நெய்குழல் உறும் இழை – லக்ஷ்மி நாராயணன்

“வளையொடு திகிரியும்‌, வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள்‌ பாயலும்,‌
இளையவர்கள்‌ என அடி பரவி ஏக நாம்
வளைமதில்‌ அயோத்தியில்‌ வருதும்”

(201, பால காண்டம்)

வடவாமுகாக்கினியும் கரிந்து போகும் அளவிற்கு பொங்கு விஷம் (சினம்) கொண்ட ஆதிசேஷனின் அவதாரம் இலக்குவன்.

காப்பியம் முழுக்க ராமனைத் தொடர்ந்து வந்தாலும் கம்பராமாயண உரைகளிலோ, ஆய்வுகளிலோ அதிகம் பேசப்படாதவன் இலக்குவன். பரதனோ, குஹனோ, வீடணனைப்பற்றியோ எழுதப்பட்டதை விட இலக்குவன் பற்றி எழுதப்பட்டது மிகக்குறைவு. அனுமனைப் பற்றி சொல்லவே தேவை இல்லை.

வனவாசம் ராமனுக்கு நிறைய கற்றுத் தருகிறது, ஒரு வாய்ப்பும் தராமலேயே மறைந்திருந்து வாலியை வீழ்த்துபவன், இராவணனை ‘இன்று போய் நாளை வா’ என்கிறான். அது போல இலக்குவனிடம் மாற்றம் ஏதும் உளதா, அவன் முதிர்ச்சி அடைகிறானா? ஆரண்யம் அவனுக்கு அளித்தது என்ன?  ராமனின் ஆளுமையில் அவன் பங்கு என்ன?

இலக்குவன் என்றாலே நமக்கு சில பிம்பங்கள் உள்ளன,

  • முன்கோபி, முரடன்
  • சேவையின் உதாரணம்
  • கொலை வாள்
  • பதினான்கு ஆண்டுகள் தூங்காதவன்
  • சூர்ப்பணகையை மானபங்கம் செய்தவன்

இது போன்ற சம்பிரதாய அடைமொழிகள்/புரிதல்களைத் தாண்டி அவனை அணுக முயற்சிப்பது இக்கட்டுரையின் நோக்கம்.

நிலக்கொடியும் துயர் நீத்தனள்:

உலக்குநர்‌ வஞ்சகர்‌, உம்பரும்‌ உய்ந்தார்‌;

நிலக்கொடியும்‌ துயர்‌ நீத்தனள்.

திருமாலின் அவதார நோக்கம் அரக்க வதம் செய்து மக்களைக் காத்தல் என்று எளிமைப்படுத்திக் கொண்டால், ராமன் பிறந்த போது கூட துயர் நீக்காத பூமித்தாய், இலக்குவன் பிறந்தவுடன் தன் துயர் முழுதும் நீத்தாள்.

கையடைப்படலத்தில் கௌசிகன் தசரதனிடம் கேட்டது ‘கரிய செம்மல் ஒருவனை தந்திடுதி’ என்று மட்டும் தான், ஆனால் நம்பி வந்ததோ தம்பியுடன். கௌசிகனோ, தசரதனோ இவனும் ஏன் உடன் வந்தான் எனக் கேட்கவில்லை.

காப்பியத்தில் இலக்குவன் பேசும் முதல் சொல்லே,

‘அண்டர் நாயக, இனிக்காண்டி, இவர் துண்டம் வீழ்வன”

என்று வேள்வியைக்காத்து அரக்கரை அழிக்கக் கிளம்புகிறான். ஆனால் அஞ்சன வண்ணனோ மென் முறுவல் மாறாமல் தானே அரக்கரை அழித்து வேள்வி காத்தான். அண்ணன் முழுக்கவனமும் பாராட்டும் பெறுவதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை, அவனையே எங்கும் முன்னிறுத்துகிறான், over smartness இவனுக்கு என்றும் இல்லை.

பழியின் கணக்கு வைத்திருப்பவனும் அவனே, தாடகை பயந்த வீரர்களில் ஒருவனைத் திருமகள் நாயகனின் வாளி கொல்லாமல் கடலில் தூக்கி வீசியதை பின்பு சரியான நேரத்தில் ராமனுக்கு நினைவும் ஊட்டுகிறான்.

இவன்தான் ராமனைப் பின்னால் எல்லா இடலகளில் இருந்தும் காக்கப்போகிறான் என்று கௌசிகனுக்கு கண் கூடாகத்தெரிகிறது. ஆகவே அஞ்சன வண்ணனுக்கு படைக்களம் அருளும்போதும் இலக்குவன் போல உடனிருந்து அடிமைத்தொழில் செய்யப் பணிக்கிறார்.

விதிக்கும் விதியாகும் விற்தொழில் காண்டி:

தன் பக்தனுக்கு சங்கடம் எனில் உடனே கம்பத்திலிருந்து தோன்றும் நரசிம்மம் போல இலக்குவன் வந்தான்.

“துய்யைச்சுடு வெங்கனலின் சுடத் துணிந்தேன்” என்பவனை அரக்கர்களை “தீயிடை சுரிக்க நீட்டும்” மானுட மடங்கலுடன் ஒப்பிட முடியும்.

இலக்குவனை பொறுத்தவரை உயிர் நண்பன் அல்லது பரம எதிரி மட்டுமே, nothing in between. இது வனவாசத்திற்கு முந்தைய இலக்குவன். ராமனுக்குத் தீங்கு நினைத்த அடுத்த கணம், கைகேயி தாயாகவே இருந்தாலும் எதிரியாகி விடுகிறாள், பரதனும்.

சிங்கக்‌ குருளைக்கு இடு தீம்‌சுவை ஊனை,

நாயின்‌ சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே

என்று நகைக்கிறான்.

பெண்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு அவனுக்கு இந்த இடத்தில் தான் தோன்றுகிறது, எக்காலத்திலும் பெண் நாட்டம் ஒட்டேன் என்று சூளுரைக்கிறான்.

கண்ணின்‌ கடைத்‌ தீ உக, நெற்றியில்‌ கற்றை நாற,

விண்ணில்‌ சுடரும்‌ சுடர்‌ தோன்ற, மெய்நீர்‌ விரிப்ப,

உள்‌ நிற்கும்‌ உயிர்ப்பு எனும்‌ ஊதை பிறக்க, நின்ற

அண்ணல்‌ பெரியோன்‌ தனது ஆதியின்‌ மூர்த்தி ஒத்தான்.

இப்பாடல் இலக்குவனது அறச்சீற்றத்தைச் சொல்வது, அவன் கண்ணில் எழும் காலக்கடைத்தீயில் அவனுடைய கேசமே கருகுகிறது. தன்னையே எரித்து அறம் காக்க எழுகிறான். அன்று அயோத்தியில் எழுந்த ஒரே அறக்குரல் இலக்குவனுடையது மட்டும் தான்.

நல்‌ தாதையும்‌ நீ; தனி நாயகம்‌ நீ; வயிற்றில்‌

பெற்றாயும்‌ நீயே; பிறர்‌ இல்லை

மொத்தமாக இலக்குவனை அடையாளப்படுத்தும் பாடல் இதுதான்.

ராமன் எவ்வளவு சமாதனப்படுத்தியும் அடங்காத ஆறாக்கனல் என இலக்குவன் கனன்று கொண்டிருக்கிறான். கடைசியில் அஞ்சன வண்ணனிடம் உள்ளது ஒரு பிரம்மாஸ்திரம்.

என்‌ சொல்‌ கடந்தால்‌, உனக்கு யாது உளது ஊற்றம்‌?”

என்னுடைய சொல்லை மீறிச்செல்வாயா? என்று ராமன் கேட்டதும் அதற்கு மேல் இலக்குவனிடம் வேறு சொல் இல்லை.

காட்டிற்கு செல்லும் முன் சுமித்திரையின் புகழ் பெற்ற அறிவுரை நமக்குதான் புதியதாக உள்ளது. அவன் பிறந்த நாள் முதல் அவ்வாறே வாழ்ந்து வந்தான். உண்மையில் இலக்குவன் கேட்க விரும்பியதைத்தான் சுமித்திரை சொன்னதாகவும் கொள்ளலாம்.

ராமன் ‘அன்னையரும் ஆழி வேந்தனும் துயரின் மூழ்கினர், நீ என் பொருட்டு அயோத்தியிலேயே தங்கி இருந்து உதவுவாய்’ என்று வேண்டுகிறான். ஆறாக்கனல் ஆற்றும் அஞ்சன மேகத்தால் கூட இப்போது அவனை தடுக்க முடியவில்லை.

உனக்கு அடியேன்  பிழைத்தது யாது.

நீர்‌ உள எனின்‌ உள, மீனும்‌ நீலமும்‌;

பார்‌ உள எனின்‌ உள, யாவும்‌; பார்ப்புறின்‌.

 நாள்‌ உள தனு உளாய்‌! நானும்‌ சீதையும்‌

ஆர்‌ உளர்‌ எனின்‌ உளம்‌? அருளுவாய்‌!” என்றான்

நீரினாலேயே வாழ்பவை மீனும், கருங்குவளையும். நீர் வற்றிப்போனால் குவளை காய்ந்து, வாடி, கிழங்காகக் கிடக்கும், மீண்டும்‌ நீர் வந்துழி முளைவிட்டுத் தளிர்த்து மேல்‌ வந்து பூக்கும்‌. அது சீதைக்கு உவமை. ஆனால் இலக்குவனாகிய மீனுக்கு நீர் உள்ளவரைதான் வாழ்வு.

“எமை கை துடைத்து ஏகவும்‌ கடவையோ?” என்பதற்கு ராமனிடம் பதில் இல்லை. பரம்பொருள் பக்தனாகிய தொழும்பனிடம்  எதையும்  கேட்க முடியும், தன்னை தொடராதே என்பதைத்தவிர. காப்பியத்திலேயே முதல் முறையாக அரவிந்தாக்ஷன் கண்ணில் நீர் நிறைத்து விழ நெடிது நிற்கின்றான்.

சீதையின் ‘நின் பிரிவினின் சுடுமோ பெருங்காடு’ அளவிற்கு இது ஏனோ பேசப்படுவதில்லை. உண்மையில் ராமன் சீதையை ‘விளைவு உன்னுவாய்‌ அல்லை; எல்லை அற்ற இடர்‌ தருவாய்‌ உன்னால் பேரிடர் வரும் என்று எச்சரிக்கிறான். “என்‌ துறந்தபின்‌, இன்பம்‌ கொலாம்‌?” என்று ஒரு சிறிய ஊடலாக மாற்றி எளிதில் கடந்து செல்கிறாள் சீதை.

இமைப்பிலன் நயனம்:

இலக்குவன் அண்ணனை பின்தொடர்ந்து காட்டிற்கு சென்றது  இதற்கு முன் எந்த சூரிய குல மன்னர் வழியில் வந்தோரும் செய்யாதது. இதை ராமனே “எனக்கு முன் வந்தார் யாவரும் காட்டிற்கு தனியே போக என்னை தனியே விடாமல் உடன் வந்தாய்” என்று பூரிக்கிறான்.

நன்றி: Times Now

குஹனை,

நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன், நகை இல் முகத்தினான்,

சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்

என கம்பன் அறிமுகம் செய்கிறார். நியாயமாக இலக்குவன் எச்சரிக்கை உணர்வே கொள்ள வேண்டும். ஆயினும் அவன் பக்தியை ஒரே கணத்தில் கண்டு கொள்கிறான், பித்தர்கள் பித்தர்களை எளிதில் கண்டு கொள்கிறார்கள்.

முதலில் பரதனை தவறாக கணித்தாலும், அதன் காரணம் கைகேயி மீது அவன் கொண்ட வெறுப்பு. எனினும் தன் தவறை உணர்ந்த உடன் மன்னிப்பு கேட்க அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை.

ராமன் சீதையை காட்டிற்கு அழைத்து வந்தோமே என்று குற்ற உணர்ச்சி அடைகிறான். அதற்கான குறிப்பு (clue) அவனுக்கு சீதையிடம் இருந்தே வந்திருக்க வேண்டும். அதனாலேயே வனத்துள் நுழைந்த பொழுதிலேயே அதன் பேரழகையும் எழிலையும்  ஒவ்வொன்றாக காட்டி ஒரு நல்ல விற்பனைப் பிரதிநிதி போல அவளிடம் காட்டை விற்க முயல்கிறான். இலக்குவனிடம் அவனுக்கு எந்த அவசியமும் ஏற்பட வில்லை, நீருள் மீன் போல இயல்பாக பொருந்திக்கொள்கிறான்.

ராமனும் அவன் பணிவிடைகளை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுகொள்கிறான். இலக்குவன் தான் அமைத்த தெப்பத்தில் ராமனையும் சீதையையும் அமர்த்தி, தான் தெப்பத்தில் ஏறாமல் நீந்தியே தள்ளிக்கொண்டு வருகிறான், அதில் இனிது வீற்றிருக்க ராமனுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.

ஓங்கு தெப்பம்‌ ஒன்று அமைத்து, அதன்‌ உம்பரின்‌,

வீங்கு தோள்‌ அண்ணல்‌ தேவியோடு இனிது வீற்றிருப்ப,

நீங்கினான்‌, அந்த நெடு நதி, இரு கையால்‌ நீந்தி.

சித்ரகூடத்தில் பர்ணசாலை அமைக்கும் போது, இராமனின் குடிலை மென்மணல் கொண்டு பூசியவன், மிதிலை நாடி சீதையின் குடிலை குங்குமக்குழம்பால் பூசுகிறான். மேலும் மயிர் பீலிகளால் விதானம் அமைத்து, மணிக்கற்களோடு முத்தையும் பொருத்தி, புதிய மலர்களை ஆங்காங்கே சிதறி பொலிவூட்டுகிறான்.

இதைக்கண்டு ராமன் வியந்து “என்று கற்றனை நீ இது போல்?” என்று வியப்புற்று பாராட்டுகிறான். காட்டில் புல் அணையில் இனிது உறங்குகிறான் ராமன். ஆனால் இலக்குவனால் அதை கண்ணீரால் மட்டுமே கரைக்க முடிகிறது.

‘கண்கள்‌ நீர்‌ சொரிய, கங்குல்‌ எல்லை காண்பு அளவும்‌ நின்றான்‌; இமைப்பிலன்‌ நயனம்’

இதைக்கண்டு குஹன் இப்படியும் ஒரு தம்பி இருக்கமுடியுமா என்று ஆச்சரியபடுகிறான்.

வீடணன் கும்பகர்ணனையும் ராமனுடன் சேர அழைக்கும் போது இரண்டு தம்பியருடன் பிறந்த இராவணன் போரில் தனியே இறந்தான் என்பது அவனுக்கு இழுக்கு, ஆகவே நான் அவனுடன் இருப்பேன் என்றான் கும்பன்.

மூவருடன் பிறந்த ராமனை தனியே காட்டிற்கு விடாமல் தானும் உடன் சென்றதால் ‘இராமன்‌ பின்பு பிறந்தானும்‌ உளன்‌, இராமனுக்கு இளையோர்‌ என தோன்றியவரில்‌, யான்‌ என்றும்‌ முடிவு இலாத துன்பத்துக்கு ஆளானேன்‌; அவன்‌ அது துடைக்க நின்றான்‌’ என்று பரதன் இலக்குவனை புகழ்கிறான்.

வெஞ்சின விதியனை வெல்ல வல்லமோ:

கம்பராமாயணத்தில் அதிகம் பேசப்பட்ட படலம் சுந்தர காண்டம் எனில், இன்று வரை அதிகம் கண்டுகொள்ளப்படாதது ஆரண்ய காண்டம். சுந்தர காண்டம் அனுமனுக்கு எனில் ஆரண்ய காண்டத்தின் நாயகன் இலக்குவன். இங்கே இலக்குவனின்  ஆளுமையில் முதிர்ச்சியும் பக்குவமும் கூடுகிறது.

அயோத்தியா காண்டம் வரை நாம் காணும் இலக்குவன் வேறு, ஆரண்ய காண்டத்தில் அவன் தன்னை செதுக்கி உருமாறுகிறான்.

விராதனிடம் அகப்படும் போது,

“ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி, இனிதின்‌ போகல்‌ நன்று என நினைந்தனேன்”

காட்டில் வெகு தொலைவு நடக்க வேண்டி இருக்கிறது ஆகவே இந்த அரக்கன் மேல் ஏறிக்கொண்டால் அவனே கொண்டு விட்டு விடுவான், பிறகு அவனைக் கொல்லலாம் என்று நினைத்தேன்’ என்று ராமன் நகைக்க,

“தேவி துயர் கூற விளையாடல் தொழிலோ, பழுது” ,

என்று அவனை கண்டிக்கிறான். ஜடாயு காட்டிற்கு வந்த காரணம் கேட்டவுடன் ராமனை குறிப்பால் உணர்ந்து ஒரு நல்ல மந்திரி ஆகிறான்.

இலக்குவன் முதலிலேயே சூர்ப்பணகையை ‘கொன்று களைவோம், இல்லையேல் நெடிது அழைக்கும்’ என்றே எச்சரிக்கிறான். அவளிடமிருந்து இருந்து சீதையை காப்பாற்றினான்.

கரன் வதையின் போது, ‘இவ்அமர்‌ எனக்கு அருளிநின்று, என் தோளினைத்‌ தின்னுகின்ற சோம்பினைத்‌ துடைத்தி’ என்று வேண்டுகிறான். ஆனாலும் அண்ணலின் சொல்லுக்கு மறு சொல் இல்லை.

மாயமானின் பால் ராமன் திரும்பிய உடனேயே ”இறைவ மெய் அல” என எச்சரிக்கிறான். அண்ணன் ‘இல்லாதன இல்லை இளங்குமரா’ என கேலித்தொனியில் ஏளனம் செய்த போதும் இது அரக்கர் செய்த வஞ்சனை, மீள்வதே மேன்மை என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறான். ராமன் கேட்பதாக இல்லை.

சரியாக இந்த தருணத்தில் இலக்குவன் ராமனை கடந்து செல்கிறான். சர்வ நிச்சயமாக இது அரக்கர் செய்கையே, இவன் மாரீசனே என்று அறிவிக்கிறான். இந்த மாயத்தில் பின் நின்றார் யார், அவர் மாயத்தின் தரம் என்ன என்று அறியாமல் அதனை பிடிக்க முயல்வது புகழ் ‌உடைத்தாம்‌ அன்று என்கிறான். ராமன் அந்த எச்சரிக்கையை புறந்தள்ளிய போது நானே பிடித்து தருகிறேன் என்றும் பாம்பின் புற்றில் கைவிடத்துணிகிறான்.

தான் இறந்த பிறகாவது ஜானகியை விட்டுவிடு என்பது ஒரு வகை பக்தி (கும்பன்). நானே பற்றிக்கொணர்வேன் என்பது மற்றொரு வகை.

முதன் முதலாக கம்பன் இளையவனை இங்கு ‘மந்திரத்து இளையோன்’ என்று அறிவிக்கிறார். ராமனும் மிக மிகத் தாமதமாக மாரீசன் வந்த காரணம் சாவதற்காக மட்டும் அல்ல, வேறு பொருள் உள்ளது என்று உணர்கிறான்.

மாரீசனின் மாயக்குரல் கேட்டு உயர் மரத்திலிருந்து தரையில்  தவறி விழுந்த குயில் போல் சீதை பெருந்துயருற்ற போதும் கமலக்கண்ணனை யார் என்று தெரியாமல் தேவையற்ற இடரில் ஆழ்கின்றீர் என்று அவளை தேற்ற முயல்கிறான். அவனுக்கு ராமனின் வலிமையில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

எம்‌ கோமகன்‌ இற்று வீழ்ந்தனன்‌ என்னவும்‌,

என்‌ அயல்‌ நிற்றியோ, இளையோய்‌!,  

என்றாள்‌ சீதை. அவதார நோக்கம் என்று எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும் ‘அயல்’ என்கிற ஒற்றைச்சொல் அவனை எவ்வளவு புண்படுத்தி இருக்கும்! ஆயினும் சீதையின் கொடுஞ்சொற்களை அவன் புறந்தள்ளி, அவளை காப்பதில் கண்ணாய் இருக்கிறான்.

Screen grab, ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர்

ராமன் குரலில் அரற்றியது மாரீசன் தான் என்று நேரில் கண்டது போல் சொல்கிறான். ‘நெறி மீறியவன்’ என்று அவனை சீதை பழித்த போதும் தளராதவன், தீயில் விழுந்து உயிர் துறப்பேன் என்றவுடன் வேறு வழி இல்லாமல் அவள் காலில் விழுந்து விடைபெற்று செல்கிறான். அப்போதும் அவளுக்கு ஏதும் இடர் வந்தால் ஜடாயு காப்பாற்றுவான் என்று தன்னையே தேற்றிக்கொள்கிறான்.

விதிக்கும் விதியாகும் என் விற்தொழில் காண்டி என்று கைகேயியை கொல்லப் புறப்பட்ட இலக்குவன், “வெஞ்சின விதியனை வெல்ல வல்லமோ” என உணர்வது அவனின் பரிணாம வளர்ச்சி அல்லது coming of age தருணம் தான்.

சீதையை காணவில்லை என்றவுடன் ‘என் செய்வது என் இளவலே’ என்று மயங்குகிறான் ராமன். சீதையை தூக்கிசென்றவன் இராவணன் தான் என்று அவன் வீணைக் கொடியை வைத்து கண்டுபிடிக்கிறான்.

ஊறின உதிரம்‌, செங்‌கண்‌; உயிர்த்தன, உயிர்ப்புச்‌ செந்தீ;

ஏறின புருவம்‌ மேல்மேல்‌; இரிந்தன சுடர்கள்‌ எங்கும்‌;

கீறினது அண்டகோளம்‌; கிழிந்தன கிரிகள்‌ எல்லாம்‌.

இவ்வாறு சினம் கொள்வது இலக்குவன் அல்ல, ராமன் தான். தனியளாய் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அநீதி நேர்ந்தால் உலகையே எரிக்க ராமன் முற்படுவது நியாயம் எனில் அண்ணனுக்கு முறைப்படி வரவேண்டிய அரச உரிமை, ஒரு சூனியக்கிழவியின் கைதவத்தால் ஓரிரவில் பறிக்கப்படும் போது தம்பி கோபப்படாமல் இருந்தால் தானே தவறு.

வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத்‌ தமியள்‌ வைக,

கொம்பு இழை மானின்‌ பின்‌ போய்‌, குலப்‌ பழி கூட்டிக்‌ கொண்டீர்‌;

உம்‌ பிழை என்பது அல்லால்‌, உலகம்‌ செய்‌ பிழையும்‌ உண்டோ?

என்று ஜடாயுவின் வாய்முகமாக வருவது இலக்குவனின் குரலே.

இங்கு ஒரு role reversal நடக்கிறது. ராமன் மிகுந்த துயர் அடைகிறான். இந்த கணம் முதல் எல்லா முக்கியமான முடிவுகளையும் இலக்குவனே எடுக்கிறான். ராமன் சோர்வுற்று தனிமைத்துயரில் வருந்திய போதெல்லாம் அவனை தேற்றி சீதையை தேடவேண்டியதை நினைவுறுத்துகிறான்.

“விதியின்‌ தன்மை பழியல விளைந்தது ஒன்றோ?

இந்த துயர் ஊழ்வினையால் வந்தது, வருந்திப்பயனில்லை, ஆகவே அரக்கர் உயிர் கொண்ட பின்தான் வேறு எண்ணமே நமக்கு வர வேண்டும் என்று தனக்கு முன்பு ராமன் சொன்ன ‘விதியின் பிழையை’ அவனுக்கே பாடம் சொல்கிறான். மேலும் தந்தை நிலையில் இருந்த ஜடாயுவின் இறுதி சடங்கை முறைப்படி ராமனை செய்ய வைக்கிறான்.

அயோமுகி இலக்குவனை காமுற்று கவர்ந்து சென்ற போதுதான் ராமனுக்கு தான் இலக்குவனை எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்று புரிகிறது. என் தந்தை, தாய், திருமகளை ஓத்த சீதை எல்லோரையும் பிரிந்தும் உயிரோடிருப்பது இலக்குவன் என்னும் மூச்சு காற்றினால்தான் என்று பலவகையாக புலம்புகிறான். கிட்டத்தட்ட ஒப்பாரிதான். தன்னுயிர் போக்கவும் துணிகிறான்.

நாடும் பல சூழல்கள்‌ தோறும்‌ நடந்து;

ஓடும்‌, பெயர்‌ சொல்லி உளைந்து; உயிர்‌ போய்‌

வாடும்வகை சோரும்‌; மயங்குறுமால் ;

ஆடும்‌ களி மா மத யானை அனான்‌

களிமாமத யானை தான், ஆனாலும் அதன் அங்குசம் இலக்குவன். இலக்குவன் மீண்டு வந்து இங்கு ராமனுக்கு உயிர் தந்து காக்கிறான். அயோமுகியை மூக்கறுத்து இலக்குவன் திரும்பி வந்தவுடன், பிரிந்த கன்றினை அரிதின் கண்ட பசுவைப்போல ராமன் கண்ணீர் வடிக்கிறான்.

அரக்கி என்றாலும் பெண் என்பதால் அயோமுகியை உயிர் கோடாமல் விட்டதால் ‘பெருந்தகை ஆனாய்’ என்று ராமன் பொருமி விம்முவான், இவனே தாடகையை பெண் என்பதால் கொள்வதற்கு ஒரு கணம் யோசித்தவன் தானே.

கௌசிகனின் யாகம் காத்த போதோ, கரன் வதை படலத்திலோ, தம்பிக்கு ஒரு வாய்ப்பு கூட தராமல் உற்சாகமாக போர் புரிந்த ராமன், சீதை கவரப்பட்டபின் வில்லை எடுக்கவே கை நடுங்குகிறான். கவந்தனையும் பூதம் என முதலில் தெளிவு கொள்பவன் இளவல் தான். பூதத்திற்கு உணவாக போகிறேன் என்று ராமன் புலம்புகிறான்.

..பல்‌பொருள்‌ முற்றுற்று, ஒருவாத

வேதம்‌ சொல்லும்‌ தேவரும்‌ வீயும்‌ கடை வீயாய்‌;

மாதங்கம்‌ தின்று உய்ந்து இவ்வனத்தின் தலை வாழும்‌

பூதம்‌ கொல்லப்‌ பொன்றுதி என்னின்‌, பொருள்‌ உண்டோ?

ஊழிக்காலத்திலும் அழியாத பரம்பொருளான நீ, ஒரு பூதம் என்னை கொன்று விடும் என்று சொல்லுதல் தகாது என்று கவந்தனை கொள்ளும் வகையையும் சொல்கிறான். ராமன் எவ்வளவு vulnerable ஆக இருக்கிறான் என்பதை முழுதுணர்ந்து ஒரு மனநல மருத்துவனை போல செயல்படுகிறான். இல்லாதன இல்லை இளங்குமர என்ற ராமன், கவந்தன் தன் உண்மையுரு மீண்டு நின்ற போது ‘நீயே இவனை ஆராய்’ என்று பணிக்கிறான். இது அவன் ஈட்டிய மரியாதை, அவன் கடந்து வந்த பாதை.

தசரதனுக்கு அறுபதனாயிரம் அமைச்சர் உண்டு. அவர்களின் தகுதிகள் என ஒரு பட்டியல் கொடுக்கிறான் கம்பன். அதில் முக்கியமானவை சில

சலம்‌ முதல்‌ அறுத்து, அருந்‌ தருமம்‌ தாங்கினார்‌; உற்றது கொண்டு, மேலவந்து உறுபொருள்‌ உணரும்‌ கோளார்‌ ; பால்வரும்‌ உறுதி யாவும்‌ தலைவற்குப்‌ பயக்கும்‌ நீரார்‌; தம்உயிர்க்கு இறுதி எண்ணார்‌; தலைமகன்‌ வெகுண்ட போதும்‌, வெம்மையைத்‌ தாங்க, நீதி விடாதுநின்று, உரைக்கும்‌ வீரர். தெரியும்‌ காலம்‌ மும்மையும்‌ உணர வல்லார்‌; நல்லவும்‌ தயவும்‌ நாடி, நாயகற்கு, எல்லை இல்‌ மருத்துவன்‌ இயல்பின்‌ எண்ணுவார்‌; ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்‌, தொல்லை நல்வினை என உதவும்‌ சூழ்ச்சியார்.

இலக்குவனை மனதிற்கொண்டு கம்பன் இயற்றியவை போல் உள்ளது. இந்த ஒவ்வொரு தகுதிக்கும் (attribute) உறங்கா வில்லியின் ஒரு உதாரணம் சொல்ல முடியும். அறுபதினாயிரம் அமைச்சர் செய்ததை ராமனுக்கு அவன் ஒருவன் ஈடு செய்கிறான். அதை தசரதனும் உணர்ந்ததால்தான் அவனை மார்பு உறஉறத் தழுவினான் போலும்.

எல்லை இல்‌ மருத்துவன்:

ராமனை நடத்தி ருஷியமுகத்திற்கு அழைத்து வருகிறான். சொல்லின் செல்வன் ‘நீங்கள் யாரென்று என் தலைவன் சுக்ரீவனுக்கு உரைக்க?’ என்று வினவ ‘ஆண்தகை; அன்னை ஏவ, தன்னுடைய உரிமைச்‌ செல்வம்‌ தம்பிக்குத்‌ தகவின்‌ நல்கி, நல்‌ நெடுங்‌ கானம்‌ சேர்ந்தான்‌; நாமமும்‌ இராமன்‌ என்பான்‌, இந்‌ நெடுஞ்‌ சிலைவலானுக்கு ஏவல்‌ செய்‌ அடியென்‌ யானே.’ என்கிறான் தம்பி. இதைவிட சொற்களை எப்படி நேர்த்தியாகவும் சுருக்கமாகவும் அடுக்க முடியும்?

எத்தகைய கொடியவன் ஆயினும் ஒரு தம்பி தன் அண்ணனுக்கு கூற்றுவனைக் கொண்டு வந்தான் என்பதை இலக்குவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இவனை எப்படி நம்புவது என்று கேட்கிறான். எல்லாரும் பரதன் போல் உத்தமர் ஆகிவிட முடியுமா என்று ராமன் பதிலளிக்கிறான். ஆகவே தான் சுக்கிரீவனுக்கு இலக்குவன் மூலம் மௌலி சூட்டினான் போலும்.

வாலியுடனான ராமனின் வார்த்தை சம்வாதத்தில் weakest argument ஆக சொல்லப்படுவது, மறைந்திருந்து கொன்றது ஏன் என்ற வாலியின் கேள்விக்கு அளிக்கப்பட்ட பிரதிவாதம் தான்.

செருவில்‌ நீயும்‌, அன்பினை உயிருக்கு ஆகி, “அடைக்கலம்‌ யானும்‌” என்றி என்பது கருதி, அண்ணல்‌, மறைந்து நினறு எய்தது’

என்று ராமனை முந்தி இளையோன் பதிலளிக்கிறான். அதாவது, சரணடைந்த சுக்ரீவனை காக்க ராமன் வாக்குருதி அளித்திருக்கிறான், அவ்வாறே வாலியும் சரணடைந்து விட்டால் யாரை காப்பாற்றுவது என்று குழப்பம் நேருமாம். இந்த போலி சமாதானத்தை ராமன் சொல்லி இருந்தால் அவன் பெற்றி என்னாவது. ஆகவே இலக்குவன் தலை குடுத்தான்.

தம்உயிர்க்கு இறுதி எண்ணார்; ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்‌, தொல்லை நல்வினை என உதவும்‌ சூழ்ச்சியார்

என கம்பன் சொன்னது இதைத்தானே?

கார்காலம் வந்ததும் ராமன் தனிமைத்துயரில் முற்றிலும் மனமுடைந்து போகிறான். மீண்டும் இங்கே இலக்குவனே அவனைத் தேற்றுகிறான்.

“நின்னை எத்‌தகையை ஆக நினைந்தனை” என ஒவ்வொரு நொடியும் ராமனுக்கு ராமனையே நினைவூட்டும் நிலையில் இருக்கிறான்.  

அனுமனின் அறிவு, சுக்ரீவனின் படை விஸ்தாரம், அங்கதன் முதலானோர் பலம், இவை அனைத்தையும் சொல்லி உன் புருவ வளைவின் சிறிய அசைவை அரக்கர்களாலே தாங்க முடியுமா என்று தைரியம் ஊட்டுகிறான். ஒரு சிறந்த அமைச்சனாக அவர்களிடம் இருக்கும் சாதகமான அம்சங்கள் எல்லாவற்றையும் தொகுத்து சொல்கிறான்.

ஒரு கட்டத்தில், தான் உயிர் விடுவதே மேல் என்று ராமன் நினைக்கிறான். ‘நோய்‌ தெற மாண்டனன்‌ என்றது! மாட்சிப்பாலது’, ”நிற்கு இவள்‌ கையடை” என்ற சனகனின்‌ சொல்லை பொய்‌ ஆக்கினேன், இனி விளிதல் (இறத்தல்)‌ நன்று என்று முடிவெடுக்கிறான். இன்றைய கால கட்டத்தில் இதை நாம் மன அழுத்தத்தை (depression) தொடர்ந்து வரும் தற்கொலை எண்ணங்கள் என்று புரிந்து கொள்ளலாம். ராமன் எவ்வளவு vulnerable ஆக இருக்கிறான் என்பதை முழுதுணர்ந்து ஒரு மனநல மருத்துவனை போல செயல்படுகிறான்.

இங்கு இலக்குவன் ஆற்றும் உரை அவன் அறிவுத்திறனையும், நுண்ணுணர்வையும் காட்டும்.

  • ராவணன் உறைவிடம் காணும் காலம் நெருங்கி விட்டது கவலை கொள்ள வேண்டாம்
  • தன்னிடமுள்ள அமுதத்தை பரம்பொருளான திருமால் கேட்டிருந்தாலே பாற்கடல் கொடுத்திருக்கும், ஆயினும் அவன் மந்தர மலை கொண்டு கடைந்தே பெற்றான்.
  • நினைத்த மாத்திரத்தில் உலகங்கள் யாவும் படைத்து உண்டு உமிழும் திறன் கொண்ட உலகம் உண்ட பெருவாயன் என்றாலும் கொடியோரை முறைப்படி படை திரட்டி போர் செய்தே வெற்றி கொள்வான்.
  • திரிபுரங்களை அழிக்க தன் நெற்றிக்கண் ஒன்றே போதும் எனினும் தேவர் துணை கொண்டே சிவபிரான் அதை நடத்தினான்.
  • நமக்கு உதவத்தக்கவர் யாவரையும் துணை கொண்டு, ஆலோசிக்க வேண்டிய விஷயங்களை பல முறை விவாதித்து, தக்க சமயத்தில் செயலாற்றி பெறுவதே வெற்றி வாகை, அதை தவறவிடலாமா?
  • அறம்‌ வெல்லும்‌ பாவம்‌ தோற்கும்‌’ என்பது உறுதியாதலின்‌ ஆற்றல்‌ உடையராயினும்‌ அரக்கர்கள்‌ அறநெறி தவறியவர்களாதலின்‌ அவர்கள்‌ பழியையும்‌ தோல்வியையும்‌ பெற்று அழிவர்.

இந்த உரைக்கும் அவன் மீதுள்ள முன்கோபி என்ற பிம்பத்திற்கும் தொடர்பில்லை. அவன் அதை அயோத்தியிலேயே விட்டு வந்து விட்டான்.

ராமன் சொல்லாலே கூறுவது என்றால் நான் மனமுடைந்து போகும் போதெல்லாம் தேற்ற நீ இருக்கிறாய், நானும் உயிர் மீண்டேன். ஆனால் சீதைக்கு யாருளர் என்கிறான்.

அண்ணல் தன் ஆதிமூர்த்தி:

கார்காலம் முடிந்து நெடு நாள் ஆகியும் சுக்ரீவன் வராதபோது ராமன் பதட்டமும் பொறுமை இன்மையும் கோபமும் கொண்டவனாக இருக்கிறான்.

பாலாசாஹேப் பண்டித் பந்த் பிரதிநிதி

இம்பர்‌ நல்‌ அறம்‌ செய்ய எடுத்த விற்‌ கொம்பும்‌ உண்டு;

அருங்‌ கூற்றமும்‌ உண்டு; உங்கள்‌ அம்பும்‌ உண்டு

என்று சொல்லு, நம்‌ ஆணையே

என்று பணிக்கிறான். அடுத்த நொடியே எக்காரணம் கொண்டும் சினத்தினால் அவர்களை கொன்று விடாதே, நல்வழி சொல்லி அவர்கள் கருத்தை ஆராய்ந்து வா என்கிறான்.

ராமனின் அந்தரங்கமும், முன் கோபமும், சிறுமைகளும் அறிந்தவன் அவன் ஒருவனே, உண்மையில் இந்த சூழ்நிலையில் அவனைத்தனியே விட இலக்குவனுக்கு மனமில்லை (அந்த மனம் இலக்குவனுக்கு எப்போதும் வராது என்றாலும்), ஆகவே சேணின் நீங்கினாலும், சிந்தையில் நீங்காமல் கடிது சென்றான்.

பார்‌ குலாம்‌ முழு வெண்திங்கள்‌, பகல்‌ வந்த படிவம்‌ போலும்‌ ஏர்‌ குலாம்‌ முகத்தினாள் ராஜ மாதா என உருக்கொண்ட தாரையை கண்டவுடன் அவன் சுமித்திரையை மட்டும் நினைக்கவில்லை, கோசலையையும் சேர்த்தே நினைத்து வருந்துகிறான்.

ராமனின் துயரத்தை மிக சொற்பமான சொற்களில் அவனால் சொல்லி விட முடிகிறது.

‘தேவியைப் பிரிந்த துயரமும் மானத்‌ தீயும்‌ அவன் ஆவியைக்‌ கொள்கிறது. அதை என்னால் பார்த்துகொண்டிருக்க முடியாது, கொடிய பாவியர்க்குரிய செயல்களை செய்யக்‌ கருதியுள்ளேன், பழியும்‌ பாரேன்’‌ என்கிறான். இலக்குவனுடைய அறம் என்பது ராமனின் நலன் மட்டுமே.

சொல்லின் செல்வன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரே இடம் இது தான். தாழ்வித்தர்‌ அல்லீர்‌; பல்‌ நாள்‌ தருக்கிய அரக்கர்தம்மை வாழ்வித்தீர்‌; முனியாதானை முனிவித்தீர்‌, முடிவின்‌‘ என ‘Justice delayed is justice denied’ என்பதை அனுமனுக்கு உணர்த்துகிறான்.

அது மட்டுமல்ல, ‘உன்னுடைய பரிந்துரையின் பேரில்தான் நாங்கள் சுக்ரீவனுடன் நட்புகொண்டோம்’ என்று அனுமனிடம் அவனுக்கு இருக்கும் பொறுப்பை நினைவூட்டுகிறான், அது சுக்ரீவனுடைய கடன் மட்டுமல்ல.

மனத்து வந்து பொங்கிய சீற்றம்‌ பற்றிப்‌ புகல்கிலன்‌; பொருமி நின்றான்” கொண்ட காரியத்தில் கண்ணாக தன்னுடைய கோபத்தை காட்டாமல் அமைதி காத்து நின்றான். இவன்தான் முன்பு கைகேயி இழைத்த தீங்கிற்காக அண்டகோளத்தையே எரிக்க புறப்பட்டவன்.

www.divyaprabhandam.koyil.org

இராமானுசர் ஆயிரம் சமணர்களுடன் ஆதி சேஷன் வடிவு எடுத்து ஆயிரம் தலை கொண்டு ஒரே சமயத்தில் வாதிட்டு வென்றார் என்பர். அதே போல இலக்குவன் கிஷ்கிந்தையின் தெருக்களில் நடந்து செல்லும் போது மணிகள் பதித்த பெரிய தூண்களில் அவன் பிம்பம் பிரதிபலித்து ஆயிரம் இலக்குவன் வந்தது போல் இருந்தது என்கிறான் கம்பன்.

தூய திண்‌ பளிங்கின்‌ செய்த சுவர்களின்‌ தலத்தில்‌, சுற்றில்‌,

நாயக மணியின்‌ செய்த நனி நெடுந்‌ தூணின்‌ நாப்பண்‌,

சாயை புக்கு உறலால்‌, கண்டோர்‌ அயர்வுற, ‘கை விலோடும்‌

ஆயிரம்‌ மைந்தர்‌ வந்தார்‌ உளர்: எனப்‌ பொலிந்தது அவ்‌ ஊர்‌,

கள் மயக்கத்தில் கிடந்த கிஷ்கிந்தையையே இலக்குவன் என்னும் அறத்தின் ஆறு எழுப்பி பொலிவடையச்செய்கிறது.

வானரப் பெண்கள், சுண்ணம் தூவி, வெண்சாமரம் வீச, ஷோடச உபசாரம் செய்யும் மகளிர் தொடர, சந்திரனை மொய்க்கும் நட்சத்திரங்கள் என தன்னை விரும்பும் பெண்கள் கூட்டம் புடைசூழ, திசைகளை அளக்கும் படி இசை முழங்க, தனக்கு கிடைத்த புதிய செல்வத்தால் தேவரும் மருளும் படி போகத்தின் மொத்த உருவாக சுக்ரீவன் தோன்றினான். அவனை தன் ஒற்றை வில்லுடன் தனியனாக எதிர்கொண்டான் இலக்குவன். இந்த காட்சியை போகத்தை நல்வழிபடுத்தும் அறம் எனப்பார்க்கலாம். அவன் கொண்ட அறம் அண்ணனின் நலம்.

சுக்ரீவன் தன்னை அரியணையில் இருக்க சொன்ன போதும், ‘திருமகள் தலை மகன் புல்லில் இருக்க, நான் அரியணையில் அமர்வது உரியதோ’ என்கிறான். இந்த ஒரு சொல் சாட்டை என சுக்ரீவனை தாக்குகிறது. அவனை மட்டுமல்லை கிஷ்கிந்தையே தன் தவறை நினைத்து வருந்துகிறது, வெட்கமுறுகிறது. போகத்தின் வடிவமாக இருந்த கிஷ்கிந்தை மக்கள் ஆதிசேஷனின் பாதம் பட்டதால் அறவழி மாறினர்.

சுக்ரீவன் இலக்குவனை மஞ்சனமாடி விருந்து அமுது செய்ய அழைக்கிறான். தேவியைப் பிரிந்த துன்பமும் மாறாப்பழியும் எங்களை மூழ்கடித்துக்கொண்டிருக்க நீ கொடுக்கும் அமிழ்தும் கரிக்கும் என்கிறான், மேலும்,

‘சீதையை தேடி தருவதே எங்களுக்கு நீ வழங்கக்கூடிய அமுதாகும், எங்களைச்சுற்றி மூண்டுள்ள பழி என்னும் தீயிலிருந்து காத்து அருள்வாய்’ என்று அவனுடைய கடமையை உணர்த்துகிறான். அது எங்களுக்கு பாற்கடல் அமுதம் அளிப்பதற்கும் கங்கையில் நீராட்டுவதற்கும் சமம் என்கிறான்.

இறுதியாக, நான் சமைத்த உணவையே ராமன் உண்பான், அவன் உண்டபின் அதில் எஞ்சியதையே நான் உண்பேன், அது தவிர எனக்கு மற்ற அனைத்துமே நாய் உண்ட எச்சிலே என்கிறான்.

இலக்குவன் வார்த்தைகளால் மட்டுமல்லாது தன்னுடைய தூய இருப்பால் (sheer presence-ஆல்) தூதுச் செய்தி அனைத்தையும் கடத்தி விடுகிறான். அதனாலேயே சுக்ரீவன் ஒரு கணம் கூட தாமதியாமல் அவனுடனேயே புறப்பட்டு விடுகிறான். கிஷ்கிந்தையின் சூழ்நிலையை ஆராய்ந்து வா என்று தான் ராமன் அனுப்புகிறான், ஆனால் இலக்குவனோ கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருபவன், தூது இருநூறு சதவிகித வெற்றி !

பேரிடர் யாவையும் நின்னால் தீரும்:

சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்;

 நின்றால் மரவடியாம்; நீள் கடலுள்

என்றும் புணையாம்; மணி விளக்காம்; பூம்பட்டாம்;

புல்கும் அணையாம் திருமாற்கு அரவு.

படம் – லக்ஷ்மி நாராயணன்

இந்த திவ்ய பிரபந்த பாசுரத்தில், திருமாலுக்கு எல்லாமுமாக இருக்கும் ஆதிசேஷனின் பெருமை சொல்லப்படுகிறது. பரமனுக்கே இருள் நீக்கி வழி காட்டும் மணி விளக்கு அவன் தான். அது மட்டுமல்ல அவன் புல்கும் அணையும் அவனே! Teddy bear இன்று வந்த மோஸ்தர் அல்ல. அத்தகையவன் பூமிக்கு வந்த போதும் தன் கடமையை விடாது தொடர்கிறான். புல்கும் அணையாய் மட்டுமல்ல ஒரு punching bag ஆகவும் இருந்து ராமன் துயர் துடைத்து காப்பியத்தை கரை சேர்க்கிறான்.

பரதன், குஹன், அனுமன், வீடணன், தசரதன் ஏன் சூர்ப்பணகை  உட்பட பலர் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்தவன் அவன் ஒருவனே. ஆனால் அந்த பாதை எளிதல்ல.

கான் வாழ்வில் ராமன், குஹன், சுக்ரீவன், வீடணன் ஆகியோரை தம்பியராய்ப் பெற்றாலும், பால காண்டத்திற்கு பிறகு ராமன் தன்னுடையது ஒவ்வொன்றையும் தொடர்ந்து இழந்த வண்ணம்  இருக்கிறான், ஒரு வகையில் துறவு.

என்னைத் தரும்‌ எந்தையை, என்னையரை,

பொன்னைப்‌ பொருகின்ற பொலங்‌ குழையாள்‌

தன்னை, பிரிவேன்‌; உளன்‌ ஆவதுதான்‌,

 உன்னைப்‌ பிரியாத உயிர்ப்பு அலவோ

முறைமைப்படி தனக்கு உரிய நாட்டையும், ஆருயிர் தந்தையையும் இழக்கிறான், தன்னிலும் சிறந்த பரதனையும் தாயரையும் பிரிகிறான், பெருங்காதல் மனையாளை தொலைத்து தவிக்கிறான். ஆயினும் அவன் எஞ்சுகிறான், சீதையின் பிரிவைத்தவிர எதுவும் அவனைப் பெரிதாக பாதிக்கவில்லை.  ஆனால் அந்த ராமனாலேயே தாங்க முடியாத ஒன்று இலக்குவன் பிரிவு.

பிரிபவர்‌ யாவரும்‌ பிரிக; பேர்‌ இடர்‌ வருவன

யாவையும்‌ வருக; அவை யாவும் நின்னால் தீரும்‌.

இது அயோமுகி இலக்குவனை கடத்தி சென்ற போது ராமனின் வாக்குமூலம், பாடலுக்கு விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன். நீரும் மீனும் ஒன்றை ஒன்று நம்பி வாழ்கின்றன.

என்றும் சீதைக்கு காப்பு நாண் அவனே. இலக்குவனிடம் கூறிய கொடுஞ்சொற்களால் எங்கே ராமன் தன்னை நிர்கதியாய் விட்டுவிடுவானோ என ஐயுறும் சீதைக்கு இலக்குவனிடம் எந்த சந்தேகமோ, உரிமையாக ஆணையிடுவதில் எந்த குற்ற உணர்வோ இல்லை.  அசோகவனத்தில் அனுமன் சீதையிடம் ராமனுக்கு என்ன செய்தி சொல்ல வேண்டும் என்று கேட்கும் போது,

ஏத்தும்‌ வென்றி இளையவற்கு, ஈது ஒரு வார்த்தை கூறுதி;

மன்‌ அருளால்‌ எனைக்‌ காத்து இருந்த தனக்கே கடன்‌,

இடைகோத்த வெஞ்சிறை வீடு” என்று கூறுவாய்.

என்னை காக்கும் பொறுப்பு என்றைக்கும் இலக்குவனுடையதே அதைத்தெரிவி, என்கிறாள்.

ஒரு சிறந்த தம்பிக்கு ராமனின் benchmark என்றும் பரதன் தான். பல தருணங்களில் அதை சொல்லிக்கொண்டே இருக்கிறான். மனம் திருந்தி தன்னைக்கான வரும் சுக்ரீவனை ‘பரதன் நீ’ என்கிறான். இலக்குவனை எங்குமே சிறந்த தம்பியாய் சொல்லவில்லை. ஏனெனில் அவன் இலக்குவனை தன்னில் ஒரு பகுதியாகவே பார்க்கிறான், பிறிதொருவனாக பார்க்க முடியவில்லை. ராமன் இரவெனில், அவன் இரவின் நிழல்.

ஆனால் இலக்குவன் அவனை அண்ணனாய் பார்ப்பதில்லை, அவன் தன்னை என்றும் ராமனின் தொழும்பனாய்தான் நினைக்கிறான். சுமித்திரையின் விடைபெறுதலுக்கு பின் அவன் ஒரு முறை கூட ராமனை அண்ணன் அன்று விளிக்கவோ, அறிமுகப்படுத்தவோ இல்லை. இது கம்பனின் வார்த்தை விளையாட்டு என்று புரிந்தாலும் இலக்குவனுக்கு மட்டுமே பொருந்திப்போக முடியும். ராமனை சுற்றி இருபவர்கழி ஒரு agenda வும் இல்லாமல் இருப்பவன் அவன் மட்டுமே.

வைணவ குருபரம்பரையில் நடுநாயகமாய் வீற்றிருப்பவர் இராமானுசர். அவருடைய சம்பந்தத்தாலேயே திருமாலை சரணடைந்தோர் அனைவருக்கும் மோக்ஷம் என்பது வைணவர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட ராமானுசரே முக்குறும்பு அழித்த கூரத்தாழ்வான் தன்னுடைய சிஷ்யனாக அமைந்ததால்  தனக்கு மோக்ஷம் கண்டிப்பாக கிட்டும் என நம்பினாராம்.

அது போல குஹன், பரதன், அனுமன், சுக்ரீவன், தயரதன் தொடங்கி அயோத்தி மக்கள் அனைவரும் கார்முகில் வண்ணனுடன் கூடியிருந்து குளிர ஆசைப்பட்டனர், ஆனால் ராமனோ தனக்கு நல்வினைப்பயன் இருக்குமானால் அடுத்த பிறவியில் உறங்காவில்லி தனக்கு தமையனாக பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.

அறப்‌ பால்‌ உளதேல்‌, அவன்‌ முன்னவனாய்ப்

‌ பிறப்பான்‌ உறில்‌, வந்து பிறக்க

இலக்குவன் பற்றி பேச்சு வந்த போது, நண்பர் கமலநாதன் ‘அவன் ஒரு wartime prime minister போல, உச்சங்களால் ஆனது அவன் வாழ்க்கை. ஒரு சாதாரண eventless நாளுக்கு அவன் தேவை இல்லை, படைக்கப்படவும் இல்லை, ஆனால் சங்கட காலத்தில் அவனைப்போல துணை யாருமில்லை. ’ என்றார்.  

காட்டில் கால் வைத்ததுமே ராமனின் வாழ்க்கை roller coaster பயணம் போலவே உள்ளது, அதன் wartime prime minister இலக்குவன் தான்.

நாம் காணும் ராமன் என்ற பிம்பத்தை உருவாக்கியதில் இலக்குவன் பெரும்பங்கு வகிக்கிறான். யுத்தமோ, ராவண வதமோ ராமனுக்கு ஒரு பொருட்டே அல்ல, நாமறிவோம் அவன் இடக்கை கோதண்டம் அதைச்செய்யும், ஆனால் ராமனை தனிமைத் துயரிலிருந்து, பழி உணர்விலிருந்து தேற்றி, அவனை பாதுகாத்து சீதையிடம் ஒப்படைக்கிறான்.

எனில் இலக்குவனில் குறைகளே இல்லையா?

பரதனை அவன் கைகேயியுடன் ஒன்று கூட்டி தவறாக கணிக்கிறான். கோசலையும் குஹனும் கூட இதே தவறைச் செய்கிறார்கள், ராமன் மீது கொண்ட பாசத்தால் என்றாலும் அது தவறே.

தசரதன் இல்லாமல் கூற்றென தனியே வந்த கைகேயியின் சொல் கேட்டதும் ஒரு கணத்தில் ராமன் அனைத்தையும் ஊகித்து அறிகிறான், இது விதியின் விளையாட்டு, செய்வதற்கொன்றுமில்லை. பெரிதும் விதந்தோதப்படும் ராமனின் குணத்தின் செம்மை தாண்டி இங்கே அவன் அறிவு நுட்பம் வெளிப்படுகிறது. ஆனால் இதைப்புரிந்து கொள்ள இலக்குவனுக்கு ராமனின் விளக்கவுரை தேவைப்படுகிறது, முழுதுணரவோ பதிமூன்றாண்டு கால வனவாசமும் அவசியமாகிறது.

ஒரு அமைச்சனாக செயல்படும் இலக்குவனின் position அனுமன் வந்த பின் அதன் relevance (அவசியம்) பெரிதும் இழந்து விடுகிறது. வீடணன் அடைக்கலம் கோரும் போது, கோயிலில் எல்லோரிடமும் அர்ச்சனை தட்டை தொட்டு வாங்குவது போல் பேருக்கு சுக்ரீவன் முதலியோரிடம் ஆலோசனை கேட்டு கடைசியில் அனுமன் சொன்னதையே செயல்படுத்துகிறான் ராமன். இலக்குவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, அது அரசவை என்றாலும்  கூட.

மாரீசன் சூழ்ச்சியின் போது, இலக்குவன் சொன்ன எச்சரிக்கை வார்த்தை எல்லாம் உண்மை என்றாலும் கூட அவன் ராமனிடமோ, சீதையிடமோ வினயத்துடன் பேசி காரியம் சாதிக்க முயன்றதாக கொள்ள முடியவில்லை, அவர்கள் செய்கை அவனுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது, அது பதிமூன்றாண்டு கால காத்திருப்பின் எரிச்சல். கடைசி நேரத்தில் பானை உடைபடுவதை அவன் விரும்பவில்லை, நம்மையே அறியாமல் நாம் அனுமனுடன் ஒப்பிட தொடங்குகிறோம்.

அனுமனின் விநயம், வாக்கு சாதுரியம் முன் யார்தான் போட்டி போட முடியும்? ராமனே ‘மறைகளாலும் கோட்படா பதமே குரக்கு உருக்கொண்டது’ என்று வியந்தவன் தானே அவன்.

அப்படியானால் இலக்குவன் எவ்வாறு அடையாளப்படுத்தபடுவான்? அவனில் எஞ்சுவது என்ன ?

“ஐயனும், இளவலும் அணிநிலமகள் தன்

செய்தவம் உடைமைகள் தெரிவர, நதியும்

மை தவழ் பொழில்களும், வாவியும் மருவி

நெய் குழல் உறும் இழை என நிலை திரிவார்.”

இந்த பாடல் பால காண்டத்தில் தசரத குமாரர்கள் நால்வரும் கல்வி கற்று, வளரும் பருவத்தில் வருகிறது, முதல் முறையாக கம்பர் இலக்குவனை அறிமுகம் செய்கிறார், ஊன்றிப் பார்த்தால் அவன் பெயரையே குறிப்பிட வில்லை ‘இளவல்’ என்று மட்டும் தான் சொல்கிறார், மற்ற இருவரையும் கூட குறித்திருக்கலாம், ஆனால் நமக்கு இளவல் யார் என எந்த சந்தேகமும் எழவில்லை.

நெசவுக் குழலையே பின்பற்றி அதனைத்தொடர்ந்து செல்லுவது நூலின் இயல்பு, இலக்குவனும் பல சமயம் குழலாக விளங்குவான், அவனை நூலென பின்தொடர ராமனுக்கு எந்த கூச்சமோ தன்மானக்கேடோ (ego) இல்லை.

ராமன் மீது எவ்வளவு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவன் எதிரிகளும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும் ஒன்று உண்டு, ‘வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தான் வள்ளல்’.  அதே போல எந்தப்பலனும் எதிர்பாராமல் தொழும்பனாய் அவன் பின் நிழலென ஏகினான் இளவல்.

‘கான்‌ ஆள நிலமகளைக்‌ கைவிட்டுப்‌ போனானைக் காத்து,

பின்பு போனானும்‌ ஒரு தம்பி!’

அதுவே அவன் அடையாளம்.

ஆசிரியர் குறிப்பு:

வெ.லக்ஷ்மி நாராயணன். சொந்த ஊர் மதுரை, குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். இலக்கிய வாசகர். மூன்று ஆண்டுகளாக இம்பர்வாரி வழியாக கம்பனைக் கற்று வருகிறார்.



Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading