ஜெயமோகன் ‘எழுதும் கலை’ புத்தகத்தில் கதை எழுதுவது பற்றி சொல்கையில், எழுத்தாளன் கதையை சொல்லக்கூடாது, கண்ணில் காட்ட வேண்டும் என்பார். அப்படி கண்ணால் காட்டுவதன் உச்சமாகத்தான் நான் கம்பராமாயணத்தைப் பார்க்கிறேன்.
அதுவும் நிலக்காட்சிகளையும் ஊர்க்காட்சிகளையும் கம்பன் தன் வார்த்தைகளால் நம் மனதில் கட்டியெழுப்பும்போது ஏற்படும் அனுபவம் மிகவும் பரவசமூட்டுவது.
கம்பன் அயோத்தியைப் பற்றி கூறும்போது,
..அந்தரம் சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர், இது அலால் அதனுக்கு
இயம்பல் ஆம் ஏது மாற்று யாதோ.
சந்திரனும் சூரியனும் நாள்தோறும் கண் இமைக்காமல் வானிலே சுற்றி வரக் காரணம், இந்நகரை காண வேண்டும் என்பதற்காகத்தான்.
மாயோன் மார்பில் நல்மணிகள் வைத்த பொற்பெட்டியோஎன்ற வரிகள் அயோத்தியை பற்றிய வியப்பை ஏற்படுத்துகின்றன. அவர் ஊரைப்பற்றி சொல்லும்போது வண்ணமயமாக ஜொலிக்கும் ஒரு ஊர்தான் மனதில் வருகிறது. கொடைக்கானலில் ஜூவல் பாக்ஸ் என்று ஒரு இடம் இருக்கிறது. அது ஒரு மலையுச்சி, இரவில் அங்கிருந்து பார்த்தால் தேனி, பெரியகுளம் போன்ற ஊர்கள் வெளிச்சப் புள்ளிகளாக, ஒரு பெரிய அணிப்பெட்டி மாதிரி தெரியும். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அப்படி ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது இந்த வரிகள்.
திருமாலே (கடவுளே) அரசனாக அவதரித்து அளவில்லா காலம் அரசு புரிந்த நகரமாக இந்த அயோத்தி என்று சொல்லும்போது இதைவிட பெருமையும் சிறப்பும் உள்ள ஊர் எங்கே இருக்கப் போகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த அயோத்தி பக்கத்த்தில் இமயமலை போன்ற பெரிய மலைகள் இல்லாததால், அந்த நகரின் மதில் சுவரைப் பற்றி ஒப்பீடு சொல்ல முடியவில்லை. அயோத்தி மகளிரை விட வானுலக மகளிர் அழகுடையார்களா அல்லரோ? அதை அறிவதற்காகவே ஆகாயமளவு உயர்ந்துள்ளது.
..அயோத்தி மாநகரின் அழகுடைத்தோ என அறிவான்
இஞ்சி வான் ஓங்கி, இமயவர் உலகம் காணிய எழுகிறது ஒத்துள்ளதே.
அந்த மதிலுக்கு கீழே நின்று, மேகத்துக்குள் செல்லும் அதன் உச்சியை பார்க்க முனைவது போல பிரமிப்பு ஏற்படுகிறது.
..யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கு மிரவிதன் குலமுதல் நிருபர் சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செந் தனிக்கோலும் ஆணையும் காக்கும்..
புகழ் மிக்க சூரிய குல மன்னர்கள் எண் திசையையும் மேலுலகத்தையும் காக்க வல்லவர்கள். அதனால் மதில் என்பது அவ்வூரின் அழகுக்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அந்த மலை போன்ற மதிலை ஒட்டியே அகழி உள்ளது. வானில் தன் கூட்டத்துடன் செல்லும் மேகங்கள், நாகலோகம் வரை ஆழ்ந்துள்ள ஆழம் காண முடியாத அகழியை, கடல் என நினைத்து முகர்ந்து கொண்டு எழுகிறது. அம்மதிலை மலை என நினைத்து அதன் மீது நின்று மழையை பொழிந்தன.
ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆமெனா மேகம் மொண்டு கொண்டெழுந்து விண்தொடர்ந்த குன்றமென்று ஆகம் நொந்து நின்று தாரை அம்மதிற்கண் வீசுமே.
இதை படிக்கும்போது அகழியின் பிரம்மாண்டம் மனதுள் விரிகிறது.
அயோத்தி நகரின் செம்பொன் வேய்ந்த கோபுரங்களும் மாணிக்க கலசங்களும் பூமாதேவிக்கு மகுடம் சூட்டியது போல் உள்ளது என்பதில் உள்ள கற்பனை நயம் அற்புதமாக உள்ளது. கிரீடம் தாங்கி புன்னகைக்கும் அழகிய இளம் பெண்ணின் முகம் மனதில் எழுகின்றது.
பெரும்காற்று வீசும் நேரத்தில் கடலில் எழும் பிரம்மாண்டமான அலையானது ஒரு வெள்ளை மாளிகையாய் உறைந்து நிற்பது போன்ற ஒரு காட்சியை மனதில் ஏறுபடுத்துகிறது இந்த பாடல்,
திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை
வெங் கடும் கால்பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே.
காவியம் என்பது எல்லாப் பொருட்களையும் அதன் உச்சத்தில் வைத்து சொல்லும் வேண்டுமென்று ஜெயமோகன் சொன்னதாக ஞாபகம்.
மகளிர் தங்கள் கூந்தலுக்கு மணமூட்டுவதற்காக எழுப்பிய அகிற்புகையை கண்ட மேகங்கள் சென்று படிந்த கடலும் அந்த மணத்தைப் பெற்றது. அந்த மேகத்திலிருந்து பெய்யும் மழையும் அந்த மணத்துடன் பெய்தது. கம்பராமாயணத்தில் ஒவ்வொரு பாடலும் கற்பனையின் உச்சத்தில் நிற்பவையே.
நான விதமா நளி மாதிர வீதி ஓடி
மீன் நானு வேலைபுனல் வெண்முகில் உண்ணுமாபோல்
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப்போய்
வான் ஆறு நண்ணிப் புனல் வற்றிட நக்கும் மன்னோ.
அயோத்தி நகரத்து மாடங்களின் மீது ஆடும் கொடிகள் வான வீதியிலே மேலே சென்று மேகங்கள் கடல் நீரை பருகியது போல ஆகாய கங்கையின் நீர் வற்றும்படி நக்கும். அயோத்தியின் கொடிகள் வானாளாவி பறப்பதை கம்பர் கூறும்போது மனம் வியப்பில் நின்று விடுகிறது. இது போன்ற தீராத வியப்புகளால் நம்மை ஆட்கொள்கிறார் கம்பர்.
திருமால் ஆளும் அவ்வூரில் திருடர்கள் இல்லாததால் காவலர்களும் இல்லை. யாசகர்கள் இல்லாதததால் கொடுப்பவர்களும் இல்லை. அவ்வூரில் எல்லோரும் கல்வி பொருள் என செல்வச்செழிப்புடன் வாழ்வதால், இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை. நல்ல ஊர் எப்படியிருக்கும் என்பதற்கு இலக்கணம் போல, கனவு ஊராக அயோத்தியை படைத்து காட்டியிருக்கிறார் கம்பர்.
Leave a Reply