காட்டின் நெறி – கா. சிவா

 2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன்.

     கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப  பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார். அதனால்தான்  இந்தக் காவியம் சுவைமிக்கதாக உள்ளது.

   முழுக்காவியத்தையும் எடுத்துக் கொள்ளாமல் கிட்கிந்தா காண்டத்தில் மட்டும் கம்பர் காட்டும் நெறிகளை இக்கட்டுரையில் தொட்டுக்காட்ட முனைகிறேன்.

சொர்க்கம் பூமியில்

3709 – தேன்படி மலரது செங்கண் வெங்கைம்மா

தான் படிகின்றது தெளிவு சான்றது

மீன்படி மேகமும் படிந்து வீங்கு நீர்

வான் படிந்து உலகிடைக் கிடந்த மாண்பது

3711 – குவால் மணித் தடம்தொறும் பவளக் கோல் இவர்

கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின்

தவா நெடு வானகம் தயங்கு மீனோடும்

உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது

    தேன் நிறைந்த மலர்களுள்ள பொய்கையில் சிவந்த கண்களையுடைய யானை மூழ்குவது விண்மீன்களும் மேகமும் படர்ந்துள்ள வானம் பூமிக்கு வந்ததுபோல் தோன்றுகிறது என்பது முதல் பாடல்.

குவியல்களாக மணிகள் நிறைந்திருக்கும் பொய்கையில் அரச அன்னமும் பெண் அன்னங்களும் திரிவது, அழியாத பெரிய ஆகாயத்தில் ஒளிர்கின்ற விண்மீன்களோடு நிறைமதி தோன்றுவதை ஒத்துள்ளது என்பது இரண்டாவது பாடல்.

சொர்க்கம் என்றவொன்று தொலைதூரத்தில் உள்ளது என்பதற்கு மாறாக இயற்கையை மாசுபடுத்தாமல் பொய்கை நீரை தெளிவானதாக வைப்பதன் மூலம் அதில் இயற்கை மலர்களை மலரவிடுவதையும் அதனுள் இருக்கும் மணிகளின் ஒளி வெளியே தெரிவதையும் காண முடியும்.  விண்ணின் சொர்க்கத்தை மண்ணிலேயே காணலாம். அதாவது, விண்ணிலிருக்கும் வானத்தைப்போல மண்ணிலும் உருவாக்க இயலும் என்றும் அல்லது விண்ணில் இருப்பதைப் போன்றே மண்ணிலும் உள்ளது எனக் காட்டுவதாகவும் கொள்ளலாம். இன்னும் கூர்ந்தால் உரிய செயல்கள் இயற்றுவதன் மூலம்  விண்ணில் உள்ளதாக கூறப்படும் தேவர்கள் உள்ளிட்ட தெய்வங்கள் இப்பூமியிலும் தோன்றலாம் எனக் காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஞானத்தை மறைக்கும் மாயை

3716. காசு அடை விளங்கிய காட்சித்து ஆயினும்

மாசு அடை பேதைமை இடை மயக்கலால்

ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என

பாசடை வயின்தொறும் பரந்த பண்பது

அந்தப் பொய்கை அதனடியில் கிடக்கும் மணிகளை வெளிக்காட்டும் வண்ணம் தெளிந்ததாக இருந்தாலும் பசுமையான இலைகள் இடையில் புகுந்து அந்த மணிகளின் ஒளியை மறைக்கின்றன. இது  மாசுடைய அஞ்ஞானம் இடைபுகுந்து தெளிந்த மெய்யறிவை மறைப்பது போன்றுள்ளது.

   எல்லோருக்குள்ளேயும் மெய்யறிவு உண்டு. ஆனால்  அன்றாடத்தில் எழும் எளிய பூசல்களும் இடர்களும் அதை உணரமுடியாத வண்ணம் செய்துவிடும் என்பதை எளிய காட்சியை விவரிப்பதான பாடலில் கம்பர் காட்டுகிறார். இதையே ராமனுக்கும் பொருத்தலாம். பரம்பொருளானவன் தேவர்களின் வேண்டுதலுக்காக பூமிக்கு வந்துள்ளான். ஆனால், சீதையை ராவணன் கவர்ந்து சென்றவுடன் தன் மெய்யுருவை மறந்து சீதையை நினைவூட்டும் மயிலையும் அன்னத்தையும் பார்த்து கலங்குகிறான். பரம்பொருளாகவே இருந்தாலும் அவன் ஞானத்தையும் மாயை மறைக்கத்தான் செய்யும். அப்படியென்றால் எளிய மானிடர்களின் நிலை எத்தன்மையது என்பதை கம்பர் நம் யூகத்திற்கே விடுகிறார்.

   ஆனால், அவரது உவமைகள் மூலம் ஞானத்தை அஞ்ஞானம் மறைக்குமேயன்றி அழிக்கமுடியது என்பதையும் உணர்த்தி பெரிதாக அஞ்ச வேண்டியதில்லை எனவும் கூறுகிறார்.

மாலைக்கடன்

3742 ….. “பொழுது கழிந்ததால்

ஈண்டு இரும்புனல் தோய்ந்து உன் இசை என

நீண்டவன் கழல் தாழ் நெடியோய்” என்றான்

3743. அரைசும் அவ்வழி நின்று அரிது எய்தி அத்

திரை செய்தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால்

வரை செய் மாமத வாரணம் நாணுற

விரை செய் பூம்புனல் ஆடலை மேயினான்

 முதல் பாடல் – “பொழுது கழிந்ததால் இப்போது இப்பொய்கையில் நீராடி உன் புகழைப்போல வளர்ந்தவனின் அடிகளை வணங்குவாயாக” என்று ராமனிடம் இலக்குவன் கூறுகிறான்.

இரண்டாவது பாடல் – ராமனும்  துயரிலிருந்த தன்னை பிரயத்தனத்துடன் விடுவித்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து அலைமோதும் அப்பொய்கை முன்செய்த தவத்தினால் அதனுள் இறங்கி பெரும் மதப்பெருக்குடைய யானையும் நாணும்படி நீராடத் தொடங்கினான்.

  மேலே குறிப்பிட்ட பாடலில் விவரிக்கப்பட்டதைப் போன்று ராமன் தன்னைப் பற்றிய உணர்வின்றி சீதையின் நினைவில் தோய்ந்திருத்தலால் இலட்சுமணன் அவனிடம் மாலை கடந்து இரவாகிறது என்பதையும் மாலைக்கடன் செய்யவேண்டும் என்பதையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

 ராமனும் தனக்கு அறிவுறுத்தும் தம்பியை கடிந்துகொள்ளாமல் துயரிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பொய்கையில் நீராடத் தொடங்குகிறான். பொய்கை  செய்த தவம் என்பதும்  மதயானையே நாணுவதும் வேறொரு அழகியல். இதில் நாம் கவனிக்க வேண்டியது பரம்பொருளே ஆயினும் நித்தம் ஆற்றவேண்டிய கடமைகளை அவன் செய்தாகவேண்டும், அதில் விலக்கில்லை என்பதும் அந்தக் கடமைகளை ஏதோவொரு இடரால் மறந்திருந்தால் பிறர் அவனுக்கு நினைவூட்டவேண்டும் என்பதையும்தான். தன் அடியவன் என வந்தவன் தனக்கு அறிவுறுத்துவதை பற்றி ராமன் மனம் சிணுங்காமல் அவன் கூறுவதை செய்வதையும் இங்கு மனங்கொள்ளவேண்டும்.

நியமங்களின் பலன்

3744- நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்

தீத்த காமத்து தெறு கதிர்த் தீயினால்

காய்த்து இரும்பை கருமகக் கம்மியன்

தோய்த்த தண்புனல் ஒத்தது அத்தேயமே

3745 – ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான்

நீடுநீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள்

சூடினான் ….

முதல் பாடலில் ராமன் குளித்தபோது சீதையை அடைவதற்காக அவன் மனதில் கொண்டிருந்த விழைவெனும் அனல், கருமான் இரும்பை காய்ச்சி அந்த நீரில் தோய்த்ததுபோன்று  அந்தக் குளிர் நீரை கொதிக்க வைத்தது எனக் காட்டுகிறது.

இரண்டாம் பாடலில் அன்னம்போல் நீராடும் ராமன் சிறந்த வேதங்களை பாடி  பழமையான நூல்கள் உரைக்கும் இறைவனின் பாதங்களை எண்ணி வணங்கினான்.

      முன்னோர்கள் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு ஒரு காரணம் இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு வழக்கம் பொருளின்றி அமையாது. சீதையை எண்ணி உள்ளம் கொதித்திருந்த ராமன் நீராடியபோது சூடான இரும்பை நீரில் இடும்போது அதன் வெம்மை விலகி தண்மை கொள்வதுபோல ராமனின் உள்ளமும் தணிகிறது. அந்த தணிந்த மனதுடன் இறைவனை வணங்குகிறான்.

  மாலை நியமங்களை மேற்கொள்வதால் மனிதவுரு கொண்ட  பரம்பொருளான ராமனின் துயரமே தணிகிறதென்றால் எளிய மனிதர்களின் துயரும் மட்டுப்படவே செய்யும், எனவே அனைவரும் நியமங்களை கடைபிடிக்கவேண்டும் என கம்பர் காட்டுவதாகவும் கொள்ளலாம்.

ஆராயும் முறைமை

3755 – 3762. வரையிலான பாடல்களில் தேர்ந்தெடுத்த வரிகள்;

 … முதல் தேவர் எனின் மூவர் இவர் இருவர்

மூரி வில்கரர் இவரை யாவர் ஒப்பவர் உலகில் …

“சிந்தையில் சிறிது துயர் சேர்வுற தெருமரலின்

நொந்து அயர்த்தவர்…

…மயர் சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர்”

“தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையவர்…

அருமருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை

இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர்…”

“… சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர்

மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர்”

“…. தறுகண் பேழ்வாய் மின்கன்றும் எயிற்றுக் கோள்மா

வேங்கை இனையவேயும் பின்சென்று காதல்கூரப்

பேழ்கணித்து இரங்குகின்ற…”

“மயில்முதல் பறவைய எல்லாம்…

வெயில் உறற்கு இரங்கி.. விரிசிறைப் பந்தர்வீசி எயில் வகுத்து எய்துகின்ற…”

“காய்எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்களே போல்

தூயசெங் கமலப்பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்…

மரனொடு புல்லும் எல்லாம் சாய்வுறும் தொழுவபோல்…”

  வாலிக்குப் பயந்து ருசியமுக மலையில் சுக்ரீவன் தனக்கு அணுக்கமானவர்களுடன் தங்கியுள்ளான். அப்போது ராம லக்குவர்கள் அங்கு வரவும் அவர்களை வாலியின் வீரர்களோ எனப் பயந்து ஓடி ஒளிகிறார்கள். சுக்ரீவன் தன் அமைச்சனான அனுமனிடம் அவர்களைப் பற்றி ஆராயுமாறு கூறுகிறான். அனுமன் ராம லக்குவர்களை ஆராய்வதைக் கூறும் பாடல்களின் பகுதிதான் மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகள்.

  “முப்பெரும் தெய்வங்கள் என்றால் மூவராயிற்றே, இவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர்.  வில்லை கைகளில் கொண்ட  இவர்களுக்கு ஒப்பானவர்கள் யாரும் இல்லை…”

“மனதில் சிறிய துயர் கொண்டு அதனால் வருந்தி நொந்துள்ளார்கள். மனதிற்கு நெருக்கானமான ஒன்றை தேடும் நிலையிலுள்ளார்கள்…”

“தருமமும் நல்லொழுக்கமும் தங்களது செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களது  பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற ஒன்றிற்கு தற்போது அழிவு வந்துள்ளது. அதை பார்வையால் தேடியபடி உள்ளார்கள்…”

“இந்திரன் அஞ்சும் தோற்றமும், தர்மதேவதை அஞ்சும் ஒழுக்கமும், மன்மதன் அஞ்சத்தக்க வடிவழகும், யமனும் அஞ்சத்தக்க ஆற்றலும் உடையவர்கள்…”

“பெரிய வாயினையும், மின்னலும் ஒளிகுன்றக் கூடிய பற்களையும் உடைய சிங்கமும் புலியும் இவர்களின் பின்சென்று அன்பு மேலிட  உள்ளம் உருகுகின்றன…”

“மயில் உள்ளிட்ட பறவைகளெல்லாம் இவர்கள் வெயிலில் வாடுவதைக்கண்டு வருந்தி தங்களின் விரிந்த சிறகுகளால் பந்தல் அமைத்து அவர்கள்மேல் வெயில்படாமல் செய்கின்றன…”

“நெருப்பு போல வெம்மை கொண்ட கற்கள் இவர்கள் பாதம் பட்டதும் தேன் துளிர்க்கும் புதுமலர்கள்போல குழைகின்றன, மரங்களும் புற்களும் இவர்களைக் கண்டு தலைசாய்த்து வணங்குகின்றன…”

இவையெல்லாமே அனுமனின் சித்தனைகளாகவும் எண்ணங்களாகவும் உள்ளன. ஒரு அமைச்சன் எப்படி பொறுமையாக ஒவ்வொரு விசயத்தையும் ஆராயவேண்டும் என்பதற்கு இலக்கணமாக இப்பாடல்கள் அமைந்துள்ளன எனக் கொள்ளலாம்.

  முதலில் ராமலக்குவர்களின் தோற்றம், அவர்களின் ஆயுதம் என கண்டு பின் அவர்களின் முகத்தில் தெரியும் உணர்வுகளைக் கொண்டு அவர்களின் மனதை ஆராய்கிறான். பின்னர் அவர்களைச் சுற்றி நிகழ்பனவற்றை கவனிக்கிறான். அதன்பின் அவற்றைத் தொகுத்துக் கொண்டு அவர்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு வருகிறான் அனுமன்.

இப்பாடல்களை அனுமனின் திறனுக்கு சான்றாக கொள்வதுடன் கம்பர் காட்ட விரும்பும் அமைச்சனின் நெறிகளுக்கான பாடல்களாகவும் கொள்ளலாம்.

நட்பிற்கு இலக்கணம்

3810- “….. இக்குன்று

அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன்

சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்”

3811 – “என்ற அக்குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி

உன்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்நாள்

சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன

நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா”

3812- “மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என்காதல்

சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்”

“ருசியமுக  மலையை அரணாகக் கொண்டு வாலியிடமிருந்து உயிர் தப்பினேன். எனதருமை உயிரை விடுவதற்கு முடியதவனாகி உன்னிடம் சரண் புகுந்தேன். என்னைக் காப்பது உனது தருமமாகும்” என்று கூறிய    சுக்ரீவனை இரங்கி நோக்கிய ராமன் “உனக்குரிய இன்பதுன்பங்களில் இதுவரை கழிந்தது போக இனி வரும் துன்பங்களிலிருந்து உன்னை நான் காப்பேன். இனி வரும் இன்பதுன்பங்கள் இருவருக்கும் சமமானதாகும்” என்றும்,

“இதற்கு மேலும் நான் கூறுவதற்கு என்ன உள்ளது. விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உன்னை வருத்துபவர் என்னை வருத்தியவர்களாவார்கள். தீயவரே ஆனாலும் உன் நண்பர்கள் எனக்கும் நண்பர்களே. உன் உறவினர் என் உறவினராவார். என் சுற்றத்தினர் உனது சுற்றத்தினர் ஆவார். நீ என்னுயிர் நண்பன்” என்றும் ராமன் கூறினான்.

 இப்பாடல்கள் ராமன் சுக்ரீவனுக்கு உரைத்ததாக மட்டுமில்லாமல் உண்மையான நட்பு என்பதற்கான நெறிமுறைகளாகவே கம்பர் உரைத்துள்ளார். நீயே அடைக்கலம் என்று வந்தவனை எப்படி ஏற்கவேண்டும் என்பதற்கும் நண்பர்களின் உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்குமான விழுமியத்தைக் கூற காவியத்தின் இத்தருணத்தை கம்பர் பயன்படுத்திக் கொண்டார் என்றே தோன்றுகிறது. ஈருடல் ஓருயிர் என்பது நட்பிற்கும் பொருந்தும் என காட்டுவதாகவும் கொள்ளலாம்.

ஐயம் களைதல்

3863 – “… அன்னவன் பெருவலி ஆற்றலை, பெரியோய்

அறிதிஎன்னின் உண்டு உபாயமும் அஃது அருமரங்கள்

நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இந்நெடியோன்

பொறிகொள் வெஞ்சரம் போவது காண்…”

3864- “நன்று நன்று எனா…

…மாருதி தோளினைத் தழுவி,

சென்று செம்மலைக் குறுகி யான் செப்புவது உளதால்

ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான்”

3865 – “ஏகவேண்டும் இந்நெறி என இனிது கொண்டு ஏகி

மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்

ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு

போகவே என்தன் மனத்து இடர்போம் எனப் புகன்றான்”

3866 – “…. வானவர்க்கு இறைவன்

முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி

எறுழ் வலித்தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி

அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான்”

3879 – “…. மொய்கொள் வார்சிலை நாணினை முறைவுற வாங்கி

வெய்ய வாளியை ஆளுடை வில்லியும் விட்டான்”

3880 – “ஏழு மாமரம் உருவி கீழ்உலகம் என்று இசைக்கும்

ஏழும் ஊடுபுக்கு உருவி பின் உடற் அடுத்து இயன்ற

ஏழ் இலாமையின் மீண்டது அவ் இராகவன் பகழி…”

3882 – “… பொன்னின் வார் கழல் புதுநறுந்தாமரை பூண்டு

சென்னிமேல் கொளூஉ அருக்கன் சேய்…”

  ராமன் சுக்ரீவனுக்காக எதையும் செய்வேன் எனக் கூறியபோதும் மிக்க வலிமையுடைய வாலியை ராமனால் வீழ்த்த முடியுமா என்ற ஐயம் சிறிதளவு அவன் மனதில் இருந்தது. இதை உய்த்துணர்ந்த அனுமன் “ராமனின் பெருவலிமையை அறிவதற்கு ஒரு வழியுள்ளது. செல்லும் பாதையிலுள்ள அரிதான ஏழுமரங்களில் ஒன்றை ராமனின் தீப்பொறி பறக்கும் வெம்மையான அம்பினால் துளைக்கச் செய்யலாம்” என்றான்.

  இதைக்கேட்டு அனுமனைத் தழுவி மகிழ்ந்த சுக்ரீவன் ராமனிடம் சென்று பணிந்து உன்னிடம் ஒன்று கூறவேண்டும் எனக் கூற ராமனும் கூறு என்றான்.

 இந்தவழியாக செல்லவேண்டுமெனக் கூறி ராமனை அழைத்துச் சென்று நீண்ட வானமும் குறுகும்படி நிமிர்ந்து நின்ற ஏழுமரங்களைக் காட்டி “இவற்றில் ஒன்றை உன் அம்பு துளைத்தால் என்துயர் போகும்” என்றான். அதைக்கேட்டு சுக்ரீவனின் எண்ணத்தை அறிந்த விண்ணவருக்கும் இறைவனான ராமன் சிறிய புன்னகை பூத்து தன் பெருத்தோள்களால் அவன் வில்லில் நாணேற்றி அறிவினால் அளக்கமுடியாத அந்த மரங்களுக்கு அருகில் சென்றான்.

வலிமையான வில்லின் நாணை முறையாக இழுத்து வெம்மையான அம்பினை செலுத்தினான். அந்த அம்பு ஏழுமரங்களையும் துளைத்து கீழ் உலகம் ஏழினுள்ளும் புகுந்து அடுத்து ஏழு என சொல்லக்கூடிய பொருள்கள் ஏதும் இல்லாததால் திரும்பி வந்தது. இதனைக் கண்டு பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்கள் அணிந்த மணம்வீசும் புதுதாமரை மலர்போன்ற ராமனின் திருவடிகளை தலைமேல் சூடினான் சுக்ரீவன்.

 சுக்ரீவனுக்கு தன்வலிமை மீது ஐயம் எழுந்துள்ளது என்று உணர்ந்த ராமன் அவன்மேல் சினம் கொள்ளாமல் புன்னகைக்கிறான். அவன் ஐயம் நீங்கி வியக்கும் வண்ணம் தன் திறனை நிரூபிக்கிறான். ஒரு மரத்தை துளைக்கச் சொன்னபோதும் ஏழு மரங்களையும் துளைத்து இனி துளி ஐயமும் எழாவண்ணம் இவன் காலடியில் விழுமாறு செய்துவிட்டான். இனி சுக்ரீவனுக்கு எந்நிலையிலும் ராமனின் ஆற்றல்மேல் கிஞ்சித்தும் ஐயம் தோன்றாது. திறனை நிரூபித்து அடிபணியச் செய்த ராமனின் பண்பை அனைவருக்குமான நெறியாகவும் கொள்ளலாம். தன் தகுதி பற்றி ஐயுறும் மனிதரிடம் பிணக்கு கொள்ளாமல் தன் திறனை நிரூபித்து அவரின் ஐயத்தைக் களைதலே சிறந்த பண்பு. விண்ணவருக்கும் இறைவனான ராமனே அதைச் செய்யும்போது மானிடர் அவ்வழியை பின்பற்றுவது முறையானதாகும் என கம்பர் காட்டுவதாகவும் கொள்ளலாம்.

கீழோர் – மேலோர்

வாலி வதை;

3999 – “… இளவல்

கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள்

மடுத்து மீக்கொண்ட வாலிமேல் கோல் ஒன்று வாங்கி

தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான்”

4000 – கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்

சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப

நீரும் நீர்தரும் நெருப்பும் வன்காற்றும் கீழ் நிவந்த

பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப்பகழி

4025 – இருவர் போர் எதிரும்காலை இருவரும் நல் உற்றாரே

ஒருவர்மேல் கருணைதூண்டி ஒருவர்மேல் ஒளித்து நின்று

வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்

தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம்

4030 – மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து

உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ

இற்றையில் பிறர்க்கும் இகல் ஏறு என

நிற்றிபோலும் கிடந்த நிலத்து அரோ

வாலி தன் தம்பி சுக்ரீவனின் இடுப்பிலும் கழுத்திலும் தன் இருகைகளை வைத்து தலைக்குமேல் தூக்கினான். அப்போது ராமன் தன் வில்லின் நாணில் அப்பைப் பொருத்தி தன் தோள் வரை இழுத்து வாலி மேல் எய்தான்.

   ராமன் எய்த அம்பு, நீரும் அந்நீரை உண்டாக்கிய தீயும் அத்தீயை உண்டாக்கிய வலிமையான காற்றும் இவை அனைத்திற்கும் ஆதாரமான நிலம் ஆகிய நாற்பெரும் பூதங்களின் ஆற்றலையும் பெற்றவனான வாலியின் மார்பில் உண்ணத்தக்க கனிந்த வாழைப்பழத்தினை துளைத்துச் செல்லும் ஊசி போல நுழைந்து நின்றது.

  இந்தப் பாடல்களின் அழகியலை பல்வேறு வகையில் விவரித்துக் கூறலாம். ஆனால் இக்கட்டுரையின் பேசுபொருள் வேறொன்று என்பதால் காப்பிய நிகழ்வின் சூழ்நிலைக்காக இப்பாடல்கள் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ராமனின் அம்பு மார்பை துளைத்திடாத வண்ணம் அதைப் பிடித்துக்கொண்டு பெரும்பாடுபட்டு அதனை உருவி அதிலுள்ள ராமனின் பெயரைக் காண்கிறான் வாலி. அப்போது எதிரே வரும் ராமனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறான். அவற்றுள் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

  இருவர் போர் செய்து கொண்டிருக்கும்போது மூன்றாவது நபருக்கு இருவருமே ஒன்றுபோலத்தான். ஆனால் ஒருவர்மீது அன்பு கொண்டு மறைந்து நின்று மற்றொருவர் மீது கூர்மையான அம்பினை செலுத்துவது அறமாகுமா. அறமில்லை என்றே ஆகும்.

  உனக்கு உறவினன் அல்லாத ஒருவன் (சுக்ரீவன்) வந்து என்னை வலிந்து போருக்கழைத்தனால் அவனோடு போர் செய்யவந்த என்மேல் ஒளிந்திருந்து அம்பு எய்து என் உயிரைக் கவர்ந்த நீ நான் வீழ்ந்திருக்கும் இடத்தில் ஆண்சிங்கம்போல் நிற்கின்றாயோ.

  வாலி ராமனிடம் “உனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத என்னை மறைந்திருந்து கொல்வது அறமாகாது. நல்குடிப் பிறந்த அறத்தின் மூர்த்தியான நீ ஏன் இப்படிச் செய்தாய்” என வினவுகிறான்.

ராமன் பதில்;

4041 – ஈரம் ஆவதும் இற்பிறப்பு ஆவதும்

வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி

வாரம் ஆவதும் மற்றுஒருவன் புணர்

தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கு அதோ

4043 – தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்

இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்

அருமை உம்பிதன் ஆர்உயிர்த் தேவியை

பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

அன்பின் செயல் என்பதும் நற்குடியில் பிறந்ததன் பயன் என்பதும் வீரத்தன்மை என்பதும் கற்ற கல்வியின் மெய்யான மேன்மை என்பதும் மற்றொருவன்  மணந்த மனைவியின் கற்பிற்கு இழுக்குவராமல் காப்பதன்றோ

அறம் எத்தன்மையது என்று சொல்லப்படும் தகுதியையும் இம்மை மறுமை பயன்களையும் நீ ஆராய்ந்து எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் உன் அருமைத் தம்பியின் உயிர் போன்ற மனைவியை உன் பெருமை நீங்கும்படி அடைந்திருப்பாயா.

 இவை வாலியின் கேள்விகளுக்கு ராமன் அளிக்கும் பதில்களில் இரண்டு. இந்த பதில்களில் பிறன் மனைவியின் கற்பிற்கு இழுக்கு வராமல் காக்கவேண்டிய நீ உன் உடன் பிறந்தானின் ஆருயிர் மனைவியை பெண்டாளுவது முறையன்று என்பதே உன் மேல் அம்பெய்ததற்கு முதன்மைக் காரணம் என வாலியிடம் கூறுவதாக உள்ளது.

4046 – ஐய நுங்கள் அருங்குலக் கற்பின் அப்

பொய்இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்

செய்திலன் எமைத் தேமலர் மேலவன்

எய்தின் எய்தியது ஆக இயற்றினான்

4047 – மணமும் இல்லை மறை நெறி வந்தன

குணமும் இல்லை குல முதற்க ஒத்தன

உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்…”

   அரிதான  உங்கள் மனிதகுலத்திற்கு ஏற்ற கற்பினைக் கடைபிடிக்கும் ஒழுக்கம் தவறாத மகளிற்கு ஏற்றதான மணமுறைகளை பிரம்மன் எங்களுக்கு விதிக்கவில்லை. கிடைத்தபோது அடைவதே குரங்கினத்திற்கு உரிய முறையாகும்.

  எங்கள் இனத்திற்கு உணர்வு விழையும் வழியே செல்லும் ஒழுக்கமே உள்ளதேயன்றி  மனிதர்க்கு உள்ளது போன்ற வேதம் உரைக்கும் மணமுறைகளோ குலம் உரைக்கும் நற்குணங்களோ இல்லை.

  எனவே மனிதர்களுக்கான நெறிகளை மீறிவிட்டதற்காக குரங்கினத்தைச் சேர்ந்த என் மேல் அம்பு எய்தது தகாத செயலாகும் என வாலி எதிர் வாதம் வைத்தான்.

4049 – நலம்கொள் தேவரின் தோன்றி நவை அறக்

கலங்கலா அற நல்நெறி காண்டலின்

விலங்கு அலாமை விளங்கியது ஆதலால்

அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்அரோ

4053 – நன்று தீது என்று இயல்தெரி நல்அறிவு

இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல்

நின்ற நல்நெறி நீ அறியா நெறி

ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால்

4057 – ‘இனையது ஆதலின், எக் குலத்து யாவர்க்கும்,

வினையினால் வரும், மேன்மையும் கீழ்மையும்;

அனைய தன்மை அறிந்தும், அழித்தனை,

மனையின் மாட்சி’ என்றான், மனு நீதியான்.

 நலம்கொள் தேவரின் அம்சமாகப் பிறந்து பிழையில்லாமல் நிலைதவறாமல் அறத்தின் தன்மையை அறிந்துள்ளதால் நீ விலங்கினத்தைச் சார்ந்தவன் அல்லன்.  நீ செய்த செயலுக்கு விலங்கினம் எனக் காரணம் கூறுவது தகாது.

   மெய்மை இத்தன்மையுடையது என்பதையும், எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர்கள் அனைவருக்கும் உயர்வும் தாழ்வும்  அவர்கள் செய்யும் செயல்களாலேயே விளையும் என்பதையும் நீ உணர்ந்திருந்தும் பிறன் மனைவியின் மாண்பினை அழித்தாய் என்று வாலியிடம்  ராமன் கூறினான்.

4058 – அவ் உரை அமையக் கேட்ட அரி குலத்து அரசும், ‘மாண்ட

செவ்வியோய்! அனையது ஆக! செருக் களத்து உருத்து எய்யாதே,

வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால்

எவ்வியது என்னை?’ என்றான் ; இலக்குவன் இயம்பலுற்றான்:

4059 – ‘முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, “முறை இலோயைத்

தென் புலத்து உய்ப்பென்” என்று செப்பினன்; செருவில், நீயும்

அன்பினை உயிருக்கு ஆகி, “அடைக்கலம் யானும்” என்றி

என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது’ என்றான்.

4060 – கவி குலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்;

அவியுறு மனத்தன் ஆகி, “அறத் திறன் அழியச் செய்யான்

புவியுடை அண்ணல்’ என்பது எண்ணினன் பொருந்தி, முன்னே

செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான்:

  தன்மேல் அம்பு செலுத்தியதற்காக ராமன் கூறிய காரணங்களைக் கேட்ட வானரக் கூட்டத்தின் தலைவனான வாலி, மாட்சிமை பொருந்தியவனே நீ கூறியவை உண்மையாகவே இருக்கட்டும், போர்களத்தில் என் எதிரில் நில்லாமல் வேடர்கள் போல விலகி மறைந்திருந்து அம்பு எய்தது ஏன் என ராமனிடம் வினவினான்.

  அதற்கு லட்சுமணன் முன் வந்து “முன்பு உன் தம்பி முதலில் வந்து ராமனிடம் அடைக்கலம் கேட்டபோது உன்னை எமனுலகிற்கு அனுப்புவேன் என உறுதி கொடுத்தான். அப்படியிருக்க போர்களத்தில் ராமனைக் கண்டு நீயும் உயிர்மேல் பற்றுக்கொண்டு உனக்கும் அடைக்கலம் கேட்பாயோ  என்பதை எண்ணியே என் பெரியோன் மறைந்திருந்து அம்பெய்தான் என வாலியிடம் கூறினான்.

 வானரக் கூட்டத்தின் தலைவனான வாலி ராமலக்குவர்கள் கூறியவற்றை ஏற்றுக் கொண்டவனாய் கோபமும் குழப்பமும் தணிந்த மனத்தவனாகி “புவியிலுள்ள பெருமைக்குரிய ராமன் அறநெறி அழியுமாறு செய்யமாட்டான்” என்பதை உணர்ந்து ராமனை தலையால் வணங்கினான்.

  கம்பராமாயணத்தின் இந்நிகழ்வு சிறப்பான நாடகத் தருணமாகவும் விவாதத்திற்குரியதாகவும் உள்ளது. பல விவாதங்கள் சுவையானதாக இருந்தாலும் இக்கட்டுரையின் நோக்கம் வேறொன்று என்பதால் அதைத் தவிர்த்துவிட்டு இதில் கம்பன் காட்டும் நெறி என்ன என்பதை காண முயற்சிக்கலாம்.

   மேலோர்கள் என்பவர்கள் அறம் இது தீது இது என்பதை பகுத்தறியும் அறிவுடையோர். கீழோர் என்பவர் இதை அறியமுடியாதவர். அறத்தைப் பற்றி உணர்ந்த ஒரு விலங்கும் மேன்மையுடையதுதான். அதே நேரம் பிறருக்கு அறமில்லாதவற்றை இழைக்கும் மனிதவுரு கொண்டவர்களும் விலங்கினமே. மேலோர் கீழோர் என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை, செய்யும் செயல்களின் அடிப்படையிலேயே அமைபவை என்ற விழுமியத்தையே கம்பர் அழுத்தம் திருத்தமாக காட்டுகிறார் எனக் கொள்ளலாம்.

மறைந்து நின்று தாக்கியது அறமன்று என தற்போதுவரை ஆயிரமாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பதிலை ராமன் கூறாமல் லட்சுமணன் கூறியதும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. 

  முதல் விசயத்தில் நாம் கவனிக்க வேண்டியது சுக்ரீவன் அடைக்கலம் கேட்டபோது ராமன் உரைத்தது.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உன்னை வருத்துபவர் என்னை வருத்தியவர்களாவார்கள். தீயவரே ஆனாலும் உன் நண்பர்கள் எனக்கும் நண்பர்களே. உன் உறவினர் என் உறவினராவார். என் சுற்றத்தினர் உனது சுற்றத்தினர் ஆவார். நீ என்னுயிர் நண்பன்”

  இப்படி ஓர் உறுதிமொழி கொடுத்தபின் அவனைக் காப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என கருதத் தோன்றுகிறது. லட்சுமணன் கூறியபடி வாலியும் ராமனிடம் அடைக்கலம் கேட்டிருந்தால் ராமனின் நிலை தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும் என்பதையும் கருத வேண்டும்.

  அடுத்த விசயம் லட்சுமணன் பதிலுரைத்தது. இப்போது வரை யாரும் தன்னைப் பற்றி பெருமையாக பேசுவது சற்று தரம் குறைவான ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கையில்,  “தன்னிடம் அடைக்கலம் கேட்பவர்களுக்காக அனைத்தையும் அளிப்பவன்” என்று தன்னைப் பற்றி ராமன் எப்படி கூறிக்கொள்வான். அத்தோடு காப்பியத்தில் இதற்கு முன்பே இரண்டு முறை ராமனைப் பற்றி லட்சுமணன் கூறியுள்ளான் என்பதையும் கருத்தில் கொண்டு, தற்பெருமை பேசுதல் நெறியல்ல என்று கம்பர் காட்டுவதாகவும் கொள்ளலாம்.

    கிட்கிந்தை காண்டத்தில் கம்பர் காட்டியுள்ள நெறிகள் இன்னமும் இருக்கக்கூடும். எனக்கு தோன்றிய சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளேன். இது மிகை வாசிப்பாக தோன்றினால் என் ஆசிரியர்கள் பொறுத்தருள வேண்டுமென இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

படங்கள் – AI மூலமாக பார்கவி



Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading