே உருவாக்கியவர்கள் ஆவோம்”, என்றார். அந்த தீர்மானம் நிறைவேறியது. இப்போது நேதாஜிக்கு வேறு வழியே இல்லாமல் போனது. அவர் தான் தலைவர். ஆனால் அவராக எதுவும் செய்ய இயலாது, காந்தியின் வழிகாட்டல்களை மீறி. இதனால் எல்லாம் மனம் தளராத நேதாஜி காந்தியுடன் சமரசமாக இணைந்து பணியாற்ற, தன்பாத் நகரில் தன்னை பாதித்த நோயில் இருந்து மீண்டு வந்துகொண்டிருந்த காலத்தில், தொடர்ச்சியான கடிதங்கள் வழியாக உரையாடல்களில் ஈடுபட்டார். ஆனால் காந்தி எவ்விதத்திலும் இறங்கி வரத் தயாரில்லை. எனவே அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தின் போது, வேறு வழியே இன்றி தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நேதாஜி. தன்னால் ஒரு காரிய கமிட்டியை அமைக்க இயலாமல் போன சூழலை மட்டுமே முன்வைத்த அந்த கடிதம் நேதாஜி என்னும் மாமனிதனின் பெருந்தன்மையைக் காட்டும் ஒன்று. அதில் அவர் யாரையும் குற்றம் சாட்டவில்லை.
இந்த நிகழ்வுகளில் எழுந்து வரும் காந்தி நாம் பொதுவாக காந்தி என்னும் மாமனிதருடன் அடையாளப்படுத்தும் நற்குணங்களான நேர்மை, அரசியலில் வெளிப்படைத்தன்மை, எதிர்தரப்பை பேச்சுவார்த்தை மூலம் வென்றெடுத்தல், எதிர் தரப்பிற்கான இடத்தை தந்து அவர்களையும் இணைத்து முன் செல்லும் தன்மை என எவையும் இல்லாத ஒருவர். மாறாக மிகச் சாமர்த்தியமாக தன் எதிர் தரப்பை முற்றிலும் செயல் இழக்கச் செய்த, இன்றைய அரசியல் வாதிகளுக்கு சற்றும் சளைக்காத அரசியல் நிகழ்த்திய ஒருவர். அவரின் தரத்தில் வைத்துப் பார்த்தால் கீழ்மை என்றே சொல்லத்தக்க செயல்களைச் செய்தவர். அவர் இவை எதையும் தெரியாமல் செய்யவில்லை. தான் என்ன செய்கிறோம் என முழுமையாக அறிந்தே அவற்றை ஆற்றி இருக்கிறார். சுபாஷ் எந்நிலையிலும் காங்கிரசின் தலைவராக இரண்டாவது முறை ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதைச் சாதித்தும் காட்டி இருக்கிறார். அவ்வாறு செய்ததன் மூலம் இன்றளவும் காந்தியை சுபாஷுக்கு பெரும் எதிரியாக முன்னிறுத்ததும், அப்படி செய்தமையாலேயே அவரும் ஒரு சாதாரணமான அரசியல்வாதியே ஒழிய மகாத்மா என்பதெல்லாம் இல்லை என தூற்றும் எத்தனையோ வாய்களுக்கு பெரும் அவல் மூட்டையையே மெல்லக்கொடுத்து விட்டார்.
[2]
ஆனால் மீமானுடர்கள் இவ்விதம் செயல்படுவது ஒன்றும் புதிதும் அல்ல. உடனடியாக நினைவுக்கு வருவது ராமாயணத்தில் ராமன் நிகழ்த்திய வாலி வதம். தமிழ்நாட்டில் கம்பன் கழக பட்டிமன்றம், வழக்காடுமன்றம் போன்றவற்றில் எல்லாம் தவறாமல் இடம்பெறும் தலைப்பு இந்த வாலிவதம் ராமனின் அவதாரத்திற்கு, புகழா, இழுக்கா, ராமன் செய்தது அறமா, மறமா போன்றவை. கடவுள் மறுப்பு மையப் பேசுபொருளாக இருந்த, பூணுல் அணிந்த அந்தண ராவணனை, பூணுல் அறுத்தவர்களே தமிழ் குடியின் முதன்மை மன்னன் என விதந்தோதி ராவண காவியம் எல்லாம் எழுதி கம்பனை இல்லாமல் ஆக்க முயன்ற காலத்தில் ராமனின் இந்த அறமீறல் எப்படிப்பட்ட வாய்ப்பு என்பதை வாசகர்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் வாலி வதைப் படலத்தை மேடையிலே வாலியாகவே மாறி நிகழ்த்திக் காட்டி விடுபவர். அவர் குரலில் கம்பனின் பாடல்கள் ஒரு முழுமையான நாடகத்தைப் பார்த்த அனுபவத்தை தந்திருக்கின்றது. அனைத்தும் ராமன் செய்தது தவறு தான் என்றே வந்து முடியும். நாம் என்னவெல்லாம் ராமனை கேட்கவேண்டுமோ அவற்றையெல்லாம் மிகக் கூர்மையான மொழியில் கம்பரே வாலியின் கூற்றாக கேட்டுவிட்டார். எஸ்.ஆர்.கே என அழைக்கப்பட்ட மார்க்சிய ஆய்வாளர், இலக்கிய திறனாய்வாளர், எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கிய ஆசிரியர்களில் ஒருவர், திரு எஸ். ராமகிருஷ்ணன் ‘சிறியன சிந்தியாதான்’ என ஒரு நூலையே இந்த வாலி வதை பற்றிய வாதங்களுக்காக எழுதியிருக்கிறார். ஆனால் கம்பரும் சரி, எஸ். ராமகிருஷ்ணனும் சரி அந்த வதம் ஒரு தேவையான தவறு என்ற அளவிலேயே முடித்திருக்கின்றனர். வால்மீகி கூட புராண காரணங்களையே இந்த வதத்திற்கு நியாயம் கற்பிக்க நாடுகிறார். ஆனால் கம்பர் வால்மீகியில் இருந்து ஒரு முக்கியமான புள்ளியில் வேறுபடுகிறார்.

Source: British online museum gallery through Wikipedia.)
ருசியமுக மலையில் இருந்து ராமன், லக்குவன், அனுமன், சுக்ரீவன் முதலியோர் பத்து யோசனை தூரம், பல மலைகள் கடந்து கிட்கிந்தைக்கு வந்து சேர்கின்றனர். இப்பூவுலகில் தேவர்களின் பொன்னால் ஆன அமராவதி நகரே வந்து இறங்கியது போன்ற வாலியின் நகரான கிட்கிந்தை மலையை காண்கின்றனர். இனி செய்ய வேண்டியவை என்ன என பேசிக்கொள்கின்றனர். அப்பேச்சின் முடிவில் நிகழ்ந்ததை கம்பன் பின்வருமாறு கூறுகிறார்.
” அவ்விடத்து ராமன் நீ அழைத்து வாலியானது ஓர்
வெவ்விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன்
தெவ்வடக்கும் வென்றியானும் நன்றிது என்று சிந்தியா”
ராமன் நேரடியாகவே சுக்ரீவனிடம், ‘நீ சென்று கொடிய விஷம் போன்ற வாலியை அறைகூவி போர் செய்யும் வேளை, நான் வேறோர் இடத்தில் இருந்து என் அம்பை எய்திடத் துணிந்து விட்டேன். என் கருத்து இது.’ என்றே சொல்லிவிடுகிறான். ராமன் தெளிவாக, சிந்தித்தே வாலியின் முன் நின்று அம்பெய்யாமல், ஒரு விலங்கை மறைந்திருந்து வேட்டையாடும் வேடன் போல் வில் குலைத்து எய்திடத் துணிகிறான். இப்பாடலில் நாம் கவனிக்கத்தக்க ஒன்று உண்டு. இங்கே ராமனுக்கு எந்த அடைமொழியையும் கம்பர் வழங்கவில்லை. வாலியின் கூற்றாகக் கூட ராமனுக்கு புகழ் மொழிகள் வழங்கிய கம்பர், ராமனின் இந்த முடிவெடுக்கும் தருணத்தில் எந்த புகழ் மொழியும் பகராது வெறுமனே ராமன் என்றே விளிக்கிறார். அடுத்து சொல்வது வாலியை ஓர் விலங்கெனவே கருதி அஃறிணையில் விளிக்கிறார். மேலும் ராமனே அத்தகைய முடிவை துணிந்து எடுத்தேன் என்று சொல்லவில்லை. தன் மனம் அப்படி ஒரு முடிவை எடுத்தது என்றே சொல்கிறான். அதாவது அவனே விரும்பாவிட்டாலும் கூட இந்த உபாயம் மீண்டும் மீண்டும் அவன் மனதில் தோன்றியதாலேயே அவன் அம்முடிவை செயல்படுத்துவது என தீர்மானிக்கிறான். ஆம். அவன் எண்ணித் துணிந்ததாகத் தான் கம்பர் சொல்கிறார்.
எது ராமனை அவ்வாறு சிந்திக்கத் தூண்டியிருக்கும்? பொதுவாக இப்படிப் பட்ட கேள்விகள் எழுகையில் எல்லாம் வெண்முரசை நாடுவது என் வழக்கம். எனவே வழமை போலவே இதற்கிணையான தருணங்கள் வெண்முரசில் வந்திருக்கின்றனவா என பார்த்தேன். ராமனுக்கு இணையான ஆகிருதி கொண்டவன் என்றால் அது கிருஷ்ணன் தான். மகாபாரதத்தில் கிருஷ்ணன் நெறி மீறிய தருணங்கள் பல இருக்கின்றன. ஆனால் வெண்முரசில் அவ்வாறு நிகழ்ந்தது இரு தருணங்களில். ஒன்று ஜராசந்தன் வதம். மற்றொன்று துரியனின் மரணம். இரண்டிலும் இளைய யாதவர் தான் எண்ணியதை தயக்கமே இன்றி நிறைவேற்றுகிறார். அதுவும் ராமனால் நிறுவப்பட்ட ஷத்ரிய, வேத நெறிகளை மீறி, காட்டின் நியாயங்களை வைத்து, ஒரு குரங்கு பால் குடித்த காட்டாளனை வைத்து முடிக்கிறார். இங்கே வாலி வாதத்திற்கு இணையானது எனச் சொன்னால் அது ஜராசந்தன் வதம் தான். அதை ஏன் நிகழ்த்துகிறேன் என விரிவாகவே அவர் ஜராசந்தனிடம் சொல்கிறார். என் கேள்விக்கான பதில் அந்த விவாதத்தில் தான் இருக்கிறது.
வாலியின் வதம், ஜராசந்தனின் வதம் இரண்டுமே ஒரு பெரிய உச்ச கட்ட யுத்தத்தின் முன் நிகழ்த்தப்பட்டவை. ஒரு வகையில் நிகழ்த்தியவர்களின் பலத்தை அந்த உச்ச போரில் பங்கேற்பவர்களுக்கு சுட்டிக் காட்டும் விதமாக நிற்பவை. வாலி ராவணனையே தன் வாலில் கட்டி தூக்கி அடித்தவன். தன்னை விடவும் பன்மடங்கு வல்லமை பொருந்தியவன் என்பதை உணர்ந்தே, அவன் வலிமையை மதித்தே அவனுடன் நட்பு கொள்கிறான் ராவணன். இங்கே ஜராசந்தன் பெரும் தொன்மையான, வல்லமை பொருந்திய மகத நாட்டின் பேரரசன். அன்றிருந்த பாரத அரசுகளில் அஸ்தினபுரிக்கு பெரும் சவாலாகவும், இணையாகவும் அனைத்து கூறுகளிலும் இருந்தது மகதமே. அப்போது பாரதத்தின் பேரரசன் என்ற பெரும் பதவிக்கு துரியனுக்கு இருந்த போட்டியாளன் ஜராசந்தன் மட்டுமே. மற்போரில் அன்று துரியனுக்கு இணையாக ஒரு அணுவும் குன்றாது நிற்க இயன்றவனும் அவனே. உண்மையில் இருவரும் எதிரெதிர் நின்றிருக்க வேண்டும். ஆனால் கர்ணனால் இருவரும் தோள் தழுவிக் கொள்கிறார்கள். எனவே ஜராசந்தன் ஷத்ரிய அரசர்களை தோற்கடித்து கைது செய்து வைத்திருந்த போதும் அஸ்தினபுரி ஷத்ரிய தர்மத்தைக் காக்க எழவில்லை. அவன் பிற ஷத்ரியர்கள் இந்திர பிரஸ்தத்தின் கோன்மையை ஏற்க முன்வந்து ராஜசூய யாகத்திற்கு வில் அனுப்பியதால், அவர்களை அச்சமூட்ட, அந்த சிறைப்பட்ட ஷத்ரிய மன்னர்களின் தலைகொய்த போதும் எதிர்க்கவில்லை. (உண்மையில் துரியனும், அஸ்தினாபுரியும் பெரும் நோயில் விழுந்திருந்த காலம். எனவே ஆட்சி பொறுப்பு முழுமையும் விதுரர் கையில் தான் இருந்தது என்பதும் அஸ்தினபுரியின் மௌனத்திற்கு மற்றோர் காரணம்.) எனவே ராஜசூயம் வேட்க பாண்டவர்கள் வெல்ல வேண்டிய முதன்மை அரசனாக ஜராசந்தனே இருந்தான். இந்த ராஜசூயம் என்ற எண்ணத்தை முன்மொழிந்து, அதை நிறைவேற்றத் தூண்டியதே இளைய யாதவர் தான். எனவே தான் மகதத்தின் தலைநகரான ராஜகிருஹம் மொத்தமும் தவளைகள் பெருகுவதை கொண்டாடிய, நாகர்களின் அழிவால் அவர்களுடனே மறைந்து போன அவர்களின் விழாவான மழைவிழவில் திளைத்திருக்கும் நேரம் ஸ்நாதக பிராமணர்கள் வடிவில் சென்று அவனை போருக்கு அழைக்கிறார்கள். ஸ்நாதக பிராமணர்கள் என்பவர்கள் குருகுலக் கல்வி முடித்தவர்கள். வேத நெறிகளுக்குள் இன்னும் நுழையாதவர்கள். அவ்வாறு வேத நெறிகளுக்குள் நுழைவதற்கு முன் உலக அனுபவம் பெற பயணம் மேற்கொள்பவர்கள். அவர்களுக்கு எதுவும் விலக்கல்ல, போர்த்தொழிலும், விழவு கூடலும் கூட. எனவே தான் அவர்களின் அறைகூவலை ஜராசந்தனும் ஏற்கிறான். அது தொன்மையான ஒரு முறைமை. வஞ்சமும், வென்றால் அடையும் இலக்கும், தோற்றால் தொடரும் இழப்புணர்வும், பழியுணர்வும், மறு வஞ்சமும் இல்லாத களியாடல் போர். போரிடுவதன் களிப்பை அனுபவிக்கவேண்டும் என்ற விழைவே அதில் ஈடுபடுவோரை அப்போருக்குத் தூண்டுகிறது. (இன்றும் கூட நம் மண்ணில் இதன் தொடர்ச்சியைக் காணலாம். தெலுங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சில கிராமங்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தும் தசரா விழாவின் இறுதி நாளில் அந்த கிராமத்தினர் இரு பிரிவாகப் பிரிந்து கம்புகள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் ஒரு வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. இதுவும் களிப்போர் தான். ஒரே வித்தியாசம் இங்கே இவர்கள் மோதிக் கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவ்விழா நடக்கும் தேவரகட்டு மல்லேஸ்வர சுவாமி கோவிலில் விழாவின் இறுதி நாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அந்த கல்யாண மூர்த்திகளை யார் எடுத்துக் கொள்வது என்பதில் தான் இந்த இரு குழுவிற்கும் இடையே நிகழும் போருக்கு காரணம். இப்படி ஒரு காரணம் வர ஒரு புராண கதையும் அவ்வூரில் நிலவுகிறது. இது நம்முடைய பக்திகால கட்டங்களில் நிகழ்ந்த தொடர் புராண உருவாக்கல்களின் விளைவாகக் கூட இருக்கலாம்.)

Source: Metmuseum.org)
ஆனால் ஜராசந்தன் தான் முன்னிறுத்தும் மறைந்து போன அரக்கர் குல வழக்கத்தின் படி இறப்பு வரை நிகழும் போரையே தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அந்த மற்போருக்கு முந்தைய நாள் இளைய யாதவருடன் ஒரு நீண்ட விவாதத்தில் ஈடுபடுகிறான். அதை பின்வருமாறு தொகுத்துச் சொல்லலாம். மானுடம் தன்னுணர்வும், சித்தமும் கொண்டு உலகை அறியத் துவங்கிய, காலம் என்பது திரண்டிராத முற்காலத்தில், இருந்த மானுடம் அனைத்தும் அரக்கர்களாக இருந்தன. அதன் பின் பரிணாமத்தில் சற்று முன்னேறியவர்கள் அசுரர்கள் ஆனார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நாகர்களானார்கள். டார்வினின் பரிணாமவியலின் அடிப்படை தக்கன பிழைத்தல். எந்த உயிரிகள் தக்கனவாகும்? டார்வின், “வலிமையானவை, புத்திசாலித்தனமானவை அல்ல தக்கன. எவ்வுயிரிகள் மாறும் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனவோ அவையே தக்கனவாகும்.” என்கிறார். பெரும்பாலான உயிர்கள் தங்கள் உடல் மற்றும் செயல்களை தகவமைத்துக் கொள்வதன் மூலம், புறவயமான ஒரு சடுதி மாற்றத்தின் மூலம் தங்களை மாறிவரும் பரிணாமச் சுழலில் தக்கனவாக்கிக் கொள்கின்றன. மானுடத்தின் முன் அந்த தேர்வு வந்த போது மானுடம் அறிதலின் ஊடாக, அகவயமான மாற்றங்களின் ஊடாக தங்களின் தகவமைதலை வடிவமைத்துக் கொண்டது. எனவே மானுடம் ஓங்கி உயர்ந்த பேருடல்களாகவோ, அதீதமான உறுப்புகளோடோ பரிணாமம் அடையாமல், உருவத்தில் குன்றிய, அறிவில் ஓங்கிய உயிரினமாக பரிணாமம் கொள்ளத் துவங்கியது. இந்த ஆதி மானுடத்திற்கு அளிக்கப்பட்ட ஆணை என்பது பெருகுக, வளர்க என்பது தான். மானுடம் அந்த ஆணைகளாகவே பிரம்மத்தை அறிந்தது. எனவே அந்த ஆதிவேதங்கள் மானுடத்தின் முதன்மை விழைவுகளை கட்டற்றுப் பெருகச் செய்வதையே, எல்லையற்று விரிவதையே தங்கள் மெய்மையாகக் கொண்டிருந்தன. ஆனால் மானுடம் பெருகுந்தோறும், சிந்தனை கூர் கொள்ளுந்தோறும் அவர்கள் அறிந்த ஒன்று உண்டு. அது இங்கு கட்டில்லாதது என ஒன்று தங்கி வாழ இயலாது. இங்குள்ள அனைத்தும் ஒன்று பிறிதொன்றால் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டில்லாது விரிவது முற்றழிவிற்கே வழிவகுக்கும் என்பதை அறிந்தனர் தொல்வியாசரும், அவர் அவை அமர்ந்த ஆயிரத்தெட்டு மாமுனிவரும். மானுடம் தங்கி வாழ, அறிவின் பாதையை, அறிதலின் பாதையைத் தொடர்வதொன்றே வழி. விலங்கு வழி என்பது மானுட அழிவிற்கே இட்டுச்செல்லும். அரக்க, அசுர, நாக வேதங்கள் வேட்டுத் தரும் விழைவுகளுக்கு எல்லை இல்லை என்பதையே அவர்கள் முதன்மையாக அஞ்சினர். எனவே வேதங்களை கட்ட வேண்டும் என முடிவெடுத்தனர். கட்டற்ற விழைவுகள் அனைத்தையும் விலக்கினர். மிக விரிவான கர்ம காண்டங்களை உருவாக்கி, ஒவ்வொரு விழைவிற்குமான வேள்விகளை வகுத்தளித்தனர். விழைவுகளின் வீரியம் கூடக்கூட வேள்விகளின் விதிகளும், இயற்றும் விதமும் மிகுந்த சிக்கல்களும், நிறைவேறுவதற்குள் பல இடர்கள் மிகுந்தவையாகவும் மாறும் படி வகுத்தளித்தனர். அப்படியாக அந்த தொல் வேதங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டவையே மகாபாரத காலத்தில் பொதுவாக ஏற்கப்பட்டு ஒழுகப்பட்டுக் கொண்டிருந்த நால்வேதங்கள். இந்த நிகழ்வையே வேதக் காட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு நம் தொழுவில் கட்டப்பட்ட நான்கு பசுமாடுகள் கதை குறிக்கிறது. அரக்க, அசுர, நாக வேதங்கள் போன்ற தொல்வேதங்கள் மானுடர் தங்கள் விழைவை எந்த எல்லை வரை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்றும், அதை அடைய எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்றும், அதற்காக எதை வேண்டுமானாலும், எவரை வேண்டுமானாலும் பலியிடலாம் என்றும் வகுத்திருந்தன. ஏனெனில் அவ்வேதங்கள் துவங்கிய காலங்களில் இப்பூமியில் மானுடம் என்பது மிகவும் சிறியது. பிற கானுயிர்களோடு ஒப்பிடுகையில் பதுங்கி வாழ்ந்த ஒரு எளிய உயிர் மானுடம். அவர்களுக்கு இருந்த ஒரே பெரும் ஆயுதம் அறிவு. எனவே அன்றைய மானுடம் தான் தங்கி, பெருகி வாழ இப்பரந்து விரிந்த எல்லையில்லா பூவுலகே இருக்கிறது என்ற முதலறிதலில் இருந்து தனது வேதத்தைத் தொகுக்கத் துவங்கியது. அதனாலேயே மானுடர் பெருகத் துவங்கினர். பெருகுந்தோறும் அவர்களுக்கிடையே உடைமை குறித்த மோதல்கள் பெருகத் துவங்கின. எந்த வேதம் அவர்களுக்கு கட்டின்மையை வழங்கி, விழைவுகளை அடையச் சொன்னதோ, அதே வேதத்தின் கட்டின்மை மானுடர்களை அழிவின் பாதைக்கும் இட்டுச் செல்லத் துவங்கியிருந்தது. அவற்றின் எல்லையற்ற விரிவு என்னும் அழிவில் இருந்து மானுடம் காக்கப்பட, மானிடர்களுக்கு இடையே சமன்வயம் ஒன்றை ஏற்படுத்த வந்தவையே நால் வேதங்கள். ஆனால் அதுவும் மானுடர் அல்லாத பிறவற்றிற்கு இவ்வுலகை அளிக்க ஒப்பவில்லை. அவையும் ஒட்டு மொத்த மானுடத்தையும் ஒரே விராட ரூபமாகக் கண்டவையே. மானுடத்தை நால் வர்ணமாகத் தொகுத்து அவற்றை அந்த விராட ரூபனின் உறுப்புகளாகக் கண்டவையே. அந்த விராடன் வாழவே அவை நெறிகளை வகுத்தளித்தன. கிருஷ்ணர் அவற்றில் இருந்தும் முன்னகர்ந்தாக வேண்டும் என கூறினார். ஏனெனில் தொல்வேதங்களும், நால்வேதங்களும் மானுடர்களை மட்டுமே, அவர்கள் தங்கி வாழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டவை. மாறாக மானுடம் தங்கி வாழ இப்பூவுலகம் வேண்டும், அது முழுமையாக வாழ இந்த இயற்கை பேணப்பட வேண்டும். மானுடம் தங்களுக்கிடையில் மட்டுமல்ல, இந்த சூழ இருக்கும் இயற்கையுடனும் ஒரு சமன்வயத்திற்கு வந்தாக வேண்டும். இப்பேரியற்கையின் லீலையுடன் இணைந்தாட வேண்டும். அதற்கான அறிதலை இந்த நால்வேதங்களில் இருந்தும் பெற்றாக வேண்டும். அதையே கிருஷ்ணர் வேதங்களில் இருந்து அவற்றின் இறுதி பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்கிறார். வேதாந்தம் கூர் கொண்டு எழவேண்டும் என்கிறார்.

விழைந்தவற்றை அடைய கட்டின்மையை முதன்மையாகக் கொண்ட எல்லையற்று பரந்து விரியும் தொல்வேதங்கள், வேள்விகளை முதன்மையாகக் கொண்ட, வைதீக நெறிகளை முன்வைக்கும் நால்வேதங்கள், அவற்றில் இருந்தெல்லாம் தூய அறிதலை முன்வைக்கும், சமன்வயத்தை மையமாக்கும், விழைவுகளும், விளைவுகளும் என்ற முடிவிலாச் சுழலில் இருந்து விடுதலை எய்துவதே மானுடத்தின் நோக்கம், உச்சம் என்று உரைக்கும் வேதாந்தம் என மூன்று நெறிகள் இருக்கின்றன. மூன்று யுகங்கள். அந்தந்த யுகங்களுக்கான அறங்கள். இவை ஒன்றில் இருந்து ஒன்று என யுகங்கள் தோறும் மேலேறியவை. அதில் கிருஷ்ணன் வேதாந்தமே மானுடத்தை அடுத்தடுத்த யுகங்களுக்கு கொண்டு சென்று தங்கி வாழ உதவக் கூடியது என வேதாந்தத்தின் தரப்பை எடுக்கிறான். வேள்விகளாலும், போர்களாலும் அல்ல, நிலையான வாணிகத்தால், ஒத்திசைந்து வாழ்வதால், அவரவர் கருமங்களை முழுமையான அர்ப்பணிப்போடு ஆற்றுவதால் பெரும் அரசையே கட்டி எழுப்பலாம், சீரும் சிறப்புமாக வாழலாம் என துவாரகையைக் கட்டி எழுப்பிக் காண்பிக்கிறான். மாறாக அன்றிருந்த ஷத்ரிய அரசுகளும் சரி, மக்களும் சரி நால்வேதங்களையே முதன்மையாகக் கொள்கின்றனர். வேள்விகளை ஆற்றும் வைதீக மதத்தையே ஏற்கின்றனர். அவர்களை புது யுகம் நோக்கிக் கொண்டு செல்வதே கிருஷ்ணனின் முதல் பணி. அது அவன் ஆற்ற வேண்டிய செயல். அதன் பலன் என்பதை அவன் இந்த மானுடத் திரளிடமே விட்டுவிடுகிறான். செயலாற்றுவதொன்றே தன் யோகம் என செய்கிறான். அதை மிகச்சிறிய அளவில் கடற்கரை மணல்களை விட அதிகமான பிரிவுகளை உடைய, அப்பிரிவுகளுக்குள் ஓயாத பூசல்களை காலங்காலமாகக் கொண்டு வாழும் யாதவ குடிகளை தொகுத்து, ஒன்றிணைத்து, செயல் ஒன்றின் மூலம் சாதித்து காட்டுகிறான். அதை மொத்த பாரதத்திற்கும் விரித்தெடுக்க எண்ணுகிறான். மக்கள் மாற வேண்டுமானால் மன்னர்கள் மாற வேண்டும். மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி. அன்றிருந்த ஷத்ரிய அரசுகள் எவையும் துவாரகையை ஒரு அரசாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவை ஜராசந்தனையும் ஏற்கவில்லை. ஆனால் இரு அரசுகளுக்கும் அவர்கள் பயந்து இருந்தார்கள். ஜராசந்தனின் வல்லமையை, துவாரகையின் பெருஞ்செல்வத்தை, இளைய யாதவரை அஞ்சினார்கள். அம்மன்னர்கள் நெறிகளை முன்வைக்கும் வேதங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். எனவே கிருஷ்ணன் நால்வேதங்களை முன்வைப்பவர்களோடு முரண்பட வேண்டும். அவர்களை துவாரகையின் வழியிலான ஒரு ஆட்சியை நிகழ்த்த முன்வர வைக்க வேண்டும். இந்த பாதையின் உச்சக்கட்டம் தான் மகாபாரதப் போர். வெண்முரசு இளைய யாதவர் இப்படி ஒரு போரை தவிர்க்க எத்தனை பேச்சு வார்த்தைகள், தூதுகள் நிகழ்த்துகிறார் என மிக விரிவாகக் காட்டுகிறது. கடைசியில் பாண்டவர்கள் வாழ ஐந்து கிராமங்களையாவது கொடுங்கள் என்று கேட்கிறார். அவர் முன்னிறுத்தும் புது வேதம், வேதாந்தம் வாழும் ஐந்து கிராமங்கள். ஒரு மன்னன் தன் கோலுக்கு எதிரான ஒன்றை தன் மண்ணில் வாழ விடக் கூடாது என்பதே நால்வேதம் காட்டும் நெறி. எஞ்சுவது பேருரு கொள்ளும். எனவே தான் துரியன் ஐந்து ஊசி முனை நிலத்தில் கூட வேதாந்தம் நிகழக் கூடாது என உறுதியோடு நிற்கிறான். இளைய யாதவரும் ஒரு துளி கூட நால்வேதம் எஞ்ச விடமாட்டேன் என சூளுரைத்தே இறுதி தூதில் இருந்து விலகுகிறார். பெரும் யுத்தம் மூண்டது.
மாறாக ஜராசந்தன் இதே மானுடத் திரளை நால்வேதங்களுக்கும் முந்தைய தொல்வேதங்களின் நெறிகளுக்கு பின்னிழுக்கிறான். அவன் முன்னிறுத்தும் வேதம் மானுடம் கட்டுப்படுத்தி மேலேறியவற்றை கட்டவிழ்ப்பது. விழைவு போல் மானிடரை அடிப்படைவாதம் நோக்கி ஈர்ப்பது வேறு ஒன்று இல்லை. ஏதோ ஒரு மிகப் பெரிய ஒன்றை எய்தப்போகிறோம் என்ற எண்ணம் மானிடரை உயிரையும் மதியாது ஒளியில் வீழும் விட்டில்பூச்சிகளாக்கும் ஒன்று. எனவே அதை தடுத்தாக வேண்டும். அழிந்து போன ஒன்று எழுந்து வருகையில் அது பலம் பெறும்முன்பே கிள்ளி எறியப்பட்டாக வேண்டும். அவ்வாறு எழுந்து வரும் ஒன்று, அதை முன்னிறுத்தும் ஒரு மானுடனின் அல்லது ஒரு மானுடக் கூட்டின் ஆன்ம பலத்தை மட்டுமே நம்பி முன்னகரும். அந்த ஆன்ம பலம் அழிக்கப்பட மட்டுமே இயல்வது. மாற்றப்படக் கூடியது அல்ல. ஏனெனில் அது தான் அழிந்தாலும் தான் முன்னிறுத்தும் ஒரு வேதம் நிலைநாட்டப்படும் என்ற விழைவிலேயே நிலை கொள்ளக்கூடியது. எனவே மாறுவதற்கு அல்லது மாற்றுத் தரப்போடு உரையாடுவதற்கு என எதற்குமே தயாராக இல்லாதது. ஏனெனில் அது காலூன்றி நிற்பது நடைபெறும் யுகத்திற்கு முந்தைய யுகத்தில். அதனுடன் பேச, மல்லு கட்ட வேண்டுமானால் தற்போதைய யுகத்தின் நெறிகளோ, ஆயுதங்களோ உதவாது. அந்த முடிந்து போன யுகத்தின் நெறிகளை மட்டுமே கைக்கொண்டாக வேண்டும். இங்கே இளைய யாதவர் செய்வது அதைத்தான். நாகவேதத்தை முன்னிறுத்துபவனை, விழைவுகளின் கட்டின்மையை முன்னிறுத்துபவனை, விழைவு நிறைவேற்றல் என்பது நெறிகளுக்கும் மேலானது என நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டிருப்பவனை அவன் முன்னிறுத்தும் நெறிமீறல் கொண்டே வென்று செல்கிறார். பீமனை மற்போர் நெறிகளுக்கு மாறாக அவனது பிடரியில் அடிக்க வைத்து அவன் உடல் சமநிலையை குலைக்கிறார். உச்சமாக அவனது உடலை கை வேறு கால் வேறாக பிழுது எறிகிறார். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஜராசந்தனின் வதம் மூலம் அவன் தொல்வேதங்களை பின்பற்றுவோர், பின்பற்ற விழைவோர் அனைவருக்கும் ஒரு பெரும் எச்சரிக்கையை அனுப்புகிறார். அந்த எச்சரிக்கை நெறிகள் மீறி விழைவு மட்டும் கொண்டோருக்கான தண்டனைகளும் அவ்வாறே நெறிகள் மீறி வழங்கப்படும் என்பது தான். காட்டின் மொழியுடன் உரையாட நாட்டின் மொழி உதவாது. பண்பாடாதவற்றுடன் மோத பண்பாடால் ஆகாது. எதிரி நிற்கும் யுகத்தின் நெறிகளே எதிரியுடனான முற்றழிவுப் போரில் கைக்கொள்ளப்பட வேண்டும் என முழுமையாக, தான் செய்வதை அறிந்தே செய்கிறார்.
ராமன் முன்னும் இதே தேர்வுகள் தான் இருந்தன. ராமன் நால்வேத நெறியை முன்வைக்கிறான். வேடர்களையும் (குகன்), மர மானுடர்களையும் (சுக்ரீவன்), இறுதியாக அரக்கர்களையும்(வீடணன்) அவ்வேதத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கின்றான். அவனும் ஒரு யுக சந்தியில் நின்ற பெருமானுடனே. அவன் முன்னும் மூன்று நெறிகள் இருந்தன. அரக்க வேதத்திற்கும் முந்தைய விலங்கு நெறிகள், அரக்க வேதம், ராமன் முன்வைக்கும் நால்வேதம். இம்மூன்றிலும் ராமன் இருந்த யுகத்திற்கான, அதன் பிறகு வரும் யுகங்களுக்கான வேதம் என திகழ்வது நால்வேதமே. அதுவே அக்காலத்தில் மானுட அறிதலின் உச்சமாக இருந்தது. இந்த வரிசையில் ராமன் முற்றிலுமாக அழித்து முன்னகர வேண்டியது விலங்கு நெறியையே. விலங்கு நெறி வலிமையை மட்டுமே பொறுத்தது. வலியது வாழும் என்பதே காட்டின் நெறி. பொதுவாக சிங்கம், புலி போன்ற உயிர்ச்சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் ஊனுண்ணி விலங்குகளின் முன் வரும் எளிய உயிர்கள் இயல்பாகவே அவற்றின் முன் அச்சத்தில் உறைந்து நின்று இரையாவதைக் கண்டிருப்போம். இந்த வலுவான வேட்டை மிருகங்களின் பலமே அந்த இரைகளை அச்சத்தில் ஆழ்த்திவிடும். இதையே சற்று கவித்துவமாகச் சொன்னால், அப்படிப்பட்ட பலம் வாய்ந்த வேட்டை மிருகத்தின் முன்னால் மாட்டும் எளிய இரை விலங்குகள், அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே தங்கள் வலிமையில் பாதியை இழந்து விடுகின்றன. இதே வரம் வாலிக்கும் உண்டு என்பதை எண்ணிப் பார்க்கலாம். வாலி மிக மிக வலிமையான விலங்கு. அவனது வலிமையே அவனை ராவணனை வெல்ல வைக்கிறது. என்ன இருந்தாலும் ராவணன் மானுட குலத்தவன். அதில் முதன்மையான, விழைவை வேட்கும் வல்லமை பெற்ற அரக்கன். ஆனாலும் ஒரு பெரு வல்லமை வாய்ந்த விலங்கின் முன் தன் அனைத்து படைக்கலன்களும் வலியற்றுப் போவதைக் கண்டவன். எனவே அதனுடன் சமாதானம் செய்து கொள்கிறான். வாலியின் தவறாக ராமன் அவன் தன் தம்பியின் தரப்பை முழுமையாகக் கேட்காததையும், அத்தம்பி அடைக்கலம் கோரியும் அதை மறுத்து அவனை கொல்லத் துணிந்தமையையும், தம்பியின் மனைவியை பெண்டாளகை செய்ததையும் சுட்டுகிறான். அதற்கு மறுமொழியாக வாலி தங்கள் குரங்கினம் மானுடற்குரிய வேத நெறிகளால் கட்டுண்டது அல்ல எனவும், எய்தின் எய்தும், மனம் சென்ற வழி செல்லும் விலங்கு நெறிகளுக்கே உரித்தானது என்றும் சொல்கிறான். ஒரு புறம் தன்னை குரங்கு எனச் சொல்லி தன் வலிமை சார் செயல்களுக்கான நெறிகளை முன்வைத்து தன்னை நியாயப்படுத்தும் அதே வாலி தான் “வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னை? – கொடிய வேடனைப் போல மறைந்திருந்து வில்லால் அம்பெய்தியது எதற்காக?” என ராமனைப் பார்த்துக் கேட்கிறான். காட்டு விலங்கு என இருந்தவனை வேடனாக நின்று கொன்றதில் எந்த நெறிப்பிழையும் வாலியே கைக்கொண்ட விலங்கு நெறியின் படி கிடையாது. எனவே தான் ராமன் மிகத் தெளிவாக அவனை நேருக்கு நேர் நில்லாது, அவன் இயங்கும் நெறிப்படியே வேட்டையாடுவது என்ற முடிவை முதலிலேயே எடுத்து விடுகிறான். அவன் தயங்கியோ, அஞ்சியோ, வேறு வழியே இல்லாமலோ, அறக்குழப்பத்தோடோ அந்த முடிவை எடுக்கவில்லை. அவனது ஆழுள்ளம் அதையே முன்வைத்தது, எனவே அப்படியே செய்கிறேன் என்றே சொல்கிறான். மேலும் இவ்வாறு செய்வதானால் எதிரி யாராக இருந்தாலும், தேவைப்பட்டால் அவர்கள் கைக்கொள்ளும் நெறியின் படியே அவர்களை அவனால் வென்று செல்ல முடியும் என்பதையும் மறைமுகமாக ராவணனுக்குத் தெரியப்படுத்தவும் செய்கிறான். ராவணன் அரக்கர் குலத்தவன். அவனுக்கு ஒரு நெறி இருக்கிறது. அதுவும் கட்டின்மையை முதன்மையாகக் கொண்ட எல்லையற்று பரந்து விரியும் தொல்வேத நெறி. ராமன் அவனை நால்வேத நெறியைக் கைக்கொள்ள வைக்கவே விரும்புகிறான். எனவே தான் அத்தனை தூதுகள். ஒன்றிலும் அவனை மாற்ற இயலாது என்ற புள்ளியில் போரில் அவனை சற்றும் எஞ்சவிடாது கொல்கிறான்.
[3]
காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே நிகழ்ந்தவற்றையும் இதே தராசில் போட்டுப் பார்க்கலாம். இருவரின் கொள்கைகளும் வேறு வேறானவை. சுபாஷ் காந்தியை முதன் முதலில் சந்தித்த போதே இந்த வேறுபாடுகள் முழுமையாக வெளிப்பட்டிருந்தன. நேதாஜி காந்தியை முதன் முதல் சந்தித்த போது அவரது வயது 24. காந்திக்கு 51. 1921 ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த முதல் சந்திப்பிலேயே போஸ் காந்தியை, அவரது அகிம்சை வழிப் போராட்டத்தை முன்வைத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார். பின்னாளில் அந்த சந்திப்பை பற்றி எழுதிய போஸ், காந்தியின் பதில்கள் கூர்மையாக இல்லாமல் பொத்தாம் பொதுவாக இருந்ததாகவும், தான் அடைய வேண்டிய இலக்கு பற்றியே தெளிவான பார்வை இல்லாமல் இருந்ததாகவும், அனைத்தையும் விட அந்த இலக்கை அடையும் வழிகள் முறையாகத் திட்டமிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். போஸ் அப்போதே ஆயுத புரட்சி மூலம் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவர் காந்தி குறித்து கொண்டிருந்த இந்த பிம்பம் முக்கியமானது. காந்தி என்னும் மாமனிதன் வாழ்ந்து, சாதித்து, சிந்தித்து, வழிகாட்டி, அவ்வழிகளின் நிரந்தர, குறைவான அழிவுத்தன்மை கொண்ட பலன்களை இப்புவியில் மூன்று கண்டங்களில் நேரடியாக சோத்தித்து பார்த்ததைக் கண்ட பின்பும் கூட அந்த பிம்பமே இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழில் ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி இந்த பிம்பத்தைக் குறித்த மிக விரிவான விளக்கத்தைத் தருகிறது. அதைத் தொடர்ந்து வந்த உரையாடும் காந்தியும், எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ஆசிரியத்துவத்தில் நடக்கும் ‘காந்தி இன்று’ இணையதளமும் இந்த தளத்தில் எழுந்த முக்கியமான படைப்புகள். அதை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். சுபாஷ் மூன்று புள்ளிகளாகக் கூறினாலும் அவற்றில் முதன்மையாக எழுந்து வரும் குறைபாடு என்பது காந்தியின் தெளிவின்மை என்பது தான். அது தான் அவரது பதில்களிலும், இலக்கு குறித்த பார்வையிலும், அதை அடையும் வழிகளைப் பற்றிய திட்டங்களிலும் வெளிப்படுகின்றன. ஆனால் அது உண்மையில் தெளிவின்மை அல்ல. காந்தி எந்த காலத்திலும், எந்த தளத்திலும் ஒரு நடைமுறைவாதி. நடைமுறையில் ஒரு மக்கள் குழுவிற்கு சாத்தியமாகாத எதையும் அவர் முன்வைத்தவர் அல்லர். தன்னளவிலும் சரி, மக்கள் குழுக்களை தலைமையேற்று போராட்டங்களை நடத்தியத்திலும் சரி அவர் சிறு சிறு அலகுகளில் சோதனைகள் செய்து பார்த்து, அதன் நடைமுறைத்தன்மை, அது கொண்டு வரும் பலன்கள், அந்த பலன்களுக்கு இணையாக தாம் வைப்பவை என ஒவ்வொரு பரிமாணத்தையும் மிகக் கறாராக அலசி ஆராய்ந்து தன் வழிகளை மேம்படுத்திக் கொண்டே இருந்தவர். இலக்கு, அதை அடையும் வழிகள், இவை இரண்டிலும் தாம் பெறுபவை எவை, இழப்பவை எவை என்பதிலும், அந்த செயல்பாட்டின் அடைவிழப்பு விகிதத்தில் (cost benefit ratio) அடைதலின் பங்கு எவ்வளவு என்பதிலும் அவர் ஒரு வணிகருக்குரிய கூரிய பார்வையைக் கொண்டிருந்தார். எனவே எந்த சமயத்திலும் தன்னுடைய வழிகளை, செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருந்தார். பின்வாங்க அவர் ஒரு போதும் தயங்கியதில்லை. எனவே அவர் இலக்கு என்பதை முழு முற்றாகத் தீர்மானிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அடைய அடைய இலக்கு என்பதையும் முழுமைப் படுத்திக் கொண்டே இருந்தார். ஏன் இப்படி பரிசோதித்து முன்னகர வேண்டும்? ஏனெனில் அவர் முன்சென்ற பாதை இந்தியாவில் அதற்கு முன்பு இல்லாத ஒன்று. அவர் தனியாகவோ ஒரு குழுவாகவோ ஒட்டு மொத்த மக்களுக்காக சிந்தித்து முடிவெடுக்கும் மன்னர் கால முறையை கைக்கொள்ளவில்லை. மாறாக ஒட்டு மொத்த மக்களின் முழுப் பங்கேற்போடு நிகழ வேண்டிய ஒரு அரசியல் மாற்றத்தை முன்வைத்தார். ஆங்கிலேயர்களை வெளியேற்றுதல் என்பது அவரைப் பொறுத்தவரை இம்மண்ணின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவருக்குத் தேவையான ஒரு அடிப்படை வாழ்விற்கான, சுதந்திரமான ஒரு உறுதிப்பாடை வழங்குவது தான். அதை அவர் தலைமை மாற்றமாகப் பார்க்கவில்லை. மக்கள் அனைவரின் பங்களிப்போடு நிகழும் ஒரு அரசியல், பண்பாடு மற்றும் சமூக மாற்றமாக அமைய வேண்டும் என உருவகித்திருந்தார். எனவே தான் அவர் வெள்ளையர்களோடு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் வழியாக மக்களின் உரிமைகளை, சுதந்திரமான செயல்பாடுகளுக்கான ஒரு சூழலை பெற்றுக் கொண்டே இருந்தார். அவர் லட்டுவை இலக்காக்கவில்லை. ஒவ்வொரு பூந்தியாக அடைந்து கொண்டிருந்தார். அடைந்த பூந்திகளை தொகுத்து தொகுத்து நமக்கான லட்டுவை பிடித்துக் கொண்டிருந்தார். அது மீண்டும் உடைந்து பூந்தியாகச் சிதறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். சிறு சிறு அலகுகளாக முன்னேறுகையில் முழு முற்றான இலக்கு என ஒன்றை வகுத்து விட இயலுமா என்ன? அவரது போராட்டம் வெள்ளையர்களை எதிர்ப்பது என்பதல்ல. அவர்களிடம் நம் மக்களின் நலமான, சுதந்திரமான வாழ்வுக்கு வரும் தடைகளை நீக்குவதில் தான் இருந்தது. கூடவே அப்படி ஒரு தடையை நீக்கினால், அதன் பிறகு நமது மக்கள் அந்த சுதந்திரத்தை எப்படி பொறுப்பாகக் கையாளுவார்கள் என்பதைப் பற்றியும் சிந்தித்தவர் அவர். அதற்காக மக்களைத் தொடர்ந்து தயார்படுத்துவதிலேயே அவர் தன் ஆன்ம பலத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டார். இப்பாரதம் எங்கும் மூன்று தடவை சுத்தி வந்து பல்லாயிரம் வருடங்களாக நீடித்த மன்னர் ஆட்சி, அதன் நீட்சியான நிலப்பிரபுத்துவ ஆட்சி இரண்டிலும் பழகிப் போயிருந்த மக்களை, ஒவ்வொருவரும் அதிகாரத்தில் பங்கேற்கும், பல திசைகளில் செயல்படும் விசைகளால் சமநிலைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களாட்சி தத்துவத்திற்கு அவர்களை தயார்படுத்தினார். இதற்கென ஒரு விரிவான நிர்வாக அமைப்பை காங்கிரஸ் கட்சியில் நிறுவி செயல்படுத்திக் காட்டினார். படிப்படியான பிரதிநித்துவம் என்ற வழியில் காங்கிரசின் காரிய கமிட்டியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தையும் தொட்டுக்காட்டினார். அவர் வெள்ளையர்களுக்கு எதிராக செயல்பட்ட அதே அளவு நம் மக்களுக்கிடையே நிலவிய ஏற்றத் தாழ்வுகள், பண்டைய பொருந்தா வழக்கங்கள் என அனைத்திற்கும் எதிராகவும் தான் அவர் போராட்டம் இருந்தது. இதைத் தான் போஸ் அவரது இலக்கு என்பது என்ன என்பதில் காந்திக்கு இருந்த தெளிவின்மை என குறிப்பிடுகிறார்.
இதற்கு நேர்மாறான கொள்கைகளைக் கொண்டிருந்தவர் போஸ். அவரது ஒரே இலக்கு என்பது ஆங்கிலேயரை வெளியேற்றுவது மட்டுமே. அதற்காக எந்த வழிகளையும், ஆயுத போராட்டம் உட்பட, கையாளலாம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அவருக்கு மக்களின் அடிப்படை உரிமைகள், வெள்ளையரை வெளியேற்றிய பின் செய்ய வேண்டியவை குறித்தெல்லாம் தெளிவான பார்வை இருக்கவில்லை. அவரது முதல் இலக்கை அடைவதை பற்றி மட்டுமே சிந்தித்தவர். அந்த இலக்கை ஒரு சீரிய தலைமையால் ஒருங்கிணைக்கப்பட்ட, ஒருமுகப்படுத்தப்பட்ட புரட்சி ஒன்றினால் வென்று விடலாம் எனத் திட்டமிட்டவர் அவர். அவரது அரசாங்கம் என்பது வானளாவிய அதிகாரங்கள் கொண்ட பூரணமைய அரசதிகாரம்(Totalitarian) என்பது தான். சர்வாதிகாரத்தில் ஒரு நபர் சட்டத்திற்கு மேலானவராக இருப்பார். இங்கு அந்த சட்டத்தையே வரையறுக்கும், நிர்வகிக்கும், நடைமுறைப்படுத்தும் பூரணமைய அரசாங்கம் ஒன்று சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் (இன்றைய சீனா, பாகிஸ்தான், முந்நாளைய சோவியத் போன்றவை இவ்வகையில் சேர்க்கலாம்). இது தான் வேறுபாடு. போஸ் இலக்கில் மட்டுமே குறியாக இருந்தார். எனவே தான் அவரால் ஹிட்லருடனும், முசோலினியுடனும், பின்னர் ஜப்பானுடனும் கைகோர்க்க இயன்றது. சயாம் மரண ரயில் பாதையில் தானே முன்னின்று அமைத்த இந்திய தேசிய ராணுவத்தினர் கொத்தடிமைகளாக பணி செய்து, பிணியில் வீழ்ந்து மறைந்ததைக் கண்ணால் கண்டபோதும் கூட அதைக் கடந்து போக இயன்றது. ஏனெனில் அவரது இலக்கு தெளிவானது. இழப்புகள் அல்ல, வழிகள் அல்ல, எய்தும் இலக்கே முக்கியமானது. அதுவே அனைத்தையும் விட உயர்வானது. ஆம், முடிவே வழிகளை நியாயப்படுத்தும் என்பது அவரது தரப்பு.

காந்தி எவரையும் விலக்குபவரல்ல. எனவே அந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு போஸை கல்கத்தாவின் முதன்மை காங்கிரஸ் தலைவரான சித்தரஞ்சன் தாஸிடம் அனுப்பி வைத்தார். காந்தியோடு ஒப்பிடுகையில் தாஸ் காங்கிரசின் தீவிரவாதிகளிடம் சற்று மென்மையாக இருந்தார். அவரின் வழிகாட்டலில் கல்கத்தாவில் இருந்து செயல்படத் துவங்கிய போஸ் விரைவாகவே தனது ஆளுமையால் கணிசமான இந்தியர்களை பாதிக்கவும் செய்தார். காங்கிரசில் மற்றொரு நட்சத்திர தலைவராக எழுந்து வந்தார். வெள்ளையரை வெளியேற்றுவதில் அவரின் வழிகளை ஏற்றுக் கொள்ளும் பல தலைவர்கள் காங்கிரசில் உருவாகி வந்து கொண்டிருந்தனர். முன்பே பார்த்ததைப் போல் காங்கிரசின் தலைவர் என்பவர் காரியக் குழு முன்னிறுத்தும் கொள்கை முடிவுகளுக்கான ஒரு அதிகார முகம் மட்டுமே. எனவே அதை ஒவ்வொரு வருடமும் மாற்றிக் கொண்டே இருந்தனர். இதை மாற்ற வேண்டும் என விரும்பினார் சுபாஷ். ஒரு தலைவர் தன்னுடைய கொள்கைகள், இலக்குகள், திட்டங்கள் ஆகியவற்றை முன்வைத்து தேர்தலில் நிற்க வேண்டும் என்றார் அவர். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அடுத்து கட்சியின் செயல்திட்டங்கள், செல்திசைகள் அனைத்தையும் வகுப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார். தலைவருக்கு உறுதுணையாக காரியக் குழுவும், அகில இந்திய குழுவும் இருக்கவேண்டும் என விரும்பினார். சுருக்கமாக இது வரை காந்தியும், காங்கிரசும் கட்டிக்காத்து வந்த அதிகார பரவலாக்கலை மாற்றி மையமாகக் குவிக்கப்பட்ட அதிகாரம் கொண்ட தலைமை நோக்கி காங்கிரசை செலுத்த விழைந்தார் போஸ். அவ்வாறு செய்வதன் மூலம் புரட்சி வழியாக, போராட்டம் வழியாக பெரும் அழுத்தம் கொடுத்து வெள்ளையரை வெளியேற்றி விடலாம் என்ற தன் தீவிர போராட்ட வழிகளுக்கு தேசத்தைத் திருப்பி வெற்றி காணலாம் என விரும்பினார். போஸ் அதை நிகழ்த்தி இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அவரது செல்வாக்கு அப்படிப்பட்டது. நாடெங்கும் அவருக்கு விசுவாசமானவர்கள் நாள்தோறும் பெருகிக் கொண்டிருந்தனர். அவரளவிற்கே செல்வாக்கு பெற்ற பிரதேச தலைவர்களும் உருவாகியிருந்தனர். (1939 தேர்தலில் அவரது வெற்றிக்கு தெற்கில் இருந்து வந்த ஓட்டுக்களை அவருக்கு பெற்றுத் தந்தவர் நம் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார்.) காந்தி முன்னெடுத்தவை அனைத்தையும் பின்னிழுத்து ஒரு போர்க்களம் நோக்கி கொண்டு சென்றவர் போஸ். ஒருவேளை அவர் நினைத்தவாறு நிகழ்ந்திருந்தால் அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அவர்கள் தொய்வடைந்திருந்த காலத்தைப் பயன்படுத்தி, தமது ஜப்பானியத் துணையுடன் வென்றிருக்கக் கூடும். ஆனால் அதன் பிறகு என்ன நிகழ்ந்திருக்கும்? இந்தியா புலி வாயில் தப்பி முதலை வாயில் விழுந்திருக்கும். ஹிட்லரும் சரி, ஜப்பானியர்களும் சரி இவரை பயன்படுத்திக் கொண்டார்கள். ஒருபோதும் இவரை தங்களுக்கு இணையாக அவர்களை கருதவும் இல்லை, நடத்தவும் இல்லை. அவர்களின் அத்துமீறல்களை தனது இலக்கு நோக்கிய பயணத்துக்காக சகித்துக் கொண்ட, கண்டும் காணாமல் சென்ற இவரை அவர்கள் அதே படைபலத்தால் எத்தி தள்ளி இருப்பார்கள். தொடர்ந்த ஆயுதப் போராட்டம் எந்த குழுவையும் வலுவிழக்க வைக்கும். அது வலுவிழந்த சமயத்தில் மக்கள் பலம் கொண்ட அரசாங்கம் ஒன்று அதை நசுக்கித் தேய்க்கும். உலகெங்கும் புரட்சிக்குழுக்களின் நிலை இது தான். காந்தி இதை முழுமையாக உணர்ந்திருந்தார். எனவே தான் 1938ல் போஸ் ஆஸ்திரிய பயணத்தில் இருந்த போது கூட அவரை தலைவராக்குவதில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத காந்தி, 1939ல் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என விரும்பியபோது முழுமையாக எதிர்த்தார்.
கிருஷ்ணனுக்கும், ராமனுக்கும் முன்பு இருந்ததைப் போன்றே மூன்று தேர்வுகள் காந்தி முன்னும் இருந்தன. ஒருபுறம் பொ.யு. 1600கள் வரை இருந்து வந்த மன்னராட்சி. மன்னவன் கோல் நோக்கி வாழ்ந்த குடிகள் கொண்ட பெருநிலம் அல்லவா இது. அதன் பிறகு வந்த வணிகத்தை மையமாகக் கொண்ட, வணிகம் தீர்மானித்த ஒரு ஏகாதிபத்தியம், எழுந்து வந்துகொண்டிருந்த மக்களாட்சி. காந்தி அந்த மக்களாட்சியிலும் மையமற்ற, தன்னதிகாரங்கள் கொண்ட சுயாட்சி முறையைக் கனவு கண்டவர். அதற்கு மக்களை வணிகத்தை முன்னிறுத்திய, சுரண்டலை அடித்தளமாகக் கொண்ட ஏகாதிபத்தியத்தின் தீமைகளை உணர வைத்து, தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிறு அலகுகளாக, தங்களைத் தாங்களே சுய கட்டுப்பாட்டுடன், நிர்வகித்துக் கொள்ளும் குடிகளாக மாற்ற உழைத்துக் கொண்டிருந்தவர். மாறாக போஸ் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட, மக்களின் ஒட்டுமொத்த விசுவாசத்தையும் எதிர்பார்க்கிற, மக்களை மீண்டும் தங்கள் கோல் நோக்கி வாழ வைக்கக் கூடிய பூரணமைய அரசாங்கம் ஒன்றை, கிட்டத்தட்ட மன்னராட்சிக் காலத்திற்கு மக்களை பின்னிழுக்கிற ஒன்றை முன்வைத்தார். காந்திக்கும் வேறு வழி இருக்கவில்லை. போஸை அவர் காங்கிரசின் மையத்தில் இருந்து அகற்றினால் ஒழிய அவரால் போஸை தடுக்க இயலாது என்று வருகையில், கிருஷ்ணனையும், ராமனையும் போல போஸ் முன்வைத்த பூரணமையத்துவத்தின் நெறிகளான, தன்னுடன் இருந்த பூரண விசுவாசத்துக்கு உரியவர்கள் மூலம் எதிரியை தனிமைப்படுத்தி வெல்லும் வழியை தயங்காமல் கையாண்டார். எப்போதும் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கும் காந்தி, பேச்சு வார்த்தை மூலம் அடையவேண்டியதில் கொஞ்சத்தையாவது பெற்று முன்னகரும் காந்தி, போஸுடன் ஒரு முறை கூட பேசத் தயாராக இல்லை. போஸ் பதவி விலக வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு, அதற்கான வழிகள் குறித்த எந்த கவலையும் இன்றி செயலாற்றினார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதைக் கொண்டாடவில்லை. அவருக்கே உரித்தான வெளிப்படைத் தன்மையுடன், தான் செய்தவற்றை முழுமையாக மக்கள் முன் வைத்தார்.
சரி இவர்கள் எதிர்த்து நின்றவர்கள் இந்த நெறிப்பிழைகளை எவ்விதம் எடுத்துக் கொண்டனர்? அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். வாலி தன் மகன் அங்கதனை ராமனிடமே அடைக்கலப்படுத்தினான். ஜராசந்தனும் தன் மகன் சகதேவனை கிருஷ்ணனிடம் அடைக்கலப்படுத்துகிறான். சுபாஷ் இறுதி வரையிலும் காந்தி மீது பெருமதிப்புடனேயே இருந்தார். காந்தியை ஒரு போதும் அவர் அசிங்கப்படுத்தவில்லை. நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக செய்தி வந்த போது போஸின் சகோதரருக்கு அவருக்கான இறுதிச் சடங்குகள் எதையும் செய்ய வேண்டாம் என தந்தி அனுப்பினார் காந்தி. போஸின் குடும்பத்தினர் காந்தியுடன் நல்ல உறவிலேயே அவர் இறுதி வரை இருந்தனர்.

நன்றி: Shaji Mullookkaaran, Youtube)
[4]
இவர்கள் மூவருமே தாங்கள் முன்னிறுத்திய அறங்களுக்கு, நெறிகளுக்கு நேர் மாறான வழிகளைக் கையாண்டு தம்முன் நின்றவர்களை அப்புறப்படுத்துகிறார்கள். ஆம், எதிர் நின்றவர்களை வெல்லவில்லை, தங்கள் பாதையில் இருந்தே மொத்தமாக துடைத்துத் தள்ளுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள்? தாங்கள் செய்வது நெறிப்பிழை என்று அறிந்தும், அதை ஏன் அவர்கள் நிகழ்த்த வேண்டும்? அப்படி நிகழ்த்தி அவர்கள் எய்தியவை தான் என்ன? மேற்கின் உளவியல் இதை ஒரு எளிய ஆணவ நிறைவு என்றே சுட்டி நின்று கொள்ளும். அப்படி அவர்களைக் குறுக்குவது நம்முடைய இயலாமையே என்று தான் நம் நீண்ட நெடிய இந்து மெய்ஞான மரபு சொல்லும். ஆம், அவர்கள் நெறி பிழைத்தார்கள். ஏனெனில் அவர்கள் காலத்தையும், இடத்தையும் கடந்து விண்ணிலென நின்று நோக்குபவர்கள். கடந்த யுகங்களையும், எழு யுகங்களையும் கண்டவர்கள். அவர்கள் கண்கள் சென்ற தூரம் நாம் எண்ணி அடையக் கூடியது அல்ல. அவர்கள் கண்டவை நம் அறிவுக்கு எட்டுபவை அல்ல. எழும் யுகங்களுக்கான நெறிகளை, தர்மங்களை வகுத்தளித்தவர்கள் அவர்கள். மானுடம் யுகங்களைக் கடந்து வாழ வேண்டும் என விரும்பியவர்கள். நாமும், நம் கொடி வழியினரும் இன்று தங்கி வாழ, எதிர்காலத்தில் நிலைத்து வாழத் தேவையான அறத்தை நமக்கு படைத்தளித்தவர்கள். உயிர்க்கூட்டங்கள் அனைத்திற்காகவும் அளி கொண்டவர்கள். அதற்காக அவர்கள் கண்டடைந்த மெய்மையை முன்வைத்தவர்கள். அந்த மெய்மை நிலைபெறும் பொருட்டே, அந்த மெய்மை வெல்லும் பொருட்டே, நெறிப்பிழைகளை அறிந்தே இயற்றியவர்கள். ஏனெனில் இப்புடவி என்றுமே வல்லமைகளின் முடிவற்ற மோதலால் தன்னை நிகழ்த்திக் கொண்டிருப்பது. அதில் ஒரு சமன்வயத்தை சாதிக்கக் கூடிய தரிசனத்தை தங்கள் பிறவிப் பொறுப்பாலும், அறுபடாத ஞான சங்கிலியாலும் அறிந்தவர்கள். முடிவிலி வரை நீளும் விழைவுகளின் கட்டின்மைகளால் அல்ல, அனைத்தும் ஒன்றுக்கு ஒன்றால் சமன் செய்யப்பட்ட வல்லமைகளால் மட்டுமே இம்மண்ணில், இப்புடவியில் உயிர்க்குலங்கள் தங்கி வாழ இயலும் என அறிந்தவர்கள். அந்த சமன்வயத்திற்காக தாங்கள் வாழ்ந்த யுகங்களில் செயலாற்றியவர்கள். இந்த நெறிப்பிழைகளையும் அவர்களின் அறுபடாத செயல் சங்கிலியில் ஒரு கண்ணியாக வைத்துக் கொண்டவர்கள். அதை ஆற்றும் ஆன்ம வல்லமையை அவர்களில் கூடிய புடவிப் பேருருவன் அவர்களுக்கு அளித்தான். தாங்கள் முன்வைக்கும் அத்துணை நெறிகளுக்கு மேலும் அந்த ஒரு பிழை எண்ணம் தோன்றியதாலேயே, அவர்கள் கொண்ட மெய்மையின் வெற்றிக்கு அப்பிழையும் ஒரு படி என ஆகும் என்பதை அறிந்ததாலேயே, வெல்வது வெல்வதனாலேயே வெல்லும் தகுதி கொண்டது என்பதை உணர்ந்ததனாலேயே அவர்கள் அப்பிழைகளை செய்தார்கள். அவர்கள் ஆற்றியவற்றை முற்றறிந்து இருந்ததாலேயே நெறிப் பிழை இழைத்தவர்கள் சென்று சேரச் சாத்தியமான தீரா இருளுக்குள் சென்று சேராமல் இருந்தார்கள். ஆம், அவர்கள் அறிதலை முன்வைத்தவர்கள். விழைவுகளின் பெருக்கை அறிவதன் ஊடாக, சமன்வயத்தின் ஊடாக கட்டுக்குள் வைத்து இப்புவியை நாம் தங்கி வாழ வழிவகுத்தவர்கள்.

Source: Times of India)
காலம் அவர்கள் மெய்மை வென்றது என்றே சொல்கிறது. இன்றும் ராச்சியம் என்றால் அது ராம ராச்சியம் தான். நற்குண ராமனிடம் குறைகள் தேடி அவனை நம்மை போன்ற ஒரு மானிடனாக பார்ப்பவருக்கும், விழைவுகளின் கட்டின்மைகளை கட்டவிழ்த்துவிட்ட ராவணப் பிரபுவிடம் நன்மைகளைத் தேடித் தேடி கண்டடைந்து அவனை ஒரு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இறையாக முன்வைப்பவர்களுக்கும் கூட அரசனின் இலக்கணம் என்றால் அது ராமன் தான். மாபெரும் மானுடக் கொலையாடலை நிகழ்த்தி வேத அந்தத்தை நிலைநாட்டியவன் என பழி தூற்றப்பட்டாலும் இம்மாபெரும் இந்து ஞான மரபின் முத்தத்துவங்கள் எனப்படும் பிரஸ்தான த்ரயத்தில் ஒன்றாக கிருஷ்ணன் சொல்லான பகவத் கீதை தான் வந்தமர்கிறது. ஜின்னாக்களையும், சாவர்க்கர்களையும் பெரும் தியாகிகளாக்க முனையும் இக்காலத்திலும், கறுப்பர் விடுதலைக்கு போராடிய மார்ட்டின் லூதர் கிங்கிற்கும், தென்னாப்பிரிக்காவின் நிறவெறியை முடிவுக்கு கொண்டு வந்து, அத்தேசத்தை முன்னேற்றப் பாதைக்கு செலுத்திய நெல்சன் மண்டேலாவிற்கும், வஹாபியத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இன்று நிகழும் ஹமாஸ் – இஸ்ரேல் போருக்கு நிரந்தர முடிவுரை அமைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என உரத்த குரலில் பேசிய சௌதி அரேபியாவிற்கும் காந்தியும், காந்தியமும் தான் தேவைப்படுகின்றன. ஆம், அவர்கள் கண்டடைந்த மெய்மைகள் தோற்கவில்லை. இன்றும் வென்று நின்று மானுடத்திற்கு வழிகாட்டுகின்றன.
அவ்வாறெனில் அவர்கள் ஆற்றியவை நெறிப் பிழைகள் அல்லவா? பதில் ஆம் மற்றும் இல்லை. எந்த ஒரு செயலும் இந்த இடையறாத புடவிப் பெருக்கு என்னும் ஒழுக்கில் ஒரு கண்ணியே. அதன் ஒரு முனை அதற்கு முந்தைய செயலின் முடிவில் இருக்கிறது. அதன் மறுமுனை இனி வரப்போகும் செயலின் துவக்கத்தில் இருக்கிறது. இவர்கள் யுக நாயகர்கள். யுகங்களின் சந்தியில் பிறந்தவர்கள். யுகங்களுக்கான விதி சமைத்தவர்கள். அவர்கள் ஆற்றிய நெறி மீறல்களின் வழியாகவே அறம் ஒரு யுகத்தில் இருந்து அடுத்த யுகத்திற்கு ஒழுகிப் போகிறது. அறம் என்பதற்க்கு அன்றாட வாழ்வியல் நெறி, இப்புடவியை இயக்கும் பிரபஞ்ச நெறி, ஈகை, கருணை போன்ற நற்செயல்களைச் சுட்டும் தம்மம் என மூன்று வகை பொருள்கள் சாத்தியம் என தமிழ் விக்கி குறிப்பிடுகிறது. இங்கே யுகங்களின் அறம் என்னும் போது வாழ்வியல் நெறி மற்றும் அது பிரபஞ்ச நெறியைச் சந்திக்கும் புள்ளி என்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அறம் என்பதை ஒரு நேர்கோடாக பார்ப்பதே நம்மில் பெரும்பாலோர் செய்வது. ஆனால் உண்மையில் அறம் என்பது ஒரு நேர்கோடாக இருக்க இயலாது.

தங்க விகிதம் அல்லது பிரபஞ்ச மாறிலி அல்லது தெய்விக விகிதம் என ஒரு எண் இருக்கிறது. 1.618 என்பது தான் அந்த எண். பிரபஞ்சத்தின், இயற்கையின் பல அமைப்புகள் இந்த விகிதாச்சாரத்தைப் பின்பற்றியே அமைந்திருக்கின்றன என்பது ஒரு பெரு விந்தை. நத்தை கூட்டின் அமைப்பைப் பார்த்திருக்கலாம். ஒரு புள்ளியில் துவங்கி சுழல் சுழலாக முப்பரிமாணத்தில் பெருகிச் சென்றிருக்கும். சூரியகாந்திப் பூவின் விதைகள் இருக்கும் தலையைக் கூர்ந்து கவனித்தால் அதுவும் ஒரு புள்ளியில் துவங்கி சீராக சுழல் சுழலாக இருபரிமாண தொட்டுக் கொள்ளாத விரிவட்டங்களாக விரிந்திருக்கும். இவை மட்டுமல்ல நம் மானுட உடல், பைன் மரங்களின் விதைக்கூடு, நட்சத்திர மீன் துவங்கி பல கடல் வாழ் இனங்கள் என புவியில் மட்டுமல்லாது சுழல் வடிவ நட்சத்திர மண்டலங்கள் வரை இந்த தெய்வ விகிதத்தின் படி தான் அமைந்திருக்கின்றன. அக்கால சுழல் படிக்கட்டுகள் இந்த விகிதத்தின் அடிப்படையில் அமைந்தவையே. இயற்கையே இவ்விகிதத்தில் சுழன்று மேலேறும் ஒன்றாக இருந்தால் அறமும் அப்படி யுகங்கள் தோறும் சுழன்று மேலேறும் ஒரு வடிவாகத் தானே இருக்க இயலும். அதனால் தான் நாம் பின்பற்றும் சில நெறிகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ச்சி இருக்கின்றது. ஆனால் இந்த ஆயிரம் ஆண்டுகள் அவற்றில் சில நுண்ணிய அல்லது பாரிய மாற்றங்களையும் செய்திருக்கக் கூடும். ஒரு புள்ளியில் துவங்கி காலத்தில் விரிந்து விரிந்து பரவும் இந்த பெருவட்டம் காலத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் தன்னை தட்டையாக, நேர்கோடாகக் காட்டி நம்மை தோற்ற மயக்கத்திற்கு உள்ளாக்கக் கூடும். எனவே தான் நாம் அறம் என்பது மாறாத ஒன்று, மாற்ற இயலாத ஒன்று என மயங்குகிறோம். அதை மாற்ற முயலும் தோறும், அதே பிரபஞ்ச நெறியால் தோற்கடிக்கவும் படுகிறோம். ஆம், அத்தருணங்களில் தான் அறம் கூற்றாகிறது. அதன் பிரம்மாண்ட வடிவை, அதன் வளைந்து வளைந்து காலத்தின் முப்பரிமாணத்தில் மேலேறிக் கொண்டே இருப்பதைக் காண அக்காலத்தையும், இடத்தையும் தாண்டி ஓங்கி உயர்ந்து வளர்ந்த பேருருவர்களின் கண்கள் வேண்டும். அப்பேருருவர்களாலேயே எந்த புள்ளியில் அறம் வளைந்து மேலேறப் போகிறது என்பதைக் காண இயலும். அந்த புள்ளியில் நிகழ்பவை தான் இந்த நெறிப்பிழைகள். இதைத்தான் கம்பனின் வாலி ‘நெடிது நீ நோக்கும் நோன்மை‘ எனக் கூறுகிறான். (பெரும்பாலான பதிப்புகளில் ‘நெறியினின் நோக்கும் நேர்மை‘ என்றே இவ்வரி இருக்கின்றது. ஆனால் தனது ‘சிறியன சிந்தியாதான்’ என்ற புத்தகத்தில் எஸ். ராமகிருஷ்ணன் ‘நெடிது நீ நோக்கும் நோன்மை’ என்றே குறிப்பிடுகிறார். அதுவே சரியாக அப்பாட்டின் யாப்பில் அமர்கிறது என்றவகையிலும், மேற்கூறிய பேருருவன் கருதுகோளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.) இதையே வெண்முரசின் கிருஷ்ணன், ஜராசந்தனிடம் “எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்”, என்கிறார். ஆம். இப்புடவியும், உயிர்ப்பெருக்கும், அவற்றை ஆளும் அறமும் எல்லாம் அவன் கை படையாழி மட்டுமே. அவன் அவற்றுக்கெல்லாம் வெளியில் நின்றிருக்கிறான்.
ஆனால் அதே அறம் எப்பிழையையும் அவ்வாறே விட்டுச் செல்வதில்லை. பிழை இழைத்தவர்களிடம் பிழையீடு பெறாமல் விட்டதே இல்லை. பெருமானுடர்கள் அவர்கள் மீப்பெரியவர்கள் என்பதாலேயே அவரவர் பிழைகளுக்கு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கின்றது. அறம் அவர்களை அவரவருக்கான பலி பீடத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தியது. இவர்கள் தாங்கள் சமைத்த விதிக்கென ஆற்றிய செயல்களுக்காக அனைத்தையும் இழந்தவர்கள். தாங்கள் கட்டி எழுப்பியவை தங்கள் கண்முன்னால் சிதைந்து அழிவதைக் கண்டவர்கள். அனைத்திற்கும் மேலாக அப்பலிபீடத்தில் தங்களையே பலியிட்டுக் கொள்வதன் மூலம் அப்பிழைகளுக்கு நிகரீடு செய்தவர்கள். ஒரு லட்சிய அரசன் தன் சொந்த வாழ்வை விட குடிகளையே முதன்மையாகக் கருத வேண்டும், குடி நலனுக்காகவே அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற பெரு நெறியை முன்வைத்த ராஜா ராமன் அதற்காக தன் ஆவியை, அமிழ்தின் வந்த தேவியை, சீதையை துறந்தான். லட்சிய காதலனாக இருந்தவன், ஒரு கணவனாகத் தோற்றான். தந்தையாக அவன் வாழவே இல்லை. அவன் குடும்பத்தின் மீது வைக்க வேண்டிய பாசம் அனைத்தையும் தம்பியின் மீது வைத்தான். அரசன் வேத முனிவர் சொல் காக்க வேண்டுமென வகுத்தவன், அப்படி ஒரு முனிவரின் சொல்லை, குடிகளுக்கு தீமை விளையுமோ என பிறிதொரு முனிவரின் தீச்சொல்லுக்கு அஞ்சி மீறிய இளவல் லக்குவனை குடி நீக்கம் செய்கிறான். அதுகாறும் அவன் நின்றிருந்த இறுதி நிலத்தையும் அவ்வாறாக இழக்கிறான். குடி நீக்கம் செய்யப்பட்டவனோ தன் தமையன் இல்லாத வாழ்வு வேண்டாம் என சரயுவின் தீர்க்க பிந்து என்னும் சுழி ஒன்றில் வீழ்ந்து உயிர் நீக்கிறான். இளைய பெருமாளின் இறுதி அறிந்த ராமன் தானும் அதே இடத்தில் வீழ்ந்து தற்சாவு அடைகிறான். அங்கே கிருஷ்ணனோ தான் கட்டி எழுப்பிய துவாரகா புரி மண்ணோடு மண்ணாவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு ஒரு வேடனின் அம்பு பட்டு ஒரு காட்டுவிலங்கின் மரணம் எய்துகிறான். காந்தி எந்த மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அந்த மக்கள் தங்கள் மூடத்தனத்தால் வெறுப்பை வளர்க்கும் தலைவர்களை நம்பி மந்தைமந்தையாகச்சென்று பலியாவதைக் கண்டார். கைகூப்பி கண்ணீருடன் ‘வேண்டாம் பலிகள் வேண்டாம்’ என்று மன்றாடியபடி மானுடத்தின்மைந்தன் கொலைவெளியில் தள்ளாடி நடந்தார். பலிபீடத்தின் முன் பிரார்த்தனையுடன் நின்ற அவர் அவமதிக்கப்பட்டார். வசைபாடப்பட்டார். சிறுமை செய்யப்பட்டார். அவரது நண்பர்களாலும் சீடர்களாலும் புறக்கணிக்கப்பட்டார். கடைசியில் அந்த பலிபீடத்திலேயே அவரும் இறந்தார். ஆம் அவர்கள் கனிந்து, காம்பு உதிர்ந்து, இப்பேர் இயற்கையுடன் பூரணமாகவில்லை. அவர்கள் தமது வேள்விகளில் ஆகுதி ஆகவில்லை. தமது யோகத்தின் பாதையில் முழுமையை எய்தவில்லை. முழுமைக்கு முந்தைய கணத்தில் பின்னிழுக்கப்பட்டார்கள். நாமும், நம் கொடிவழியும் வாழ தங்கள் வாழ்நாள் எல்லாம் செயலாற்றியவர்கள், அதற்காகவே தங்கள் முழுமையை அடையாமல் இறந்தார்கள். அவர்கள் அவர்களாக இருந்ததற்காகவே வசை பாடப்பட்டார்கள்.. நாம் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பாகி தூற்றப்பட்டார்கள். நம் பழிகளுக்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஆம், இங்கு நிகழும் அறத்திற்கும், மறத்திற்கும், அழிவிற்கும் ஆக்கத்திற்கும் நாம் அவர்களையே பொறுப்பாக்குகிறோம். ஏனென்றால் அவர்கள் நம் கண் முன் வந்த இறைவர்கள். நாம் அவர்கள் காட்டிய வழியில் செல்லும் எளிய உயிர்கள்.
உசாத்துணைகள்:
- ‘Nehru & Bose: Parallel Lives’ by Rudrangshu Mukherjee
- https://en.wikipedia.org/wiki/Subhas_Chandra_Bose
- https://venmurasu.in/panniru-padaikkalam/chapter-42
- எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) – தமிழ் விக்கி
- அறம் – தமிழ் விக்கி
- தங்க விகிதம் / பிரபஞ்ச மாறிலி / தெய்வ எண்
- காந்தியின் பலிபீடம்
- இன்றைய காந்தி – எழுத்தாளர் ஜெயமோகன்
- சிறியன சிந்தியாதான் – ஆய்வாளர் எஸ். ராமகிருஷ்ணன்
- கம்ப ராமாயணம்
- வெண்முரசு – எழுத்தாளர் ஜெயமோகன்

Leave a Reply