முளைப்பன முறுவல் – கலாதேவி

அலிஸ் மன்றோவின் (Alice Munro) டியர் லைஃப் ( Dear Life ) என்ற சிறுகதைத் தொகுதியில் இருந்த Haven (புகலிடம்) என்ற சிறுகதையை வாசித்த பின் கொஞ்ச நேரம் அந்த கதையிலேயே உலாவிக் கொண்டிருந்தேன்.

கதை எழுபதுகளில் கனடாவில் உள்ள சிறு நகரத்தில் நடக்கிறது. கதை சொல்லி தனது சித்தியுடனும் சித்தப்பாவுடனும் வசிக்கும் பதின்மவயதுச் சிறுமி. அவளது பெற்றோர் ஆப்பிரிக்க நாடொன்றுக்கு சென்று விடுவதால் அவர்களுடன் வசிக்கிறாள். மிகவும் சுதந்திரமான பெண்ணான தனது அம்மாவிற்கும் கணவனின் நிழலாக வாழும் சித்திக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பதின்வயது சிறுமியருக்கே உள்ள கூரிய துருவும் பார்வையில் கதைசொல்லி கண்டு கொள்கிறாள். 

முக்கியமாக அவளது சித்தியின் சிரிப்பைப் பற்றி சொல்லும்போது பதட்டத்துடன் கணவரின் ஒப்புதலை வேண்டி சங்கடத்துடன் புன்னகைப்பாள் என்று சொல்கிறாள். அந்த வரிகள் என்னை உறுத்திக் கொண்டே இருந்தன. பெண்களுக்கு வீடு வெறும் புகலிடம் மட்டும்தானா?  அது மகிழ்ச்சி தரும் சொர்க்கம் [heaven] இல்லையா  வேறு வழியில்லாததால் வாழும் haven தானா?

நீலி இதழில் வாசித்த தேவதேவனின் “புதிய ஏற்பாடு” கவிதையில் வரும் மலர்களைப் போல் இயல்பாய் சிரிக்கும் பெண்களை எங்கு காணலாம் ?

நோக்குங்கள் நோக்குங்கள்

இந்தக் காற்று வெளியினில்

அசைந்தாடும்

சிலைகளாயும் சிரிப்புகளாயும்

புன்னகைகளாயும்

கூட்டம் கூட்டமாய் குழுமியிருக்கும்

இந்தப் பெண்களை!

Rishyasringa and Women, 1916 – Balasaheb Pandit Pant Pratinidhi

அங்கிருந்து வெண்முரசுக்கு சென்றது மனது. இப்போதெல்லாம் அடிக்கடி நடப்பதுதான். எதை வாசித்தாலும் வெண்முரசுக்கோ கம்பனுக்கோ போய் விடுவது.

துவாரகைக்குள் நுழையும் திருஷ்டத்யும்னன் தெருவெங்கும் சிரித்துக் களியாடும் பெண்களைப் பார்த்து  “பெண்களை இத்தனை அழகாக எங்கும் கண்டதில்லை” என்கிறான். அதற்கு சாத்யகி “அவர்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலை. ஆழத்தில் பெண்கள் கட்டற்றவர்கள். அவர்கள் களியாடவிழைகிறார்கள். அந்த விடுதலையை அவர்களுக்கு அளிப்பவர் ஒருவர். ஆழங்களை அறிந்தவர். அனைத்தையும் ஏற்றுக்கொள்பவர். விடுதலையின் பேரழகை மட்டுமே விழைபவர். இன்றுவரை இப்புவியில் பிறந்தவர்களில் பெண்களை விடுதலைபெற்றவர்களாக மட்டுமே பார்க்க விழையும் ஆண் அவர் ஒருவரே” என்று சொல்கிறான்.

வெண்முரசில் இருந்து இயல்பாக கம்பருக்கு போகிறேன்.  கோசல நாட்டின் பெண்களை விவரித்துக் கொண்டே போகும் கம்பன் வெறும் புறஅழகை மட்டும் சொல்கிறானா?

மருத நிலத்திற்குள் நுழையும் போதே சொல்லி விடுகிறான். அங்கு நெல்மணிகளும் மீனும் வண்டும் மணிகளும் தாமரையும் மட்டுமல்ல வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் உழத்தியரின் கண்களும் மலர்ந்து ஒளி வீசுகிறது என்று.

படை உழ எழுந்த பொன்னும்,

    பணிலங்கள் உயிர்த்த முத்தும்,

இடறிய பரம்பில் காந்தும்

    இனம் மணித் தொகையும், நெல்லும்

மிடை பசும் கதிரும், மீனும்,

    மென் தழைக் கரும்பும், வண்டும்,

கடைசியர் முகமும், போதும்,

    கண் மலர்ந்து ஒளிரும் மாதோ

கோசலத்தின் பெண்கள் நீர் விளையாடுவதை நீரைக்  குடைந்து விளையாடுகிறார்கள் என்கிறான். சுற்றத்தை அஞ்சி முகத்தையும் முதுகையும் கழுவிக் கொள்ளவில்லை. அது ஒரு களியாட்டம்.

The Red Vineyards near Arles, 1888 – Vincent Van Gogh

புதுப்புனல் குடையும் மாதர்

   பூவொடு நாவி பூத்த

கதுப்பு உறு வெறியே நாறும்.

   கருங் கடல் தரங்கம்; என்றால்.

மதுப் பொதி மழலைச் செவ் வாய். வாள் –

   கடைக் கண்ணின் மைந்தர்

விதுப்பு உற நோக்கும். அன்னார்

   மிகுதியை விளம்பலாமோ?

நுண்மையான இடை வருந்த தயிர் கடையும் ஆயர்குலப் பெண்களையும் முத்துக்களைக் கொண்டு சிற்றில் அமைக்கிற சிறுமியரையும் பாடுகிறான். இந்த வர்ணனைகள் எல்லாம் காப்பியங்களுக்கே உரியவை என்று கடந்து செல்கிறோம்.

ஆனால் கோசல நாட்டில் அறம் சிறந்து நின்றதற்கு அவன் சொல்லும் காரணம் வேறு யாரும் சொல்லாதது. கோசல நாட்டில் வறுமையால் வருந்தி வந்தவர்களுக்கு எல்லாம் இல்லையென்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கிறார்கள். விருந்து என்று வந்தவர்களுக்கு முகம் மலர்ந்து உபசாரமும் செய்கிறார்கள் இத்தகைய அறம் அந்த நாட்டில் இருப்பதற்கு காரணம் கோசல நாட்டுப் பெண்கள் எல்லோருக்கும் கல்வியும் தனமும்  இருக்கிறது என்கிறான்.  தன்னிறைவும் உரிமையும் கொண்ட மகளிர் இருப்பதால் அறமும் வாழ்கிறது.

Glow of Hope, 1945-46 – S.L. Haldankar

பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,

வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,

விருந்தும், அன்றி, விளைவன யாவையே?

வேல்போன்ற கண்கள், பெண் யானையையும் மயிலையும் போன்ற நடை, தாமரை மலரையும் சந்திரனையும்  போன்ற முகங்கள் , குளிர்ந்த இளநீரையும் தாமரை மொட்டுகளையும் போன்ற மார்பகங்கள், பவளம் போன்ற உதடுகள், பாகு போன்ற சொற்கள், முத்துக்கள் போன்ற பற்கள், தோகையுடைய ஆண் மயிலைப் போன்ற சாயை, குவிந்த தாமரை மலர்கள் போன்ற கைகள் என்று புற அழகைப் பாடிக் கொண்டே வருபவன் மீண்டும் அந்த நாட்டின் அறங்கள் எல்லாம் பெண்களில் உள்ளத்திண்மையில் நிலைத்து நின்றன என்று சொல்கிறான்.

கோசல நாட்டுப் பெண்களின் உடல் அழகைப் பற்றி பாடியது சரிதான். ஆனால் அந்த அழகு அங்கே நிலைத்து நிற்பதற்கு காரணம் அவர்கள் அகத்தின் அழகுதான். அகம்தான் புறத்தைக் கட்டமைக்கிறது. அவர்களில் அகம் பொய் இல்லாத மெய்ம்மையில்  நிற்கிறது. கல்வியும் செல்வமும் கொண்டு தன்னிறைவும் சுதந்திரமும் உடைய  பெண்கள் பொய்மை செய்வதற்கு காரணம் இல்லையே! அன்னையர் அன்பில் உருவாகி நிலைத்து நிற்கின்றன அறங்கள்.  ஆம் அன்பின் வழி நிற்காத அறத்தால் விளைவது வெறுப்பும் காழ்ப்பும் அல்லவா? அவர் சொற்திறம்பாமையில் நிலைத்து நிற்கின்றன இயற்கையும் கூட. கற்பெனப்படுவது சொற்திறம்பாமைதானே.

பொற்பின் நின்றன. பொலிவு; பொய் இலா

நிற்பின். நின்றன. நீதி மாதரார்

அற்பின் நின்றன. அறங்கள்; அன்னவர்

கற்பின் நின்றன. கால மாரியே.

அங்கிருந்து அயோத்தி செல்லும் போது அவன் கவிதை மதுவருந்திய வண்டு போல சொற்களின் மேல் ரிங்கரமிடுகிறது. பெண்ணழகை சொல்லி முடியவில்லை.

கன்னியிள வண்டுகள், தேன் குடித்த மத யானைகள் மகிழ்ச்சி குறையாது நடக்கும் இள அன்னங்கள் ; காணக் காணத் தெவிட்டாத களியாட்டம்

இடையிடை எங்கணும் களி அறாதன

நடை இள அன்னங்கள், நளின நீர்க்கயல்!

பெடை இள வண்டுகள்! பிரசம் மாந்திடும்

கடகரி !அல்லன, மகளிர் கண்களே

மங்கையரில் இருந்து மாளிகைக்கு செல்கிறது அவன் கவிதை. மேகம் அளாவி நிற்கும் மாடங்கள். பொன்னாலும் மணியாலும் அணி செய்தவை. ஆனால் அந்த மாளிகைகளில் இருக்கும் பெண்களின் முகங்கள் எல்லாம் ஒளி பெற்று விளங்கின என்கிறான்.

Damayanti and Maidens – ca. 1760 – ca. 1770 (made), Artist Unknown. Image credit: From the collection of Victoria and Albert Museum.

சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண

மாளிகை மலர்வன. மகளிர் வாள் முகம்;

வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை.

ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே

மாதரின் உள்ளத்தின் ஒளி அல்லவா அந்த மாளிகைகளை திருமகள் வாழும் இல்லங்கள் ஆக்கி விடுகின்றன?

தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை

இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன,

திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?

மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.

அயோத்தியின் மகளிரின் அழகை மட்டும் அவன் பாடவில்லை. அது அயோத்தியோ மிதிலையோ இலங்கையோ அவன் கவிக்கண்கள் பார்ப்பதும் வியப்பதும் பெண்ணழகை. ஆனால் இலங்கை மகளிரின் அழகை செல்வத்தை ஆடல் பாடலை ஏன் காதலை காமத்தை எல்லாம் பாடிய கம்பன் அங்கு அறத்தையம் கருணையையும் நீதியையும் பாடவில்லை. அங்கு மகளிர் அழகுக்கும் போகத்திற்கும் மட்டுமே உரியவர் என்று சொல்லாமல் சொல்கிறானா?

அவன் அயோத்தி மகளிரின் முறுவலைப் பற்றி பாடியதுதான்  இந்த பாடல்களின் உச்சம் என்று நினைக்கிறேன்.

முளைப்பன முறுவல்! அம்முறுவல் வெந்துயர்

விளைப்பன! அன்றியும், மெலிந்து நாள்தோறும்

இளைப்பன நுண் இடை !இளைப்ப, மென்முலை

திளைப்பன, முத்தொடு செம்பொன் ஆரமே!

முளைப்பன முறுவல்!  இந்த தொடர்தான் அயோத்தி மகளிரின் வாழ்வை குறிக்கும் அற்புத வரிகள். அங்கு பெண்கள் தயங்கியும் கணவரின் முகம் பார்த்தும் சுற்றத்திற்காகவும் புன்னகை செய்யவில்லை. அவர்கள் உள்ளத்தில் இருந்து முறுவல் முளைத்து வருகிறது.  உரிமையும் கல்வியும் தனது காலில் நிற்கும் சுதந்திரமும் கொண்ட பெண்களின் மனதில் இருந்தல்லவா புன்னகை பூத்து வரும்!

தண்மலர்த்தாமரை விட்டு எழுந்த திருமகளும் அவள் தனி நாயகனும் தாங்கள் மண்ணில் வாழ அயோத்தியை தேர்ந்தெடுத்ததற்கு இதைவிட வேறு காரணம் இல்லை என்று நினைக்கிறேன். 



One response to “முளைப்பன முறுவல் – கலாதேவி”

  1. […] முளைப்பன முறுவல் – கலாதேவி […]

Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading