செஞ்சொற் கவி இன்பம் – பார்கவி

காதலினால் மானிடற்கு கவிதைகள் உண்டாம் என்ற பாரதி, கல்யாணம் செய்துகொண்டால் என்னாகும் என்று சொல்லவில்லை. இன்று இந்த வரியை வாசிப்பவர்கள், இதற்குப் பகடியாக பதிலை சொல்லிவிட முடியும். நவீன கவிதைகளில், காதல் ஏற்றப்பட்ட அளவுக்கு திருமண உறவு ஏற்றம் பெறவில்லை. இந்தப் பிளவு வள்ளுவரிலும் உண்டு. காமத்துப்பாலில் ‘இல்வாழ்க்கை’யும் ‘வாழ்க்கைத் துணைநல’மும் ‘மக்கட்பேறு’ம் இல்லை. அவை அறத்துப்பாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் காமத்துப்பாலில் சங்கமரபின்படி ‘களவியல்’ ‘கற்பியல்’ இரண்டுமே அமைந்திருக்கிறது. பிரிந்தவர் கூடி, பேசினால், அடுத்து கடிமணம் தானே? வள்ளுவருக்கு இதில் ஐயம் வேறு, அன்பும் அறனும் உடைத்தாயின்’ என்று நிறுத்திவிட்டு ‘இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்று தொடர்கிறார். அன்பு மட்டுமல்ல, அறமும் வேண்டும். பண்பு மட்டுமல்ல பயனும் கிடைக்கும். ஆயின்…

ஆகவே நமக்கு காவியக் காதல்கள் தேவைப்படுகின்றன. அதன் மீது தத்துவமும் சேர்க்கப்பட்டால் நம்மால் உவப்பில் சுழலாமல் இருக்க முடிவதில்லை. கம்பன் சங்கத்தமிழ் மனதை இன்புறுத்தவே அண்ணலையும் அவளையும் தொடக்கத்திலேயே நோக்கச் செய்கிறான். வான்மீகத்தில் இது நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல. காவியகர்த்தாவின் இந்த திருகலின் காரணமாகவே, இம்பர்வாரியின் வாசிப்பில் இன்றுவரை மிக அதிகமான பங்கேற்பும் வரவேற்பும் பெற்றிருப்பது ராமன்-சீதை திருமண நிகழ்வு என்று ஊகிக்கிறேன். ஐநூறு தொடர் அமர்வுகள் காணும் நம் குழுமத்திற்கு அதைப்பற்றி எழுதி என் வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

திருமணம் ‘நாளை’ என்று நற்றவன் விசுவாமித்திரன் உரைக்கவும், மணமக்கள் இருவரும் மணமேடையில் சேரவும் எண்பத்தேழு பாடல்கள் தேவைப்படிருக்கின்றன. 

திருமணத்திற்கு முந்தைய இரவு ஒரு ஊழிக்காலம் தானே? 

‘பண்ணோ ஒழியா பகலோ புகுதாது

எண்ணோ தவிரா இரவோ விடியாது

உள் நோவு ஒழியா உயிரோ அகலா

கண்ணோ துயிலா இதுவோ கடனே?

மிதிலை நகரத்தின் ஓசை அடங்கவில்லை, பகலுக்குள் வலுக்காட்டயமாக புக முடியவில்லை, அவனைப் பற்றிய எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை, இரவு வேறு விடிந்து தொலையவில்லை, உள்ளத்து நோய் ஒழியவில்லை, உயிரும் அகலாமல் கிடந்தது தவிக்கும் இந்த இரவில் நித்திரையும் வந்து சேரவில்லை, இந்நிலை தான் என் கடனா? என்று சீதை கேட்கிறாள். 

ராமனுக்கும் தவிக்கும் அல்லவா?

‘தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின்

பல் நோக்கினது என்பது பண்டு கொல் ஆம்?

என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார்

மெல் நோக்கினதே கடுவல் விடமே.

மிகக்கொடிய விடம் இருக்குமிடம், கண்களில் நெருப்பு உமிழும் பாம்பில் பல்லில், என்று கூறுவது பழைய கதையல்லவா? என் கண்ணிலும் மனதிலும் என்றும் இருக்கும் சீதையின் மென்பார்வை தான் மெய்யான விடம்.

இங்கு ராமன் ‘விடம்’ என்ற சொல்லை நயமாகக் கையாண்டிருக்கிறான், அது மென்நோக்கு என அவன் அறிவான். ‘நஞ்சினோடு அமுதம் கூட்டி நயனங்கள் ஆன என்ன’ என்று சீதைக்கு மையிடும் பாடலில் கவிகூற்றாக சொல்லப்படும், அங்கு மைவண்ணம் என்பது அஞ்சன வண்ணனின் நிறம். அவன் எழில் இவளில் பிரதிபலிக்கிறது. திட்டி (திருஷ்டி) விடம் என்று சீதையை பின்னர் கும்பகர்ணனும் வீடாணனும் சொல்லுவார்கள். இவை எல்லாமே பார்வையார்களின் மயக்கம், அவளுடைய கண்கள் வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்தவை. 

கோலம் காண் படலம் என்ற பெயரில் சீதையின் மண அலங்காரத்திற்கு தனிப்படலம் இருந்தாலும், அவளுக்கும் திருமண நாளை அறிவித்தபின் தானே ஒப்பனை செய்திருக்க முடியும்? ஆகவே அந்தப்படலத்தின் முதல் முப்பத்திநான்கு பாடல்களையும் சேரவியலாத பரிதவிப்பின் நீட்சியாகவே வாசிக்கலாம். நம்மை இன்று திருமணம் செய்யவிருப்பவர், அன்று மாடத்தில் கண்ட அவரா? இல்லையா? என்று குழை முன்னும் பின்னும் ஊசலாடுகிறது. கைவளையை திருத்தும் சாக்கில் ராமனை பார்க்கும் வரை அது அப்படியே இருக்கிறது. 

ராமனை அணிசெய்யும் பொழுது அவனும் சீதையின் நினைவில் தான் இருக்கிறான். அல்லது சான்றோர் கவிக்கு வேறு எண்ணம் இல்லை,

சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என

மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி

மொய்க் கருங் குழலினாள் முறுவல் உள் உறப்

புக்கன நிறைந்து மேல் பொடித்த போன்றவே.

திருமாலின் சக்கரத்திற்கு அருகிருக்கும் பாஞ்சசன்னியம் என்ற சங்கை ஒத்த கழுத்திற்கு வெண்முத்தில் மாலை அணிவிக்கிறார்கள். ராமனின் உள்ளிருக்கும் அடர் கருங்கூந்தல் கொண்டவளின் முறுவல் முழுவதும் நிறைந்து வழிந்து அவன் உடலின் மேல் வெளிப்படுவது போல் அது ஒளி வீசுகிறது. 

ஒரு நூற்றி இருபது பாடல்கள் இப்படியும், நகரை அலங்கரிக்கவும், மலையின் இடையில் உதிக்கின்றது போல் சீதை மண்டபம் வந்தடையவும் நிகழும், அதன் பின்னரே இந்தப்பாடல் வரும்,

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி

வென்றி நெடுந் தகை வீரனும் ஆர்வத்து

இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்

ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.

மன்றத்தில் வந்து, மண இருக்கையில் ஏறி, வெற்றி வீரனாகிய ராமனும் அவன் விருப்பத்துணையான அன்னமும் வந்தமர்கிறார்கள். போகமும் யோகமும் ஒன்றி இருப்பது போல் இருக்கிறது. நிரல் வரிசையில் பார்த்தால், வீரனாகிய ராமன் – போகம், அல்லது போகி. அன்னமாம் சீதை – யோகம், அல்லது யோகி. 

இது குழப்பம் தருவிப்பது. பரமாத்மா வடிவினன் போகி எப்படி ஆனான்? சீதை, அதிலும் பெண் (!) யோகியா? தொன்மப்படி சீதையின் கையால் தான் சிவதனுசு கண்டடையப்படுகிறது. இன்னொரு கதைப்படி அவள் சிவபக்தனாகிய ராவணின் மகள். காவியம் நெடுக அவள் அமைந்திருக்கிறாள், காத்திருக்கிறாள், தவம் செய்த தவமாகி இருக்கிறாள். மேலும், அவள் கமையாள், அதுவும் உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும் கமையாள். 

‘ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண சேவிதா’ என்று லலிதா சஹஸ்ரநாமம் அன்னையை கூறுகிறது. இலக்குமியும் வாணியும் இருபுறமும் நின்று சாமரசேவை செய்யப்படுபவள் உமை, அவள், தன் இருகைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தொழுபவள் சீதை. 

இந்திய தத்துவத்தில், பிரகிருதி என்று இந்நிகழ்வை சொல்கிறார்கள். இங்குள்ள அனைத்தும், அனைத்திலும், அவை அழிந்த பின்னும், இருப்பது பிரகிருதி. அதற்குப் பாலினமோ, வேறொர் அடையாளமோ ஒன்றும் கிடையாது. நம் காவியத்தில் அது சீதையாகி இருக்கிறது.

அப்படிப் பார்த்தாலும் ராமன் போகம் என்றாவதை ஏற்க முடியவில்லை. அவன் பரமாத்மாவின், பரம்பொருளில் ஒரு சிறு வடிவம், அம்சம், அல்லது அம்சத்தின் குறைந்தபட்ச சாத்தியக்கூறு. அவனை அதுவாக்கியது யோகம், ஏனெனெனில் அதுவே பிரகிருதி புருஷனுக்கு செய்யும் கடன். ஜீவாத்மா-பரமாத்மா என்ற சொற்களை நாம் இப்பொழுது நம் மனம் போக்கில் குறைத்தும் நீட்டியும் பயன்படுத்துகிறோம். நாம் நினைக்கும் அளவுக்கு ஜீவாத்மா என்பது சிற்றுயிர் அல்ல, அவள் யோகி. இது சங்கமரபின் தலைவி-தோழி, தலைவன் -பாங்கன் போல புரிந்துகொள்ள வேண்டியது. உங்களுடைய காதலில் நீங்கள் தான் தலைவி, ஆனால் உங்கள் தோழியின் காதலில் வெறும் தோழி தான். சிறிய அளவு பரமாக இருக்கும் பொழுது நம் குடும்பமும், சுற்றமும், இந்த உலகும் நம்முடைய பிரக்ருதியாகின்றன. ஆன்மீக சாதனையில் அனைவரும் ஜீவாத்மாவும் கூட. பெரிய ஒன்றிலிருந்து நீங்கிய துன்பத்தை நாம் உலக வாழ்வின் துயரென எண்ணித் உழல்கிறோம். இதனால் தான் ராமனுடைய துயர் அத்தனையும் சீதையின் பிரிவாற்றாமையில் இருந்து துவங்குகிறது. சீதையின் தவத்தின் அழகு அவன் பிரிவில் ரசம் கூடுகிறது. 

இதை இன்னொரு வகையாக விளக்கிக் கொள்ளலாம். ராமன் அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை அங்க அங்கமாக வர்ணிக்கிறான், அனுமனும் இலங்கையில் அவன் கண்ட அத்தனை அழகுகளிலும் சீதையை தேடுகிறான். ஒருவேளை ராமன் சொன்ன குறிப்புகளை வைத்து மட்டும் தேடி இருந்தால், ராவணின் கண் வழியான அழகை அடைந்திருக்கக் கூடும். அதற்குத் தான் மண்டோதரியை அனுமன் சீதையென்று சந்தேகிக்கும் நிகழ்வு வருகிறது.  யோகத்தை போகமாகப் பார்ப்பதில் பிழை இருக்கவே செய்கிறது.

உவமைக்கு அப்பால் உள்ள அழகை எப்படித் தேடுவது? அது மனித மனதின் எல்லைகளை கடந்த ஒன்றிலிருந்து பிறப்பது. ஆனாலும் அனுமனின் கண்ணிற்கு தான் ஓவியம் புகையுண்டது போன்ற அவளுடைய உருவம் சிக்குகிறது. சுற்றியிருக்கும் ஆடையோடு பல மாதம் நீராடாது, அணி செய்யாது இருப்பவளை தான் அவன் மனம், ‘ஆம், இதுவே அழகு’ என்று நினைக்கச் செய்கிறது. அனுமன் உவந்து கூவும் ‘தேவனே அவன், இவள் கமலச்செல்வியே’ இவ்விருவரைத் தான். அன்பும் அறனும் உடைத்து ஆகையால், இங்கு பண்பும் பயனும் வீற்றிருக்கிறது, என்ற பொருளில். அனுமன் அதைத் தன் யோகத்தின் வழியாக கண்டுகொள்கிறான்.

தன்னை உயிர்ப்பித்தவனை சீதையும் அன்போடு வாழ்த்துகிறாள், ‘இன்றென இருத்தி’ என்று. அதற்கு ‘சிரஞ்சீவி பவ’ என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு நிறைநிலை, மற்றோர் நிறைநிலைக்குச் சொல்லும் ‘நானுனை கண்டுகொண்டேன்.’ அது, ஒரு யோகி இன்னொரு யோகிக்குச் சொல்லும் வாழ்த்துச் சொல் அல்லது அடையாளச் சொல்.

காதலினால் மானிடற்கு யோகம் உண்டாகுமா?

(யோகம் பற்றிய உரையாடலுக்கு யோக ஆசிரியர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி)



Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading