போரும் அறமும் – முத்து

‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக்  கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில்  உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன்.

சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன். அவன் ராமன் வில்லுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்று சுத்தமான க்ஷத்ரிய தர்மம் பேசுகிறாள் சீதை. பஞ்சு ஒக்கும் அடிகள்;  செய்ய பவளத்தின் விரல்கள்’ கொண்டவள்தான் சீதை. ஆனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்க்க தீயென பொங்குகிறாள்.

ஓவியம் – ஷங்கர்

மேலும் ‘என் சொல்லால் இந்த நாயை எரித்திருப்பேன். ஆனால் உலகம் ராமன் காப்பாற்ற வரவில்லை அதனால் சீதையே தன்னைக் காப்பாற்றிக்கொண்டாள் என்ற அவச்சொல் ஏற்படும் ராமனுக்கு. எனவே ராமன்    வந்து போரில் வென்று எனை அழைத்துசெல்லட்டும். அதுதான் முறை’ என்று நிறுத்தி நிதானமாக சொல்கிறாள். பார்வையை வானத்தில் நிறுத்துகிறாள்,

“எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்

சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்”

இந்த இடத்தில் ராமன் என்ற வார்த்தையை சீதை தவிர்த்து, தூயவனுக்கு மாசு என்றும் சொல்லாமல், அவன் வில்லிற்கு மாசு என்று கூட சொல்லாமல் மாறாக ஆற்றலிற்கு மாசு என்று கூறுகிறாள்.

சீதை பேசுவதை கண்களில் கண்ணீருடனும், மனதில் பெருமையுடனும் கேட்டுக்கொண்டிருந்த அனுமன் ‘அப்படியே ஆகட்டும் தாயே’ என்று கண்ணீருக்கிடையில் விழிகளால் பேசுகிறான். பொதுவாக விழிகள் பேசும்போது வார்த்தைகளை விட வலிமை மிக்கதாக இருக்கும். அதே விழிகளின் வார்த்தை கண்ணீரில் கரைந்து வந்தால் அதன் வலிமைக்கு நிகர் எதுவுமில்லை. சீதையும் அனுமனும் விழிகளில் இருந்து துளிகள் விழ ஒருவருக்கொருவர் தாயும் மகனுமாக பேசிக்கொண்டிருந்தனர்.

‘சரி தாயே, அப்படியே ஆகட்டும். ராமனுக்கு நீங்கள் ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா?’ – அனுமன்

“மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம்

அருளுவாய்’ என்று, அடியின் இறைஞ்சினான்”

என்ன சொல்வாள் ஜானகி! ராமனுக்கு என்ன சேதி சொல்ல வேண்டும்? ஒரே ஒரு செய்தி மட்டுமே இருக்கிறது அவளிடம்.

‘சனகி இலங்கைச் சிறையில் தனது உயிரை தானே தின்று மனதில் ராமாமிர்த சீதனம் செய்து கொண்டிருக்கிறாள்’ என்று மட்டும் சொல் ராமனிடம்.

அனுமன் விக்கித்துப் போகிறான். சீதை ஒரு பெருமூச்சு  விட்டு விட்டு உறுதியாக சொல்கிறாள்.  ‘இன்னும் ஒரு மாதம் உயிரோடிருப்பேன். ராமன் வரவில்லையென்றால் என் உயிர் மாய்ப்பேன் நான். இதையும்  சொல் ராமனிடம்’

“இன்னும், ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;

நின்னை நோக்கிப் பகர்ந்தது, நீதியோய்!

பின்னை ஆவி பிடிக்ககிலேன்; அந்த

மன்னன் ஆணை; இதனை மனக் கொள் நீ.”

அனுமன் இறுக்கமான மனத்துடன் தீர்க்கமாக சொல்கிறான். ‘இன்னும் எட்டுநாளையிலே பாரும் அம்மா ராவணன் பேரும் இவன் ஊரும்’ என்று திடமாக நம்பி, சீதைக்கு நம்பிக்கை ஊட்டுகிறான், இன்னும் நடக்கப்போவதை அவள் முன்னே காட்டுகிறான்.

அதன்பின் சீதை தன் கசங்கிய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூளாமணியைக்  கொடுத்து ‘எப்பொழுதெல்லாம் ராமனின் நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சூளாமணியைப் பார்த்து ஆறுதல் அடைவேன். நீ என்னைப் பார்த்ததற்கான அடையாளமாக இதைக் கொண்டு செல்’ என்று சொல்கிறாள்.

ஹம்பி ஹசார ராமா கோவில், படம் – சித்ரா மாதவன்

அனுமன் அதை தொழுது வாங்கினன். செல்கிறான்.

*

அங்கதன் மூலம் விடுத்த ‘தேவியை விடு, இல்லை உன் ஆவியை விடு’ என்ற எச்சரிக்கையை ராவணன் நிராகரிக்க, ‘ராவணன் போரிட்டு வீழ்த்தப்பட வேண்டியவன்’ என்று ராமனிடம் அங்கதன்  “பூசலே; பிறிது இல்லை” சொல்ல வேறு வழியில்லாமல் போர் துவங்கியது.

ராமனின் சமாதான முயற்சிகள் இதுவரை எல்லாம் தட்டிக் கழிக்கப்பட்டன ராவணனால். போரின் போதும் கூட ராவணனை வீழ்த்தி, ‘போதும் நிறுத்திக்கொள்’ என்று திருந்த, போரை நிறுத்த, சந்தர்ப்பம் கொடுக்கிறான். ராவணன் கேட்கவில்லை.

கடலில் அணை கட்டி வந்த வானரசேனை ராவணனின் மாளிகையில் சுற்றி இருக்கும் அகழியை தூர்த்துப் போகச் செய்கின்றன. பின்னர் நான்கு வாயில்களிலும் நான்கு பிரிவுகள் சுற்றி வளைக்கின்றன. ராவணனின் நால்வகை சேனைகளும் போரிட எழுந்தன.

அரக்க குணம் படைத்தவர் அழியவும், நல்லவர்கள் வாழவும் நடக்கும் போர். அறத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் யுத்தம். எல்லோரையும் அரவணைக்கும் ராமனுக்கும், அஹங்காரம் பிடித்த ராவணனுக்கும் நடக்கும் தர்மயுத்தம். “அரக்கர் தொல் குலம் வேர் அற, அல்லவர் வருக்கம் யாவையும் வாழ்வுற நடக்கும் போர்.

முதல் சுற்றில் ராவணசேனையின் கை ஓங்கியிருக்கிறது. “நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால், குரக்கு இனப் பெருந்தானை குலைந்து” போனது. கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட வானரசேனை திருப்பி தாக்கத்தொடங்கியவுடன் அரக்கர் படை கொஞ்சம் கதி கலங்கிப் போனது. நான்கு வாயில்களிலும் வானரசேனை தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவிக்கிறது. ராவணனுக்கு செய்தி போகிறது. நம் படை பின் வாங்குகிறது என்ற செய்தி தீயாய் சுடுகிறது ராவணனை. இனி நாமே போரில் நேரடியாக இறங்க வேண்டியதுதான் என்று, சினம் கொப்பளிக்க தேரில் ஏறுகிறான். ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேர், ராவணன் தேர் ஏறும்பொழுது எழுந்த ஆரவாரம் பெருங்கடல் அலைகள் எழுப்பிய சத்தம் போல இருந்தது. “ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல் மா இருங் கடல் போன்றது.”

ராவணனின் வீணைக்கொடி விண்ணில் பறக்க போருக்கு கிளம்பி களத்தில் தோன்றுகிறான். ராவணன் சுக்ரீவனுடனும், அனுமனுடனும் போரிட்டு அவர்களை நலியச்செய்தான். அதன் பின் லக்ஷ்மணனும். விஷயம் ராமனுக்கு தெரிவிக்கப்பட, ராமன், அவனை அழித்து சீதையை மீட்பேன் என்று தோள்கள் புடைக்க போருக்கு தயாராகிறான். இனி ராமன் ராவணனுடன் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலை.

*

ராமன் போரிடும் நேரம் இது. கானகம் புகுந்து, சூர்ப்பணகையை சமாளித்து, சீதையைப்  பிரிந்து,  ஜடாயுவை இழந்து  எங்கெங்கோ திரிந்து, கடல் கடந்து, போரைத் தவிர்க்க தூதுவிட்டு, இப்பொழுது லக்ஷ்மணன் அங்கதன்  அனுமன் என்று எல்லோரும் நலிந்து போக, எத்தனையோ துன்பங்கள் கடந்து வந்த  ராமன், நேருக்கு நேராக ராவணனுடன் போரிடப் போகிறான். முதல் முதலில் நேருக்கு நேராக.

‘தேவர்களை வதைத்ததற்கும், தன்னிடம் இருந்து சீதையைப் பிரித்ததற்கும் ராவணன் பதில் சொல்லியே ஆக வேண்டும். மீட்பேன் சீதையை’ என்று மனதில் உறுதி கொண்டு ராமன் களம் இறங்குகிறான்.

“வாங்கினென், சீதையை’ என்னும் வன்மையால்,

தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற

வீங்கின, இராகவன் வீரத் தோள்களே”

எப்படி வருகிறான் ராமன்? கால்களில் கழல் கட்டி, மார்பில் கவசம் இட்டு, முன்கையிலும் விரல்களிலும்  உரை அணிந்து, அம்புகளைத் தாங்கும் அம்பறாத்துணியை தோளில் கட்டி, தும்பை மாலை சூடி, வில்லையேந்தி வந்து நிற்கிறான் ராமன். மண்ணுலகத்தாரும், விண்ணில் இருக்கும் தேவரும் மலர்கள் சொரிய ராமன் போர்க்களத்தில் வந்து நின்றான்.

வில்லேந்திய ராமன், 19 ஆம் நூற்றாண்டு தென்னிந்திய ஓவியம், நன்றி – பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

“நாற் கடல் உலகமும், விசும்பும், நாள்மலர்

தூர்க்க, வெஞ் சேனையும் தானும் தோன்றினான்”

கண்களில் தீப்பொறி தெறிக்க, ஊழிக்காலத்து ருத்திரனைப்போல வந்து நிற்கிறான் ராவணன் முன். ராமனின் தோற்றம் எப்படி இருந்ததாம்? “ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு, தான் ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என” இருந்ததாம். இருக்காதா பின்ன? உலகத்தலைமை கொண்ட ஒற்றைத்தலை ராமன் பத்துத்தலை ராவணனுடன் போரிடவேண்டும். மனதில் எவ்வளவு வீரம் இருக்கவேண்டும்!

ராமனும் ராவணனும் ஒருவருக்கொருவர் எதிர் எதிரே!ராமன் தன்  வில்லின் நாணில் ஒலி செய்கிறான். அந்த ஒலி கேட்டு இலங்கை அதிர்கிறது. நிலை தடுமாறுகிறது அரக்கர் படை. தீமையை மாய்க்க ஒரு முன்னோட்டம் இதுவென்று ராமன் சொல்லாமல் சொல்கிறான். முதல் அம்பை ராவணன் தான் தொடுக்கிறான்.  No first use எனும் உத்தியை முதன்முதலில் உபயோகம் செய்தது ராமன் தான். ராவணன் தொடுத்த அம்பைத், தன் வில்லில் இருந்து விடுத்த அம்பினால் தடுத்து அறுத்து எறிகிறான் ராமன்.

பின்னர்,வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன்,  தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலை குலையச் செய்கிறான் ராமன். 

ஒரே அம்பு! முதல்முறையாக  ஒரு பெரும் வீரனுடன் மோதுகிறோம் என்று உணர்த்துகிறது ராவணனுக்கு. “தன் வில்லை குறி வைத்து நொறுக்குகிறான், தன் தேர்க் குதிரைகளை நிலை குலையச் செய்கிறான். யாரடா இவன்” என்று மனதால் ஒரு தாழ்வு நிலை பெறுகிறான். ராவணனின் மற்ற ஆயுதங்கள், அவனின் தேர் முதலிய எல்லாமே அற்றுப்போகச் செய்கிறான் புனிதன், வீரன், ராமன்.

ராமனின் வீரத்தால், எல்லாம் அற்றுப்போய், தலையில் இருக்கும் மகுடம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது ராவணனுக்கு. இப்படி ஒரு வீரத்  தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. சீதாராமன் இப்பேர்ப்பட்ட வீரனாகத்தான் இருக்க வேண்டும்  என்று கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் ராவணன். செய்யவில்லை. இப்பொழுது வெறும் மணி முடி மட்டும் தரித்து வில்லாளன் ராமன் முன் நிற்கிறான்.

ராமனிடமோ, கம்பன் கவிதையைப்போல, எண்ணற்ற விற்கள் இருக்கிறது. ராவணன் நிராயுதபாணி.  infinity  vs  zero இப்பொழுது. ராமன் முடித்திருக்கலாம், ராவணனை அந்த ஒரு நொடியில்! ஆனால் ராமன் ராவணனின் செருக்கை மட்டுமே முதலில் அழிக்க நினைத்தான். இன்னுமொரு சந்தர்ப்பம் ராவணனுக்கு கொடுக்க நினைக்கிறான் ராமன். அவன் மார்பில் கணை விடுத்திருந்தால் அங்கேயே அவன் கதை முடிந்திருக்கும். ஆனால் ராமன், வில்லை  ஏற்றி  ராவணனின் மார்புக்கு குறி வைக்காமல் அவன் மகுடத்தின் மீது குறி வைக்கிறான். அவன் தலையில் மின்னும்  பல் மணி மவுலிமேல் ஒரு கணை விட்டான். அது ராவணனின் மகுடத்தை சாய்க்கிறது. தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பில் திரிந்த ராவணனின் மகுடம் ராமனால் வீழ்த்தப்பட்டது. மண்ணில் விழுகிறது ராவணனின் மகுடம், அவனுடைய செருக்குடன் சேர்ந்து.

இமைப்பொழுதில் எல்லாத்தையும் சாய்த்த ராமனின் கண்களை நேரிட்டுப் பார்க்க வெட்கப்பட்டு கண்களைத் தாழ்த்தி, முகத்தில் ஒளி குன்றி, வெட்கத்தால் கால் விரலால் நிலத்தைக்கீறி (அட! இது ராவணன் ஆரம்பித்து வைத்ததா?), ஆலமரம் விழுதுகளை தொங்கப் போட்டுக்கொண்டு இருப்பதைப் போல நின்றான் மணி மகுடம் இழந்த ராவணன்.

“நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்-

இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன்,

வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன்”

இறங்கு கண்ணினன்  (கண்கள் தாழ்த்தியதால்) என்ன ஒரு வார்த்தை விளையாட்டு! ‘இறங்கு கண்ணினன்’ ராவணனிடம் ராமன் தீர்க்கமாக மெதுவாக  நடந்து வந்து  “சிறு தொழில் கீழோய், அவ்வளவுதானா உன் வீரம்? போ, உன் அரண்மனைக்குப் போய் இன்னும் ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வா. சண்டை போடலாம்” என்று அவன் செருக்கை இன்னும் சிதைக்கிறான்.

“உன் தலையை இன்னும் நீக்காமல் இருக்கிறேன். இன்னொரு சந்தர்ப்பம் தருகிறேன். சீதையை விடு. விபீஷணனை இலங்கையின் அரசனாக்கு. உன் உயிர் மிஞ்சும்” என்று, கண்கள் தாழ்ந்திருந்ததால் ராவணனின்  நெற்றியைப் பார்த்து சொல்கிறான்.

சிறையில் வைத்தவள் தன்னை விட்டு, உலகினில் தேவர்

முறையில் வைத்து, நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்

இறையில் வைத்து, அவற்கு ஏவல் செய்து இருத்தியேல்

உன் தலை மிஞ்சும் என்பது எச்சரிக்கை. “இல்லை நான் சண்டைதான் போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தால், உன் உயிர் மிஞ்சாது.” என்று அவன் தாடையை உயர்த்தி சொல்வது போல ராமன் வீரம் காட்டுகிறான். “ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். உன் ஆயுதங்கள் எல்லாம் பூளைப்பூக்கள் போல பறந்து போனது நினைவிருக்கட்டும். போ. வீட்டுக்கு போ. உனக்கு மனதில் இன்னும் உறுதி இருந்தால் நாளைக்கு வா. போரிடலாம்” என்று மிரட்டி அனுப்பி வைக்கிறான் ராமன்.

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா

*

“ராமன் தன் மகுடத்தை மட்டும் சாய்க்கவில்லை, தன் வீரத்தையும் பெருமையுயும் சாய்த்துவிட்டான்” என்று நொந்து போகிறான் ராவணன். பெருங்குரலெடுத்து வந்தவன் இப்பொழுது வெறுங்கையுடன் திரும்பிப் போகிறான்

“தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.”

நடந்து செல்லும்பொழுது பல சிந்தனைகள் அவன் மனதில் வந்து போகிறது. அதில் முக்கியமான ஒன்று “சீதை இதைக்கேட்டு சிரிப்பாள். நான் பெரிய வீரன் என்று வீர வசனம் பேசியதையெல்லாம் சொல்லிக் காட்டி சிரிப்பாளே. ஆரென்று  என் ராமனை நினைத்தாய். அவன் சுண்டு விரல் போதாதா, உனை தவிடு பொடியாக்க? என்று கேள்வி கேட்டு கேலி செய்வாளே! என்ன செய்வது”

“சானகி நகுவள்-என்றே நாணத்தால் சாம்புகின்றான்.”

ராவணன் அரண்மனை திரும்பினான். ஆனால் திருந்தவில்லை. மேலும் படைகளையும் திரட்டி மீண்டும் போருக்கு போகத்துணிகிறான். கும்பகருணன் வந்து சீதையை விட்டு விடு என்று அறிவுரை சொல்கிறான்.

“தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின்

ஐயறு தம்பியோடு அளவளாவுதல் உய் திறம்”

ராவணன் கேட்கவில்லை. கும்பகருணன் போர்க்களம் செல்கிறான், வேறு வழியில்லாமல் ராவணனுக்காக போரிட. போர்க்களத்தில் கும்பகருணனை, சகோதரன் விபீஷணன்  சந்திக்கிறான். விபீஷணன் கும்பகருணன் முன் சென்று நிலத்தில் விழுந்து வணங்குகிறான். இருவரும் ஒருவருக்கொருவர் தழுவிக்  கொள்கின்றனர். கும்பகருணன், விபீஷணன் ராமனை அடைந்ததில்,  பெருமையும் சந்தோஷமும் கொள்கிறான். நஞ்சை விடுத்து அமுதை தேர்ந்தெடுத்ததற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறான்.

விபீஷணன், கும்பகருணனையும் ராமனோடு சேர்ந்து விடு என்று வலியுறுத்துகிறான். தீமை செய்பவர் உற்ற சொந்தமே ஆனாலும், தாய், தந்தை, உடன் பிறந்தோர் என்றாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான் அறம் என்று ஒரு கீதோபதேசம் செய்கிறான்.

“தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,

தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?”

தர்மத்தின் பக்கம் வா என்று விபீஷணன் கூற, கும்பகருணனோ,  ‘அண்ணன் ராவணன் மூவுலகையும் ஆண்டவன். நானும் உன் பக்கம் வந்துவிட்டால் அவன் உறவினர் யாரும் இல்லாமல் அனாதையாக இறக்க நேரிடும். அவனை அனாதையாக இறக்க விட மாட்டேன். என் உயிர் போகும் வரை, ராவணன் தீயவனே ஆனாலும், அவனுடனேயே இருப்பேன்’ என்றான். 

வாயில் வார்த்தைகளும் கண்களில்  கண்ணீரும் ஒரே நேரத்தில் வருகிறது கும்பகருணனுக்கு.

“உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,

தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல்?”

இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. முடிவது நன்றாக முடியட்டும் என்று பிரிகின்றனர். அதன் பின் நடந்த போரில் கும்பகருணன் மாண்டான். தம்பி இறந்தது தெரியாமல்  அங்கே ராவணன் சீதையிடம்  என் காம வெந்நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறான்.

அதன்பின் இந்திரஜித்தும் போரிட்டு, அங்கிருந்து தப்பித்து ராவணனிடம் வந்து ‘ராமனின் சேனை மிகவும் பலம் வாய்ந்தது. உன் மேல் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். நீ சீதையை விட்டுவிட்டால் அவர்களின் கோபம் தணியும். உன் தீமை பொறுப்பர்’ என்று சொல்லி முடிக்கும் முன் ராவணன் கோபத்தோடு வெறுத்து பேசுகிறான். சரி, உனக்காக மீண்டும் போய் போரிடுகிறேன் என்று களத்துக்குச்  சென்று அங்கே லக்ஷ்மணன் கையால் மாண்டு போகிறான் இந்திரஜித்.

விஷயம் அறிந்த ராமன் ‘தம்பியுடையான் பகையஞ்சான்’ என்ற சொல்லை நிரூபித்து விட்டாய் என்று லக்ஷ்மணனைப் பாராட்டி  புகழுரைக்கிறான். ராவணனோ தன் பேராசையினால் தான் ஈன்ற மகனையும் இழந்து நிற்கிறான் இப்பொழுது. இதற்கு காரணம் தன் பேராசை என்ற எண்ணம் இல்லாமல் இதற்கெல்லாம் சீதைதான் காரணம் என்று சொல்லி சீதா தேவியை வாளால் வெட்டி சாய்க்க கிளம்புகிறான்.

“வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால்

கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன், அரக்கர் கோமான்”

மற்றவரெல்லாம் இது தகாது என்று தடுத்து நிறுத்தினர். இனி எல்லா படை வீரர்களையும் அழைத்து இறுதிப்போர் செய்யும் நேரம் வந்துவிட்டது என்று எண்ணி சேனைகளை எல்லாம் ராமனை நோக்கி அனுப்புகிறான். ராமனையும் லக்ஷ்மணனையும்  தீர்த்துக் கட்டுங்கள் (நீயிர் போய், ஒருங்கே ஆன மற்றவர் இருவரைக் கோறீர்) என்று என்று ஆணையிட, படை ராமன் இருக்குமிடம் பறக்கிறது.

படை வருவதைப்பார்த்த லக்ஷ்மணன் ‘ராமா, இந்த உலகத்தில் உள்ள எல்லா அரக்கர் என்று அழைக்கப்பட்டவர் எல்லாம் இதோ ஒரே பொறியில் வந்து மாட்டப்போகிறார்கள். அவர்களை வீழ்த்தும் நேரம் வந்துவிட்டது. தயாராகு’ என்று சொல்ல, கவசம் அணிந்து, அம்புப் புட்டிலையும் தோளில் தாங்கிக்கொண்டு ராமன் இறுதிப்போருக்கு தயாராகிறான் ஸ்ரீ ராமன்.

“…கருணை அம் கடலே அன்ன

எல் ஒளி மார்பில் வீரக் கவசம் இட்டு, இழையா வேதச்

சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி”

இறுதிப்போர் துவங்கியது, பாவத்து அனைவரும் தோற்க, அண்ணல் வெற்றி வாகை சூட”.

*

“விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்” என்று தேவர்களும் நல்லோர்களும் வாழ்த்த ராமன் தேர் ஏறினான். “மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம், இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று” என்று ராமன் மனதில் உறுதியுடன் கிளம்புகிறான். மாதலி ராமனின் தேர் ஓட்டி.

ராவணன், எதிர்பக்கத்தில் இருந்து போருக்கு தயாராகிறான். மனதுக்குள் அவன் செய்த சபதம்

“மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு

கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்”

‘ஜானகி இந்தப்போரின் இறுதியில் வருத்தப்பட்டு தன் வயிற்றில் அடித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மண்டோதரி அதைச் செய்வாள். இரண்டில் ஒன்று இன்று நடக்கும்’ என்று தன் அழிவை நோக்கி தேரில் செல்கிறான்.

ராவணன் உணர்ச்சிமிகுந்து, ராமன் மீது தேரை விடு (பெருந் திண் தேரை, மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி) என்றான். ராமனோ நிதானமாக, தன் சாரதி மாதலியிடம் ‘அவசரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ தேரை ஓட்ட வேண்டாம். என் சொல் கேட்டு செய்தால் போதும்’ (‘என் தன் சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை’).

ராவணனை தனிமைப்படுத்த வேண்டும், அதற்கு அவன் சேனைகளை முடிக்க வேண்டும் என்ற போர் தந்திரம் கொண்டவனாய் ராமன் ராவண சேனைகளை முதலில் தாக்குகிறான். ராவணனுக்கு சில அபசகுனம் தென்பட அதைப் பொருட்படுத்தாமல், என்னை ஒரு மனிதன் வெல்ல முடியுமா (ஆற்றுமோ, என்னை வெல்ல, மனித்தன்?) என்ற இறுமாப்புடன் வெறி கொண்டு திரிந்தான். ராமன் முன் தோன்றினான்.

ராமனும் ராவணனும் இப்பொழுது ஒருவருக்கொருவர் எதிர் எதிரே. பகலும் இரவும் போல, ஞானமும் அறியாமையும் போல  ராமனும் ராவணனும், முற்றிலும் எதிர்ப்பதமான குணம் கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் எதிரே இப்பொழுது. எத்தனை முறை மன்னித்து விட்டும், சமாதானம் வேண்டி தூது விடுத்தும்,  அவை அனைத்தையும் அலட்சியப்படுத்தி திமிருடன் திரிந்த ராவணன் இப்பொழுது ராமன் முன்னே நிற்கிறான்.

தன்னுடைய அத்தனை துயரத்திற்கும் காரணமான, தீய கருவை, கடைசிமுறையாக கண் கொண்டு பார்க்கிறான் ராமன். ராமன் கண்களில் அனல் பறக்கிறது.  அவர்கள் இருவரும் நின்றது (நரசிங்கமும் ஆடகக் குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார்) நரசிம்மமும் ஹிரணியனும் எதிர் எதிரே நின்றது போல இருந்தது. ராவணன் சங்கை ஊதுகிறான் முதலில்.

“அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்

உண்ட சங்கம் இராவணன் ஊதினான்”

ராமன் பக்கத்திலிருந்து மாதலி சங்கை ஊதுகிறான், அண்டம் நடுங்க.

“அண்டம் குலுங்க, குலம் கொள் தார்

வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். “

ராவணன் கண்களில் கோபம் கொப்பளிக்கிறது. அதைக் கண்ட ராமன் ஒரு அலட்சிய சிரிப்பு சிரிக்கிறான். கோபம் vs நிதானம். பதட்டம் vs பண்பு. ‘என் பெருமை மிக்க வில்லை ஒரு மானிடன் மீது ஏவினால் என் வில்லுக்கு இழுக்கு. உன் தேரை உதிர்த்து உன்னை உன் வில்லோடு சிறை பிடித்துப் போவேன்’ என்று வீர வசனம் பேசுகிறான்.

“தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற,

வடித்து வைத்தது  மானுடற்கே? 

ராமன் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு ‘முடிந்தால் செய்’ என்று கண்களாலேயே சொல்கிறான். வில்லோ சொல்லோ ராமன் வீணடிப்பதில்லை. இவ்வளவும் பேசிவிட்டு, மனம் பதைத்தவனான இராவணன் ராமன் மீதும் வானரர்கள் மீதும்   அம்பை பொழிகிறான். ராவணன் விடுத்த கணைகளையெல்லாம் ராமன் தடுத்து விடுகிறான்.

“நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான்,

ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்;”

போர் உக்கிரமாக நடக்கிறது. மாதலியின் மார்பில் 12 அம்புகளை விடுக்கிறான் ராவணன். அடுத்து ராமன் மீதும் அம்புகள் தொடுக்க ராமனின் உடல் முழுவதும் ராவணன் அம்புகள்.  அடிபட்டு போகிறான் ராமன். ராவணசேனை ஆர்ப்பரிக்க. தேவர்கள் ‘போச்சு. ராமன் தோற்றான் என்ற அச்சம் கொண்டனர்.

“தோற்றனனே இனி’ என்னும் தோற்றத்தால்

ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்”

நொடிப்பொழுதில் எழுந்து அம்புகளை அறுத்து எறிகிறான் ராமன். அடுத்து ராவணன் வீசும் கணைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறான். ராமனின் ஆற்றலைக் கண்டு இவன் கடவுளின் அம்சம் தானோ என்று திகைக்கிறான்.

“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்

அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;”

என் ராமன் எனை மீட்க  வரும் நாள் இலங்கை அழியும் உன் உயிருடன் சேர்த்து என்று சீதை எச்சரித்தது அவன் காதில் தாமதமாக  ஒலிக்கிறது.

ராமன் ராவணன் போர் – 18 ஆம் நூற்றாண்டு இறுதி, நன்றி – மெட் அருங்காட்சியகம்

*

தான் போரிட வேண்டியவன் ஒரு பெரிய அரக்கர் கூட்டத் தலைவன். எல்லா வகையான கட்டமைப்பும் கொண்டவன். அவனுடைய கோட்டையை காப்பவர்கள் வீராதி வீரர்கள், கொடியவர்கள். அவர்களிடம் எதையும் சாதிக்கும் வலிமை வாய்ந்த படை பலம் இருந்தது. நான்கு திசைகளிலும் வலிமை வாய்ந்த வீரர்கள் தங்கள் சேனையுடன் கோட்டையைக் காத்து வந்தனர்.

வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும்,

குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்,

அடக்க அரும் வலத்து ஐம்பது வெள்ளமும்,

இருந்தது அவர்களிடம். திசைக்கு ஒரு படையாக கண்காணித்து வந்தனர். போர்புரிய மிகப்பெரிய கட்டமைப்பு இருந்தது அவர்களிடம். அந்த மமதையில் அந்த அரக்கனோ, ‘என்னை எதிர்த்து வருவது ஒரு சிறிய படை. என்னை என்ன  செய்து விட முடியும் என்னை’ என்று இறுமாந்திருந்தான்.

வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின்

இனங்களும் பல என் செயும், அரியினை?

அரக்கனை எதிர்த்து சென்றவனிடம் என்ன கட்டமைப்பு இருந்தது? ஏதும் இல்லை. மனதில் உறுதி, தெய்வத்தின் துணை. அவ்வளவுதான். அவனுடன்  சேர்ந்தவர்களும் உன்னிடம் கட்டமைப்பு இல்லை, எப்படி போர் செய்து வெல்லப் போகிறாய் என்று பரிகாசம் செய்யவில்லை. சத்தியத்தை நோக்கி இடம் பெயர்ந்து வந்த விபீஷணன்,  ‘பிழைப்பரோ அரக்கர்’ இனி என்று நல்ல வார்த்தையே பேசினான்.

“தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின், செய்யும்

அருள் இது ஆயின், கெட்டேன்! பிழைப்பரோ அரக்கர் ஆனோர்?”

சேது பந்தனம் செய்ய வந்தவன் உன்னிடம் கட்டமைப்பு எதுவும் இல்லை என்று புலம்பவில்லை. ‘செறி திரைக் கடல் பந்தனை செய்குதல் பணி நமக்கு’ என்று சேதுவினை கட்டுவித்தான் அவன். தூது செல்லவேண்டும் நீ என்ற பொழுது வாலியின் மகன், ‘நம்மிடம் கட்டமைப்பு எதுவும் இல்லை. நான் எப்படி போவேன்’ என்று புலம்பவில்லை. வெயிலும் புகமுடியாத கட்டமைப்பு கொண்ட அரக்கனின் கோட்டைக்குள் புகுந்து அரக்கனை நேரில் சந்தித்தான் மாவீரன்.

“வெயில் கடந்திலாத காவல், மேருவின் மேலும் நீண்ட

எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான்”

இப்படி எந்த எந்த கட்டமைப்பும் இல்லாமல் சென்ற படை தான் அரக்கன் சேனையை சுற்றி வளைத்து துவம்சம் செய்தது.

“அலகு இலா அரக்கன் சேனை அகப்பட, அரியின் தானை,

வலைகொலாம் என்ன, சுற்றி வளைத்தது”

அரக்கனை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் முக்கியம். கட்டமைப்பு இல்லாமல் இருப்பது தேக்கம் அல்ல. அது துவக்கம். இப்படி இராமன் செய்யும் போர் வாயிலாக, நோக்கத்தையும் அதில் இருக்கும் அறத்தையும் கம்பன் உலகிற்கு உணர்த்துகிறான்



Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading