அங்கம் யாவையும் 1 – ஸ்ரீநிவாஸ்

(இராவணன் தேர் ஏறு படலத்தை முன்வைத்து)

இராவணன் இனி போருக்கு அனுப்ப யாரும் உயிருடனில்லை. எஞ்சியிருந்த ஒரே மைந்தன் மூத்தவன் இந்திரசித்தன் இலக்குவனால் கொல்லப்பட்டான். அரக்கர் என பூலோகம் வாழ்ந்திருந்த அனைவரும் மூதாதை உருவென இராவணனை துணைக்க வந்தவர்கள் இராமனால் இல்லாமலானார்கள். உடன்பிறந்தான், பிள்ளைகள், அமைச்சர்கள், தோழர்கள் என சுற்றம் எவருமில்லை. எஞ்சியவர்களை இறுதியாக ஒருமுறை களமுகப்புக்கு வரச்சொல்லிவிட்டு இராவணன் கடைசிப் போருக்கு தயாராகிறான். அவன் படையணிகள் அணிந்து ஒருக்கமாவதையும், அவனுக்கான தேரில் புறப்பட்டு போர்முகப்புக்கு வருவதையும் சொல்கிறது இந்தப் படலம்.

ஒரே ஒரு மனிதனின் உடல் அங்க அங்கமாக இத்தனை அண்மையில் இப்படி ஒரு தருணத்தில் இத்தனை விரிவுடன் சொல்லப்படுகிறது. அந்த அங்கங்களும் அதற்கு துணையாகும் படையணிகளும் மட்டுமே இப்பாடல்களின் நேரடிக் காட்சிகள். கவிஞனின் சொற்கள் ஒவ்வொன்றாக சென்றுகொண்டிருக்க உடல், அடி, முடி என ஒரு பெருமனிதன் மெல்ல உருக்கொண்டு எழுவதை மெளனமாக மனதில் விரித்துக்கொள்ளும் இடத்தில் நாம் அமர வைக்கப்பட்டிருக்கிறோம். அவை விரிகையில் நாம் உணர்வது முதலில் அங்க லட்சணங்கள் அனைத்தும் முழுமை கொண்டிருக்கும் ஒரு மனிதனை. அதில் அவற்றுக்கேயுரிய தனித்த எழில்களுடன் வந்தமையும் படையணிகள் கூடவே.

ஆனால் அது முதல் காட்சி மட்டுமே. பின்னர் கவனிக்கிறோம் முதல் பாடலில் இருந்தே அந்த உடல் அதன் எல்லைகளை தொடர்ந்து மீற முயன்று கொண்டிருப்பதை. உருவமாகவும் அருவமாகவும். உருவத்தில் இருபது தலைகளுடன் விண்ணளந்தவன் என எழுந்து நிற்கும் ஒரு மீமானுடன். அவனுக்குரிய அத்தனை படையணிகளும் அழகுகளும் அந்த பேருருவத்தை நிறைப்பவை. அருவத்தில் அதே உடல் அந்த மீமானுட எல்லைகளுக்கும் அப்பால் தன் காலஇடவெளிகளின் நிர்பந்தங்களை அழித்துக் கொள்கிறது. உடல் உடல் மட்டுமாக அல்லாமல், அவற்றுக்கு அப்பாலும் வேறு சிலவற்றை விரல் சுட்டத் தொடங்குகிறது.

நாடகாந்தமும் சொல்வீச்சும் பிரதானப்படும் கம்பன் விவாதக்களம் இத்தனை படிமங்கள் வழியாக நிகழும் நாடகங்களுக்கு போதிய முக்கியத்துவம் அளித்ததில்லை. ஒருவேளை ஆனந்த குமாரசாமி போன்ற ஒருவர் இந்த இராவண கோலத்தை ஒரு சிலை எனக்கொண்டு அதன் தத்துவ குறியீடுகளுக்கு செல்லக்கூடும். கபிலா வாத்ஸ்யாயன் இதையே ஒரு நிகழ்கலை வெளிப்பாடென அணுகி வாசிக்கலாம். போலவே சங்க அழகியல், ரசக் கோட்பாடு முதலியவையும் இவற்றை அணுக ஒருவருக்கு மிக உதவியானவை. நவீன இலக்கியம் சார்ந்து ஒருவர் இதை வாசிப்பாரென்றாலும் வைணவ மரபின் வாசிப்புகள் அவருக்கு எளிதில் புறந்தள்ளுதற்குரியதல்ல. எனினும் இப்பாடல்கள் முதன்மையாக வாசிக்கப் படவேண்டியது, முழுமையாக விரிவது அதன் நேரடியான காவியம் எனும் பின்னணியிலேயே என நினைக்கிறேன். காவியப் பின்னணி என உத்தேசிப்பது அதன் வாழ்க்கைப் பின்னணியையும், அதை முன்வைக்க அது கொண்டிருக்கும் கலை அடிப்படைகளையுமே.

ஆனால் என்றென்றைக்குமான ஒரு வாழ்க்கைப் பார்வையை முன்வைக்க விழையும் ஒரு செவ்வியல் படைப்பு, எழுதப்பட்ட காலத்திற்குப் பின் அதன் கலை அடிப்படைகள் மாறும் காலத்திலும் தன்னை முன்வைக்க தகவமைத்துக் கொண்டிருக்கும். அது நின்றிருந்த மரபின் சொல்லாடல்கள், தொடர்புடைய பண்பாட்டுக் களங்கள் மறைந்த பிறகும் அதை வாசிக்க வரும் ஒருவனுக்கு அதை முழுதும் அணுக எஞ்சியிருப்பது அதன் மூல வரிகளே. அப்படியொரு தனித்த வாசகனுக்கு அந்த வரிகள் வழியாக இந்த படலத்தில் விரிவது ஒரு இராவணனின் எண்ணற்ற அங்கங்கள் அல்ல, ஒவ்வொரு அங்கத்திலும் விரியும் பல இராவணர்கள்.

இந்த வாசிப்பு இன்னும் குறிப்பாக போரின் இந்த நாடகத் தருணத்தை கவனத்தில் கொள்கிறது. இராவண அணிக்கோலம் என்பதால் அவனது தன்மைய பாவம், வாசி, அகங்காரம், கயிலையை தூக்கியது போன்ற பராக்கிரமங்கள் என அவனது பாத்திரத்தின் பொதுவான ஸ்தாயியின் நேரடி அணித்தோற்றமாக இதைக் கொள்ளாமல், இந்த தருணம் வரையிலான அவனது அக புற பயணங்களை நினைவில் இருத்திக் கொள்கிறது. இந்த தருணத்தில் விரியும் இராவணர்களாலான ஒரு இராவணன் என்பதாகவே இதை வாசிக்கிறது. பிரபஞ்சப் பெருந்தோற்றம், காதலன், கணவன், எதிரி, அறிஞன், குலமுதல்வன் என்றெல்லாம் விரித்துக்கொள்கையில் அதற்கேற்ப அந்த அணிகளை தனிப்பொருளுடன் படிமங்களென அணுகும் சுதந்திரத்தையும் எடுத்துக்கொள்கிறது.

*

இராவணன் ஆணைக்கேற்ப மொத்த இலங்கையும் வரண்டது போல எஞ்சிய அனைத்து வீரர்களும் போர்முகம் வந்தனர். வேத முறைப்படி ஆற்றவேண்டியதை ஆற்றி, தானங்கள் வழங்கி இங்கிருக்கும் கடன்களை நிறைவேற்றிவிட்டு போர்க்கோலம் புனையச் செல்கிறான். சிவபக்தன். இமையாத முக்கணானை வணங்குகிறான். அவன் வணங்கும் அந்த தெய்வத்திற்கு அவனுக்கென அளிக்க இனி ஏதுமில்லை. வெறுதே இமையாவிழி கொண்டு தொடர்கிறது அது.

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர
,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், சுட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான்.
(9645)

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர் என கவசமிடுகிறான் பூணூல் அணிந்த மார்புக்கு. உலகைப் படைத்தவனால் வேள்வியில் உருவாக்கப்பட்டது இந்த கவசம். முந்தையப் போர்களில் இந்திரனை தோற்கடித்துப் பெற்ற அதைக் கொண்டு இன்னொருவனுக்கு முன் செல்கிறான், இம்முறை தான் தோற்க. படைப்பிற்கிறைவனின் கைகளில் எழுந்தது அதன் அறியமுடியாத தொன்மையைச் சொல்ல, தேவனை வெற்றி கொண்ட அசுரதேவன் என்னும் புகழையும் கவசம் காட்டுகிறது.  

அருவி பொழியும் மலையில் உதிக்கும் ஆயிரம் அருக்கர். அவனுடைய நிலைபெயராத தன்மை மலையாக வந்தாலும், அவனது துயர் அதில் அருவியாக உருகி சரடென வழிந்துகொண்டிருக்கிறது. மக்கட்துயர், சகோதரத் துயர், குலத்தின் துயர் அனைத்தும். அதன் மேல் ஆயிரம் சூரியன்கள் என ஒளிரும் கவசம். காலம் நிகழ்ந்தும் எதிர்நோக்கியும் ஒவ்வொரு தலைமுறையின் புலரியிலும் தன் குலத்திலிருந்து சேகரித்ததை, இறுதிநாளின் ஆயிரமடங்கு பொலிவோடு எரியும் நெஞ்சுகொண்டெழுந்திருக்கும் புலஸ்திய தோன்றல்கள். ஆனால் ஆதித்யன் ஒளிவிடுவது மட்டுமல்ல, துணைகளற்றதும் கூட. நவமென சுடர்விடும் ஆயிரம் மடங்கு தனிமையால் தன் நெஞ்சை, அத்துயர்களை போர்த்துகிறான்.

பூணூல் அணிந்த மார்பென்பது எப்போதும் நம்மை பால காண்டத்தின் அந்த முதல் பார்வைக்கு அழைத்துச் செல்வது. மிதிலை மாடத்து சீதையின் முதற்கணம் அண்ணல் நெஞ்சில் விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு எனப் பதிகிறது. பூணூலணிந்த மார்பாகிய மேகத்தில் மின்னல் என ஒளிவிடுகிறாள். நிகழ்ந்ததா என, எந்தக் கணம் என மயங்க வைக்கும் ஒரு மின்துடிப்பு. அந்தத் துடிப்பில் உள்ளது அதற்கு முன்னரே தான் மனதில் தேடிக்கொண்டிருந்த அல்லது முழுமையாக வரித்துக்கொண்டுவிட்டிருந்த அனைத்தும் இதோ நான் கண்டுவிட்டேன், ஒருபோதும் இதை தவற விடமாட்டேன் என்னும் அனைத்தும். ஏழ்கடல் ஆழத்தில் வாழும் மீனொன்று மேல்வந்து கணத்திலும் குறைவான நேரத்தில் விண்ணைப் பார்த்துவிட்டு ஆழம் மீள்கிறது.

வாழ்நாளுக்கு நீளும் நினைவென்றாலும் கூட, மிக மிகத் தற்செயலானதும்  தற்காலிகமானதும் அது. சதகோடி மின்னல்களுக்கு அரசி தன் நெஞ்சில் அமைகையில் கூட இராமனால் நிலைக்காத, தொடர்ந்து உருமாறக்கூடிய, தானும் ஓரிடத்தில் புகைகரைந்து இல்லாமலாகும் மேகமெனும் கொள்கலனிலேயே அம்மின்னலை ஏந்திக்கொள்ள இயல்கிறது. மேகமும் மின்னலும் – இருவரும் ஒருவரையொருவர் நிகழ்த்தி நிரப்பி இல்லாமலாகும் ஓருறவா அது?

இப்பாடலில் இராவணனில் அருவியென வீழும் அதே மின்னல் அந்த அஞ்சனக் குன்றத்தின் இறுக்கத்தால் சூழப்பட்டுள்ளது. மிதிலையில் அவள் காண்பதற்கு முன் இராகவ மானசம் இன்னும் மழைக்காக காத்துக்கொண்டிருக்கும் மேகம்தான். மின்னல் அடித்து இனிதான் மழைபெய்ய வேண்டும். ஆனால் இங்கு இராவண மனம் ஏற்கனவே ஆறாக ஓடி அருவியாகி ஆர்த்து இறங்கிக்கொண்டிருக்கிறது. துயர்கள் அருவியென வழியும் நெஞ்சில் மின்னல்கள் அடிப்பதில்லை. அல்லது சுடர்ந்த மினல்களும் துயரத்தால் குளிர்ந்து நீரென இழிகின்றன. சிறையுண்ட மின்னல் சிறையையும் வருத்துவது. ஆயிரம் சூரியனென எழும் கவசம் அந்த மெலிந்த மின்னருவியை தனக்குள் இருந்து வற்றச் செய்வதற்கான இறுதி யத்தனமா?

சங்கத் தலைவன் தலைவியை சந்திக்கும்பொருட்டு மார்பில் சந்தனம் பூசுவது மரபு. சந்தனம் ஊடல், கலவிகளில் தொடர்ந்து பயிலும் அணியென கம்பனிலும் கண்டிருக்கிறோம். திருமணத்திற்கு முந்தைய அணிக்கோலத்தில் இராமன் சந்திரனின் குளிரொளியை சந்தனமென ஆகம் பூசுகிறான். அங்கு அதை தலைவி வாழும் நெஞ்சை குளிரச் செய்ய எனக் கொண்டால், இத்தனை துயருக்கு மத்தியிலும் ஆயிரம் சூரியரின் பொலிவால் தன்னுள் இருப்பவளை அலங்கரித்துக் கொண்டாடி, கவசமெனவும் அணிந்து செல்கிறான் எனக் கொள்வதா? பின்னர் அவன் உடலின் ஒவ்வொரு கணுவிலும் துழாவும் இராகவனின் பகழியிடமிருந்து இராவணன் உட்கரந்தது இங்கு ஆயிரம் சூரிய பொலிவுடன் தன்னுள் எழுந்தவளையா? இத்தனைப் போரும் அவளிலிருந்தே எனும்போது அதன் முதல் அணியும் அவளே.

மலரின் இதழ்களென ஒவ்வொன்றாக மெல்ல விரிந்துகொண்டேயிருக்கிறது இப்படிமம். ஒருபுறம் துயரமும் வஞ்சமும் கொந்தளிப்பும் அளிப்பவள். அஞ்சனக்குன்றை மார்பின் உள்ளிருந்து ஆயிரம் சூரியர்களாக அவனை வெடிக்க வைக்கும் மின்னல். மறுபுறம் இன்னும் அறியாத ஆழத்தில் விடாப்பற்றாக, எவரிடமும் உரையாடலற்று இத்தனை துயர்களுக்குப் பின்னும் மாறாமல் அவள் மீதான மோன வியப்பிலாழ்ந்தவனின் ஆயிரஞ்சூரிய ஆராட்டு.

ஆனால் இப்படிமத்தின் ஆடல் இங்கும் முடிவதில்லை. அவனுக்கென்றே வாழ்ந்த இன்னொரு வாழ்க்கை மண்டோதரியுடையது. இராவணன் இறந்தபின் ஆழியென பரந்த சடலத்தில் தானும் ஒரு மின்னலென கடைசியாக அவர் சுடர்ந்தனையும் காட்சி இவ்வுறவுகளை இன்னும் இன்னுமென திறக்கிறது.  

*

வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி;
(9646)

மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் வாளை வலம் அமைக்கிறான். அவன் அரைக்கச்சு இடையைச் சுற்றி வந்து மாசுணம் என இறுக, அதனருகில் இந்த வாளை அமைக்கிறான் என்பதுதான் காட்சி. அவன் இடை மந்தர மலை, அந்த கச்சின் நீட்சியான அந்த வாள் வாசுகி. பாற்கடல் கடைதல் உலக இயக்கத்தின் நன்மை தீமை எனும் ஆதார இயக்கத்தின் உருவகம். அதை வெறுமே ஒரு பக்கக் கருவியாக சூடியிருக்கிறான் எனக் கொள்ளலாம்.

தொடரும் வரி கிம்புரி மணிக் கடி சூத்திரத்தைச் சொல்கிறது. அனைத்துக் கோள்களும் ஓரிடத்தில் குவிந்தன என்பது போல. அவன் இடை உலகின் மையமாக, அதைச் சுற்றி கோள்கள் இந்த மணிகளாக. அறம், பொருள், இன்பம், வீடு, அகம், புறம் என உலக இயக்கத்தை பறைசாற்றும் கிரகங்கள் அவனால் சிறைபட்டு இடையைச் சுற்றியிருக்கின்றன.  ஆனால் இது தொடக்கம் மட்டுமே. இடையை மீறியும் மேலும் கீழும் அவன் இன்னும் நிறைய பாக்கி இருக்கிறான் என்பது நன்மை தீமைகளின் இந்த அளவுகளுக்கு அப்பால் அவன் இன்னும் விரிவதை காட்டுகிறது. அவை வலம் வரும்படியாக மையமென நின்றிருக்கும் அவனது மீ பெரும் ஆணவம், விழைவு அவை என ஒருபுறம் தோன்றிக்கொண்டிருக்க, அதுவே அதுவரை அவனை அங்கு கொண்டுவந்து சேர்த்துள்ள வினைகளின் வெற்றிகளின் எடைமிகுந்த சுமையும்கூட என்பதையும் கவனிக்கிறோம். அந்த கோள்கள் ஓரிடத்தில் குவிந்துள்ளன என்பது காலம் அல்லது விதி சுற்றி வந்து அவன் இறுதியை நெருங்க ஓரிடம் சேர்ந்துள்ளது என்பதாகவும்.

*

மறை விரித்தன்ன மாடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி
;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து
(9647)

அந்தரீயத்தின் பொற்பட்டு கொசுவம் வேதம் விரிந்தது போலவும், கருடன் சிறகை விரித்தது போலவும் முன்னர் அமைக்கப்பட, அதன் பிற்பகுதி பின்னால் கட்டப்படுகையில் பிறைநிலா வடிவ வெண்பல்லைக் கொண்ட நாகம் போலவும் அமைகிறது. கருடனும் சேஷனும் ஒரு பாடலில். இரண்டும் போரிடப் போகும் எதிரியினது. தானே விஷ்ணுவென எழுந்து நிற்கிறான். இக்காட்சியை கிடைமட்டமாக கற்பனை செய்தால் நாகத்தின் மேல் பள்ளிகொண்ட உருவம் எழுவதை யோசிக்கலாம். கொல்ல நினைப்பவனின் உருவைத் தான் பூணும் பித்தன் அல்லது பக்தன். இரணியன் சிம்மரையும், கம்சன் கரியனையும் நினைத்திருந்தது போல. நடமாடும் முரண்பாடு.

இரு உயிரனங்கள், இரண்டு எல்லைகள். ஒன்று வான், மற்றது பாதாளம். ஊர்தி ஒன்று, படுக்கை ஒன்று. தொலைநோக்கும், விரைவும், வானொளியின் பாதையும் கொண்டது பெரும்பருந்து. அது வாழ்விற்கு ஆதாரமான மானுடம் கடந்த வேதஞானம் தான் விரிவதென முன்னிழையில் சிறகு விரித்திருக்கிறது. அதையும் தாங்கும் காலமென காரிருளென அடியிலா முடிவிலியென மறுநுனியில் நாகம் எழுகிறது. உடன் பித்தின் நிலவெயிறுகள் பால்நஞ்சை துளித்திருக்கின்றன.

காலமும், அகாலமும் ஆனவன். உலக இயக்கத்தை அடியிலியின் அசைவின்மையிலிருந்து எழுப்பி மறைஞானத்தின் ஒளிநோக்கி கொண்டு செல்பவன். அப்போதும் தானெனும் சுடர்நஞ்சின் இறுதிப்பித்தால் தன்னை தொகுத்துக்கொள்பவன். வானில் ஒருவன் எழுந்துகொண்டிருக்கும்போதே இன்னொருவன் பாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறான். மறையாக, சிறையாக, முறையாக, பிறையாகவெல்லாம் பாடல் முழுதும் விரிந்துகொண்டேயிருக்கிறான். அறிஞனையும் பித்தனையும் ஒருசேரக் காட்டுகிறது இப்பாடல்.

ஒவ்வொரு அணியின் அணுவிலும் தானே கடவுளாக பிரபஞ்ச வியாகரணமாக உருக்கொண்டு நிற்கிறான் தசமுகன். அதனாலேயே உலகம் அவனை கொள்ள முடியமலாகிறது.

*

மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து
;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி;
(9648)

வாளின் மணிகள் முகிற்குலங்களின் இடிகளை எல்லாம் தொகுத்து இழைத்தது போல ஆர்க்க, குகைச் சிங்கம் போல முழங்கும், ஒளிரும் சதங்கையும் கட்டியிருக்கிறான்.

குகை உறங்கும் சீயத்தின் சப்தம் என்பது இதுவரை அவன் போர்க்களம் ஏறாது நாட்டமைந்ததையும் சேர்த்துச் சொல்கிறது. முழைகிடந்த வல் அரி என்பது குகைவிட்டு வெளிவராதது, வயதானது. சப்தமிடாத அடித்தொண்டையின் கார்வையும், இழியும் எச்சிற்கோழையும், மடுத்த வேகமுமாக வெளிவருவது. சற்றே தூசிதட்டி செருமிய பின் களிறுகள் அஞ்சும் முழக்கத்தை எழுப்புவது. இது கழல் அல்ல சதங்கை என்பதும், அடுத்த வரியில் இன்னும் இரண்டு கூறுகள் சேர்த்து சொல்லப்படுவதும் இதற்கொரு விசித்திர தன்மையை அளிக்கிறது.

தழைக்கும் மின்னொளி பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி என்னும் குறிப்பு நேரடியாக மின்னொளி வீசும் பொன்னாலான மலரிதழ் சதங்கையைச் சொல்கிறது. தாவிப் பாயும் ராஜஸ எழுச்சியின் சிங்கத்தின் முழக்கத்தைச் பாதச் சதங்கைக்கு சொல்லவந்தவர், அதன் அடிப்பாதங்களை மலர்மென்மை என எண்ணினாரா? கரி மத்தகம் பிளந்து குருதி குளித்து தரையில் நடக்கும் சிம்மத்தடங்கள் மலரென விரிவதாக எண்ணிக்கொள்கிறேன்.

மலர்மென்மை ஒருபுறம் உதிர்கிறது. மின்னல் சுடர்ந்து இருள்மறைகிறது. உயிர்த்துடிப்புடன் காட்டப்பட்டாலும் தற்காலிகத்தன்மையும் இறப்பின் அருகாமையும் வந்தமையும் சதங்கை அது. மின்னல் ஒருவீச்சில் ஒட்டுமொத்தத்தையும் காட்டி அதை மறைத்து, முன்னைவிட இருளில் விட்டுச் செல்கிறது. அந்த மின்னல் என்னவென முன்னர் பார்த்தோம். சீயத்தில் எழுகிறேன் என கட்டுகையில், மின்னலில் சதங்கையின் ஒரு மணி அணைகிறேன் என்றும் தாழ்ந்தொலிக்கிறதா?

தொடர்ந்து கவியின் கண்ணீருடன் இந்த அணிபுனைதல் நிகழ்வதாகத் தோன்றுகிறது. புனையப்படுவது உடலல்ல, ஆத்மா.

*

உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய் நலம் சார்வுறச் சாத்தி;
(9649)

கழலும் விளக்கொளியும். அவன் அணிந்திருக்கும் கழல் இடி இடிக்கையில் உயிர்போகும் என அஞ்சி நாகம் கொள்ளும் மறுக்கத்தை அனைவரிடமும் ஏற்படுத்துகிறது. கடைசி வரி அருகிலிருக்கும் விளக்கொளி மேலும் பொலிவுற தம்மில் விழுமாறு அணிந்திருக்கும் ஆடையை சற்றே நீவி அமைத்துக்கொள்வதைச் சொல்கிறது. சென்ற பாடலின் சதங்கையிலிருந்து இந்த கழல் வேறுபடுகிறது. கழல் வீரர்களுக்குரியது, அவர்தம் வன்மையை பறை சாற்றுவது, அடைக்கலமும் அடிபணிதலும் இயல்பென ஒலிப்பது, மென்மை துளியும் அற்றது.

இப்பாடலில் வான் உலகின் இரு நிலத்திடை, எவ் வுலகத்திடை எனும் சந்த ஒழுக்கில் மண்மீது நிற்பவனின் கழலொலி மூவுலகின் படிக்கிரமங்கள் வழியாக நின்று எதிரொலித்துச் செல்வதை கேட்கிறோம். இடிகேட்கும் அரவச்சம் என்பது மிக மிக ஆதாரமான, தனிச்சையான, துடிதுடிக்க வைக்கும் பதைப்பு. இடி மழை பெய்து பொந்துகளை கரைக்கும் எனும் அச்சத்தையும் உடன் அளிக்கிறது, இங்கு உலகங்களுக்கு அந்த கழலொலி நாயகன் உலகை அழிக்கிறான் எனும் விதிர்விதிர்ப்பாக. மூவுலகங்கள் எனும்போது சீதையிலும் அது நிகழ்கிறதென கொள்ளலாம் தானே.

அதே நேரம் பேரிடியின் முழக்கம் வெறும் சப்தமென்றும், ஒலித்தடங்குகையில் துயர் நீங்கும் என்றும் உணர்ந்தால், அந்தக் கழல் தற்காலிகத்தன்மை மட்டும் கொண்டதென ஆகிறது. உண்மையான அழிவை ஏற்படுத்தும் பெருங்கடல்களின் ஒதை போன்ற பிற நிகரான பேரொலி உவமைகளுடன் ஒப்பிட்டால் இது துல்லியமாகிறது. முந்தையப் பாடல் முதுவல்லியத்தின் சதங்கை அடியையும் இணைத்துக்கொண்டால் எழுந்து கர்ஜித்து அணையும் இறுதி நடைக்கானவை இவை.

சரிந்த உடையில் விழும் ஒளியைச் சொல்ல சாய்நலம் என்று குறிக்கிறார். சாய் எனும் மூலம் ஒளியை குறிக்கும்போதே, தளர்தல், வீழ்தல், முற்றுவித்தல் முதலிய பொருள்களையும் அளிக்கிறது. வீழ்ச்சியின், மரணத்தின் நலம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறான் எனும் பொருளில். வேட்டியை நீவி சீரமைத்துக்கொள்ளும் எவரும் தவறவிடும் மிக எளிய அசைவுதான் அது. அதையே விளக்கொளி நன்கு அதில் துலங்குமாறு அமைத்துக்கொள்கிறான். ஆனால் சீதை எனும் தீபச்சுடர் முன் அவன் தளர்வதையும், அதனால் களம்படவிருப்பதை அறிந்த ஒரு ஆள் உள்ளிருந்து அதை இறுதிப்பொலிவுக்கு அமைவுறச் செய்வதையும் காண்பிக்கிறது. பேரிடியின் அரவமும், தீபச்சுடரின் மௌனத் தனிமையும்.

அங்கம் யாவையும் 2



One response to “அங்கம் யாவையும் 1 – ஸ்ரீநிவாஸ்”

Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading