சுந்தர காண்டத்தில் உள்ள இலங்கை எரியூட்டு படலத்தை பற்றி சில சொற்கள் முன்வைக்க நினைக்கிறேன். சுருக்கமாச் சொன்னால் சீதையைத் தேடிப் போகின்ற அனுமன் இலங்கையை எரிக்கின்றான்.
படலத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு வரலாற்று நிகழ்வில் இருந்து தொடங்குவோம். நமக்கு தெரிய சமீபத்தில் நடந்த பெரும் போர்களில் ஒன்று இரண்டாம் உலகப் போர். அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டை வீசும் போது அப்போர் முடிவுக்கு வருகிறது. அணுகுண்டை நாம் நெருப்பின் நவீன வடிவம் (மாடர்ன் வெர்ஷன்) எனலாம். மொத்த ஹிரோஷிமா நாகசாக்கி நகர்களும் சிதைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது. அங்குள்ள மக்கள் இன்று வரை வாழ முடியாமல் இருக்கிறார்கள்.
இந்த இரண்டாம் உலகப் போர் இரண்டு விழுமியங்களுக்கு நடுவே நடக்கக்கூடியது என்று பார்க்கலாம். ஒரு பக்கம் நேச நாடுகள் கூட்டணி– அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகள். இந்தியாவும் அதனுடன் இருந்தது. இன்னொறு புறம் எதேச்சதிகார நாடுகள்- ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி.
ஹிட்லர்தான் முதன்முதலில் ஜெர்மனியில் அணுகுண்டை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறார். அமெரிக்கா அதனைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவே அணுகுண்டு தயாரிப்பில் முன்னிலை பெறுகிறது. அதன் பின்னர் போர் முடிவுக்கு வருகிறது.
வரலாற்று ரீதியாக, கொஞ்சம் தள்ளிச் சென்று பார்த்தால் ஐநூறு அல்லது எழநூறு வருடத்திற்கு முன், 1800 களில் நடந்த நெப்போலியப் போர் ஒரு பெரும்போராகும்.
நெப்போலியன் மொத்த ஐரோப்பாவையும் அடைய வேண்டி பேராசை கொண்டு ரஷ்யாவை நோக்கி படையெடுத்து செல்கிறான். அதற்கு முன்னரே பல ஐரோப்பிய நாடுகளை கைப்பற்றி இருந்தான், முதலில் நெப்போலியன் புரட்சிகர எண்ணங்களை கொண்டவனாக இருக்கிறான், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சர்வாதிகாரியாக (authoritative) ஆக மாறி விடுகிறான், நெப்போலியன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு படைத்தளபதியாக இருந்து பேரரசனாக மாறுகிறான். அவன் மாஸ்கோவை நெருங்கிய போது, ரஷ்ய மக்கள் மாஸ்கோவை எரித்து விட்டு சென்று விடுகிறார்கள். போரும் அமைதியும் வாசித்தவர்களுக்கு தெரியும். அவன் சிதையுண்ட மாஸ்கோவை மட்டுமே அடைந்தான். அவனது மொத்த முயற்சியும் பலனற்றுப் போனது. அங்கிருந்து திரும்பாமல் பிரெஞ்சு படைகளை ரஷ்யக்குளிரில் கூட்டிச் சென்று, மொத்த பிரெஞ்சு வீரர்களையும் கொன்று விட்டு, சில நூறு தளபதிகளோடு மட்டும் பிரான்ஸ் திரும்பும் நிலை உண்டாகிறது. அப்போது தான் பிரான்சிலிருந்து நாடு கடத்தப்படுகிறான். நெப்போலியப் போர் முடிவுக்கு வருவது மாஸ்கோ நகர் எரிக்கப்படுவதன் மூலம்.

Oil Painting. Johann Georg Trautmann (1713–1769)
Blick auf das brennende Troja. Source: http://www.worldhistory.org
அதற்கு முன் சென்று பார்த்தால் கிழக்கு ரோமானிய சாம்ராஜ்யத்தின் முடிவு. அப்போதைய கான்ஸ்டாண்டிநோப்பில் இப்போதைய துருக்கி. அந்நகரை சுற்றி பெரும் மதில்கள் இருந்தன. அம்மதில்களை தகர்க்க அப்போது தான் பீரங்கி எனும் புதிய கருவி மனித நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டது. பீரங்கியைப் பயன்படுத்தி மதில்களைத் தகர்த்து உள்ளே சென்று கான்ஸ்டாண்டிநோப்பில் நகரை ஆட்டோமன் அரசர்கள் கைப்பற்றுகிறார்கள்.
அதற்கும் முன் ட்ராய் மாநகரம் எரிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் முகலாயர்களால் ஹம்பி- அப்போதைய விஜயநகரப் பேரரசு – எரிக்கப்படுகிறது. மதுரை எரிக்கப்பட்டிருக்கிறது.
ஏதோ ஒரு காரணத்தால், போர்களின் ஆரம்பத்திலோ, முடிவிலோ நகரங்கள் எரிக்கப்படுகின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் போர் தவிர்க்கமுடியாத ஒன்றாகிறது, போர் என்பது நீதியை அல்லது நன்மையை நிலைநாட்டுதல் எனலாம்.
ஆனால் போரின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்துகிறது, சீர்செய்ய முடியாத நிலையை உண்டாக்குகிறது. இன்றும் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் பிறக்கும் குழந்தைகள் கதிர்வீச்சால் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். எழுபது வருடங்களுக்கு பிறகும் கூட.
ஆதலால், லங்காதகனம் – இலங்கை எரியூட்டு படலத்தை பார்க்கும் போது, போர் ஒரு பிரச்சனைக்கு தீர்வாக இருக்குமா என்பதை உங்கள் மனதில் ஒரு கேள்வியாக வைத்துக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
*
நாம் அணுகுண்டில் தொடங்கினோம். உலகம் இப்பொழுது சந்திக்கும் பிரச்சனைகள் nuclear threat, இன்னொன்று சூழியல் அச்சுறுத்தல் (climatic threat). இப்பொழுது நான் அமெரிக்காவில் வசிக்கும் இடம் ஒரு மழைக்காடு. கிட்டத்தட்ட 200 முதல் 250 அடி வரை உயரமுள்ள மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பு. இங்கு எட்டு அல்லது ஒன்பது மாதம் மழை தொடர்ந்து பெய்யும். மூன்று நான்கு மாதம் மட்டுமே மழை இருக்காது. தற்பொழுது காலநிலை மாற்றத்தால் கோடை காலம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஒரு முறை விமானத்தில் செல்லும் போது ஒரு camp fire, காட்டுத்தீயாக ஆக மாறி காடு, மலைகள், அருவிகள் என மொத்தமும் எரியக்கூடிய காட்சியை பார்த்தேன். இது உலுக்கக்கூடிய காட்சி. campfire என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. தீ என்னும் இயற்கை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு நாம் உருவாக்கியது. நாம் அதில் வல்லுனர்கள் என்று நினைக்கத் தொடங்குகிறோம். அவ்வாறு நினைத்து செயல்படும்போது அது மொத்த காட்டையும் எரித்து விடுகிறது. உதாரணத்திற்கு, காலநிலை மாற்றம் புவியை எரிக்கும் எரியாக மாறுகிறது. இது போல ஒரு மீறல் நடக்கும் போது, அந்த இயற்கை நிகழ்வு மனித ஆணவத்தை தகர்த்து மொத்த நிலத்தையும் எரிக்கக்கூடிய சக்தியாக மாறுகிறது. இதுவும் ஒருவித எரி.
இதைப் பின்புலமாக (context) வைத்து கொண்டு நாம் படலத்துக்குள் செல்வோம். நாம் பிற போர்களுக்கு கேட்டது போல இந்தப் போரின் விழுமியக்காரணம் (ideological cause), அல்லது இந்த போரினுடைய conflict என்ன என கேட்கலாம். இது எதனால் விளைந்த எரி. ஏதோ ஒரு அறம் மீறலால் விளைந்த எரி. அது அரசியல் காரணமா, மதம் – ஆன்மீகம் சார்ந்த காரணமா அல்லது வேறு ஏதேனும் அநீதியா என்று நாம் கேட்க வேண்டிய கேள்வி.
அனுமனும் சரி, ராவணனும் சரி இருவருமே சிவ அம்சம் கொண்டவர்கள். சிவ பக்தர்கள். சிவ அவதாரங்கள் என்றும் சொல்லலாம்.
அதனால் பதி, பசு, பாசம் என்னும் சைவ சித்தாந்த சொற்களை கம்பர் இப்படத்தில் பயன்படுத்துவதை பார்க்கலாம். இதில் பதி என்பது கடவுள், பசு-உயிர், பாசம்-தலை. உயிரை உடலோடு கட்டுவது தான் தலை. பாசக்கயிறு எனவும் சொல்லலாம். கட்டுண்டு வைத்திருப்பது. உயிரோடு உடலை கட்டுண்டு வைத்திருப்பது. பதி அருவமானது.
படலத்தில் தொடக்கத்திலேயே பாசம் வர ஆரம்பிக்கின்றது. கண்ணில் கண்ட பாசம் எல்லாம் இட்டு அனுமனை அரக்கர் கட்டுகின்றனர். அதில் மீறியது, விடுபட்டது ஒன்றே ஒன்று தான். அது மனைவியரின் மாங்கல்யம்.
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த
அதைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் வைத்து அனுமனை கட்டுகிறார்கள். எல்லாவற்றிலும் இருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்கிறான். இது சீதைக்கு, அவளது மாங்கல்யத்துக்கு இழைத்த அநீதியைக் குறிக்கிறது. இதை உறுதிபடுத்தும் விதமாகவே சீதை அக்னியிடம் கூறுகிறாள்.
நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும், கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன், எரியே அவனைச் சுடல்
அனுமன் வாலில் தீயை பற்ற வைத்தனர். வாலில் நெருப்பு எரிகிறது. அதை சீதை தெரிந்து கொள்கிறாள். ஆதலால் அக்னியிடம் அவள் கேட்கிறாள். என்னுடைய கற்புக்கு நீதான் சாட்சி. அதன் தூய்மைக்கு நீ தான் சாட்சி. உன்னைத் தொழுகின்றேன். நீயே அதற்கு சான்று. அனுமனை சுடாதே! அனுமனது உடல் எரிகிறது. ஆனால் வெப்பம் அவனுக்கு தெரியவில்லை. எதனால் இந்த நெருப்பு தன்னைச் சுடவில்லை என அனுமனுக்கும் தெரிகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதி கொடுத்த அதிகார பலத்தில் சீதையால் அக்னிக்கு ஆணையிட முடிகிறது,
வெந்தீ நிற்பினும் சுடாது நின்ற நீர்மை நோக்கி சனகன் பாவை கற்பினால் இயன்றது என்பது அனுமனுக்கும் தெளிவாக தெரிகின்றது.

Source: https://manishjaishree.com/
இதற்கு அடுத்து கம்பர் திரிபுரம் எரித்த கதையை கொண்டு வந்து விடுகிறார். இந்த கதை நமக்கு தெரிந்ததே. இங்கு நாம் மூன்று புரங்களாக பார்ப்பது சைவ சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட பாசங்கள் என்று பார்க்கலாம். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களாக பார்க்கலாம். இந்த சொற்களை வைத்து நான் இந்த படலத்தை வரையறை செய்ய முயல்கிறேன்.
உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து செல்வங்களும் இலங்கையில் இருக்கிறது. அது கிட்டத்தட்ட விழைவால் உண்டான நகரம் என்று சொல்லலாம். அது பாசத்தால், அல்லது தளையால் கட்டுண்ட நகரம் என்றும் சொல்லிவிடலாம். அதை சுற்றி இருக்க கூடிய அந்த கடல் ஒரு பதி போல இருக்கிறது என்றும்.
அப்பு உறழ் வேலை காறும்.அலங்கு பேர் இலங்கை தன்னை,
எப் புறத்தளவும் தீய ஒரு கணத்து எரித்த கோட்பால்,
துப்பு உறழ் மேனி அண்ணல், மேருவில் குழையத் தோளால்
முப்புரத்து எய்த கோலே ஒத்தது; அம் மூரிப் போர் வால்
இந்த இலங்கை நகரம் கடல் சூழ இருக்கிறது. நகர் பாசத்தால் கட்டுண்டு இருக்கிறது. இந்த பாசத்தை அறுக்க வந்த போர்வாள் தான் அனுமனின் எரி. இந்த மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) சத்வ, ரஜோ, தமோ குணங்களாகவும் பார்க்கலாம். இந்த மூன்றும் தான் உயிரை உடலோடும் உலகோடும் கட்டிப்பிணைக்கிறது.
இதை இன்னொரு விதமாக சீதையை ஒரு காரணமாகவும், பாசமாகவும் பார்க்கலாம். ஒரு பக்கம் ராமனும் அனுமனும் மறு பக்கம் ராவணனும் இருக்கிறார்கள். அனுமன் பிரம்மச்சாரியாக இருக்கிறான். ராமன் தனது வளமிக்க அயோத்தியை, நாட்டை துறந்து மரவுரி அணிந்து சீதையுடன் காட்டிற்கு வருகிறான். அனுமனும் பிரம்மச்சாரியாக இருக்கிறான் மறுபுறம் இராவணன் வளமிக்க இலங்கையை ஆள்கிறான். மகளிர் சூழ வாழ்ந்தாலும் சீதையையும் கவர்ந்து வருகிறான். பிற மேலான குணங்கள் இருந்தாலும் ஒரு இன்பவியல் நுகர்வு கொண்டவனாக இருக்கிறான். இந்த இரு விழுமிய நிலைகளுக்கு இடையே நடக்கும் போர் ஆகவும் பார்க்கலாம்.
சைவ சித்தாந்தத்தின்படி சத்வ, ரஜோ, தமோ குணங்கள் மூன்றும் அழிக்கப்பட்டு பதியுடன் போய் சேர வேண்டும். சத்வ குணம் நன்மையையும், தூயதன்மையையும் குறிக்கும். ரஜோ குணம் வேட்கையையும் பெருவிழைவையும் பிரதிபலிக்கும். தமோ குணம் அறியாமையையும், மயக்கத்தையும் குறிக்கும். இதில் ராஜச குணத்தையும் தமோ குணத்தையும் மட்டும் அழித்தால் போதாது, சத்வ குணமும் அழிக்கப்பட்ட பின்பு தான் பதியிடம் ஐக்கியமாக முடியும். சைவ சித்தாந்தத்தின் அடிப்படை தத்துவம் இது என்பது எனது புரிதல்.
மேலும் தங்கம், வெள்ளி, இரும்பு முறையே சத்வ, ரஜோ, தமோ குணங்களை குறிக்க பயன்படுத்தப்படும். இந்த படலம் முழுக்க இந்த உலோகங்களை எரித்து அழிப்பதை பற்றி கம்பர் தொடர்ந்து விளக்குகிறார். உதாரணமாக,
வெள்ளியின் பொன்னின், நானா விளங்கு பல் மணியின், விஞ்சை
தெள்ளிய கடவுள்-தச்சன் கை முயன்று அரிதின் செய்த
தள்ள அருமனைகள் தோறும், முறைமுறை தாவிச் சென்றான்;
என்ற பாடல், வெள்ளி, பொன், பல் மணிகள் கொண்டு பெருந்தச்சன் செய்த அந்த மாளிகைகளை தாவி தீ வைத்துச் செல்கிறான். இதுவரை நாம் பார்த்தது அனுமன் வாலில் தீ வைக்கப்பட்டது, சீதை அக்னி தேவனிடம் வேண்டியது, அதைத்தொடர்ந்து அனுமன் ஒவ்வொரிடமாக செல்வது ஆகியவற்றை தான்.
இனிமேல் தான் இலங்கை எரிந்த விதத்தை விளக்குகிறார். இங்கு பாசத்தால் கட்டுண்ட சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களைதான் அனுமன் எரித்துக்கொண்டே செல்கிறான்.
அங்கிருக்கும் அரக்கர்கள் எவ்விதமான மாயையில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு புறம் அனுமன் பற்றவைக்கும் அந்த நெருப்பு, மறுபுறம் இலங்கையின் ஒளி. இதில் இலங்கையின் ஒளி ஒரு விதமான மாயத்தன்மையுடன் இருக்கிறது, மாறாக அனுமனின் எரி தனித்தன்மையுடன் உண்மையானதாக இருக்கிறது.
இந்த எரி என்பது சிவனின் ஒரு வடிவம். முன்பே சொன்ன படி இராவணன், அனுமன் இருவருமே சிவ அவதாரங்கள் தான். இங்கே இவ்விருவரில் யார் சிவபிரானின் உண்மையான வடிவம் என்ற ஒரு மோதல் இருக்கிறது என்றும் பார்க்கலாம். பிரம்மச்சரிய விரதம் பூண்ட அனுமன் ஒருபுறம், பெருவிழைவின் முழு வடிவமாக அரசனாக இராவணன் மறுபுறம், இவர்களின் மோதலாகவும் பார்க்கலாம்.
இலங்கை நகரின் ஒளி ஒரு விதமான மாயத்தன்மையுடன் இருக்கிறது, தீயின் ஒளி போல காட்சி அளித்தாலும் அது ஒரு மாயத்தோற்றம் தான், இராவணின் கட்டுக்குட்பட்ட ஒரு ஒளியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் அனுமனின் எரி முற்றிலும் மாறுபட்டு இயற்கையான ஆதி வடிவில் உள்ளது. உதாரணமாக இந்த பாடலை பார்க்கலாம்
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார்;
அணி வளைக் கை நல்லார் அலமந்து உளார்.
எரி இன்மையும் தீக்கொளுத்தினவும் தெரியாமையால். மாளிகைகள் ஒளியுடன் இருந்தமையால் எரிந்தது எது எரியாதது எது என்று அவர்களுக்கு இனம் காண முடியவில்லை. எல்லாவற்றிலும் ஒரு மாயத்தன்மை உள்ளது. அனுமனின் நெருப்பு மொத்தத்தையும் எரித்து அதன் ஆதி குணத்திற்கே கொண்டு செல்கிறது.
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு
புல்லிக் கொண்டன; மாயைப் புணர்ப்பு அறக்
கல்வித் தம் இயல்பு எய்தும் கருத்தர் போல்.
இதன் பிறகு அந்த நெருப்பிலிருந்து எழக்கூடிய கருநீலப்புகை – கம்பனில் நிறைய காணக்கிடைக்கும் வைணவ படிமங்கள் வருகின்றன. தானம் பெற்ற பின் ஓங்கி வளர்ந்த வாமன உருவம் போல் அந்த புகை வளர்ந்து கொண்டே சென்று அவன் கரிய திருமேனியை ஒத்து இருக்கிறது. இந்திரனின் ஐராவதம் கரிய யானையாக மாறுகிறது.
எருமைகள் எரியில் விழ அங்கிருக்கும் மகளிர், அன்னங்கள் போல் நீங்குகிறார்கள். குதிரைகள் எரிக்கபடுகின்றன, பஞ்சரத்தோடு கிளிகள் வெந்து பதைக்கின்றன. இலங்கை மட்டுமல்ல, விண்ணுலகும் சேர்ந்து எரிகின்றது, பாற்கடல் எரிகின்றது.
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால்,
தீயர்; அன்றியும், தீமையும் செய்வரால்.
தூயவர், தீயவர் என்கிற பாகுபாடின்றி எல்லா இடமும் எரிகின்றது.
கருகி முற்றும் எரிந்து எழு கார்மழை அருகு உருகு பொன்திரள் ஒத்தனன் ஒள் கதிர்.
கார்மழை பெய்யக்கூடிய முகில் கருகி இருப்பதால் கதிரவன் ஒரு சின்னதங்கப்பந்து போலவே காட்சி அளிக்கிறான். கற்பககானகம் எரிகின்றது.
சினைப் பரந்து, எரி சேர்ந்து இலா நின்றவும், சில, வெம் கனல் பரந்தவும், தெரிகில;கற்பகக் கானம்
தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல
வழு இல் வேலை உலையின் மறுகின;
குழுவு தண்புனல் மேகம் கொதித்தவே.
ஏழு உலகங்களும் பாற்கடலும் என அனைத்தும் எரிந்து ஒரு உருவமில்லா நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரக்கர்களின் மாயையாகிய தமோ குணத்தை அனுமனின் எரி உட்கொள்வதை பார்க்கிறோம். ஏற்கனவே சொன்னது போல சத்வ குணமாகிய பொன்னும் எரிகின்றது,
அருகு நீடிய ஆடகத் தாரைகள் உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன
திருகில் பொன் நெடும் தண்டில் திரண்டவால்.
பொன்னுருகி வேலையில் கலக்கின்றது.
மா மணிச் சில்லி ஓடும் திரண்டன தேர் எலாம்.
பொற்தேர்கள் சக்கரத்துடன் சேர்ந்து உருகி கடலில் கலக்கின்றது.

இது போல பாசத்தால் கட்டுண்ட அனைத்தும் எரிந்து ஒரு உருவமில்லா நிலையை அடைந்து பதியாகிய கடலில் சென்று ஐக்கியம் ஆகிறது. அதன் பிறகே அந்த எரி ராவணனின் மாளிகையை சென்று அடைகிறது. அவனுடைய அரண்மனை தெற்கிலிருக்கும் மேரு மலை என விவரிக்கிறார். அந்த மாயையான பொன் மேருமலை எரிகின்றது. அவன் அரண்மனையில் உள்ள எழுநிலை மாடங்கள் எரிவது, ஏழு உலகங்கள் எரிவது போன்று கம்பர் உருவகிக்கிறார்.
இலங்கைக் கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைவார்.
ராவணன் தேவருலகை வென்றடுத்த போது அந்தப்பதியில் வாழ்வோர் அடைந்த மனக்கலக்கத்தை இலங்கை வாழ் அரக்கர் அடைகின்றனர்.
பொன் மாளிகைகளும், விழைவுடன் இருக்கும் அரக்கரும் எரிகின்றார், இவை அனைத்தும் அவர்களுடைய தவத்தால் அடைந்தது, தவத்தின் பலனும் சேர்ந்து எரிகின்றது.
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தடம் நெடு மா நிலைக் கோயில்
நின்று துற்று எரி பருகிட நெரிவு உற உருகித்
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டு ஆம் எனத் தெரிந்த.
நினையும் மாத்திரை யாவரும்; நீங்கினர்;
நீங்கா வினை இலாமையில் வெந்தது, அவ்விலங்கல் மேல் இலங்கை.
ராவணன் முதலினோர் புஷ்பக விமானத்தில் ஏறி வெளியேறுகிறார்கள். ஆனால் அந்த இலங்கை மட்டும் வினை இல்லாமையால் வெந்து அழிகின்றது. இதைக்கண்ட ராவணன் ‘இது சாதாரண நெருப்பு அல்ல, பெருந்தவம் இயற்றி நான் பெற்ற எந்நாடு எரியக்காரணம் என்ன, ஊழிக்காலம் வந்து விட்டதா, ஏழு உலகங்களும் எரிகின்றதா, வேறு காரணங்கள் உள்ளனவா’ என்று வினவுகிறான்.
‘ஏழுக்கு ஏழென அடுக்கிய உலகங்கள் எரியும் ஊழிக் காலம் வந்து உற்றதோ? பாழித் தீ சுட வெந்தது என், நகர்?
அப்போது அவன் ஏவலர்கள் இது ஒரு குரங்கு சுட்டதினால் வந்தது என்று உரைக்கின்றனர்.
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால், குரங்கு சுட்டது
அதை கேட்ட உடனே அவன் அகங்காரம் மேலெழ அக்னியை அவன் முன் கொண்டு வர பணிக்கிறான். உண்ட நெருப்பைக் கண்டு எதிர் பற்றிக் கொண்டு அணைக என்கிறான். ஏனெனில் அக்னி அவன் ஆணைக்குட்பட்டு இவனிடம் பணி செய்பவன். அனைத்து தேவர்களும், இயற்கை சக்திகளும் அவனுக்கு கட்டுப்பட்டு இருப்பதால், அந்த ஆணவம் அவனை செலுத்துகிறது.
அதன் பின் அனுமனையும் கட்டி இழுத்து வர ஆணையிடுகிறான். அரக்கர்கள் அவனை பிடிக்க முயல்கிறார்கள், ஆனால் அனுமன் தப்பிச்சென்று மொத்த இலங்கையும் எறிந்த பின்பே கடலில் தன் வாலை நனைக்கிறான். கருநீலக் கடலும் கொதியுண்டதாகிறது, அதிலும் அரக்கர் விழுந்து மடிகிறார்கள்.
தோய்த்தனன் வால் அது தோயக்
காய்ச்சின வேலை கலந்தார்
போய்ச்சிலர் பொன்றினர் போனார்
ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார்
இதன் பின் அனுமன் சீதையிடம் விடை கொள்கிறான், சீதை நடப்பெதெல்லாம் அறிந்திருக்கிறாள்.
‘வெம்தீ வட்டமுலைத் திரு வைகும் புள்திரள் சோலைபுறத்தும் சுட்டிலது
அவள் இருக்கும் சோலையும் அனுமனும் மட்டும் சுடப்படவில்லை, மற்ற அனைத்தையும் வெந்தீ சுடுகிறது.
அவர்களுக்கிடையேயான சம்பாஷனை இம்முறை குறுகியதாகவே உள்ளது.
உய்ந்தனென் என்ன உவந்தான்;
பைந்தொடி தாள்கள் பணிந்தான்.
அனுமன் சீதையின் தாள் பணிகிறான். இரண்டே இரண்டு வார்த்தைகளே பரிமாறிக்கொள்கிறார்கள்.
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்;
‘வார்த்தை என்? ‘ ‘வந்தனை ‘ என்னாப்
போர்த் தொழில் மாருதி போனான்.
இதற்கு மேல் ஒரு சொல்லும் இல்லை. ஒரு விதமான ஆமோதிப்பு (acknowledgement) மட்டுமே உள்ளது. போர்த்தொழில் மாருதி செல்கிறான், மொத்த இலங்கையும் எரிந்தது, ராவணனே கூட அங்கிருந்து கிளம்பிச்சென்று விடுகிறான். ஆனால் சீதை மட்டும் அங்கேயே ஒரு எரிபடாத ஒரு சிறிய தீவிற்குள் இருக்கிறாள்.
ஆரம்பத்தில் சீதையின் கற்பே இந்த எரி, அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தான் இந்த எரியூட்டலுக்கும், போருக்கும் விதையாக இருந்தது என்று பார்த்தோம். இந்த படலம் அந்த இடத்தில் தான் நிறைவுறுகிறது.

இதை நாம் கருத்தியல் ரீதியாக பார்த்தோமானால் ராமனுடைய அறம், இராவணனுடைய அறம், சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதி இதையெல்லாம் வைத்து நாம் இந்த இலங்கை எரியூட்டலின் நியாயத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்த போரை metaphysical ஆகவோ, பக்தி நோக்கிலோ, விழுமியங்களுக்கிடையேயான போராகவோ நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் காப்பியத்திற்குள்ளேயே உள்ளன. அதையெல்லாம் மீறியும் என்னை மிகவும் நெருடிய பாடல்கள் இரண்டு உள்ளன.
கம்பனின் காவியம் நிகழ்ந்து ஒரு ஆயிரம் வருடம், பத்து நூற்றாண்டு கழித்து நாம் வாசித்து கொண்டு இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் நம் பொது விழிப்புணர்வில், புரிதலில் ஒரு பரிணாம வளர்ச்சி அல்லது முன்னேற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பது என் எண்ணம். அதே சமயத்தில் கம்பனில் உள்ள சில அம்சங்கள் இன்றும் நம்மிடையே காண கிடைக்கிறது, குறிப்பாக போர் குறித்த அம்சங்கள் நம் காலத்திலும் இன்னும் இருக்கிறது.
உதாரணமாக நான் இந்த கட்டுரையை தொடங்கிய இரண்டாம் உலகப்போர், இன்று பாலஸ்தீனியத்தில் நடந்து கொண்டிருக்கும் காசா போர். பனிப்போர் காலத்தில் நடந்த வியெட்னாம் போரையும் குறிப்பிடலாம். அதுவும் சோவியத் கம்யூனிசம், அமெரிக்க முதலாளித்துவம் என்ற இரண்டு கருதியல்களுக்குள்ளே நடந்த போர்.
தீயவை அழிக்கப்பட்டு நன்மை நிலைநாட்டப்பட போர் அத்தியாவசியம் என்று நமக்கு தோணலாம். ஆனால் வியெட்னாம் போரில் அமெரிக்கா NAPALM என்ற ஒரு வெடிகுண்டை உபோயோகப்படுத்தியது. அணுகுண்டைப்போல பேரழிவு நிகழ்த்தகூடியது அல்ல இது. NAPALM ஒரு ரசாயன வெடிகுண்டு, சிறிய சுற்றளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. சின்னச்சின்ன கிராமங்களை குறிவைத்து வீசப்பட்டது. Apocalypse Now திரைப்படம் பார்த்தவர்கள் நன்றாக தொடர்பு படுத்த முடியும்.
இந்த போர் உச்சத்தில் இருந்த போது வெளிவந்த NAPALM GIRL என்ற புகைப்படம் உலகையே உலுக்கியது. NAPALM குண்டு வீசப்பட்ட வியெட்னாமின் ஒரு கிராமம் முழுக்க எரிகிறது, அப்போது அந்த குண்டின் வெம்மை தாள முடியாமல் நிர்வாணமாக கதறிக்கொண்டே ஓடி வரும் ஒரு பத்து வயது சிறுமியின் படம். அவளுக்கு பின்னே இன்னும் நாலைந்து குழந்தைகள் ஓலமிட்டுக்கொண்டே ஓடி வருகிறார்கள். அவர்கள் பின்னே அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலர் வருகிறார்கள்.
இந்த புகைப்படம் உலகெங்கும் பிரசுரிக்கப்படுகிறது, குறிப்பாக அசோசியேட்டட் பிரஸ்ஸில் பிரசுரிக்கப்பட்டு அமெரிக்கா முழுக்க சென்றடைகிறது. இந்த புகைப்படம் பிரசுரிக்கபட்டவுடன் அமெரிக்கா எங்கும் போரை நிறுத்த வலியுறுத்தி தொடர்ந்து போரட்டங்கள் நிகழ்கிறது. ஒரு புகைப்படம் உருவாக்கிய விளைவு இது.
ஒரு கதறி அழும் சிறுமியின் புகைப்படம் எவ்வாறு ஒரு தேசத்தையே போராட வைத்ததோ அந்த அளவிற்கு என்னை நெருடிய இரண்டு பாடல்கள் இந்த படலத்தில் உள்ளன. இந்த இரண்டு பாடல்களையும் எப்படி நியாயப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை.
முதல் பாடல்
மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை
அரும் கையால் பற்றி, மற்று ஒரு மகவு பின் அரற்ற,
நெருங்கி, நீரொடு, நெறிகுழல் சுறுக்கொள நீங்கிக்
கரும் கடல் தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி.
ஒரு அரக்கி தன் இடுப்பில் ஒரு குழந்தையை ஏந்தி இருக்கிறாள், கையில் மற்றொரு மகவை பிடித்திருக்கிறாள். அவள் பின் மற்றுமொரு குழந்தை கதறிக்கொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் எரிக்குப் பயந்து கருங்கடலில் சென்று தலைகுப்புற விழுகிறார்கள்.
வேறொரு காட்சி
மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினை முருக்கிக்
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா.
முகப்படாம் அணிந்த யானைகள் தம் வலிமையான காதுகளை உயர்த்தி, வாலை முதுகினில் சுருட்டி துதிக்கையை தூக்கிக்கொண்டே அலறி ஓடுகிறது.
சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அரக்கர்களை அவர்கள் மாளிகைகளை எரிக்கலாம் என்று நியாயப்படுத்த காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த குழந்தையின் ஓலத்திற்கும் யானைக்கு நேர்ந்ததற்கும் என்ன நியாயப்படுத்தல் இருக்க முடியும்?
அரக்கியரை கூட நாம் விட்டு விடலாம். ஏனெனில் அவர்கள் இராவணனுடன் இருந்திருக்கிறார்கள், அவன் ஆற்றிய அநீதிக்கு மறைமுகமாக உடன்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தை செய்த தீங்கு என்ன ?
அனுமனை எரிக்க வேண்டாம் என்று அக்னியிடம் கோரும் சீதையால் இந்த அப்பாவிகளை காப்பாற்றியிருக்க முடியாதா? நவை படாஞானம் படைத்த அனுமனுக்கு போர் அறம் என்று ஒன்று இல்லையா? இதற்கான காரணம் என ஏதும் எனக்கு இந்த படலத்தில் புலன்படவில்லை.
நான் முன்பே சொன்னது போல கம்பனை நாம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வாசிக்கிறோம். அவன் காலத்திலேயே கூட அதிக பலிகள் கொண்ட பெரும்போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் வெகுஜன சாமானியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உயிருக்கென்று ஒரு மதிப்பு கிடையாது. அரசர்களுக்கிடையேயான போரில் அவர்கள் மாண்டு போவது ஒரு இயல்பான விசயமாகத்தான் இருந்திருக்கிறது.
ஆனால் இன்று நமக்கு குடிமை விழிப்புணர்வு (civil justice) இருக்கிறது, தனி மனித சுதந்திரம் போன்ற நவீன விழுமியங்கள் உருவாகி வந்துள்ளன. அதிபதிகளிடம் இருந்து விலகி தனி மனித சுயம் நோக்கி நாம் இந்த ஆயிரம் ஆண்டுகளில் நகர்ந்திருக்கிறோம், இது முக்கியம். போரின் கொடூரத்தை உணர்வதும் முக்கியம்.
*
இந்தப் போரின் கொடூரத்தை முழுதுணர்ந்த ராமதூதன் ஒருவன் நம் மண்ணில் நடந்துள்ளான். அவன் நவீன காலனிய பேராதிக்க சக்தியை எதிர்த்தவன். அவனும் இதன் பொருட்டு ராமனையும் அனுமனையும் போல இல்வாழ்க்கையையும் அனைத்தையும் துறந்தவன். அவன் தான் எதிர்நிலையாகக் கொண்ட அந்த ஆதிக்க சக்தியை வென்றவன். ஆனால் அவன் எந்த அதிபதிகளின் பெயரைக்கொண்டு மக்களையோ, விலங்குகளையோ எரிக்கவில்லை. எந்த குடிலையும் எரிக்கவில்லை, எந்த ஒரு நகரத்தையும் எரியூட்ட வில்லை. அவன் எரியூட்டியது போர் என்னும் வன்முறை முறைமையை மட்டுமே.
அவனை நாம் கொன்றோம், அதுவும் ராமனின் பெயரால்!
நண்பர்களே, நாம் யுத்த காண்டம் வாசிக்கவிருக்கிறோம், இப்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ராமதூதன், காந்தி என்னும் மாருதியே !
[சுந்தர காண்ட நிறைவையொட்டிய கலந்துரையாடல்களின் பகுதியாக 28 March 2024 அன்று ஆற்றப்பட்ட உரையின் எழுத்துவடிவம்.
நன்றி: எழுத்தாக்கம் – Lakshmi Narayanan]

Leave a Reply