பண்டு, நமது மரபில் வனம் செல்வதென்பது நிகழ்வதே.
துறந்தவர் மெய்மை நாடி செல்வர்; வயதில் முதிர்ந்தவர், தன்னிறுதி வனத்தில் நிகழ விழைந்து, வனப்பிரஸ்தம் மேற்கொள்வர்; வேந்தர்கள் வேட்டையாட தனித்தும் படை சூழவும் வனத்திற்கு ஏகுவர்; இவ்வாறும், இன்னும் பலவகை காரணங்களுக்காகவும் வனம் புகுதல் நிகழலாம்.
நம்முடைய இரு பெரும் இதிகாசங்கள் இரண்டிலும் கதை நாயகர்கள் வனம்புகுதல் முக்கிய நிகழ்வாகிறது. அணுக்க உறவுகளின் மன இருளினால் நாயகர்களை அல்லலுக்குள்ளாக்க திட்டமிடப்படும் அது, அவர்கள் பொலிவதற்கும், அரியனவற்றை அடைவதற்குமான காலமாய் அமைகிறது.
ஒரு கோணத்தில் நோக்கின் ராமனின் வன வாழ்வே கம்பனின் காவியமாகியிருக்கிறது. ராமனின் பிறப்பும், மணமும் பாலகாண்டத்திலேயே நடந்தேற, அடுத்து வரும் அயோத்யா காண்டத்திலேயே வனம் புகுதல் நிகழ்கிறது. பின்னர் மொத்த காவியமும் வனத்திலேயே நிகழ்ந்து, வனவாசம் முடிகையில் காவியமும் நிறைகிறது. ராம காதையைப் பாடும் கம்பன் இவ்வாறு அமைத்துப் பாடியிருப்பதே வனம் புகுதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ராமன் வனம் புகுவது கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் நிகழ்கிறது. ராமனது வன வாழ்வு எவ்வாறு அமைய வேண்டுமெனவும் கைகேயியினாலேயே வரையறுக்கப் படுகிறது.
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று, இயம்பினன் அரசன்’ என்றாள்.
என்ற வரிகளால் அரச முறைமைகளின்றி தவமுறைமைகளையே ராமன் பேணவேண்டும் என்பது தெளிவு. அதை மனமுவந்து ஏற்கிறான் ராமன்.
*
பெருங்குலத்துதிக்கும் பேராளுமைகளின் வாரிசுகளுக்கு ஒரு சிக்கலுண்டு. தனித்திறனுடன் செயலாற்றி அவர்களீட்டும் வெற்றி தனித்த, அவர்களுக்கேயானதாக மட்டும் நோக்கப்படாது; குலப்பின்னணியாலேயே அது கனிந்ததாக பொருள்கொள்ளப்படும். இச்சிக்கலிலிருந்து வனவாசத்திற்கென அவனுக்கிடப்பட்ட நிபந்தனைகளாலேயே இயல்பாக வெளி வருகிறான் ராமன். வனத்தில் அவனீட்டும் உறவுகளும், வெற்றிகளும் தனித்த அவனுடையதாகின்றன.

வனத்தில் நுழையும் முதல் பாடலிலேயே,
வெய்யோனொளி தன் மேனியின் விரி சோதியில் மறைய
என்கிறான் கம்பன். ராமன் ஆரண்யத்தில் பேரறத்தானாக, பெருவீரனாக, பெருங்கருணையாளனாக , பெருந்துயரிலும் மாறாத பெரு நெறியாளனாக மிளிரும் விரியொளியின் முன் சூரியகுல ஒளி குறைவாகத்தான் இருக்கப் போகிறது. ராமன் என்ற ஆளுமை வடிவம் என்றென்றைக்கும் அழியா புகழ் பெற்றதென்பது கம்பன் சொல். ரகு குலத்து ராமன் என்பதினும் ராமன் பிறந்த ரகுகுலம் என்பதாகத்தானே பெரும்பாலும் அறியப்படுகிறது. இது ஆரண்யத்தால் அவனடைந்தது.
*
வன வாழ்வில் ராமன் முதலில் திளைப்பது தனிமையின்பம். எப்பொழுதிலும் அரசமுறைமைகளுடன் அரச சுற்றங்களுடன் இருப்பதிலிருந்து விலகி கிடைக்கும் ஏகாந்தம் அவனுக்கு மகிழ்வையளிக்கிறது. சித்திரகூடம் முதலான அனைத்து இடங்களிலும் இயற்கையுடன் இயைந்த, விட்டு விடுதலையான களிப்பை ராமனிடம் காண்கிறோம்.
ஓதிமம் ஒதுங்க, கண்ட உத்தமன், உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாதுஅவள்தானும், ஆண்டு வந்து, நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர் முறுவல் பூத்தாள்
இவ்வாறான காட்சிகளால் இனிமை கொள்கிறது வனவாழ்வு.
*
ஆரண்யத்தில் தனக்கேயான பெரும் உறவுகளைப் பெறுகிறான். அத்தனை பேரும் அவனின் பேராளுமைக் குணத்தினால் அவனை வந்தடைந்தவர்கள்.
கங்கைக் கரையில் கண்டு ஆரண்யத்தில் அவனடைந்த முதல் உறவான குகன் ஆயிரம் நாவாய்களின் தலைவன். அப்பகுதியில் வெல்ல முடியாதவனாக நீர்நிலையை ஆள்பவன். அயோத்தி ராமன் என்பதால் கையுறையுடன் வந்து காணும் மரியாதை நிமித்தமான சந்திப்பில் இராமனின் வனம் புகல் விளைய காரணமென்னவென கேட்டறிகிறான். இராமனின் பால் பேரன்பும், பெரு விருப்பும் கொண்டவனாகிறான்.
தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்
கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்;
என்று கூறி இராமனை தன்னுடனேயே தங்க வேண்டுகிறான்.

தான் அவ்வாறு இருக்க இயலாதென விளக்கி நாவாய் கொணரச் செய்து சித்திரகூடம் நோக்கி ராமன் செல்கையில்,
கல்லுவென் மலை; மேலும் கவலையின் முதல் யாவும்;
செல்லுவென் நெறி தூரம்; செறி புனல் தர வல்லேன்;
வில் இனம் உளென்; ஒன்றும் வெருவலென்; இருபோதும்மல்ல
னும் உயர் தோளாய்!- மலர் அடி பிரியேனால்;
என்று உடன் வர குகன் இறைஞ்சுகிறான். அவனின் இனிய அன்பையுணர்ந்துருகிய ராமன்,
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;
என அவனை உடன்பிறந்தானாக ஏற்கிறான். இராமனின் மனவிரிவை நாம் உணர வனம்புகல் தந்த தருணமது.
*
தவசீலர் நாட்டுக்கு வந்து அவர்களை வணங்கி பணிந்து உபசரித்தல் வேறு. அவர்களிடத்தில் அவர்களை சந்தித்து தவவாழ்வை அருகிருந்து நோக்கி தானும் இயைந்து தவவாழ்வில் திளைத்தல் மெய்மையை அணுகும் பேரனுபவம் வேறு. வனவாசத்தால் மட்டுமே அடையக் கூடியது அது. அப்படிப்பட்ட அருமையான தருணங்களைக் கானகத்தால் அடைகிறான் ராமன். கங்கைக் கரை முனிவர்கள், பரத்வாசர், சரபங்கன், தண்டகாரண்ய முனிவர்கள் மற்றும் சுதீக்ணன், அகத்தியர் ஆகிய முனிவர்களையும் கானகத்தில் சந்திக்கிறான். ஆசியையும் அன்பையும் பெறுகிறான். தண்டகாரண்யத்தில் முனிவர்களுடன் பத்தாண்டுகள் இருக்கும் பேறடைகிறான்.
*
ஆரண்யத்தில் தவ வாழ்வைப் பேணினாலும் தன்னை ஒரு மன்னனெனன்றே உணர்கிறான்.
மற்றையோரும் அவனைக் காண்பது அவ்வாறே. அப்படியானால் கானகத்திற்கான தவ நிபந்தனையை ஒழுகவில்லையா என்றால்… அவ்வாறில்லை; ஒரு மன்னன், மன்ன குலத்தவன் பேணும் தவவாழ்வையே அவன் பேணுகிறான். மரவுரியுடுத்து, சடாமுடியுடனிருப்பவன் அணியும் வில் அதைக் காட்டுவதே.
மன்னனின் மகனென, தண்டகாரண்ய முனிவர்கள் அவனை ‘மன்னவன் புதல்வ’ என்றழைத்து தாங்கள் அறவழியொழுக இயலாமல் தடுக்கும் இன்னல்களை போக்க,
அருளுடை வீர! நின் அபயம் யாம்’
என்று வேண்டுகின்றனர். அவ்வாறு அபயமளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது, ஆரண்யத்தால் தான் அடைந்த நன்மை என்கிறான் ராமன்.
வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும்,
ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம்
போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்’
என்பது ராமன் கூற்று.
அகத்தியரின் ஆசியுடன் அஸ்திரங்களையும் வனத்திலுள்ள அவர் ஆசிரமத்தில் சந்தித்து பெறுகிறான்.
*
வனத்தில் பலவகையான ஆளுமைகளை சந்தித்து பல அனுபவ அறிதல்களையடைகிறான்.
விராதன், கவந்தன் ஆகியோர் எதிர்ந்து இராமனால் வென்றருளப் பட்டு அவன்பால் பேரன்பு கொள்கின்றனர். சரபங்கன், சவரி போன்றோர் ஏதுவாகவே அவனால் ஈர்க்கப்பட்டவராய் சந்தித்து வேண்டியதைப் பெற்று பேரன்பு பூண்டவராகிறார்கள். இந்திரனைக் கண்டு அவனின் துதியையும் பெறுகிறான். காட்டினில் தந்தையின் உற்ற நண்பரான ஜடாயுவைக் காண்கிறான். அன்பையும் ஆசியையும் பெறுகிறான்.
இவ்வாறாக தனித்திறனால், வீரத்தால், காருண்யத்தால், அன்பால் வனத்தில் அவனடைந்த உறவுகள் நீண்டவை.
*
சூர்ப்பணகையைக் கண்டு அவளின் மோகத்தை எள்ளி மறுக்கிறான்; இளையோனால் அவளை தண்டிக்கவும் செய்கிறான். அதன் விளைவால் படையுடன் வரும் கரன், தூடணன், திரிசரன் ஆகியோரை தனது ஒற்றை வில்லால் இலகுவாக வென்று, ஒப்பற்ற தன் வில் திறனை உலகுக்கு பறைசாற்றுகிறான்.
இது கானகத்தில் அவனின் வீரத்தால் ஈட்டிய வெற்றி.
*

சூர்ப்பணகையை சீண்டியதன் விளைவால் இராவணன் என்னும் முதன்மையெதிரி இராமனின் வாழ்வுக்குள் வருகிறான். அதுவரை அவனீட்டிய வெற்றிகள் அனைத்தும் அவனுக்கு இலகுவானவை. அதுவரை அவன் சந்தித்த இக்கட்டுகள் அனைத்தும் அவன் சமநிலையைக் குலைக்காதவை.
அவனை உற்றவரை பெருங்கொந்தளிப்பிலாழ்த்தும், உற்றவருக்கு பேரதிர்ச்சியையும் பெருந்துயரைளிக்கும் அனைத்தும் அவனால் முன்னுணரப்பட்டு அறிந்தவை, கையாள எளிதானவை. அவனின் எழில் முறுவலை மாற்றாதவை.
ஆனால் இராவணனின் முதற் தாக்குதலே இராமனுக்கு பேரிடியாய் அமைகிறது. மாயமானில் அவன் இளவல் குறிப்புணர்த்தியும் தன் அதீத நம்பிக்கையால் சறுக்குகிறான். விளைவாக ஆருயிர்த் துணைவி சிறையெடுக்கப் படுகிறாள். ராமன் ஆரண்யத்துள் அடைந்த பெருந்துயரது.
*
ஜடாயு அவர் தன் ஆருயிரையும் சீதையைக் காக்கும் பொருட்டளிக்கிறார். உயிர் விடும் முன் இராமனுக்கு ஆறுதல் அளித்து, அவன் செய்த பிழையைச் சுட்டும் பெரியவராயும் இருக்கிறார்.
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?
என்ற ஜடாயு கூற்றால் தன் பிழையையுணர்ந்து அறிதல் பெறுகிறான் ராமன்.
*
அடைந்த பெருந்துயரைச் சுமந்து, இளவலுடன் வரும் இராமனுக்கு அனுமனை அளிக்கிறது கிட்கிந்தை. சந்தித்தவுடனேயே வாழ்வின் ஆகச்சிறந்த முதன்மையுறவை பெற்றதை உணர்கிறான்.

நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே, துன்பம் ஆனது; இன்பமும் எய்திற்று;
என்ற இராமனின் கூற்றையே நாமும் உணர்கிறோம்.
*
மன்னர் குலத்தவனாய் மீண்டும் அபயமளிக்கும் வாய்ப்பை ராமனுக்கு நல்குகிறது காடு.
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம்’
என்ற சுக்ரீவனுக்கு அபயமளித்து,
மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்
என வாக்களிக்கிறான் ராமன்.
சுக்ரீவனுக்கு வாலியை வெல்லும் ஆற்றலுடையவன் எனக் காட்ட ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைக்கச் செய்கிறான் ராமன். வானுயர்ந்த அப்பெருமரங்கள் கானகத்திற்கே உரியவை. அதனால் அவன் தனித்தன்மையுடைய விற்திறன் வெளிப்படுகிறது.
அறத்தின் மூர்த்தியான ராமன் அறமீறலை ஒப்புவதேயில்லை.
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென்;
என்ற தண்டகாரண்யத்தில் ஏற்ற சூளுரையின் படி வாலியை வதம் செய்கிறான். இறக்கும் தருவாயில் வாலிக்கு அறமுரைத்து அவனின் அன்பையும் ஈட்டி அங்கதன் எனும் இளம்வீரனை அடைகிறான் ராமன்.
வாலியைக் கொன்று சுக்ரீவனை மன்னனாக்குகிறான். அதன் விளைவாய் கிட்கிந்தையின் பெரும் வானரத்தானையை சீதையை மீட்பதற்கான யுத்தத்திற்கென அடைகிறான் ராமன்.
*
இலங்கை மீண்டும் அபயமளிக்கும் வாய்ப்பை வீடணன் மூலம் இராமனுக்கு நல்குகிறது. வீடணனுக்கு அபயமளிக்கிறான். இலங்கை மன்னனென வீடணனை இளவல் கொண்டு முடிசூட்டுகிறான் ராமன்.

இப்பொழுது ராமன் நினைக்கும் அறத்தைப் போற்றும் ஒரு இராமராஜ்யம் அவனுடையவர்களால் உருவாகிறது.
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
என்கிறான் ராமன். சிருங்கி பேரத்து அரசன் குகனும், கிட்கிந்தையின் அரசன் சுக்ரீவனும், இலங்கை கோமான் வீடணனும் தயரத புத்திரர்களாகிறார்கள். அது அருங்கானம் தந்த கொடையென்கிறான் ராமன். நாவாய் ஓட்டும் குகனும், வானரமும், அரக்கனும் தன் உடன்பிறந்தார் என்பது இராமனின் மனவிரிவைக் காட்டுகிறது. அத்துடன் அயோத்தியைப் பேரரசாகவும் கங்கை முதல் இலங்கை வரையிலான நட்புத் தேசங்களலான ஒருங்கிணைந்த, அறத்தாலான ராமராஜ்யத்தை காட்டும் சித்திரமும் எனலாம்.
*
சீதையின் பிரிவெனும் பெருந்துயரை ஆரண்யம் அளித்திராவிடில், வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்தியின் சேனை கொண்டு தனது சூளுரையை முடித்திருப்பான் ராமன். அப்பெருந்துயரால் அயோத்தியின் உதவியின்றி அவளை மீட்டுச் செல்லும் கட்டாயம் உருவாகிறது. அதனாலன்றோ அவனீட்டிய உறவுகளான வானரமும், வீடண அரக்கனும் தோள் கொடுக்க இராவணனை வெல்லுதல் சாத்தியமாகிறது.
வீடணனிடம் இலங்கைச் செல்வம் நின்னதே என்று ராமன் மொழிந்தவுடன் நேர்ந்ததை,
தீர்த்தன் நல் அருளை நோக்கிச் செய்ததோ? சிறப்புப் பெற்றான்
கூர்த்த நல் அறத்தை நோக்கிக் குறித்ததோ? யாது கொல்லோ? –
வார்த்தை அஃது உரைத்தலோடும், ‘தனித் தனி வாழ்ந்தேம்’ என்ன
ஆர்த்தன, உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா!
என்கிறான் கம்பன். அரக்கர் உலகை அரக்கரேயாள, வானர குலத்தை வானரமேயாள என ஒவ்வொரு அசையும் அசையா பொருள்களும் அவற்றுக்கேயான தனித்தனியான நிறைவாழ்வைப் பெற்றன. காந்தி கூறும் தனித் தனி அலகுகளாக தனக்கான சுதந்திரம் கொண்ட சுயராஜ்யம்; ராமராஜ்யம். இது ஆரண்யத்தால் நிகழ்ந்தது.
இராமனின் வீரமும், விற்திறனும், பெருவலிவும் வெளிப்படும் களமாக அமைந்து, பேரன்புடைய நல்லுறவுகளை நல்குவதாகவும், மெய்மையிலிருந்து பெருந்துயர் வரை பேரனுபவங்களை தந்து அவனை மென்மேலும் பண்பட்டவனாக உயர்த்துவதாகவும், அவனுடையவர்களால் ஆளப்படும் தேசங்களால் அயோத்தியை மேலும் பேரரசாக்குவதாகவும் காடேகல் அமைகிறது.
*
இலக்குவன்
ஆரண்யத்தால் இலக்குவன் பெற்றது ராமன் உடனிருத்தல். பெருந்துயரிலும் தமையனுடன் இருக்கும் வாய்ப்பு. தூங்கா நயனனென என்றென்றைக்குமான புகழை இலக்குவனே பெறுகிறான்.
இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில், யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவன், அது துடைக்க நின்றான்;
என்பது பரதன் கூற்று. இலக்குவன் இந்த உன்னதத்தை ஆரண்யத்தால் அடைகிறான். அயோமுகியையும், இந்திரசித்தையும் வெல்தல் போன்ற தனிப்பட்ட வெற்றிகளையும் ஆரண்யத்தால் ஈட்டுகிறான் இலக்குவன்.
சீதை
சீதை, வனவாசத்தால் முதலில் இராமனுடனான இருப்பென்னும் மகிழ்வைப் பெறுகிறாள். பத்துக்கும் மேலான ஆண்டுகள் உடனிருந்து வனவாழ்வில் மகிழ்ச்சியில் களித்திருக்கிறாள். ஆனால் இறுதிப் பகுதியில், நின் பிரிவிலும் சுடுமோ பெருங்காடென்றவளுக்கு, பிரிவையே வழங்கிச் சுடுகிறது பெருங்காடு.
மாயமான் மீதான விழைவிலிருந்து அவளடைவது பெருந்துயர். மானுடம் அடைந்த துயர்களிலேயே பெரிதான பெருந்துயர். கம்பனே பாட நடுங்கியஞ்சி விடுத்த பெருந்துயர். ஆம், சீதையை சிறையெடுத்ததை பாடிய பின் அவள் நிலையை ஆரண்ய காண்டத்தின் பிற்பகுதியிலும், கிட்கிந்தா காண்டம் முழுமையிலும் பாடவில்லை கம்பன்.
அனுமனின் இலங்கை மாநகர நுழைவுக்குப் பின் நல்லதொன்று அணுகிய பின்னர் தன்னைத் திரட்டிக் கொண்டு அவளிருந்த காட்சியைக் கூறத் தொடங்குகிறான் கம்பன்.
பொன்நிறப் பூவையும் கிளியையும் போற்றி ராமன் மட்டுமேயான உலகில் வாழ்ந்தவள்,
தேவர்களும் பணியாற்றி வாடியுழலும் கொடு நகர் நடுவே ,
உருவிலும், குணத்திலும் அச்சுறுத்தும் அரக்கியர் இடையே, எண்ணியவற்றை எளிதடையும் மிகுவலி இராவணன், பேரன்பு முதலாக பேரச்சுறுத்தல் ஈறாக பலவாறு தாக்கி அவளையடைய முனைய, இற்பிறப்பும், இரும்பொறையுமுடனிருக்க, பெருங்கற்பையே ஆயுதமாக்கி தன்னைத்தானே காத்துக் கொண்டு, ராமன் நினைவைப் பற்றிக் கொண்டு, இருந்த மாநிலம் செல்லரித்திட நிலைத்திருக்கிறாள் அன்னை.
பெருங்காட்டிலிருந்து பெற்ற பெருந்துயரால் அவளடைந்த பெருவலிமையிது.
கடத்தற்கரிய கடல் தாவி இராமனின் தூதனாக வந்தவன். சீதையை அவ்விடத்திலேயே விட்டுப்போக ஆற்றாதவனாய் இலங்கையில் பேரழிவை உருவாக்கி எரியூட்டி, சீதையின் தூதனாக இராமனிடம் மீள்பவன். இராமனிருக்க அவனை வணங்காது சீதையிருக்கும் திசையை வணங்கி தான் சீதைக்கு யாரெனக் காட்டுபவன். எச்சபையிலும் என்னுடை இறைவியென சீதையை விளிப்பவன்.
அனுமன் ஆரண்யத்தால் அவளீட்டிய பெரு உறவு.
உச்சகட்ட இக்கட்டில் மென்மையான பெண்மையடையும் பெருவலிவையும், பெரும்பொறையையும், தூய்மை மாறாத உறுதியையும் காட்டுவதற்காக அப்பெரு வல்லமையால் வகுக்கப்பட்ட பெருந்திட்டம் எனவும் ஆரண்யத்தை கொள்ளலாம்.
குரக்குரு கொண்ட கோட்படாப் பதமென இராமனால் போற்றப்பட்ட அனுமனின் கூற்றான
சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த
மாகத்தார் தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப்
பாகத்தாள், இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத்தாளும்,
ஆகத்தாள் அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள்.
என மாதர்கள் பெற்ற இந்த உச்சம், அன்னையால், ஆரண்யத்தால் அடைந்தது.
ஆசிரியர் குறிப்பு:

சிவமீனாட்சி நெல்லையில் வசிக்கிறார். இலக்கிய வாசகி. மூன்றாண்டுகளாக தொடர்ந்து கம்பன் வாசிப்பில் ஈடுபட்டிருக்கிறார். வெண்முரசின் அத்தியாயங்களை சுருக்கி எழுதும் snippets குழுமத்தில் பங்களிப்பாற்றுகிறார்.

Leave a Reply