கீரையும் காயும் – பரிமித்தா

ஒரு வாரநாளின் விடியல் தொடங்கியது. என் தாயார் பூஜையறையிலிருந்து தூபக்கல்லை எடுத்துக் கொண்டு வந்தார்.

”புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி.. இந்தக் கீரைய மட்டும் எதுக்கு வெச்சிருக்கே?.. சுருங்கீறாதா அது, இதையும் சேர்த்துப் போடு” என்றார்.

”வெட்டணும்” என்றேன் நான். சட்டென்று எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது.

“இது கீரை இல்ல தெரியுமா. சரியா சொல்லனும்னா கொடி. கம்பர் எழுதியிருக்கார். இது கரையோரத்தல தான் வளரும். இப்போ இந்த கொடி கொமர்ஷலைஸ்ட் ஆனதுனால பெரிசா யாரும் பொருட்படுத்தல” என்று காலை ஆறரை மணிக்கு அதிமுக்கியமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

‘இத மட்டும் எந்த நேரத்துல பெத்தேன்’ என்பது போல என்னை வெறித்துப் பார்த்து விட்டு, ”ஆதிக்குச் சோறுப்போட்டாச்சு, துணிய காயப்போட்டுட்டு கிளம்பு…கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்..” எனச் சொல்லி சென்றார்.

வள்ளிக்கொடி/வள்ளைக் கீரை – Ipomea aquatica (www.crelangovan.blogspot.com)


கம்பர் கொடிவள்ளையென இக்கீரையை எழுதியுள்ளார்.

விரிந்த குவளை, சேதாம்பல், விரை மென் கமலம், கொடி வள்ளை,
தரங்கம், கெண்டை, வரால், ஆமை, என்று இத்தகையதமை நோக்கி,
‘மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற் கண்டேன்; வல் அரக்கன்,
அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்தி ஆம் அன்றே!’ 

(3733, பம்பைவாவிப் படலம், கிஷ்கிந்தை காண்டம்)

இந்தப் படலத்தில் இராமர் பம்பை வாவியை அடைகிறார். அங்கிருக்கும் தாவரம், மீன், பூக்கள் எனப் பார்ப்பதெல்லாம் சீதையாக உருவகித்துக்கொண்டு புலம்புகிறார். ஆக, கொடி என்றாலே மின்னலுக்கடுத்து பெண்ணின் இடையென உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர். இப்பாடலிலும் கம்பர் மிகத் தெளிவாக அதையே சொல்கிறார்.

இருப்பினும், வள்ளையின் இயல்புக்கேற்ப வாசிக்கலாம் எனவும் தோன்றுகிறது. அணிமா, மகிமா சித்து தெரிந்த அனுமர் இலங்கையை அடைந்த போது சீதையை மலர்க்காம்பினுள் தேடுகிறார். அந்தச் சிறு துளையினூடே இராவணர் சீதையை அங்கு ஒளித்து வைத்திருந்தாலும், அதை அனுமர் தேடி கண்டுப்பிடிக்க கொண்ட தீர்க்கத்தினால் அவ்வரியைக் கம்பர் எழுதுகிறார்.

அப்படியிருக்க, வள்ளை கீரையின் இயல்புகளுக்கு ஏற்ப சீதாராம இணையரின் துயரைப் பொருளேற்றம் செய்யலாம். பொதுவாக, அறிவியல், புவியியல், கணக்கு இப்படியாக துறைசார் நுணுக்கங்களைக் காப்பியத்தில் பொருளேற்றம் செய்யக் கூடாதென்பது பொதுநியதி. ஆனாலும், கதையின் சாரம் அனுமதிக்கும் வரையில் புதிய வாசிப்பை மேற்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

உண்ண முடிந்த அனைத்து இலைகளும் தமிழில் கீரைகள்தாம். Swamp Morning Glory எனும் வள்ளக்கீரை ஹொக்கியன் மொழில் கங் கோங் என்று என்றழைக்கப்படும். இங்கு கங் கோங் கீரை மிகப் பிரபலம். கஹங் என்றால் துளை. கோங் என்றால் காலி அல்லது வெறுமை.

வள்ளையினது உள்இன்மையைப் பிரிவுத்துயரால் அகத்தால் துன்புறும் சீதா இராமரின் சூன்யத்தைக் குறிக்கவும் செய்யலாம் என வாசிக்கலாம். வள்ளை தடி தண்டுகளை உடையது போல் காட்சியளிக்கும். வள்ளைத் தண்டின் முதன்மை பயனே அதன் துளையை நீரன்றி வேறேதும் போகாமல், வெளி மாசுகளிடமிருந்து பாதுகாப்பது. நீரில்லையெனில் அங்கு மிஞ்சி இருப்பது வெற்றிடம்தான். பின்பு, விடாப்படியான கெட்டி தண்டுதான் எதற்கு? நீரில்லாமல் வெயிலில் வாடி கிடப்பதுதான் எஞ்சும். சீதையில்லாமல் இராமனது பராக்கிரமம் உடைந்து வெளிப்படையாக புலம்பும் இராமனது நிலையுடன் வள்ளையைச் சேர்த்துப் பார்க்க தோன்றுகிறது.

கீரைகள் இடைகளுக்கு உவமையாக மட்டுமல்லாமல், துறவு கொண்ட இராமலஷ்மணர்களுக்கு உணவாகவும் அவ்வப்போது வருகிறது. நட்புக் கோட் படலத்தில் சுக்ரீவர் இராமரை விருந்துக்கு அழைக்கிறார். வானரங்கள் இராமருக்கு கீரையையும் காயையும் அளிக்கின்றனர். அதையே வானரச் சேனை அரசரான சுக்ரீவரும், லக்ஷ்மணரும் உண்ணுகின்றனர். அப்போது இராமர் சுக்ரீவரைப் பார்த்து உன் தாரம் எங்கே எனக் கேட்கிறார்.

கனியும், கந்தமும், காயும் தூயன
இனிய யாவையும் கொணர… [3819]

விருந்தும் ஆகி, அம் மெய்மை அன்பினோடு
இருந்து, நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா.
‘பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும் பின்?’ என்றான் [3820]

[அனுமப் படலம், கிஷ்கிந்தை காண்டம்]

இராமர் உண்மையான அன்புடன் விருந்துண்கிறார். அப்போது, இறைவனாகிய இராமர் சுக்ரீவர் நொந்து கிடப்பதைச் சிந்தித்து, ”உன் இல்லற மனைவியை என்னைப் போலவே பிரிந்துள்ளாயா?” எனக் கேட்கிறார்.

நன்றி, தைனிக் பாஸ்கர்

நண்பர்கள் சிலர் இதைப்பற்றி தனித்துப் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு வேடிக்கைக்காக இராமர் ஏன் அப்படி கேட்டார், அவர் கேட்க வேண்டிய அவசியமில்லையே என்றனர். நான், ”சுக்ரீவனே அண்ணனுக்குப் பயந்து மலையில ஒளிஞ்சு கிடக்கான், அங்க என்ன கிடைக்குமோ அதை இந்த வானர கூட்டம் அவிச்சோ சுட்டோ இராமருக்குக் கொடுத்துருக்கும். கிழங்க சுடுதண்ணில அப்படியே அவிச்சு உப்பிலாம கூட கொடுத்துருக்கலாம். சுக்ரீவன் மனைவி இருந்திருந்தா அப்படி செய்ய விட்டுருப்பாளா? சாம்பாரையும் சாத்தையும் வடிச்சிருக்க மாட்டா? அதான் இராமன் அப்படி கேட்டிருப்பார்” என்றேன் விளையாட்டாக.

முழுகாதையும் அறிந்தவர்களுக்கு தெரிந்தது, சொல்லின் செல்வர் அனுமர் இதன்பின் வாலி சுக்கிரீவரின் மனைவியைக் கவர்ந்து சென்ற கதையைச் சொல்வார். பின்னர், வாலியை தான் கொல்வேன் என இராமர் சூள் உரைப்பார். அதற்கு சுக்ரீவர் தனது வானர சேனையை அனுப்பி சீதையைத் தேடுவதாக வாக்களித்துக் கொள்வர்.

எந்தச் சூன்யத்தை இராமர் பற்றிக்கொண்டிருந்தாரோ அதையே சுக்ரீவரும் கொண்டிருந்ததால் அவர்களுள் ஓர் ஒத்திசைவு ஏற்பட்டது. இப்படியாக வாலியையும் வதைத்து கார்காலமும் முடிந்துவிடும். ஆனால், இராமனிடம் வானர சேனை வந்துச் சேர்ந்திருக்காது. கிஷ்கிந்தையில் நிலைமை எவ்வாறாக இருக்கிறதென்பதைத் தெரிந்துக் கொள்வதற்காக இலஷ்மணரை இராமர் அனுப்புகிறார். அப்போது, சுக்ரீவர் வந்தவருக்கு விருந்தளிக்க விரும்புகிறார்.

…திருமகள், தலைமகன் புல்லின் சேர, எற்கு
உரியதோ இஃது? [4375]

…மணிமுடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக, யான் பொன் செய் பூத் தொடர்
மெல் அணை வைகவும் வேண்டுமொ? [4376]

…குட்டிம வன் தலத்து இருந்தனன் [4377]

அண்ணாரும் அண்ணியும் புல் தரையில் இருக்க எனக்கு எதற்கு பொன்னால் செய்து பூக்களால் புனையப் பெற்ற மென் ஆசனம் தனக்கு தேவையில்லை என உதறிவிட்டு கல் மண்டபத்தில் லஷ்மனர் அமர்கிறார்.

பச்சிலை, கிழங்கு, காய், பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறுதான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட
எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால். [4382]

யான் இனிச் சென்றெனன் கொணர்ந்து அடை திருத்தினால் [4383]

இலக்குவன் சுக்ரீவன் சந்திப்பு, லாஸ் ஏஞ்செல்ஸ் கலை அருங்காட்சியகம், காஷ்மீர் பாணி ஓவியம் (1700)

பச்சிலையையும் கீரையும் காயும் உண்ட என் அண்ணன் இட்ட மிச்சத்தையே நான் உண்பேன், அப்படி இல்லையெனில் நான் உண்பது அஃறினை உண்ட மிச்சத்துக்கு சமானமாகும் என காட்டமாகவே பதிலளிக்கிறார். இலஷ்மணருக்கே உரிய அதீத அன்பும், அந்த அன்பானது நிலைபெறாமல் இருத்தலால் வரும் சூன்யத்தின் சீற்றமாகவும் இதை வெளிப்படுத்துகிறார். தமையனுக்கே தான்தான் கீரையும் காயும் சமைத்துப் பக்குவப்படுத்தித் தரவேண்டும். அதனால், விடைபெறுகிறேன் என்றும் அவர் மனதிலும் அண்ணாரின் வெற்றிடமும் பற்றிக் கொள்வதாக என் வாசிப்பு அமையப்பெற்றது.



Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading