கம்பனின் பத்தாயிரம் பாடல்களை ஒவ்வொன்றாக வாசித்து விவாதித்து கடந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் சற்று வியப்பாகவே இருக்கிறது. அதை ஒட்டி என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது, ராவணன் செலுத்தும் தாமதாத்திரத்தை (தாமசாஸ்திரம்) ராமன் சிவ நாமம் செப்பி ஞானத்திரத்தை அனுப்பித் தகர்க்கும் பாடலைப் பற்றிச் சொல்லலாம் என்று தோன்றியது. வாரத்தில் 6-8 மணி நேரம் நேர்நிலையான செயல்பாடுக்காக கொடுத்தது ஒரு காரணம். மேலும், சமீபத்தில் நான் பங்கேற்ற எழுத்தாளர்/மருத்துவர் சுனில் கிருஷ்ணனின் ஆயுர்வேத அறிமுக வகுப்பிற்குப் பின் தாமசம் என்ற கருத்துரு பற்றிய ஒரு சிந்தனை உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது.
யுத்தக்காண்டம், ராமன் – ராவணன் இருவருக்கும் இடையிலான இறுதிப் போர். ‘தாமசம்’ விளைவிக்கும் மந்திர அம்பை ராவணன் எய்கிறான். வரி கொண்ட பாம்பு குகைக்குள் நுழையும் தன்மை அதற்கு. மலையாளத்தில் ‘தங்குமிடம்’, ‘நேரம் கடத்துதல்’ என்ற பொருளிலும் ‘தாமசம்’ இயங்குகிறது. இருள், மாயை, தளர்ச்சி, மயக்கம், சோம்பல், செயலின்மை, தேக்கம் அனைத்தும் வசதியாக நிதானமாக அங்கு நிகழ்கிறது. மேருவின் மூலத்தில் இருந்து சுருண்டு உதிக்கும் பாம்பு அடங்கி மிக மெல்லமாக ஓசைப்படாமல் இருளை ஆழத்தை நோக்கி விருப்புடன் செல்கிறது. பாதாளத்து ஆழத்தின் இருள் தேக்கத்தை விரும்பி ஏற்பவர் உண்டா என்று கேட்டால் இல்லை என்று பதில் வரக்கூடும். நாம் விழும் பல அகழிகள் நாமறிந்தே நடப்பது தான். ஆனால் அதில் நாமறியாத கூறுகளும் உண்டு.
அது அம்பாக ஒரு புள்ளியில் நுழையும் பொழுது பல முகங்களைச் சூடி நிற்கிறது. சில வீரியத்தின், தீவிரத்தின் வடிவாக வரும். வரும்பொழுதே ‘நான் உன்னை பழி கொள்ளவே வந்தேன்’ என்று குருதியாடி நுழையும் ஓர் அம்பு. மிக மிக உயர்ந்ததாக நடித்து மேல்நிலையை காட்டி வரும் ஓர் இருள். இன்னொன்று ஒளிவும் கூச்சமும் இன்றி பேய்க் கோலம் பூண்டு வரும். இது ராமன் மீது ஏன் அனுப்பப்படுகிறது என்ற கேள்வி வரலாம். எப்படி செயல் நிலையில் இருப்பவர் மீது தாமசத்தை ஏவி அவரை நிலை குலையச் செய்ய இயலும்? தாமசம் செயலூக்கம் கொண்டவர்களை அண்டாது என்றப் புரிதலை இப்பாடல் சற்று மாற்றிப் பார்க்கிறது. அதீத செயல் நிலையில் உள்ளோர் அனுபவிக்கும் இனம் புரியாத தவிப்பை, முன் செல்ல முயன்று முயன்று தோற்கும் கணத்தில் எழும் சலிப்பை, எல்லாம் பொருளிழந்து செய்வதனைத்தையும் கைவிட்டு விடலாம் என்ற பாழ் எண்ணத்தில் உதிக்கின்றது.
தீ முகம் உடையன சில முகம் உதிரம்
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ
ஒளியும் வெம்மையும், உயிரும் வண்ணமும், அழகும் அச்சமும் இணைந்து மிகப் பைய நுழையும் தாமசம். இதற்கு கண்ணுதலானை மனதில் எண்ணிக் கொண்டு தொடுக்கப்படும் அம்பு முறிமருந்தாகச் செயல்படுகிறது.
கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப்
பண்ணவன் விடுதலும், அது நனி பருக
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில்
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய
நெற்றிக் கண்ணில் விழித்துக் கொண்ட ஞானத்தின் கூர்மை தாமசத்திற்கு எதிரி. அது அழிவதில்லை, தொலைகிறது – கனவுப் பொழுதில் நனவு அழிவது போல, சொப்பன நிலையில் ஜாக்கிரம் இல்லாமல் ஆவது போல தாமசப்படையை ஈசன் அம்பு அழிக்கிறது. சற்று விசித்திரமான உவமை. கனவு தானே மாயை?
சைவ சித்தாந்தம் ஐந்து காரிய நிலைகளைச் சொல்கிறது – நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல். இந்த வரிசையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் நிலைகள். ஜாக்கிரத்தில் ஜாக்கிரம், சாக்கிரத்தில் சுஷுப்தி, ஜாக்கிரத்தில் சொப்பனம், ஜாக்கிரத்தில் துர்யம், ஜாக்கிரத்தில் துரியாதீதம் என்றிவை செயல்படும் படிநிலைகள் உண்டு. இதில் ஜாக்கிரத்தில் சொப்பனம் என்பது மூன்றாம் நிலை, மனம் பிராணனுடனும் ஆன்மாவுடனும் கூடி அறிவுணர்ச்சி அடங்கிய நிலை, எளிமையாக்கிச் சொன்னால் கனவெனத் தோன்றும் மயக்க நிலை.
இப்படியான மாய இருளில் சிக்கிச் சுழலும் மனமெனும் தாமசப்படையை சிவனின் அறிவுப்படை வென்றது என்று இருந்தால் நம்மால் நேரடியாக உவமையை விளங்கிக் கொண்டிருக்க முடியும். அதாவது நனவு போல் ஞானம் பிறந்துவிட்டது என்றாகிவிடும். இங்கு ‘கனவில் அழியும் நனவு போல்’ என்ற உவமை தாமசத்தை அழிக்கும் அம்பைச் சுட்டி நின்று நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது
அறுவை சிகிச்சை செய்த பின் நீங்கும் கண் பொறை போல என்றால் பொருள் சரியாக வருகிறது, அதில் பொருத்தமற்ற தெளிவு அமைந்துவிடுகிறது என்பதால் கைவிடுகிறேன். குறைபாட்டைச் சரி செய்யும் கண்ணாடியை கழற்றினால் குறையும் கண்பார்வை போல அந்த அம்பு செயல்பட்டது என்றால் அது உவமையின் இருண்மைக்கு அருகில் அமைகிறது என்றாலும் தாமசத்தின் இயல்பை முழுமையாக காட்டவில்லை. உவமைக்குள் குறை கண்ணுக்கு வெளியே இருக்கும் ஒரு கருவியில் இருக்கிறது, கம்பன் சுட்டும் தாமசம், கனவு x நனவு என்ற இரு துருவங்களில் நிற்பது அல்ல. அறிவுக்கு வெளியே நின்று பார்வையை மறைக்கும் திரை அகல்வதல்ல, அறிவு தன் மயக்க நிலையில் அனுபவிக்கும் மாற்றம். தாமசம் நீங்கும்போது உலகம் புதிதாகத் தெரிவதில்லை — உலகுக்கும் அறிவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தவறான உறவே நீங்குகிறது. ஏனெனில் அங்கு அழிக்கப்படுவது அறிவின் இன்மை அல்ல, அறிவுக்கும் பொருளுக்கும் இடையில் புகுந்திருக்கும் திரிபும் நிலைமாற்றமுமே. உணர்வை அழிக்காமல், உணர்வின் மீது படிந்திருக்கும் மயக்கத்தை அம்பு குறி வைக்கிறது.
சுனில் கிருஷ்ணன் வகுப்பில் மன இயல்புகளை கணிக்கும் வினாபட்டியலை ஒன்றை நிரப்பச் செய்தார். ஒவ்வொரு வினாவிற்கும் ‘சத்வ ரஜஸ் தமஸ்’ என்ற முக்குணங்களைச் சுட்டும் மூன்று பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பங்கேற்பாளர்களில் சிலர் சத்வம்/தமஸ் என்ற இரு எல்லைகளில் மனம் ஊசலாடுவதை குறிப்பிட்டோம். முக்குற்றங்களைப் பற்றிப் பேசும்பொழுது ‘கபம்’ என்ற நிலைத்த தன்மையை சொல்லி, அதன் உத்தம வடிவமாக சத்வம் இருக்கிறது என்றார். அதன் அதம அல்லது விரும்பத் தகாத வெளிப்பாட்டில் உருக்கொள்வது தாமச குணம். ஒரே தோஷத்தின் இரு முகங்கள். சத்வம் என்ற ஒளியேற்றப்பட்ட தாமச குணம் என்று நினைத்துக் கொண்டேன். இத்தகைய திரிபை எப்படிக் கையாள்வது?
தாமசம் ஒரு கனவு, விழிப்பில் வரும் நனவென்ற அறிவு அதை அழிக்கும் கணை என்றால் அது வழக்கமான ஒப்புமை தான். விழித்திருக்கும் ஒருவனின் விழிப்புக்குள்ளேயே கனவு புகுந்துவிடும் நிலையை அவர் சுட்டுகிறார். கனவு கலைந்து நனவு திரும்புவது’ என்ற எளிய இயக்கம் அல்ல என்பது அடிக்கோடிடப்படுகிறது. இன்னும் நுட்பமான ஒன்றைச் சொல்ல ஒரு திருகிய தர்க்கம் வர வேண்டி இருக்கிறது. அணியின் பொருள் குழப்பமே தாமசத்தின் மந்தத்தன்மையை உருவாக்க வருகிறது. அதைக்கொண்டே கனவு x நனவு :: அறியாமை X அறிவு என்ற சமன்பாடு தெரிந்தே தவிர்க்கப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட மூன்றாவது கண்ணின் மேல்நிலை அறிதலைக் கொண்டே விடுபட இயலும் என்பதை குறிப்புணர்த்துகிறார். அருவமாக ஒளி உண்டாகிறது. கண்ணுதல், கனவு, இமை என்ற சொற்களுக்குள் கவிமனம் தற்செயலாக வந்தமரவில்லை என்பதை நடுக்கத்துடன் எதிர்கொள்கிறேன்.
விழிப்பை ஆக்கிரமிக்கும் கனவும், கனவிலிருந்து விழிப்பை பிரித்தறியச் செய்யும் அறிவும் இரு ஆயுதங்களின் மோதல் அல்ல, இரு தீவிர நிலைகளின் மோதல். இந்த நிலைக்குள் அமிழ்ந்து விடுபடுதல் என்பது தொடரியக்கம். சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும், முள் அறிவிற்கும் மயக்கத்திற்கும் இடையில் ஆடிக்கொண்டே இருக்கும். தற்காலிகமாகவேனும், அறிவுக்கும் உண்மைக்குமான நிகர் உறவை மீள நிறுவுவதே நிகழச் சாத்தியமானது. அது இமைப்பொழுதில் நிகழ்வதென்பது ஒரு ஆறுதல், சிறிதளவு அருளும் கூட.

Leave a Reply