அட்டிச் செம்மிய மிகைக் கனா – பரிமித்தா

தானை காண் படலம் கிட்கிந்தைப் படலத்தின் தொடர்ச்சியாகும். கிட்கிந்தை படலத்தில் இலட்சுமணன் சுக்ரீவனைக் காண கிட்கிந்தைச் செல்கிறான். இலட்சுமணன் சுக்ரீவனிடம் கார்காலத்திற்குள் வந்து சேர வேண்டிய சேனையைப் பற்றி கேட்டு, அவனை இராமனிடம் அழைத்து வருகிறான். சுக்ரீவன் இராமனிடம் சேனைகள் ‘இன்று, நாளை’க்குள் அனுமனுடன் வந்துவிடும் என பதிலக்கிறான். இவ்வாறாக தானை காண் படலம் தொடங்குகிறது.

ராமன் தானைத் தலைவர்களை சந்தித்தல், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

தானை காண் படலம் என்றால், சுக்ரீவன் இராமலக்குவரிடம் ‘சேனையை காட்டும்‘ படலம் எனப் பொதுவாக பொருள்கொள்ளலாம்.

கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன் சொல்லியபடியே அலரி பொலிவுறாத முன் சேனைகள் வந்தடைந்தன. முதல் காட்சியில் சுக்ரீவனது அறுபத்து ஏழாயிரம் கோடி படைதலைவர்களுள் சிலரை அவர்தம் படைகளுடன் கம்பர் விவரிக்கிறார். அதில் – சதவலி, சுசேடணன், தாரன், கேசரி, தூமிரன், அருக்கண், பனசன், நீலன், தரீமுகன், அக்கயன், சாம்பன், துன்முகன், கசகோமுகன், மயிந்தன், துமிந்தன், விசீபன், குமுதன், பதுமுகன், இடபன், பாதன், அனுமன், நளன், கும்பன் என்பவர்கள் வரிசையாக வருகின்றனர். இவர்களெல்லாம் பின்வரு கதையின் முக்கிய கதாமாந்தர்களாக இருக்கக்கூடுமென யூகிக்கமுடிகிறது. உதாரணத்திற்கு, நளன் வீசும் பொருள் ஒன்று கடலில் மிதக்கும் சாபம் பெற்றவனானதால், இலங்கைக்குக் கட்டும் கற்பாதைக்கு நளனின் பங்களிப்பு இருக்குமென ஊகிக்கலாம்.

அமர் சித்ர கதா

கம்பர் படைபலத்தை குறிக்க எண்ணையும் இயற்கையும் மிகுபுனைவுடன் கையாள்கிறார். எண்கள் பதினாராயிரம் கோடியில் ஆரம்பித்து, அறுபத்தேழு கோடி தொட்டு இராகவன் ஆவத்து அம்பு – இராமனின் அம்பறாத்தூணியின் முடிவுறா அம்பைக் கணக்குக் காட்டி முடிக்கிறார். கம்பர் உபயோகிக்கும் ஒவ்வொரு எண்களும் 700-800 ஆண்டுகள் கழித்து படிக்கும் நமக்குமே புதியதாகவும் கற்பனைக்கு அடங்காதவையாக உள்ளது.

பாடல்களில் படைகளின் வலிமையும் குணமும் இயற்கையுடன் ஒப்பிடப்படுகிறது. அதில், படைத்தலைவர்களின் குணத்தினை கூற தேன் தெரிந்து உண்டு தெளிவுறு [4409], கொடிய கூற்றையும் ஒப்பன [4415] எனவும், கோபங்கள் குறிக்க புனித வெம் சினம் [4414 & 4420 & 4421 & 4422] , சலம் வரின் [4413 & 4414] என்றும், மலையுடன்- மால் வரை மயிர் புறத்தன [4412]; கடலுடன்- பரவையின் திரை தாய் [4418], ஊழி பேரினும் உலைவில [4423]; வேகத்துடன்- காற்றினும் கூற்றினும் கடிய [4422], புழுதியுடன்- அண்டமும் புறமும் போர்க்கும் பூமியின் மறைதர [4425] என்று கோர்த்தெழுதுகிறார்.

இயற்கையையும் எண்களையும் தவிர்த்து தொன்ம கதைகளையும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்கிறார்.

இங்கு கம்பருக்கே சலிப்பும் வந்துவிடுகிறது போல் சில வர்ணனைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. முந்தைய படலத்திலும் பெண்களைப் பற்றிப் பேசுகையில் ஒரே விதமான வர்ணனைகளை மீண்டும் மீண்டும் எழுதுகிறாரெனும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடதக்கது. இப்படி அவருக்கே தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன், ஏனென்றால் கம்பர் உடனே அடுத்த காட்சிக்குச் செல்கிறார்.

படலத்தின் அடுத்த காட்சியில் வானர சேனைகளின் ஆற்றலும் சிறப்பும் பேசுப்பொருளாக வருகிறது. இதில் வானர சேனைகளின் திறமையை வர்ணிக்கிறார் கம்பர். ஆழி ஏர் எழும் நீர் சுவறி வெண்துகள் ஆம் [4429], கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா [4430] ஒடிக்குமேல், வட மேருவை வேரோடு ஒடிக்கும் [4431], ஊறும் இப்பெருஞ்ச் சேனை [4432].

ஆழி நீரும் வெம்புழுதித் துகளாகும், முக்கண்ணனும் படையை முழுக்க கண்டுவிட முடியாது, இமையத்தையும் ‘ஒடித்து’விடுவர், இன்னமும் சேனை ஊரும் என்று காட்சியை முடிக்கிறார். இதிலிருந்தே, கம்பர் இச்சேனையானது மிக வளமான, உச்சத்தின் உச்சத்தை, மிக கடினமான ஒன்றை சிறுபிள்ளை விளையாட்டைப் போல் கடந்து களைத்துச் செல்லும் வானரப்படை எனும் பிம்பத்தை அளித்துள்ளார்.  

வந்து சேர்ந்த படைத்தலைவர்கள் சுக்ரீவனை மலர் தூவி வணங்குகின்றனர். அலரி பொலிவுறாத முன் படைகள் வந்து சேர்ந்தன என்றே இப்படலம் ஆரம்பித்தது. சொல்லிய வண்ணம் செய்த சுக்கிரீவனை நோக்கி இராமர் ”நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெருஞ் சேனை” என வாழ்த்துகிறார்.

சுக்ரீவன் தனது வானர சேனையை தென் திசை எழுக என கட்டளையிடுகிறான். அவர்கள் கிளம்பிச் செல்லும் ஆரவாரம் எறி பாற் கடல் போல் ஆர்த்து உருத்து எழுந்தது. [4437]. சேனை கிளம்பிச் செல்வதால் எழுந்த புழுதி எட்டுத் திக்கையும், வட்ட விண்ணையும், கடல் அனைத்தையும் நிறைக்கும் புழுதியை அட்டிச் செம்மிய நிறை குடம் போல் [4438] என்கிறார் கம்பர்.

இராமன் சேனையின் வரவில் மலர்ந்து தளிர்ந்தான் [4435]. இதற்குப்பின், இராமன் சேனையை எப்படி எப்படி பார்க்கிறாரென கம்பர் விவரிக்கிறார். பத்து இரட்டி நண்பகல் இரவு [4439] எனும் வரியில் இருபது நாளாகியும் சேனையின் மையத்தையும் காணமுடியவில்லையாம். அதோடு, இராமன் கண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின் [4440] ஆற்றலைக்கொண்டும் [parameter] சேனையின் அளவை அளக்க முடியவில்லையாம்.

ஒருவழியாக, இராமர் இச்சேனை சாசுவத குணத்தை ஒத்தது, முடிவிலியாக ஊரும் தன்மையுடையது என அறிகிறார். இலட்சுமணைப் பார்த்து, கடல் கண்டோம் என்பவர் யாவரே முடிவு உறக் கண்டார் [4441], அதாவது, கடலை கண்டோம் எனக் கூறுபவர்கள், கடலை முழுக்க கண்டனரா? கடலின் மறு எல்லையைக் கண்டவர் யார் என கேட்கிறார். நீண்டுக்கொண்டே இருக்கும் சேனையை உபமேயமாகிய  ஐம்பெரும் பூதம், ஈசன் திருமேனி, சமயங்கள் பிணக்குறும் பிணக்கென சுக்ரீவனின் வானர சேனைக்கு எல்லையில்லை என்கிறார்.

இலட்சுமணன் சேனையை முழுக்க பார்த்தபின் காரியம் சாதிக்க நாள் பல பெயருமென்று என்று கூறுகிறான். சுக்ரீவனின் வானரச் சேனை தம்முடன் இருக்கும் சிறப்பை பாவம் தோற்றது, தருமமே வென்றது என இராமனிடம் கூறுகிறான். இனியும் சேனையை அனுப்பி சீதையை மீட்க தாமதிக்க கூடாதென அண்ணலை வேண்டுகிறான்.

அதைக் கேட்ட இராமன் ‘சுக்ரீவனிடம் இராமன் ஒன்று கூற’ என்று நிறுத்துகிறார். அவ்வாறாக படலம் நிறைவடைகிறது.

தானை காண் படலத்தில் உணர்வெழுச்சி மிக்க நாடகம் இல்லை, [முந்தைய படலத்தில் இலட்சுமணன் கல் தரையில் அமர்ந்து எச்சில் சாப்பாடு வேண்டாமென கூறும் காட்சி போல்], அறத்தை விசாரனை செய்யும் கேள்விகள் இல்லை. தனிபட்ட ரீதியாக, இப்படலத்தில் கம்பர் அவரது கற்பனை திறனையும் படைப்பாற்றலையும் களியாடுவதற்குக் ஒரு களமாகத் அமைத்திக்கொண்டார் எனத் தோன்றுகிறது. அதற்கான காரணம், ராஜாஜி எழுதிய இராமயணத்தில் இராமன் இலட்சுமணனை கிஷ்கிந்தைக்கு அனுப்பியதும், அங்கதன், தாரை, [இராமாயணத்தில் இலட்சுமனன் வாலி மைந்தன் அங்கதனைத்தான் முதலில் பார்க்கிறார். கம்பராமாயணத்தில் தாரையை முதலில் கம்பர் நிறுத்துகிறார்] அனுமனைப் பார்த்தது, சுக்ரீவன் படைகளுடன் வந்து சேர்ந்து, அவர்களை பல் திசைகளுக்கு அனுப்புவதும், சேனை ஒரு குகையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து மீளுவதின் மொத்த காட்சியையும் ‘வானரர்கள் தேடிச் சென்றனர்’ எனும் ஒரே தலைப்பின் கீழ் வந்தது. ஆனால், கம்பரோ அதை கிட்கிந்தை, தானை காண், நாட விட்ட, பிலம் புக்கு நீங்கு படலமென நான்கு படலங்களில் எழுதுகிறார்.

நமது வாசிப்பில் இப்படலத்தில் முழுக்கவே படைத்தலைவர்களின் குணாதிசயம், உடல், சேனையின் பெருக்கம் சிறப்பு என பலவகையில் இயற்கையுடனும் தொன்மங்களுடனும் தொடர்புபடுத்தி மிகுபுனைவுடன் கூறப்பட்டுள்ளது என்பதை கண்டோம். கம்பர் இராமாயணம் எழுதுவதற்கு தொன்மங்களை பிரம்மாண்டப்படுத்திக் காட்ட மிகுபுனைவு அவசியமாகிறது.

நமது அன்றாட வாழ்க்கையிலும் ஒன்றைப் பூதாகரமாக்கி சிறப்பிப்பதை / வசைபாடுவதை காணலாம். பண்பாட்டுச் சடங்குகளில் தாய்மாமன் கொடுக்கும் ஆயிரத்தொரு ரூபாய் சீரை ஆயிரம் கட்டி வராஹ என்றே கூறுவர். பொய் அல்லது காரணம் சொல்பவர்களை ‘எதுக்கெடுத்தாலும் ஆயிரத்தெட்டு காரணம்’ என திட்டுவதுண்டு. ‘ஏழு ஜென்மத்துக்கும்..’ என்று ஆரம்பிப்பவர்கள் உண்டு.  

நன்றி, தி வீக்

படைகளுடன் சம்மந்திருப்பதால் ஒர் ஒப்பிடுதலுக்கு போரும் அமைதியும் நாவலை முன்வைக்கிறேன். கம்பராமாயணத்தைப் போரும் அமைதியுடன் ஒப்பிடுதல் சரியா எனக் கேட்டால், அது மிகத் தவறாகும். கம்பராமாயணம் செவ்வியல் படைப்பு, மிகுபுனைவைச் சார்ந்தது. போரும் அமைதியும் நாவல் வரலாற்று புனைவின் செவ்வியல் படைப்பு; நிதர்சன அழகியலும் கொண்டது. உலகத்தின் மிகப்பெரிய படைக்கொண்டவர் நெப்போலியன் எனப்படுகிறார். கதையில் பிரஞ்சிலிருந்து நெப்போலியன் ருசியாவிற்கு 600,000 படைவீர்களுடன் படையெடுக்கிறார் என்றுதான் டால்ஸ்டோய் ஆரம்பிக்கிறார். இடையிடையே படைவீர்ரகள் 15மையில்கள், 20மையில்கள் நடந்தனர் என்று நம்பக்கூடிய தகவல்கள்தாம் வருகின்றது.

எனவே கம்பரின் மிகுபுனைவு தொன்மங்களுக்குப் பொருந்தும், நிதர்சனத்துக்கு பொருந்தாது எனத் தொன்றுகிறது. ஒருவேளை கம்பர் நமக்குப் புரியும்படியான, கற்பனைக்குள் அடங்கும் எண்களை எழுதியிருந்தால், இவ்வளவுதானா? இதை விட பெரியதாய்… என ஆரம்பித்திருப்போம். ஒரு படைப்பின் இலக்கிய வகைமையை அறிந்து அதற்குரிய எழுத்து வடிவத்தை உபயோகிப்பதில் இருவரின் ஆற்றலை காண்கிறோம்.

அல்ப்ரெக்ட் அல்ட்டோர்ஃபர் வரைந்த இஸ்ஸஸ் சண்டை – அலெக்சாண்டர் (பொ யு 333 –

அப்படியானால் கம்பராமாயணத்தையும் வெண்முரசையுமே ஒப்பிட்டு பார்க்க இயலும். மீண்டும் ஓர் ஒப்பிடுலுக்காக வெண்முரசின் செந்நாவேங்கை நாவலில் வரும் ஓர் அத்தியாயத்தை முன்வைக்கிறேன். பாண்டவ கௌரவர்களின் படைகள் திரண்டு வந்துவிட்டன. அதை சஞ்சயன் பார்த்து திருதராஷ்டிரரிடம் ஒப்புவிப்பதாக அத்தியாயம் தொடங்குகிறது. முழு அத்தியாயத்தை வாசித்தபின், ஜெ மிகுபுனைவுக்கு மிக தொலைவில் எழுதியிருக்கிறார் எனத் தோன்றியது.

கம்பரிடமிருந்து ஜெ முற்றிலும் வேறான வாசிப்பனுபவத்தை அளிக்கிறார். நுண்வடிவங்களின் காட்சிச்சித்தரிப்பே அதை பிரமாண்டமாக்குகிறது எனத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, கம்பர் பல இடங்களில் வானரச்சேனைகள் கொடி பிடித்து வந்த காட்சியை சொல்கிறார். ஆனால் என்ன கொடி யாரின் கொடி என்ற எத்த தகவலும் இல்லை. செந்நாவேங்கையில் ஒவ்வொருவருக்கும் அவர் திரட்டிக்கொண்டு வரும் படைக்கு ஒரு கொடியுள்ளது. குறிப்பிட்ட ஒர் அத்தியாயத்தில் மட்டும் நாற்பது கொடிகளுக்கு மேல்.

இயற்கை காட்சிகளைக் கொண்டு ஓரிடத்தில் மட்டுமே வருகிறது. படைகள் இரும்பு தலைகவசம் அணிந்துள்ளனர். மேலிருந்து பார்க்கும் சஞ்சயனுக்கு அவை பெரும் நுரைபடலமாகத் தெரிகிறது. அதற்கு திருதராஷ்டிரர் இரும்பு நுரைப்படலமென காட்சிப்படுத்துகிறார். கம்பர் பல முறை வானர சேனையின் படையெடுப்பும், வலிமையும் , ஆரவாரமும் கடலை ஒத்திருப்பதாக எழுதியுள்ளார்.

செந்நாவேங்கை அத்தியாயத்தின் நுண்சித்தரிப்புகளின் எனக்கு மிகப் பிடித்தமானது, ‘தன்னைவிட இருமடங்கு பெரிய நிலைவில்லை இடக்கால் கட்டைவிரலுக்கும் நெடுவிரலுக்கும் நடுவே ஊன்றி இடையில் கையூன்றி களத்தை கூர்ந்து நோக்கியபடி பீஷ்மர் நின்றுள்ளார்’ எனும் காட்சி. கம்பர் பெரு எண்களுடன் இயற்கை வர்ணனையுடன் சொல்லும் காட்சியல்லாமல், இங்கு பீஷ்மரின் திடமும் வலிமையும் மிக மெலிதாக வருகிறது. எனவே, தான் மிகு புனைவாகவே இருந்தாலும் வேறு வாசிப்பை அளிக்கிறது.

எண்களிலும் ‘ஆயிரத்தவர்’ எனத் தாண்டவில்லை. ஒவ்வொரு ஆயிரத்தவர் குழு என்று வருகிறது. அப்படிபார்த்தால், நுண்சித்திரப்புகளால் ஒன்றை மிகைப்படுத்திக் கூறும் புதிய வாசிப்பை வெண்முரசு அளிக்கின்றதா எனும் கேள்வி வரும். கம்பராமாயணத்திலிருந்து முற்றிலும் வேறு விதமான வாசிப்பு இது.

கம்பர் புலவர் என்பதால், தேர்ந்தெடுத்த சொற்களால் மட்டுமே விவரிக்க முயல்கிறார் போலும். வெண்முரசு முழுக்கவே நவீன உரைநடையில் இருப்பதால், அதிலிருக்கும் சுதந்திரம் கம்பனுக்கு இல்லையென தோன்றுகிறது. இதைப் பற்றி நண்பர்கள் பிறகு  விவாதிக்கலாம்.

செந்நாவேங்கை – அத்தியாயம் 75



Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading