பாடப்புத்தகங்களிலும் பட்டிமன்றங்களிலும் அறிமுகமான கம்பனை முழுமையாக வாசிக்கும் முயற்சியில் பலமுறை அவனோடு கண்ணாமூச்சி ஆடிவிட்டு ஒரு வழியாக அதில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம். அவனது சொல்லாட்சியையும் சந்தத்தையும் உவமையையும் ஒவ்வொரு இடத்திலும் வியந்து தீரவில்லை.
ஒரே விதமான பொருள்களை வர்ணிக்கும்போதும் அவனது உவமைகள் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து மாறுபட்டே அமைந்துள்ளன. நகரங்களையும் மதில்களையும் அவற்றின் மாந்தரையும் பற்றி கூறும் வர்ணனைகளில் அயோத்திக்கும் மிதிலைக்கும் இலங்கைக்கும் வேறுபாட்டினை உணரமுடியும். மனிதரின் உணர்வுநிலைகளை கூறும் இடங்களோ பேசித் தீர்க்கமுடியாதவை, அதிலும் சுருங்கச் சொல்லி விளக்கும் அவனது புலமை.
மிதிலையை அடைந்து மாடத்தில் சீதையை கண்டு காதலுற்ற ராமன், அரச முறைமைகளும் முனிவர் பணிவிடையும் முடியும்வரை அக்காதலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாத நிலை. பின்னர் முனிவரும் லக்ஷ்மணனும் உறங்கச்சென்றவுடன் இரவின் இருளோடு சீதையின் நினைவும் அவனை முற்றிலும் சூழ்வதை “கங்குலும் திங்களும் தனியும் தானும் அத்தையலும் ஆயினான்” என்கிறான்.
ராமனை அயோத்திக்கு திருப்பி அழைத்துச்செல்லும் முயற்சியில் தோற்ற பரதன், மிகச்சரியாக பதினான்கு வருடத்தில் ராமன் திரும்பவேண்டும் என்று வலியுறுத்துகிறான். அதற்கு அவன் உரைக்கும் சூளுரை “கூர் எரி சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்”.
இவ்வாறு கம்பனின் நயங்களை உரைப்பதென்றால் மொத்த கம்பனையுமே மேற்கோள் காட்டவேண்டியிருக்கும். அதனால் கதிரவன் எழுதலும் மறைதலும் காட்டப்பட்டிருக்கும் விதத்தை பற்றி மட்டும் நான் சில வார்த்தைகள் பகிரலாம் என நினைக்கிறேன்.
புலரியிலும் அந்தியிலும் வானம் கொள்ளும் செக்கர் நிறம் நம்மில் தோற்றுவிக்கும் பரவசம், கம்பன் கூற்றால் ஓவியமாகவே நினைவில் பதிகிறது.
அசையாத நெடு வரையின் முகடுதொறும் இளங் கதிர் சென்று அளைந்து வெய்யோன்
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம் அப்பியபோல் சிவந்த மாதோ (630)
கதிரவன் உதிக்கும் உதயகிரியில் புலரிச் செவ்வொளி பரவுதல், கிழக்கில் உள்ள திசையானையின் நெற்றியில் சிந்தூரம் இட்டதை போன்றுள்ளது.
மீனுடை எயிற்றுக் கங்குல் – கனகனை வெகுண்டு, வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி,
தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள் நின்று,
மானுட மடங்கல் என்ன தோன்றினான் – வயங்கு வெய்யோன் (890)
இதில் விண்மீன்கள் ஒளிரும் இரவு ஹிரண்யகசிபு. உதிக்கும் சூரியன் அவனை அழிக்க வந்த நரஹரி. உதயகிரி அந்த நரசிங்கம் பிளந்திட்ட தூண்.
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ் சாயையுடைக் கதிர் அங்கு அதன்மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது செக்கர் வானம் (878)
அதே செவ்வொளி அந்தியில் அஸ்தமன கிரியில் படர்கிறது. இங்கும் மலை யானையுடன் தான் ஒப்பிடப்படுகிறது. ஆனால் சூரிய கிரணங்கள் யானை மீது பாயும் சிங்கம் ஆகின்றன. அப்போது வீழும் குருதியாக ஆகிறது அந்தியின் செக்கர் நிறம்.
இதுபோல உவமைகள் கூறியும் தீரவில்லை கம்பனுக்கு. மாறாத நியதியில் பயணிக்கும் கதிரவனை காப்பிய நிகழ்வுகளோடு தொடர்புறுத்தி தன் கருத்துகளை அவன் மீது ஏற்றி வைக்கிறான்.
நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன்தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் (453)
விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணருடன் சோணையாற்றங்கரைக்கு அந்தியில் வந்து சேர்கிறார். அப்பொழுது கதிரவன் கடலில் மறைகிறான். அதற்கு கம்பன் கூறும் காரணம் – மறுநாள் காலை அவர்கள் பயணம் தொடர்கையில் குளிர்ச்சி தருவதற்காக வெப்பம் மிகுந்த தன் ஒளிக்கற்றைகளை கடல்நீரில் நனைத்துக்கொள்கிறான்.
இந்த உதவியை சீதை அறிந்தாளில்லை. ஆகையால்,
அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என
நல் நெடுங் கரங்களை நடுக்கி ஓடிப்போய் –
முன்னை வெங் கதிரவன் – கடலில் மூழ்கினான் (540)
அடுத்த நாள், ராமனும் கன்னிமாடத்தில் இருந்த சீதையும் கண்ணோடு கண் கலந்த அன்று, கதிரவன் விரைந்து சென்று கடலில் மூழ்குகிறான். ஏன்? ராமனை கண்ட சீதை மேனியின் காமத்தீ அவனையே சுட்டெரித்ததாம்.
தூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஓடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே (1555)
கதிரவனின் செந்நிறத்திற்கு உவமைகள் கூறியவன் இங்கு அதற்கு காரணம் கற்பிக்கிறான். தன் குல மைந்தனான தசரதன் உயிருக்கு கேடு விளைவிக்கும் செயலைச் செய்த கைகேயியை சினந்து அவன் சிவந்து கிழக்கில் உதிக்கிறான்.
மீன் பொலிதர, வெயில் ஒதுங்க, மேதியோடு
ஆன் புக, கதிரவன் அத்தம் புக்கான் –
‘கான் புகக் காண்கிலேன்’ என்று, கல்லதர்
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் (1842)
அச்சினத்தினாலும் எதுவும் மாறாத நிலையில் ‘ராமன் காடேகுவதை நான் காணமாட்டேன்’ என்று துயரத்துடன் விரைந்து அஸ்தமன மலைக்குப் பின் மறைகிறான்.
மீன் நீர் வேலை முரசு இயம்ப, விண்ணோர் ஏத்த, மண் இறைஞ்ச,
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க, சுடர்த் தேர் ஏறித் தோன்றினான் –
‘வானே புக்கான் அரும் புதல்வன், மக்கள் அகன்றார்; வரும் அளவும்
யானே காப்பென், இவ் உலகை’ என்பான் போல, எறி கதிரோன் (1917)
ஆயினும், தசரதன் இறந்தவுடன் குல மூதாதைக்கான பொறுப்பை மேற்கொள்கிறான். ‘என் குல மைந்தன் விண்ணேகினான். அவனது புதல்வர் நாட்டில் இல்லை. அவர்கள் வரும்வரை இந்த உலகை நானே காத்து நிற்பேன்’ என்று தன் தேர் மீது வந்து தோன்றுகிறான்.
காட்டிலும் ராமனுக்கு துணை செய்கின்றான். அவர்கள் ஒரு பாலையை கடக்கும்போது ‘சீதை இந்த வெப்பத்தை தாங்கமாட்டாள்’ என்று ராமன் எண்ணுகிறான். அடுத்த நொடி சூரியன் தண்மதியை போல் குளிர்விக்கிறான். காய்ந்த மரங்களையெல்லாம் தளிர்க்கச் செய்கிறான். அந்த இடத்தையே தாமரை காடாக மாற்றிவிடுகிறான்.
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் – முது கங்குல்
விடி நாள் கண்டும், கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு, ‘ஆண்டு
அடிநாள், செந் தாமரை ஒதுங்கும் அன்னம் இலளால், யான் அடைந்த
கடி நாள் கமலத்து’ என அவிழ்த்துக் காட்டுவான் போல், கதிர் வெய்யோன் (3570)
விதியாலும் சதியாலும் ஜானகியை பிரிந்து வருந்திய ராமன் அத்திருமகள் இரவில் குவிந்து மூடிய தாமரை இதழ்களுக்குள் அவள் சிறைப்பட்டிருப்பாளோ என்று எண்ணலாம். ஆகையால் காலையில் அவற்றை விரித்து அவள் அங்கு இல்லை என்று தெரியப்படுத்துகிறான்.
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்;
நாரியை எங்கணும் நாடினன்; நாடி
பேர் உலகு எங்கும் உழன்று, இருள் பின்னா,
மேருவின் – வெங் கதிர் – மீள மறைந்தான் (3575)
பின்னும் ராம லக்ஷ்மணரது மனத்துயரை போக்க எண்ணி தன் பயணத்தில் சீதையை தேடி, கிடைக்கப் பெறாமையால் மனம் சலித்து, மீண்டும் மலையின் பின் மறைகிறான்.
இன்னன இன்னன பன்னி, ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்;
அன்னது கண்டனன், அல்கினான் என,
துன்னிய செங் கதிர்ச் செல்வன் தோன்றினான் (3641)
நிலவும் இரவும் ராமனது பிரிவுத்துயரை மேலும் கூட்ட அவன் பலவிதமாக அரற்றி நினைவழிகிறான். அதைக் கண்டு அவனுக்கு ஆறுதல் அளிக்கும்பொருட்டு மீண்டும் உதித்து வருகிறான்.
புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்,
முதல்வன், பேர் உவகைக்கு முந்துவான்,
உதவும் பூமகள் சேர, ஒண் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான் (4115)
தன் குலத்தோன்றல்களுக்கே இத்தனை பரிவு காட்டும் சூரியன் தன் மைந்தனான சுக்ரீவன் முடி சூடும்போது என்ன செய்வான்? முன்னதாகவே உதிக்கிறான். அதோடன்றி திருமகளும் வந்து அருளவேண்டும் என்பதற்காக அவள் வாழும் தாமரை மலர்களை தன் கதிர்கரங்களால் திறந்துவைக்கிறான்.
மா இயல் வட திசைநின்று, வானவன்,
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய, முந்தி, தென் திசைக்கு
ஏவிய தூது என, இரவி ஏகினான் (4148)
அனுமனுக்கு முன்னதாகவே ராமன் அனுப்பிய தூதனாக சூரியன் தெற்கு நோக்கி செல்கிறான். ஆம், தக்ஷிணாயண ஆரம்பம்.
தன் தனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில் தைத்த
மின் தளிர்த்தனைய பல் மா மணியினை வெளியில் கண்டான்;
‘ஒன்று ஒழித்து ஒன்று ஆம்’ என்று, அவ் அரக்கனுக்கு ஒளிப்பான்போல,
வன் தனிக் குன்றுக்கப்பால், இரவியும் மறையப் போனான் (6943)
கடலில் அணைகட்டி இலங்கையை அடைந்து சுவேல மலை மீதிருந்து ராமன் அந்நகரை பார்வையிடுகிறான். ராவணனும் ஒரு உயர்ந்த கோபுரத்தில் ஏறி வானர சேனையை பார்க்கிறான். அது கண்ட சுக்ரீவன் பாய்ந்து சென்று அவனோடு யுத்தம் செய்து அவன் மணிமுடியின் அருமணிகளை பறித்து மீள்கிறான். அதனை கண்ணுற்ற வெய்யோன் ராவணன் என்ன செய்வானோ என்று அஞ்சி தன் கதிர்களால் அம்மணிகள் ஒளிராதிருக்கும் பொருட்டு மறைந்து போகிறான்.
அளித் தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி,
வெளிப்படல் அரிது என்று உன்னி, வேதனை உழக்கும் வேலை,
ராவணனின் கொடுங்கோன்மையால் வேதனையுற்று மறைந்து வாழ்ந்த சிற்றரசர்கள், அவன் செருக்கை அழித்து தங்களை காக்க வந்த செங்கோல் வேந்தனை கண்டு தைரியம் பெற்று வெளிப்பட்டது போல மறுநாள் காலையில் சூரியன் புத்துணர்வோடு மீண்டு வருகிறான்.
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க,
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி;
‘தீர்த்தன்மேன் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்தப்
பார்க்கிலேன், முந்திப் படுவல் என்பான்’ எனப் பட்டான் (8527)
இந்திரஜித் மாயப்போரில் மறைந்துநின்று லக்ஷ்மணன் மேல் ப்ரம்மாஸ்த்ரம் எய்ய திட்டமிட்டபொழுது அதனை காணமாட்டாதவனாய் கதிரவன் விரைந்து மறைந்துபோகிறான்.
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
போர் முடித்து ஊர் திரும்பி, உலகமே உவகை கொள்ள, நிலமகளும் திருமகளும் மகிழ்ச்சியுற ராமன் முடி சூடுகிறான். அன்று, அந்த சிறந்த மணிமுடியில் பதிக்க பொருத்தமான ஒரு அருமணியை கீழ்திசையில் அதன் காவலனாகிய இந்திரன் உயர்த்திப்பிடித்தாற்போல கதிரோன் எழுகிறான்.
மாறாத நியதியான கதிரோனின் அன்றாடப் பயணத்தையும், உத்தராயண – தக்ஷிணாயண நகர்வுகளையும் தான் கூறவிரும்பும் கருத்துகளுக்கேற்ப, கதையோட்டத்திற்கு இயைய கம்பன் கைகொள்கிறான். காப்பியத்தின் முக்கிய தருணங்கள்தோறும் அந்தந்த உணர்வுநிலைகளுக்கேற்ப கதிரோனின் தோற்றமும் அஸ்தமனமும் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன. சூரியனின் வழித்தோன்றலும் சூரியனின் புதல்வனும் அடைந்த துன்பங்களையும் வெற்றிகளையும் கூறுவதால் அவன் அவர்களை அகலாமல் தொடர்கிறான் போலும். வெய்யோன் குல மூதாதையாய், தந்தையாய், கம்பனின் சொற்களில் நிலைபெற்று ஒளிர்கிறான்.
Leave a Reply