நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300 பாடல்களை முடித்த பிறகு தான் நான் அதில் இணைந்தேன். இன்று 5750 ஆவது பாடலில் இருக்கிறோம்.
சொல் சொல்லாக நிறைந்து கொண்டே சென்ற நாட்கள், ஒன்று சேர மற்றொன்று மறைந்து கொண்டே போகும் பாடல்கள், நெகிழ்தல், வார்த்தைகளை கண்டு பரவசப்படுதல், ஆழ்ந்து யோசித்தல், தனக்கான பொருள் பிடிபட்டவுடன் ஏற்படும் பரவசம், அதன் மீது அமர்ந்து நீண்ட பயணம், இப்படியாக சென்ற வாசிப்புக்கிடையில் சில தருணங்கள் மட்டும் சுகத்தழும்பாக மாறி வருடச் சொல்லும். அத்தகைய கதை தருணங்களின் வலியும் காயமும் நிரடி பார்க்கத் தூண்டுபவை.
அதிலொன்று..
இச்சிறு படலம் பற்றி கலந்துரையாடலில் பேசியது. கலன் காண் படலம். இராமாயணத்தின் பெரிய இரண்டு நிகழ்வுகளை கொண்ட மராமரப் படலத்திற்கும் வாலிவதைப் படலத்திற்கும் இடையில் சிறிய தொங்குபாலமாய் இது. அதற்குரிய அத்தனை ஊசலும் கொண்டது. விவாதங்களுக்குரிய பெரும் காட்சிகளுக்கிடையே இராமனின் கண்ணீரும் சுக்ரீவனின் தேற்றலும் அனுமனின் வழிகாட்டுதலுமாக உணர்வு நிலைகளின் உச்சத்தை தொடும் பாடல்கள்.

சீதையை கவர்தல், பருக்லின் அருங்காட்சியகம்
இதில் கம்பன் மிகப்பெரியதான ஒரு பிரிவில் துடிக்கும் இராமனின் சித்திரத்தை எழுதி போகிறான். மொத்த காவியத்தில் சீதையின் பிரிவில் ராமனின் துயரம் பெருங்கடலெனில் அதன் செறிவுமிக்க ஒரு துளி இப்படலத்தின் துயர். அதேபோன்று சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் ஆன நட்பு பலப்படும் தருணங்கள் மற்றும் அடுத்ததாக, அனைவரும் அவரவர்களுக்கான உணர்வு நிலையின் உச்சத்தில் இருந்தாலும் அனுமன் நிகர் நிலையிலிருந்து, அதனில் அனைவரையும் கட்டுவதில் படலம் முடிகிறது.
ஏழு மராமரங்களை தன் ஓரம்பினால் துளைத்து அவன் வில்திறத்தின் மூலம் சுக்ரீவனை தைரியப்படுத்தி வானரங்கள் ஆராவரித்துப் புடை சூழ வந்தமரும் இராமனை நோக்கி சுக்ரீவன், “முன்பொருநாள் ஒரு பெண்ணை இம்மலை தாண்டி வானில் புஷ்பக விமானத்தில் இராவணன் கொண்டு சென்றான். அவள் உன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். அந்த’ குழைபொரு கண்ணினாள் கண்ணீரோடு பொதிந்துப் போட்ட அணிகலன்கள் இதோ” எனக் காட்டும் போது இராமன் உடைந்து போகிறான்.

பஹாடி சீதை, படம் – Art Details
வாசித்துச் செல்லும் நமக்கு, இராமன் இக்கணத்தை எப்படி என்று தோன்ற, ‘தெரிவுற நோக்கினன் தெரிவை அணிகலன்’ என்கிறான் கம்பன்.
தெரிவுற நோக்குதல் என்பது கண் தட்டிப் போய் பார்க்கின்ற ஒரு பார்வையாகப்பட்டது. ‘இது என்ன? என் கண்முன்னே தெரிவது எது? திடீரென எங்கிருந்து வந்து என் கைகளில் நிற்கிறது? அவள் இல்லாமல் இது மட்டும் எந்த துணிவில் என்னிடத்தில் வந்தது? இதனை அவள் அற்று தனித்து காண ஏன் எனக்கு நேர்ந்தது? ‘என ஆயிரம் அர்த்தங்களை நிறைத்த பார்வை அது.
நல்குவதுஎன் இனி? நங்கை கொங்கையைப்
புல்கிய பூணும், அக் கொங்கை போன்றன:
அல்குலின் அணிகளும், அல்குல் ஆயின:
பல்கலன் பிறவும், அப் படிவம் ஆனவே.

ஞாசர்பூர் யட்சி அல்லது சுரசுந்தரி, க்வாலியர் அருங்காட்சியகம் ( www.vmis.in)
அவள் தன் உடலில் அணிந்திருந்த உடல் பாகங்களாகவே அவை தெரிகிறது அவனுக்கு. ‘அவளே தான் அது.. இல்லை அவள் வேறு எங்கோ இருக்கிறாள்.. பிறகு இவை? இதில் பாதி சீதையை நான் கண்டடைந்து விட்டேன்.. முழுமை எங்கோ எப்படியோ இருக்கிறது.’. இராமன் மறுவுகிறான். மீதி முழுமை அதனுடைய சோகத்தையும் அனாதை தன்மையும் நினைவுபடுத்த அவன் கைகளில் அமர்ந்துள்ளதாக தோன்றியது.
மரணிப்பவர்களை விட தொலைந்து போகிறவர்கள் மிகக் கொடுமையான தண்டனையை கொடுத்துவிட்டு போகிறார்கள். இங்கிருப்பவர்களின் கையாலாகதனத்தை ஒவ்வொரு நாளும் தங்கள் நினைவுகளால், விட்டுச் சென்ற பொருள்களைக் கொண்டு குத்தி குதறிக் கொண்டே இருக்கிறார்கள்.
அடுத்தடுத்த பாடல்களில் அவன் அவற்றை தன் மேல் உத்தரியமாக தரித்து கொள்கிறான், சந்தனமாக பூசி கொள்கிறான். ஒரு பித்து நிலையிலிருக்கும் இராமனை அனைவரும் கண்டு கொள்ளும் தருணம். எந்த முறைமையுமற்ற காதலன்.

மோந்திட, நறுமலர் ஆன; மொய்ம்பினில்
ஏந்திட, உத்தரியத்தை ஏய்ந்தன:
சாந்தமும் ஆய்,ஒளி தழுவ போர்த்தலால்,
பூந் துகில் ஆய, அப் பூவை பூண்களே.
இவனின் துயரத்தைக் கண்டு சுக்ரீவன் ‘மிகப்பெரும் துன்பத்தை இவ்வணிகலன்களைக் காட்டி உனக்களித்துவிட்டேனே’ என வருந்துகிறான். அவனுக்கு துணை நிற்பதாக உறுதி அளிக்கிறான். அவனிடம் இராமன் “வினையினேனும், இவ்இலங்குவில் கரத்திலும் இருக்கவே, அவள் கலங்கழித்தனள்”, என புலம்புகிறான்.
“நான் இருக்கும்போது அவள் இந்த மங்கலங்களை இழக்க நேர்ந்ததே.!. நான் யார்? எனது வம்சம் என்ன? எப்படிப்பட்ட தகப்பனுக்கு மகன்? குலமுறை பெருமையை காப்பவனா நான்?.. இதோ இங்கு இருக்கும் இவ்வில், அதற்கு பாரமாக அது என்னை தூக்கி திரிகிறது. அதன் பெருமைக்கு என்னால் இழப்பு”, என புலம்பும் இராமன் சுக்ரீவனுக்கு, இதற்கு முன் இருந்ததைவிட அணுக்கனாகிறான்.
‘வலிமையுடைய இத்தோள்கள் இவ்வளவு குழையுமா?.. இவ்வளவு மென்மையானவனா நீ?’, என நினைக்கும் தோறும் நட்பு பலப்படுகிறது. எங்கோ ஒரு புள்ளியில் இருவரின் துயரும் இணைந்து போகிறது.
இந்த படலத்தை வாசித்து நிறைவு செய்கையில், அம்பறாத்தூணியும் வில்லுமாய் இலக்குவனனோடு, எங்கோ ஏதோ ஒரு காட்டுப்பகுதியில் மலைகளையும் அருவிகளையும் கண்கொண்டும் பாராமல் சீதையே நினைவாய் வெறித்த பார்வையோடு நடந்து செல்லும் ராமன் தெரிகிறான்.
இதோ இப்போது சூடாமணி படலம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். தனது சேலை முந்தானையிலிருந்து பொதிந்து வைத்த சூடாமணியை எடுத்து அனுமனுக்குக் காட்டுகிறாள் சீதை. ஈரேழுலகங்களும் பிரகாசிக்கின்றன என்கிறான் கம்பன். “இராமா பார்! உன் மனைவி அவளின் மொத்த மங்கலத்தையும் இச்சூடா மணியாக தன்னுடன் வைத்துக் கொண்டே மற்றவற்றை பொதிந்து போட்டிருக்கிறாள்” என்று அவனிடம் சத்தமாக நானே கூறிக் கொண்டேன்.

Leave a Reply