கமலநாதன்:
இலங்கை மாநகர் ஒரு குரங்கினால் சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. அரக்க வேந்தன் ஆர்வமாக போற்றிக் காத்த அசோகவனம் அழிக்கப்படுகிறது. எனவே இப்படி ஒரு ஆணை இடுகிறான்,
“வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி
கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்தீர் என்றான் .”
ஏதோ ஒரு சாதாரண குரங்கை பிடிக்கச் சென்று அதை அடித்து நசுக்கி விடாமல் என்னிடம் உயிருடன் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறான். 60,000 கிங்கரர்களும், பஞ்ச சேனாதிபதிகளும், ஜம்புமாலியும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் அனுமனின் பராக்கிரமத்தை குறைத்து மதிப்பிட்டார்கள் என்பதை அறியலாம்.
ராவணன் இட்ட கட்டளையே அனுமனை குறைத்து மதிப்பிடுகிறது. அவன் அனுமனின் பலத்தையும் துணிவையும் தீர சிந்திக்காததால் விடுத்த ஆணை என்பது தெரிகிறது. அவன் நியமித்துள்ள லங்காதேவியின் கட்டுக்காவலை அறிவான். கோட்டைக்காவல் உள்நகர் காவல் இத்தனையும் மீறி ஒரு குரங்கு வந்து அவனால் காக்கப்படுகின்ற அசோகவனத்தை அழித்தது என்றால் அது ஒரு சாதாரண குரங்காக இருந்திருக்க முடியாது என்பதை அவன் சிந்தித்திருக்க வேண்டும். கிங்கரர்களும் பஞ்ச சேனாதிபதிகளும் ஜம்புமாலியும் கொல்லப்பட்ட பிறகுதான், இத்தனை அழிவுக்குப் பின்தான் அவனே போருக்கு கிளம்புகிறான். அவனைத் தடுத்து அக்ககுமாரன் போருக்கு போகிறான். போரின் இறுதியில் அனுமன் அவனை கூழாக தரையோடு சேர்த்து அரைத்திருப்பான். மிக கோரமான முடிவு அவனுக்கு. ஆனால் கிளம்பும் முன் அக்ககுமாரன் என்ன சொல்கிறான் என்று பாருங்கள்.
விஜயபாரதி:
- தந்தையே நீங்களே போருக்கு கிளம்ப வேண்டுமா? அது என்ன ஈசனின் ரிசபமா , திருமாலின் கருடனா, அவனைத் தாங்கும் ஆதிசேடனா அல்லது திசையானையா? அற்ப குரங்கல்லவா. இந்தக் கடமையை என்னிடம் கொடுத்துவிட்டு நீங்கள் கவலையில்லாமல் இருங்கள்.
- மூத்தவர் ஏற்கனவே இந்திரனைப் பிடித்து தந்திருக்கிறார். எனக்கு அது வாய்க்கவில்லை என்ற மனக்குறை உண்டு. நான் இந்த வலிமையற்ற குரங்கையாவது பிடிக்கிறேனே.
- இலங்கைக்கு பழி இழைக்கலாம் என்று எண்ணி முக்கண்ணன் குரங்காக வடிவெடுத்திருந்தாலும் அவனை எளிதில் வென்று , விரைவில் உங்களிடம் கொண்டு வருவேன்.
- பிடிக்க முடியாத நரசிம்மமோ , பூமியே துளியென தொற்றி நிற்கும் பெரும் வராகமோ, அது அண்டத்தை தாண்டி சென்றாலும் பிடித்து வருவேன். இல்லையெனில் நீ கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.
கமல்:
அக்ககுமாரனும் அனுமனை வலிமையற்ற எளிய குரங்கு என்றுதான் நினைக்கிறான். அவனுடைய வலிமையை மிகவும் உயர்த்தியும் பிடிக்கிறான். அண்ணன் இந்திரனை வென்றான், நான் நம் படைகளை அழித்த குரங்கையாவது வெல்கிறேன் என்று தனக்கு புகழ் சேர்க்கத்தான் பார்க்கிறான். போருக்கு சென்று அனுமனைப் பார்த்த பிறகுகூட “அரக்கர் கூட்டத்தைக் கொன்றது இந்தக் குரங்கு போலும்” என்று அலட்சியமாகத்தான் சொல்கிறான். ஆனால் அவனுடைய சாரதிக்கு தெரிந்திருக்கிறது. வந்திருப்பவன் எளியவன் அல்லன் என்று.

பாரதி:
தேர் தெளிக்கும் சாரதிகள் ஒரு வகையில் அறிவாளிகளாகவே இருக்கின்றனர். விஜயனின் சாரதி கீதை சொல்லும் ஞானி என்று தெரியும் நமக்கு. அதிரதனும் மாதலியும் சல்லியனும் ஒரு வகையில் சாரதியாக நின்று ஞானம் வழங்கியிருக்கின்றார்கள். இங்கு அக்ககுமாரனின் சாரதியும் தெளிவானவன்தான். சாரதி இரண்டே வார்த்தைதான் சொல்கிறான். “ஐயனே, உலகில் நடக்கும் செயல்கள் இப்படி பட்டவை என்று உறுதியாக கூற முடியுமா? நம் அரசனான ராவணனோடு எதிர்த்து வெற்றி பெற்ற வாலி ஒரு குரங்கு தான் என்றால் இதற்கு மேல் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது. நான் சொன்னதை மனதில் கொண்டு போரிடச் செல்க” என்று கூறினான். தன் தேரில் நிற்பவன் அரச மைந்தன், சாரதி செய்வது அரச நிந்தை. ஆனால் அதை சரியாக சொல்கிறான். பிழைக்காது இலக்கு தைக்கும் அம்பு மாதிரி அவனது சொற்கள்.
கமல்:
ஆனால் அதைக் கேட்டு அக்ககுமாரன் இன்னும் கோபம்தான் கொள்கிறான். இந்த இடத்தில் இக்குரங்கை அழித்த பின்பு மூன்று உலகங்களில் உள்ள எல்லா குரங்குகளையும் நுணுகி தேடி வெளியில் உள்ள குரங்குகளையும் கர்ப்பத்தில் உள்ள குரங்குகளையும் எல்லா குரங்குகளையும் அழித்து முடிப்பேன் என்றான். குரங்கு இனமே இருக்கக்கூடாது என்ற அளவுக்கு அவனுக்கு கோபம் வருகிறது.
அனுமன் போருக்கு வந்துள்ளவன் இந்திரசித்தனோ அல்லது அந்த ராவணன் தானோ என்று சந்தேகிக்கிறான். மகிழ்ச்சியோடு நான் நினைத்தது நிறைவேறி விட்டது என்கிறான். பின்பு ராமன் இருந்த திசையை நோக்கி வணங்கி இவனை நான் கொல்வேன் என்றான்.
இது கொஞ்சம் ஆழமாக பார்க்கவேண்டிய பகுதி. அனுமன் ஏன் ராவணனை கொல்ல நினைத்தான்? ஏற்கனவே இலங்கைக்குள் வரும்போது அப்படி ஒரு வாய்ப்பு இருந்தது. அவன் அரண்மனைகளையெல்லாம் சென்று பார்த்தான். ஆனால் கொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தான். இப்போது கொன்றுவிடுவதாக சொல்கிறான். ஏன்?
இது ஒரு பக்கம். வந்தவன் வேறு யாரோ என்று தெரிந்த பிறகு போர்க்காட்சிகள் எப்படி இருந்தன என்று பார்ப்போம்.
பாரதி:
போருக்கு வந்த படையை அளவிட முடியாது என்பதற்கு கம்பன் பயன்படுத்தும் அழகான உவமை ஒன்று உள்ளது.
பொரு கடல் மகரம் எண்ணில், எண்ணலாம் பூட்கை; பொங்கித்
திரிவன மீன்கள் எண்ணில், எண்ணலாம் செம்பொன் திண்தேர்;
உரு உறு மணலை எண்ணில், எண்ணலாம் உரவுத் தானை;
வரு திரை மரபின் எண்ணில், எண்ணலாம் வாவும் வாசி
கடலில் இருக்கும் சுறாக்களை எண்ண முடிந்தால் இந்த படையில் இருக்கும் யானைகளை எண்ணிவிடலாம். பொங்கித் திரியும் மீன்களை எண்ண முடிந்தால் தேர்களை எண்ணிவிடலாம். சாதாரண தேர் இல்லை. செம்பொன்திண்தேர். கடலில் இருக்கும் மணற்பருக்கைகளை எண்ண முடிந்தால் காலாட்படை வீரர்களை எண்ணிவிடலாம். அலைகளை எண்ண முடிந்தால் குதிரைகளை எண்ணிவிடலாம். எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டவை. ஆனால் குதிரைகளுக்கு மட்டும் அலைகள் என்னும் முடிவிலி எதற்கு?
எப்படி நடந்தது என்பதற்கு மூன்று படிமங்கள் உள்ளன.
- என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம். அந்த திருக்குறள் நமக்கு தெரியும். கம்பர் அதை பயன்படுத்துகிறார். வெயில் மாதிரி போரிடுகிறான் அனுமன். வீரர்கள் எல்லாம் எலும்பில்லாத புழுக்கள் போல சட்டென அழிந்துபடுகிறார்கள். கம்பனுடைய கற்பனையை நாம் சில சமயங்கள் எளிதில் கடந்துவிடுவோம். ஆனால் அதன் முழுவீச்சில் கற்பனையை உணர முயன்றால் அபாரமான படிமம் கிடைக்கும். சூரியனுக்கு கோடானுகோடி புழுக்கள் ஒரு பொருட்டே அல்ல. புழுக்களுக்கு சூரியன் எந்த வகையிலும் தவிர்த்துவிட முடியாத எட்டாத, தீராத ஆகிருதி. தவிர்க்கவே இயலாத அழிவு. ஓடி நிழல்தேடி ஒளிந்தால் மட்டுமே தப்ப முடியும்.
- மற்றொரு அருமையான உவமை , காய்ந்த புல்லில் தீ பரவியது போல அனுமன் படைகள் மீது பொருதினான். மறுபடியும் அதேதான். புழுக்களுக்காவது நிழல் தேடி ஓடி ஒளியும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் புற்களுக்கு காற்றின்மீதும் தீயின்மீதும் என்ன கட்டுப்பாடு உள்ளது? எரிந்தழிவது தவிர வேறு வழியில்லை.
- மூன்றாவது முக்கியமான ஒரு உவமை. மத்துறு தயிர் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இங்கு தாழிப்படு தயிர் போல என்கிறான் கம்பன். போர்க்களம்தான் தாழி. படைகள் அதனுள் தேங்கியிருக்கும் தயிர். அனுமன் மத்தாக இறங்கி மொத்த தயிரையும் கடைந்துவிடுகிறான். இதைத் தனியாகப் பார்த்தாலே அபாரமான உவமைதான். கடையப்படும் தயிருக்கு மத்தின்மீது கட்டுப்பாடே இல்லை. அனுமனை நிறுத்தவே முடியாது. ஆனால் முந்தைய உவமையையும் இதையும் இணைத்துப்பார்த்தால் இன்னும் வசீகரமான கற்பனை உள்ளது தெரியும். வந்த படைகளுக்கு கம்பன் கடல் சுறாக்களையும், மீன்களையும் மணற்பருக்களையும் அலைகளையும் உதாரணமாக சொன்னான் இல்லையா? இங்கு தாழிக்குள் கிடந்து கடையப்படுவது அந்த கடல். அத்தனை பிரம்மாண்டமான ஒன்றை ஒரு சிறை கலயத்துக்குள் அடக்கி கடைவதைப் பார்க்கும்போது அனுமன் ரூபன் என்ன என்பதை நாம் உணர முடியும்.
இங்கு கம்பன் சொல்லாமல் விட்டது ஒன்று உண்டு. இவையெல்லாம் காரியங்கள். காரணங்கள் என்ன? மத்தைப் ஆட்டுவிக்கும் கைகள் யாருடையவை?

கமல்:
முதலில் அக்ககுமாரனுக்கு என்ன நடந்தது என்பது மீண்டும் ஒருமுறை கண்ணில் பார்த்துவிடுவோம்.
அக்ககுமாரன் அம்புகளை அனுமன் இரும்பு தூண் ஒன்றால் அடித்து வீழ்த்துகிறான். அந்த இரும்பு தூண் பொடிப்பொடியாக சிதறும்படி அம்புகளை அக்ககுமாரன் செலுத்தினான். வேறு ஆயுதம் இல்லாமல் அனுமனும் தன் கைகளிலேயே அக்ககுமாரனின் தேரையும் சாரதியையும் அழித்தான். அக்ககுமாரன் தனது வில்லால் செலுத்திய சில அம்புகள் அனுமனது மார்பில் பாய்ந்தன. சில அனுமனது தோளிலே புகுந்து மறைந்தன. அனுமன் அக்ககுமாரனுக்கு அருகில் சென்று அவனது வில்லை உடைத்தான். அக்ககுமாரன் தனது வாளை எடுக்க அவ்வாளை பறித்து பொடிப்பொடியாக உதறும்படி உடைத்தான்.
அக்ககுமாரன் அனுமனை தழுவி கொள்ள முற்பட்டான். அப்போது அனுமனின் உடல் முழுவதும் நீண்ட வேல்கள் போல மயிர்கள் தைக்கும்படி அனுமன் தன் நீண்ட வாலால் அக்ககுமாரனது உடம்பு நிமிர்ந்து மீளாதபடி சுற்றி அவன் மீது ஏறிக்கொண்டான். அனுமன் அறைந்ததில் அக்ககுமாரன் பற்கள் சிதறுகின்றன. குடல் சரிந்து வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிட்டது. அக்ககுமாரனது பிடரியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் முகத்தில் குத்துகிறான். அதன் பிறகுதான் இதுவரை கம்பனின் போர்க்காட்சிகளிலேயே ஒரு மிக மிக கோரமான சம்பவம் நடக்கிறது.
வெள்ளமாக ஓடிய ரத்த ஆற்றையே அரைக்கும் போது தெளிக்கும் நீராகக் கொண்டான். போர்க்களத்தையே அம்மிக்கல்லாக கொண்டான். அக்ககுமாரன் உடம்பில் இருந்து கீழே விழுந்த சதை துண்டுகளையே அரைப்பதற்காக ஊற வைத்து உப்பிய அரிசியாக கொண்டான். அந்த அரக்கனையே அம்மியில் குழவியாக கொண்டு போர் செய்கின்ற அவன் உயிர் முற்றிலும் போவதற்கு முன்பு அவனை விண்ணுலகமும் மண்ணுலகமும் காணும்படி அரைத்தான்.
அவன் உயிர் முற்றிலும் போவதற்கு முன், ஏற்கனவே உதிர்ந்த அவன் தசைகள்மீதே அவனை திரும்ப தரையில் வைத்து அரைத்தான். பின்னர் வரும் இந்திரஜித் அள்ளித் தூக்கி அழுவதற்கு கூட வாய்ப்பில்லாத நிலையில் அக்ககுமாரன் கிடக்கிறான்.
இங்கே நல்ல ஒரு சோக கீதம் ஒலிக்க விடுவோம்.
பாரதி:
மிக கொடுமையான இந்த காட்சியை கண்டவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.
- மண்ணிலிருந்து பாய்ந்து ஓடிய ரத்த வெள்ளத்தில் சிலர் புகுந்து ஒளிந்து கொண்டனர்
- இனக் கூட்டத்தின் நடுவில் புகுந்து சிலர் மறைந்து கொண்டனர்
- சிலர் பயத்தால் இறந்தனர்
- சிலர் பயம் தூண்டி விட செல்லும் திசை தெரியாமல் கலங்கியவராக சென்றனர்
- சிலர் அவ்வாறு செல்ல முடியாமல் திகைத்து நின்றனர்
- சிலர் கண்டு ஓடிய திசைகளையே தாமும் கண்டு அத்திசையிலேயே ஆயுதங்களை போட்டுவிட்டு வேகமாக ஓடினார்
- சிலர் மீன் வடிவம் கொண்டு கடலில் புகுந்தனர்
- சிலர் பசு வடிவம் கொண்டு வழிகள்தோறும் மேய தொடங்கினார்
- சிலர் மாமிசத்தை தின்னும் பறவை வடிவம் கொண்டனர்
- சிலர் அந்தணர் வடிவம் கொண்டனர்
- சிலர் மான் போன்ற விழி பெற்ற இள மகளிர் வடிவம் கொண்டு தம் கூந்தலை வழித்துக்கொண்டு அனுமன் எதிரே நின்றனர்
- சிலர் ஐயனே நாங்கள் உன் அடைக்கலம் என்று சரணடைந்தனர்
- வேறு சிலர் காவல் கடவுளான திருமாலின் பெயரை உச்சரித்தனர்
- சிலர் தம்முடைய மனைவியரும் நெருங்கிய உறவினர்களும் கண்டபோது நாங்கள் சுற்றத்தார் அல்லோம் இப்போரை காண வந்த தேவர்கள் என்று சொல்லிவிட்டு போனார்கள்
- சிலர் நாங்கள் மனிதர்கள் என்று கூறினார்கள்
- சிலர் மந்தார மரங்கள் உள்ள அச்சோலையில் வண்டு வடிவம் கொண்டனர்
- சிலர் மயங்கி நின்றனர்
- சிலர் பிறை சந்திரனைப் போன்ற தம் கோரை பற்களை ஒடித்து விட்டு நெருப்பு போல செந்நிறம் கொண்ட தன் மயிரை கருமையாக்கி கொண்டனர்
Everything is fair in love and war. இருந்தாலும் இன்றைய தேதியில் நாம் அனுமனை அருள்மிகு ஆஞ்சநேயர் இன்ற இடத்தில் வைத்திருக்கிறோம். ஆனால் இந்த படலத்தின் நிகழ்வுகள் ஒரு பழங்குடி வீரனின் வன்முறை அளவுக்கு இருப்பதுதான் முக்கிய வித்தியாசம். இந்த படலத்தின் முக்கிய கேள்வியே – அனுமனை செலுத்துவது எது என்பதுதான்? இது போர் அறமா? அனுமனிடம் நீங்கள் அதை எதிர்பார்த்தீர்களா? லட்சுமணன் சூர்ப்பனகை மூக்கை அறுத்த அவசரத்தைப் பற்றி நாம் விவாதித்திருக்கிறோம். இங்கு அனுமனை இந்த அளவு போரின் அதீத வன்முறைக்கு தள்ளுவது எது? அறமா, ராமன் மீதான பக்தியா, சீதையா? இந்த கேள்விக்கு அந்த கமலநாதனே பதில் சொல்வார்.
கமல்:
அனுமன் ஏன் இந்த வெறியாட்டத்தை ஆரம்பிக்கிறான். சீதையை சந்தித்த பிறகு நடப்பது இது. சீதை இன்னும் ஒரு மாதம்தான் நான் உயிருடன் இருப்பேன் என்று சொல் என்கிறாள். அந்த உரையாடலை திரும்ப பார்த்தால் தெரியும்.
நீ இங்கே இறந்துபடுவாய் அப்படித்தானே? இனிய உயிர் தேக்கி ராமன் அயோத்தி சென்று முடிசூட்டிக்கொள்வான் என்று நினைக்கிறாயா? என் தோளேறி ராமன் இங்கு வருவான். அங்கதன் தோள் ஏறி இலக்குவன் வருவான். வானரப்படை இலங்கைக்கு வரும். நீ தனிமை நீங்குவாய். சொன்ன நேரத்தில் ராமன் உன்னை மீட்கவில்லை என்றால் அவன் ராவணன் போன்றவன். உன்னை மீட்காமல் அயோத்தி சென்றால் எங்கள் உயிர் எதற்கு ராமனுக்கு வில் எதற்கு?
இலங்கையில் பெரிய ஒரு அழிவை நிகழ்த்தாமல் செல்வது இழுக்கு என்று அனுமன் எண்ணக் காரணம் இதுதான். சீதையின் நிலையை பார்த்த பிறகுதான் இந்த முடிவுக்கு வருகிறான்.
சரி, இப்போ தம்பி இறந்துவிட்டான். இந்திரஜித் என்ன செய்தான் என்று பார்ப்போம். எனக்கு இந்திரஜித் மீது அனுமனைவிட பெரிய மரியாதை வந்தது பாசப்படலத்தில்தான்.

(நன்றி:https://vrindavan-das.pixels.com/)
பாரதி:
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச
வேர்த்து உயிர்க்குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன்
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்தாமும் தம் தம் யோகத்தின் முயற்சி விட்டார்
அவனுடைய வீரத்தை பார்த்தவர்கள் தான் மும்மூர்த்திகளும் ஆனாலும் இப்போது இவன் சினம் கொண்டு புறப்பட்ட வேகத்தை கண்டதும் தாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து விட்டார்களாம். பிரம்மன் தன் படைப்பு தொழிலை மறந்தான். திருமால் தன் காக்கும் கடமையை கைவிட்டான். உரிய காலத்தில் உயிர்களைக் கவரும் பணியை மறந்து விக்கித்து நின்றான் உருத்திரன்.
அவன் கோபத்துக்கு காரணம் தம்பி இறந்தான் என்பதுகூட இல்லை. என் தந்தை இராவணனது புகழல்லவா தேய்ந்தது.
இந்திரஜித் அனுமனைவிட உயர்ந்தவன் என்பது விவாதத்துக்குரியது. அதை படல முடிவில் வைத்துக்கொள்வோம். முதலில் இந்திரஜித் ராவணனிலிருந்தும், அக்ககுமாரனிலிருந்தும் வேறுபட்ட பார்வை கொண்டவன். அதைப்பேசுவோம்.
கமல்:
இந்திரஜித் பெரும் படையுடன் கிளம்புகிறான். அவனுடைய சினமேறிய சொற்கள் அண்டங்களும் திசைகளும் பிளவுபடும் அளவு ஒலித்தன என்று கம்பன் எழுதுகிறான். இந்திரஜித்துக்கு மேகநாதன் என்று ஒரு பெயர் உண்டு. பிறந்தபோதே அவன் அழுததில் மேகங்கள் இடிஇடிப்பது போன்று இருந்ததைக் கொண்டு மேகநாதன் என்று பெயரிடப்படவன். அவன் புறப்படுவதற்கு முன் ராவணனிடம் பேசியதைப் பார்த்தால் அவன் வித்தியாசமானவன் என்று தெரியும். ராவணனின் ஆற்றலில் எள்ளளவும் குறையாத ஆற்றலை பெற்றுள்ள இந்திரஜித் தன் தந்தை செய்த தவறை தான் செய்யவில்லை.
ராவணனிடம் சொல்கிறான். “நல்லதாக எதையும் ஆலோசிக்கிறாய் போலத் தெரியவில்லை. நடந்து முடிந்தபிறகு வருந்துகிறாய். குரங்கின் வலிமையை முறைப்படி அறிந்திருந்தும் நீர் சென்று பொருதிர் என்று அரக்கர் கூட்டத்தை வரிசை வரிசையாய் அனுப்பி அழித்துவிட்டாய்.”
ஒன்று குரங்கின் வலிமை முறைப்படி அறிந்திருந்தும் என்ற கூற்று. ராவணனே வாலியிடம் தோற்றவன் என்று இடித்துரைப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அனுமன் விளைத்த அழிவுகளைக் கண்டபின்னும் உணராதிருத்தலை சுட்டினான் என்பதும் பொருந்தும். ஆராயாமல் குரங்கு என்று அலட்சியப்படுத்தியது தந்தை செய்த தவறு தெளிவாக துணிவுடன் தந்தையிடமே சொல்லிவிட்டான்.
“இங்கு ஒருவர் கூட மீளவில்லை என்றால் , குரங்கா அது. மும்மூர்த்திகளும் வந்தது போல அல்லவா இருக்கிறது. எட்டு திசை யானையையும் வென்றாய். முக்கண்ணனின் கயிலையை பெயர்த்தாய். மூன்று உலகையும் வென்றாய். இப்போது அக்ககுமாரனைக் கொன்ற குரங்கு இன்னும் தன் ஆற்றல் காட்டட்டும் என்று வேடிக்கை பார்க்கிறாய். இதன்பிறகு சென்று அதை போர்க்களத்தில் வென்றாலும் அது வீண் பிதற்றலே”
இந்த அளவு தர்க்கத்தோடு தெளிவோடு இதுவரை யாரும் ராவணனிடம் அனுமன் செயல் பற்றி பேசவில்லை. இத்தனைக்கும் கண்ணை மறைக்கும் கோபத்தில்தான் இந்திரஜித்தும் இருக்கிறான். ஆனாலும் கோபத்திலும் தெளிவும் கட்டுப்பாடும் இருக்கிறது.
கடைசியாக அவன் சொல்வது மாஸ்டர் ஸ்ட்ரோக். “சரி, கவலையில்லாமல் இரு. நான் போய் பிடித்து வருகிறேன். நீடு இருத்தி” என்கிறான். மகன் தந்தையை வாழ்த்திச் செல்கிறான். நீண்ட நாள் இருப்பாய் என்று. ராவணன் நீணாள் இருக்கவில்லை என்பது தெரியும். ஆனால் சொன்னபடி அனுமனை கட்டி கொண்டு வந்தவன் இந்திரஜி்த் தான்.
சரி. இந்திரஜித்தை நிற்கவைக்க வேண்டாம். போருக்கு அனுப்புவோம்.
பாரதி:
ஆம், போர். இந்திரஜித்தும் அனுமனும் சந்தித்து போரைத் தொடங்கும் வரைக்கும் இருக்கும் காட்சியே ரொம்ப அபாரமானது.
கம்பனுக்கு வழக்கமாகவே படைநகர்வை சொல்லும்போது அதியோக்தி பீறிட்டு கிளம்பிவிடும். போர் தளவாடங்கள் எல்லாம் ஓரிடத்தில் சேர்ந்ததாலேயே பூமாதேவிக்கு முதுகு வலிக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார். தளவாடங்களே அவ்வளவு எடை என்றால் படை எத்தனை பெரிது என்று நாம் கற்பனை செய்துகொள்ளலாம். தடுவை மரம், சகடைப் பறை, திமிலைப் பறை இவற்றின் சத்தத்தால் நட்சத்திரங்கள் பூ மாதிரி உதிர்ந்துவிட்டன என்கிறார். அனுமனே அதைப் பார்த்து , இந்தப் படை இந்திரனை மட்டுமா வெல்லும். ஏழு உலகங்களையும்கூட வெல்லும் என்று மெச்சுகிறான்.
அவ்வளவு பெரிய படை. ஆனால் அனுமன் என்ன செய்தான் என்று பாருங்கள். ராமன் இருக்கும் திசை நோக்கி ஒரு கும்பிடு. முகத்தில் புன்னகை. இத்தனை பெரிய படையை அழிக்க வாய்ப்பு கிடைத்ததன் மகிழ்ச்சி. அவன் சேனையை தன்னிடம் போரிட அழைத்தது கோழி கூவியது போல இருந்தது என்கிறார். வீர கர்ஜனை அல்ல. விளையாட்டான கெக்கெலிப்பு என்று சொல்வோமல்லவா. ஹூட்டிங் அல்லது ஹௌலிங் என்று சொல்லலாம். கூடவே இந்திரஜித்துக்கு தனிப்பட்ட அழைப்பு. வலிமையுடைய இந்திரஜித்தே, சீக்கிரம் வா.
அந்தப்பக்கம் இந்திரஜித்தும் போர்க்களத்தை பார்வையிடுகிறான். தாழிப்படு தயிர் பார்த்தோமல்லவா? அப்படி கிடந்த போர்க்களத்தைப் பார்த்து அவனும் புன்னகைக்கிறான். அனுமன் நல்ல போராளி என்று மெச்சுகிறான். அப்புறம்தான் நினைக்கிறான். அனுமன் ஒருவனே இத்தனை அரக்கர்களை அழித்தான் என்றால் இனி ராமன் மற்ற வானரப்படையுடன் வந்தால் எப்படி வெல்வது. பிறகு இறந்த எண்ணில்லாத அரக்கர்களைப் பார்த்து ஒரு அவமான உணர்வும் வருகிறது. அத்தை மூக்கு அறுபட்டது. கரன் வதைக்கப்பட்டது. அசோகவனம் அழிக்கப்பட்டது. அரக்கர்கள் கொல்லப்பட்டது. எல்லாம் இரண்டு மனிதர்கள், ஒரு குரங்கினாலா? என்னுடைய வீரம் ரொம்ப அழகுதான் என்று தன்னை நிந்தித்துக்கொள்கிறான். ஆனால் ஒன்று மட்டும் இன்னும் அவன் பார்க்கவில்லை. அவன் தம்பி கிடந்த கோலம்.

நன்றி: பார்கவி
கமல்:
ஆம். பிண மலைகள் வழியே சென்று தம்பி உடலைப் பார்க்கும்போதுதான் காய்ச்சிய செம்பு போல கண்கள் கோபம் உமிழ்கின்றன. காளி தாருகாசுரனை கொன்றபோது ஒரு பெரும் இரத்தப்பெருக்கு ஏற்பட்டது என்ற கதை உண்டு. அப்படிப்பட்ட இரத்தப் பெருக்கில் கிடக்கிறான் அக்ககுமாரன். நரசிங்கம் கிழித்துப்போட்ட இரணியனின் உடம்பு குழம்பாகிக் கிடப்பது போல அந்த ரத்தப்பெருக்கில் தம்பியை காண்கிறான். அவன் தேர் நிலைகுலைந்தது. கையில் இருந்த வில் நழுவி விழுந்தது. ராவணனுக்கு அஞ்சி எந்த உலகத்திலும் உன்னை மறைத்து வைக்க அஞ்சுவார்கள். நீ எங்கே சென்றாய் என்று புலம்புகிறான். அந்த துயரத்திலிருந்து திரும்ப ஒரு பெரும் சினம் எழுகிறது. கம்பன் அதை இப்படி சொல்கிறான். முன்னே தைத்திருக்கும் துயரம் என்னும் ஆணியின் மேல் மற்றொரு சினம் என்னும் ஆணியை அடித்து துயரத்தை உள்ளே அழுத்தினான். இதுதான் போருக்கு ஆரம்பம். மேற்கொண்டு போரில் என்ன நடந்தது என்பதை விஜயபாரதி விவரிப்பார்.
பாரதி:
அனுமனின் போர் எப்படி இருந்தது என்பதற்கு கம்பன் ஒரு புது வரிசையைக் காட்டுகிறார். இதுவரைக்கும் வந்ததாக தெரியவில்லை. யானைகள் எப்படியெல்லாம் அழிந்தன. தேர்கள் எப்படியெல்லாம் அழிந்தன என தனித்தனி பாடல்கள் உண்டு. உதாரணத்துக்கு,
உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ?
மிதியுண்டன யானை விழுந்தன யானை மேல்மேல்
புதையுண்டன யானை புரண்டன யானை போரால்
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்மேல்
இதெல்லாம் முடிந்து தேர் குதிரை அரக்கர்கள் எல்லோரும் அழந்து இந்திரஜித் மட்டும் மீதியிருக்கிறான்.
இப்போதுதான் அந்த ஹீரோயிக்ஸ் எல்லாம் ஆரம்பிக்கும். முதலில் ஒலி, அப்புறம் வஞ்சினம், பிறகு போர்.
இந்திரஜித்தோட நாணொலி கேட்டு ஆதிசேடனும் இந்திரனும் கூட நடுங்கினார்கள். அவனுக்கு மேகநாதன் என்று ஒரு பெயர் உண்டு என்று பார்த்தோம். அவன் பிறந்தபோது அழுததே இடிபோல இருந்தது என்று. ஆனால் இங்கே வேறொன்று நடக்கும். அவன் நாணொலி கேட்டு அனுமன் எழுப்பும் எதிரொலியில் பிரம்மாண்டம் பிளந்தது, மலைகள் பொடிப்பொடியாகின திசைகள் பிளவுபட்டன பூமியும் பிளந்தது இறுதியில் இந்திரஜித்தின் வில் நாணும் அறுந்தது என்று முடிப்பார்.
இந்திரஜித் அனுமனைப் பார்த்து நல்லை நல்லை, நீ சாமர்த்தியசாலி தான். உலகில் யாருடன் வேண்டுமானாலும் போரிடும் வலிமை கொண்டவன்தான். உன் வாழ்நாளுக்கு இன்றுதான் எல்லை எல்லை என்பான்.
அனுமனோ உங்கள் வாழ்நாளுக்கு முடிவும், கொள்கைக்கு முடிவும், பாவத்துக்கு முடிவும் படைக்கலத்துக்கு முடிவும் உண்டு. அதற்காகத்தான் வந்திருக்கிறேன். ஆனால் என் தோள் வலிமைக்கு முடிவு இல்லை.
அனுமனுக்கு ரத்தம் வரும் அளவு இந்திரஜித் காயப்படுத்துவான். அனுமன் ராமன் புகழ் அளவு பெரிதான பிறகு அவனைப் பார்த்து ஸ்தம்பித்து நிற்பான்.
அவன் 100 அம்பால் அடித்தால். இவன் மரத்தால் அவனை அடிப்பான். அவன் ஆயிரம் அம்புகளால் அடித்தால் இவன் தேரோடு மேலே தூக்கி அவனை வீசிவிடுவான். இறுதியில் இந்திரஜித் வேறு வழியே இல்லாம் பிரம்மாஸ்திரத்தை அனுமன் மேல் செலுத்துவான். பாம்பு கூட்டங்களுக்கு அரசனுடைய வடிவத்தைக் கொண்டு சிறந்த கருடனும் திடுக்கிட்டு நடுக்கம் அடைய பெரிய அனுமனது தோள்களை சுற்றி இறுக்கி கட்டி விட்டது. அறக்கடவுள் கண்ணீர் சிந்துமாறு அனுமன் கீழே விழுந்தான் என்று முடிகிறது.
முதல் முறையாக அனுமன் கீழே விழுகிறான். முதன்முறையாக அனுமனை எதிர்த்து ஒருவன் வெல்கிறான்.
கமல்:
அவ்வாறு கீழே விழுந்த அனுமன் தன்னை கட்டியது பிரம்மனது அஸ்திரம் என்று ஆராய்ந்து அறிந்து இதன் ஆணையை அவமதித்து போதல் தக்கதன்று என்று எண்ணினான் அதனால் அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு கண்மூடி இருந்தான். அதை கண்ட இந்திரசித்தன் இவனது வலிமை ஒழிந்தது என்று நினைத்து அருகில் வந்தான்.
இந்திரசித்தன் இவ்வாறு அருகே வந்த போது இதுவரை உயிர் பிழைத்து எல்லா திசைகளிலும் ஓடி ஒதுங்கி தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த பல அரக்கர்கள் சூழ்ந்து கொண்டு அந்தப் பாம்பை பிடித்து இழுத்தார்கள் அனுமனை அதட்டினார்கள் ஆனந்தத்தால் ஆரவாரித்தார்கள்.
குரங்கினது வலிமை குறைந்துவிட்டது என்று வாய்விட்டு கத்தி பெரு முழக்கம் செய்யும் அந்தப் பெரிய இலங்கை நகரம் அலை வீசும் பாற்கடலை ஒத்தது அனுமனை எல்லா பக்கமும் சுற்றி இழுக்கும் பிரம்மாஸ்திரமாகிய பாம்பு வாசுகியை ஒத்தது அதை பிடித்து இழுக்கும் அரக்கர் பாற்கடலை கடைந்த தேவர்களை ஒத்தனர் அனுமன் மந்திர மலையை ஒத்திருந்தான்.
அரக்க ஆடவரும் மகளிரும் பேரொளி செய்தவாறு வானத்திலும் எல்லா திசைகளிலும் வந்து மேகங்களைப் போல பெருமுழக்கம் எழுப்பினார்கள் அவ்விடத்தை முற்பட அடைந்து அடைந்து அவர்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை. அந்த மகிழ்ச்சியை விளக்க கூறினால் இந்திரசித்தன் இந்திரனை கட்டி சிறைசெய்து கொண்டுவர பெற்ற அந்த நாளில் அவர்களை அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை ஒத்திருந்தது.
அ.ச.ஞானசம்பத்தத்தின் புத்தகத்தில் இருக்கும் மற்றொரு பார்வை. ராமனின் தொண்டனாகிய அனுமனுக்கு பிரம்மாஸ்திரத்தை எதிர்த்து வெல்வது எளிது தான் என்றாலும் தான் தொண்டன் என்பதை அனுமன் மறப்பதே இல்லை. அகங்காரங்களை முற்றிலும் கலைந்தவனே தொண்டனாக இருக்க முடியும். அத்தகைய தொண்டிற்கு இலக்கியமாகிய அனுமன் அயன் படையை எதிர்க்கக்கூடியவனே ஆயினும் அதற்குரிய ஆற்றலை பெற்றிருப்பினும் அந்த ஆற்றலை பயன்படுத்தாமல் அயன் படைக்கு வணக்கம் செய்து அதனால் கட்டுண்டு இருக்கிறான். அயன் மேல் கொண்ட பக்தியும் மரியாதையும் ஒருபுறம் இருக்க இக்கட்டை ஏற்றுக் கொள்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
சர்வ வல்லமையுள்ள ராவணனைக் கண்டு அவனோடு சில சொற்கள் பேசி அவனை எடை போட்டு செல்ல வேண்டும் என்பது அனுமனின் எண்ணம். தன்னை ஏவிய ராகவனிடம் சென்று சீதையை கண்டதையும் அவள் இருக்கும் நிலையை மட்டும் கூறினால் போதாது, மேலும் அவர்கள் இருவரும் பல நாள் போரிட வேண்டிய இந்திரசித்து முதலானவர்களை பார்த்து விட்டான் ஆதலின் இத்தகைய மகனைப் பெற்ற தந்தையையும் நேரே கண்டு அவனிடமும் உரையாடினால் ராமன் பகைஞர்களை ஓரளவு அறிந்து கொள்ள முடியும்; இந்த பகைவனை பற்றிய தகவலை ராமனுக்கு தராமல் பிராட்டியின் இருப்பை மட்டும் கூறினால் தான் ஒற்றனாக வந்த பணியை முற்றிலுமாக செய்தவன் ஆக மாட்டான், எனவே தான் எப்படியாவது ராவணனை காண வேண்டும் என்று சிந்தித்த அனுமன் அதற்குரிய ஒரு கருவியாக அசோகவனம், சயித்தம் முதலியவற்றை அழித்தான். இவற்றை அழித்தால் ராவணனிடம் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்று அனுமன் கருதியது நியாயமானது ஆகும். அவன் நினைத்தது நடப்பதற்கு அயன் படைக்கு கட்டுப்படுதல் அவசியமாகும்.
ராவணனை சந்திப்பது தான் நோக்கம் என்றால் கிங்கரர்கள், சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள், அக்ககுமாரன் என்பவர்களில் யாரோ ஒருவரிடம் கட்டுண்டு ராவணனிடம் சென்று இருக்கலாமே என்ற வினா தோன்றினால் அதில் தவறு ஒன்றும் இல்லை ஆனால் வீரத்தின் முழு வடிவான அனுமன் மேலே சொன்ன ஐவருள் யாரோ ஒருவரின் கட்டுக்கடங்கி செல்வது அவனுடைய பெருமைக்கு உகந்தது ஆகாது. கொட்டுப்பட வேண்டும் என்று அனுமன் தனக்குத்தானே முடிவு செய்து கொண்டான். அது இந்தரசித்து போன்ற மோதிர கையால் இருக்க வேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை. மூவரில் ஒருவருக்கு ஈடானவன் என்று இந்திரசித்தனே இவனைக் குறிக்கின்றான். ஆதலால் தன் வல்லமையை நன்குணர்ந்தவனாகிய இந்திரசித்தனிடம் கட்டுப்படுவது சிறந்ததாகும் என அனுமன் கருதினான்.
முன்னர் வந்த கிங்கரர் முதல் அக்ககுமாரன் வரை வந்தவர்கள் அனுமனின் ஆற்றலை உணராமல் வந்தது ஒரு குரங்கு என்ற எள்ளல் மனப்பான்மையோடு வந்தனர். எனவே பகையை குறைத்து மதிப்பிட்டால் என்ன நேரம் என்பதை அனுமன் செய்து காட்டினான். இந்நிலையில் அனுமன் அயன் படைக்கு கட்டுப்பட்டான் என்றாலும் இந்திரசித்து அவனை குறைத்து மதிப்பிடவில்லை, ராவணனிடம் கொண்டு சேர்த்தான்.
(போரும் குரங்கும் – 2 என்ற தலைப்பில் அக்ககுமாரன் வதைப் படலம் மற்றும் பாசப் படலம் குறித்து சுந்தர காண்ட நிறைவு கலந்துரையாடலின் பகுதியாக 21 மார்ச், 2024 அன்று Clubouseல் ஆற்றப்பட்ட இருவர் உரையின் எழுத்து வடிவம்)

Leave a Reply