நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்
கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ;
(9650)
கைகளுக்கு கோதையும் விரற்புட்டிலும் கட்டி, புயங்களில் கங்கணம் மாட்டுவதைச் சொல்கிறது அடுத்த பாடல். இருபது ஆகிய இராவணனின் கரங்களில், பரந்த தலை கொண்ட அனந்தனின் நஞ்சு தங்கிய கழுத்தில் கறை கிடந்தது போல கோதையும் விரற்குழல்களும்.
அனந்தனின் தலைகள் பலவாக விரிந்த கைகளுக்குச் சொல்லப்பட, அதன் மிடற்றுக் கறை அக்கரிய கைகளுடன் சற்றே மாறுபட்டு மங்கிய விஷ நிறத்தில் உள்ள அணிகளுக்கு வருகிறது. கரசரணங்கள் செயற்புலன்களாகிய கர்மேந்திரியங்களும் கூட. சென்ற பாடல்களில் கழல்களாக பாதங்களின் களவீரமும் அடிமைகொள்ளும் தன்மையும். இங்கு உலகம் ஏந்தும் சேஷனின் பாரம் கொண்ட இருபது கரங்கள்.
கறை கொண்ட கழுத்து அனந்தனுடையது என்றாலும், ஆலம் சார் மிடற்று அருங்கறை கிடந்தென எனும் வரி மூலமாக நீலகண்ட உருவகத்திற்குச் செல்லமுடியும் நாம். ஆலமுண்ட சிவனின் கழுத்தென காட்சியளிக்கும் மிடறு கொண்ட அனந்தனாகிய கரங்களில் என்று. அது அதே செயற்புலன்களை நஞ்சு நிரம்பியதாக நமக்கு காட்டுகிறது. செயலின் ஒவ்வொரு விரற்கணுவிலும் நஞ்சுகொண்டெழுகிறான் என்பதே இவ்வுவமை. எந்த செயல்கள், இதுவரை ஆற்றியவையா, இனி ஆற்றவிருப்பவையா?
‘அருங்கறை’ என்பதே சொல். உமைப்பாகனின் விஷம் வெளியில் இருந்து அருந்தப்பட்டு, விழுங்கவும் இயலாமல் துப்பவும் இயலாமல் முழுஉடலையும் நீலம் பாரிக்க வைப்பது. ஒரே ஒரு கழுத்தின் விஷமே அது. இருபது ஆகிய கைகளும் அதன் ஒவ்வொரு விரல்களும் அனந்தனின் தலைகள் என அமைகையில் அதில் கறைகளாக வந்தமையும் விஷம் என்ன? எத்தனை விஷங்கள்? தன்னைக் காக்கும் படைக்கவசங்களே விஷங்களாக மாறுபவனின் உள்ளம் இருப்பது எங்கு? ஆம், அது எதிரி மீது நஞ்சு செலுத்தும். ஆனால் தன்னையும் அழிப்பதல்லவா? இழப்புகளின் மலையுச்சியில், வாழ்க்கையில் தொடும் அனைத்தும் நஞ்சாகும் என்றுணர்ந்து, இனி வாழ்க்கையில்லை என எண்ணிவிட்டவனிலேயே இத்தனை நஞ்சு எழுமா?
அதற்கேற்ப பசிகொண்ட நீண்ட நாவுகளுடன் சீறுகிறது அவன் வஞ்சினங்களின் கங்கணம். அத்தனை நாட்கள் தனக்குள் என சொல்லிகொண்டிருந்த அந்த சொற்கள் தீநாபறக்க வந்தமைகிறது. அதுவும் நஞ்சே.
*
கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க;
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி;
(9651)
இந்த பாடல் தோள்களில் சுற்றப்படும் போர்ச்சங்கிலி வளையங்களை மந்தர மலையின் வாசுகிக்கும், குண்டலங்களை ஒளி கடைந்த சூரியனின் கதிருக்கும் சொல்கிறது.
பாலாழி அமுதம் கடைதல் எனும் செயலுக்கு மத்தான தோள்களில் அமையும் ஆற்றல் வளையங்கள் பெரும்பாம்பென சுற்றியிருக்கிறது. முன்னர் அவன் நன்மை தீமையின் அளவுகோல்களுக்கு அப்பால் காட்டப்படுவதாகப் பார்த்தோம். எனில் அவன் இங்கு தோள் ஆற்றல் எனப் பூண்டிருப்பது அதுநாள் வரையிலான தன் வாழ்க்கையின் கடைதல்களை. ஆனால் அதுவும் ஒரு நஞ்சு கக்கும் உயிரினமாகவே வந்து அமைய இயல்கிறது. இவ்வரிசையில் முன்னரே கச்சுடன் சேர்த்து கட்டப்பட்ட வாளுக்கு வாசுகி வருகிறது. பின்னரும் அரவுகள் கவசங்களில் அமைகின்றன. காப்பவை அனைத்தும் நஞ்சுதானா? இந்த வளையங்கள் சங்கிலிபோல மார்பில் பெருக்கல் குறியுடன் அமைந்து தோள்களைச் சுற்றி அத்தனை இறுக்கமில்லாமல் அமைவது எனத் காட்சியளிக்கிறது. எனில் முன்னர் அணிந்த மார்புக் கவசத்தை இது தொட்டுக்கொண்டிருக்கும். உராயும், சப்தமெழுப்பும்.
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்த்த பொன் கதிரின் சுடர் தயங்கும் குண்டலங்கள். சூரியனை உடல் கடைவது எவர். தன்னைத் தான் கடைந்து ஒளிவீசுகிறது அது. பொற்குண்டலங்கள் ஒருவரின் கல்வியை, உள்ளொளியைச் சொல்கின்றன. அனுமன் கல்வியின் பொருட்டு சூரியனிடம் செல்வதென்பது சுயம்பிரகாசத்தை தேடிச்செல்வதே. திகழ்வதன் தேவன் சூரியன். இப்பாடல் உடல் கடைதல் என்ற குறிப்பு வழியாக நேரடியாகவே இராவணன் உடலை வருத்தி இருந்த நாட்களையும் தவங்களையும் அதன் ஞானங்களையும் காட்டுகிறது.
செவிவழி நுழைவதே இங்கு ஞானம் எனப்பட்டது. மறைகள் கேட்கப்பட்டது என அறியப்படுகின்றன. உபநிடதங்கள் அருகிலமர்ந்து கேட்பதற்குரியவை. குரு மாணவனுக்கு மந்திரத்தை செவிபொத்தி அவனுக்கு மட்டுமென சொல்கிறார். இராவண செவிகள் இருபதென திறந்தவை. எண்ணிலா தெய்வங்கள் வரங்கள் அளிக்கப் பெற்றுக்கொண்டவை. ஈசனுக்கு பாடிய சாம கானத்தையும், நாரதருக்கு உரைத்த சொற்களையும் தாமே கேட்டவை.
இராவண அறிமுகத்தில் பன்னிரண்டு ஆதித்ய மண்டிலங்கள், விரிந்த உதயகிரி தோள்வரிசைகளில் இருபதென பெருகி காட்சியளித்தது. இங்கோ அவை தீட்டப்பட்ட கதிரவன் என்றல்ல, தீட்டப்பட்ட கதிரவனின் ஒளி மட்டும் என்றே குண்டலங்கள் ஆகியிருக்கின்றன. உடலை வருத்தி தவம் மீதுறும் அவனது சாதகத்தின் வளர்ச்சி நிறைவை இது காட்டுவதாக இருக்கலாம்.
இன்னொருபுறம் உடல் கடைதல் எனும் சொல் சாய்நலம் எனும் ஆட்சியுடன் இணைகிறது. அத்தனை நாட்கள் தீட்டப்படுதல் என்பது கரைந்தழிதலும் கூட. உற்றார் உறவுகள் குலம் என மெல்ல கடைதலுக்குரிய அனைத்தையும் இழந்து ஒளிமட்டும் நோக்கி வந்திருக்கிறான். எஞ்சியிருப்பது ஒளி மட்டுமே. அதுவே இந்த படைக்கவச அணிகளின் நிரையில் தானும் ஒரு பட்டைதீட்டிய கூர்மையான படை என திகழ்கிறது.
*
உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர;
புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ;
(9652)
இருபது செவிகளில் குண்டலங்களும், மார்பில் முத்தாரமும் அணிகிறான். சென்ற பாடலில் காட்டப்பட்ட செவியின் இருகுண்டலங்கள், இங்கு இருபது செவிகளில், இருபது தோள்களின் மலைத்தொடரில் அந்தி வானின் குங்குமச் செம்மையோடு அஸ்தமனச் சூரியன்கள் எனக் காட்சியளிக்கிறது. மார்பின் முத்துமாலைகள் நிலவு மற்றும் விண்மீன்களின் குளிரொளியுடன் திகழ்கின்றன.
உதயகிரியில் இப்போது அந்தியணைகிறது. சூரியன் மறையத் தொடங்குகிறது. தனது குருதிச்செம்மையை குன்றுகள்தோறும் பரவச்செய்கிறது. குண்டலங்கள் புதையிருளை பகைத்து இருபதென இங்கு சுடரலாம். ஆனால் அந்தி வந்தே தீரும், இருள் சூரியர்களை வெல்லும். சென்ற பாடலில் குண்டலங்களை கல்வியாக, தவமாக எல்லாம் பார்த்தோம். எனில் இங்கு அது பகைத்துப் போராடும் இருளெது?
தோள்களில் இது நிகழ்ந்துகொண்டிருக்க மார்பின் முத்தாரங்களில் முற்றிலும் வேறொன்று நிகழ்கிறது. அங்கிருப்பது வேறு காலம். தணுத்த சந்திரன் விண்மீன்களுடன் ஆரமென குளிர்ந்து பொலிகிறது. இரண்டு வெவ்வேறு காலங்கள் உடனுக்குடன் காட்டப்படுகின்றன. இறுதி நாளாகையால் காலத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறான் என்பதைச் சொல்கிறதா? காலங்களை வெறும் அணிகளெனப் பூணுபவன், அகாலன், என வேறொரு மீமானுடத் தன்மையையும் சொல்கிறாரா?
எனக்கு இக்காட்சி விரிவடைவது இன்னொன்றில். சீதையை இரவு முழுதும் எண்ணி மறுநாள் புலரி எழும் இராமன் சூரியோதயம் காணும் பாடல்களில் ஒன்று ததையும் மலர்த் தார் அண்ணல் எனத் தொடங்கும். ததைதல் எனும் சொல் அங்கு ஒட்டிக்கொண்டது. உள்ளிருந்து பூத்து பெருகும் மனம், நூறு நூறு கோடிப் பூக்களாய் குலுங்கும் மனம் அங்கு அந்த வரியின் மாலையானது. இங்கு வருவதும் ஏறத்தாழ அதே சொல் அதே பொருளில் துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர என்ற வரியாக. துதைதல் தோய்தல் என்பதாகவும், மன்னுதல், மண்டுதல் எனும் தொனிப்புடனும். தோளொடு தொளிடைத் தொடர என்பது விரிந்த மலைத்தொடரில் குங்குமச் செம்மையுடன் அந்தியை நமக்கு காட்டுகிறது.
வீரம் மட்டுமல்ல, காதலும் தோள்களுக்கே. சந்தனம் ஆடவரால் பூசப்படுகையில், குங்குமம் மகள்மங்கலமாக முலைகளில் பூசப்படுகிறது. ஆடவன் தோள்களில் அமையும் குங்குமம் முந்தைய நாளின் கூடலை தெரிவிக்கும். இங்கு கூடல் என்றல்ல, இராவணனின் எண்ணற்ற பிற மனைவியரின் மங்கலங்களாக இந்தக் காட்சியை வாசிக்கலாம். எனில் இருபது சூரியர்களென எழுந்தது அவர்கள் ஒவ்வொருவருடனும் அவர்களுக்கென அவன் கொண்ட தனித்த உறவைச் சொல்கிறது. அவர்கள் நெஞ்சுவிம்மிய மலைகளென அவனை நோக்கி வான் எழுகையில், இத்தனை காலம் விண்ணிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தவன் இப்போது அத்தமனம் வரை வந்திருப்பதைச் சொல்கிறார்.
குங்குமக்குவியற் தொடர் அத்தனை தோள்களில் பேரலைகள் தரங்கமாடும் குருதிப்பேராழி என்றும் காட்சியளிக்கும்தானே? அதில் மூழ்கும் அஸ்தமனம் எனும் எண்ணற்ற தன்னிறப்புகள். குங்குமம் இறந்த சடலத்திற்கும் பூசப்படுவது. இவர்களுடன் அவன் கொண்டிருந்தது அப்படியொரு கொந்தளிப்பும் துயரமும் நிறைந்த உறவென்றால் அடுத்த வரி இதன் இன்னொரு நிலையைச் சொல்கிறது.
தோள்களில் எழுந்த அஸ்தமனக் குண்டலங்களின் நேர் தலைகீழ் காட்சியாக முத்துமாலை சொல்லப்படுகிறது. அங்கு அதே கதிரவன் நிலவென தனது விண்மீன் குழுவினருடன் திகழ்கிறான். ஒளியுடன், தண்மையுடன். ‘சிதைவு இல் திங்களும் மீனும்போல்’ எனும் வரியில் சிதைவில்லாத சந்திரன் என்பது அத்தமன சூரியனுக்கு எதிர்ப்பொருளில் உத்தேசிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அத்தமனத்திற்குப் பின்னும் செல்லும் ஒரு இடம் உண்டென்றால், அங்கு இந்தக் கருமையும் செம்மையும் இல்லாத உலகில் அமைதியின் பூரணத்துடன் தன் அன்பிற்கினியார்களுடன் தானும் முத்தென முகிழ்த்து இனிதிருக்கிறான். ஆம், இனி வருவதையும் அவன் அணிந்து செல்கிறான் என்பதாகவே.
அவன் இறப்புக்குப் பின்னர் அவன் மனைவியர் கடலென விரிந்த அவன் மேனியில் அன்னப் பறவைகளின் குழுவென வந்திறங்கும் காட்சி, இந்தப் பாடலின் இவ்விரண்டு காட்சிகளுக்கும் இடையில் உள்ளது. அவர்களின் குங்குமத் தோள்களில் அவன் சூரியனென இறங்குவதற்கு பலவகையிலும் தொடர்ச்சியாக அமைவது. மேலும் முத்துக்களின் மாலை என்பதால் குளிர்ச்சியும் இனிமையும் மட்டுமல்ல, கண்ணீரெனும் துளிமுத்துகளால் கோர்க்கப்பட்டது அது என்பதாகவும்.
*
வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப;
(9653)
தசமுகங்களின் மணிமுடிப்பத்திகளும் அவற்றின் மேல் வெண்கொற்றக்குடையும் சொல்லப்படுகிறது. விடியற்பொழுதில் கடலில் ஆதித்யர்கள் அனைவரும் வந்துகூடியதுபோல அவன் கருமேனி சிரங்கள் ஒவ்வொன்றிலும் மணிமுடிகள் திகழ, அவற்றின்மேல் பல கலைகள் கொண்டு வளரும் சந்திரர் தங்கள் முழுமை கொண்டு வெண்கொற்றக்குடைகள் என ஒளிவீசுகின்றன. சூரியர்கள் பலவாவது, சூரிய சந்திரர் இணைந்து தோன்றுவது ஆகியவற்றை வைத்து ஊழி அழிவின் கோள்குறிகளாக இதை வாசிப்பது ஒரு கோணம். ஆனால் குடை கதிரவனிலிருந்து காத்து நிழல் அளிப்பது. கதிரவர்களுக்கு குடை அளிப்பது எது?
இப்பாடலில் விடியும் காலை உற்றனர் ஆம் என எனும் குறிப்பு முக்கியமானது. முந்தைய பாடல்களின் குறிப்பில் கால இடங்களை கடந்தவனாக அவனை அணிகள் கூறின. நாளின் இரண்டு பொழுதுகளை தானணிந்தவன் என்ற சென்ற பாடலின் குறிப்பு காலத்தை அவன் தீர்மானிக்கிறான் என்றும் கூறுகிறது. இங்கு விடியும் பொழுது வந்துற்றது என்று கதிரவர்களாகிய மகுடங்கள் தீர்மானித்து தாங்களே எழுந்தருள்கின்றனர். கடலாகிய மேனியில். அலகற்ற முடிவிலாத பிரபஞ்ச வெளியெனும் கடலில் இருந்து உதித்தெழும் கதிரவர்கள். ஆணவத்தின், இத்தனைக்கு அப்பாலும் தானென்று எழுவதின் தசோதயங்கள். அல்லது நெருநல் உளனொருவன் இன்றில்லை என்று கூறும் புது விடியல்கள்.
முந்தையப் பாடல் தோள்களில் இன்னும் சூரியர்கள் அத்தமித்துக் கொண்டிருப்பதைக் காட்ட, இங்கு தலைகளில் அருக்கர்கள் உதயமாவது அவன் விண்ணளந்த பேருருவையும் ஒருசேரக் காட்டுகிறது.
இப்பாடலின் சந்திரக்குடை முழுநிலவின் ஒளியுடன் எழுகிறது எனக் கொள்கிறேன். மதியம் முன் நாளிடைப் பலவாய் ஏல முற்றிய அனைய முத்தக்குடை இமைப்ப. முன் நாட்களில் பலவாக தேய்ந்து உழன்ற பித்துகள் அகன்று தங்களுக்கு இயன்ற முழுமையை அடைந்து எழுந்தவை என்னும்படி. அது குடைகளாக குளிர்ந்தெழுந்து வெய்யவர்களை தணிக்கிறது. போருக்கு மணிமுடிகளாக எழுகின்ற வெம்மை, சினமோ ஆணவமோ ஞானமோ அது எதுவானாலும் முன்னர் சொன்னதுபோல அவை கண்ணீரின் முத்துக்களால் குடையென சூழப்பட்டுள்ளன. முன் நாளிடைப் பலவாய் ஏல முற்றிய என்ற சொற்கள் முன்னாட்களில் பலவாக அழுதவை என்பதையும், இனி அழக் கண்ணீரில்லை என்பதையும் சொல்கின்றன.
*
பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க;
(9654)
கடைவாய்ப் பற்களின் காட்சி. பல வளங்களுடைய குன்றுகளில் உள்ள குகை போன்ற வாய்களின் விளிம்பாக அமைந்த கடைவாய்தோறும் கடைவாய்தோறும் இருக்கும் வளைந்த எயிறுகளின் ஈட்டம், மிகுந்த நீலவான் மேகங்கள் சூழ்ந்த பின்னணியில் முளைப்பாரியின் பாலிகைகளில் எழுந்த செவ்வானத்துப் பிறைகள் என எழுந்துள்ளன.
நிறைய தகவல் நுணுக்கங்களுடன் சொல்லப்பட்ட விரிவான காட்சி. மலைகளும் நீலவானமும் அவன் மேனிக்கும் முகத்திற்கும். குகையும் பாலிகையும் அவன் வாய்க்கு. வாயின் உள்ளமைந்த செந்நிறப் பின்னணி செவ்வானத்துக்கும், வளைபற்கள் பிறை நிலவுகளுக்கும் பாலிகை முளைகளுக்கும்.
சென்ற பாடலில் உதிக்கும் சூரியர்களுக்கு மேல் முழுநிலவுகள் எழுந்திருந்தன. இங்கு அந்தி வானச் செம்மையில் பிறை நிலவுகள். மீண்டும் நாளின் பொழுது மாறியுள்ளது. மாறியுள்ளது என்பதைவிட பின்னணியில் கூடவே இன்னும் விரிந்த நீலவானத்தைச் சொல்லி இப்பாடல் அளிப்பது, ஒரு வித இன்ன பொழுது என்றில்லாத மயக்கத்தையே. இடமயக்கமும் இணைகிறது.
மிகுந்த வளங்கள் நிரம்பிய மலையில் என்ன உள்ளதென்று அறிய முடியாத ஒரு குகை இருக்கிறது. குகைகள் இருளடர்ந்தவை, காட்டு மனிதர்கள் வாழ்பவை, வல்மிருகங்கள் உறங்குபவை, தொல்காலத்தயவை. அதில் எழும் தந்தப் பிறைகளும் அந்த மூர்க்கத்தையே காட்டும். ஆனால் இராவணனின் வாய் அருகில் காட்சியளிப்பது ஒரு பாலிகைக் கலனாக. அதில் முளைகளென பிறைநிலவு எயிறுகள் எழுந்துள்ளன. கடைவாய் எயிறுகள் அசுரர்களின் தனித்தன்மைகளில் ஒன்று. இங்கு அது பிறை மட்டுமல்லாமல் மென்மையான தளிர்முளைகளாகவும் காட்சியளிக்கிறது. குருதிப்பெருக்கில் விழுந்த மதயானை தந்தப் பிறைகள். அல்லது உற்றார்களின் குருதிப்பெருக்கில் முளைவிட்ட ஞானப் பிறைகள்.
அவன் என்பது அவன் குலமும் தானே. மொத்த குலமும் அழிந்துவிட மறுநாளே முளைவிட்டெழும் உயிர்த்துடிப்புடன் இன்னும் இன்னும் அவை எழுந்து வரும் சாத்தியங்களை காட்டுகிறாரா? குலம் செழிக்க அசுர மகளிர் தங்களில் தூவிக் காத்திருந்த சந்ததியினருக்கான பிரார்த்தனைகள் முளைத்தெழுகின்றனவா? ஒன்றுமில்லாமையிலிருந்து புல்லென பிறந்து பரவி நிறையும் மூர்க்கமும் குழவியரின் தளிர்த்தன்மையும் இணையும் ஒரு சித்திரம் இந்தக் காட்சி.
*
ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஓதம்
தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க;
(9655)
பத்து தலைகளும் ஒருநிலைக்கு வருதல். நெற்றியில் வீரப்பட்டம் சொல்லப்படுகிறது. ஒன்றேபோல ஒளிர்வதும், முத்துக்களின் ஒளிவீசுவதுமான வீரபட்டங்கள் நெற்றியில் தயங்குகின்றன. முத்த ஓடைகள் அணிந்த திசையானைகளின் அழகுடன் போட்டியிட்டு இந்தப் பட்டங்களின் ஒளியால் அவன் தயநுதல்களும் ஒளிவிடுகின்றன. அஸ்தமனத்திலிருந்து உதயத்திற்கு, சூரியர்களிலிருந்து நிலவுக்கு, வெம்மையிலிருந்து குளிர்ச்சிக்கு என்று செல்லும் ஓட்டத்தில், இப்பாடலில் மீண்டும் குருதியின் பின்னணியில் எழுந்த பிறைநிலவுகளிலிருந்து முழுநிலவுகளின் பொலிவிற்கு.
ஒத்த தன்மையின் ஒளிர்வன எனும் வரி பத்து தலைகளும் ஒருநிலையில் ஒருப்பட்டிருக்கின்றன என்பதையும், தரளத்தின் ஓதம் தத்துகின்றன என்பது பாற்கடலின் அழகிய வெள்ளி அலைகள் போல முத்தப்பட்டத்திலிருந்து ஒளி சிந்தி தத்தி வருவதையும் அழகுறச் சொல்கிறது. நாடுகளை பூமியை உலகங்களை வெல்ல வேண்டும் என எழுந்த மனம் அனைத்தையும் வென்று இனி வெல்ல நாடுகள் இல்லை என வெறுந்திசைகளின் எல்லை வரை சென்று துழாவியது. வெறிகொண்ட அந்த திசைப்போர் மார்பில் தந்தங்கள் நுழைந்து தழும்புகளென இறுகின. அந்த அணிகளைத் தந்த திசையானைகளுக்கு பொலிவு சேர்ப்பவை அழகுற முத்துகளின் ஓடைகளென வழிந்த அதன் முகப்படாம்கள். அந்த எண்திசை முகப்படாம்களுடன் போட்டியிட்டு வெல்லும் எழிலுடன் பொலிகின்றன இராவணன் பத்து தலைகளின் நுதற்சுட்டிகள்.
ஒத்த தன்மையின் ஒளிர்தல் எனும் குறிப்புக்கு மறுகுறிப்பாக முரண் திசை முழுமத யானை என்பது வருகிறது. ஒவ்வொன்றும் மற்றொன்றின் முகம் பாராமல் ஒவ்வொரு திசை நோக்கி அமைந்திருக்க, இராவணனது முகங்கள் அனைத்தும் ஒருதிசை நோக்கி ஒருப்பட்டிருக்கின்றன. அனுமன் இழுத்துவரப்படுகையில் அரசியலும், மாட்சியும், சீதையும் என ஆற்றியிருந்த தலைகள் அல்ல இப்போது. இந்திரசித்தன் இறந்தபோது விண் திறந்திட கதறி அழுத பத்து தலைகள் அல்ல இங்கு. தங்களுக்குள் மோனத்தில் ஆழ்ந்து, வரவிருக்கும் சாந்தத்தில் கனவுகண்டு இயைந்திருக்கின்றன. இது அவனை இறந்தபின் மும்மடங்கு பொலியச் செய்தது எதுவோ அது.
*
புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் தலங்கள்
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற;
(9656)
புலக்கும் மங்கையரின் பூஞ்சிலம்பு அணிந்த அடிகளுக்கு தவிர, தலைமை என்று கருதி வீற்றிருப்பவர் எவருக்கும் தாழ்ந்திராத அந்த மணிமுடித்தலங்கள், உலகத்தை ஒளிபெறச்செய்யும் அந்த பிரகாச சூரியனை ஓடச்செய்து, முடிவற்று விரிந்துகிடக்கும் அனைத்து உலகங்களிலும் இருளையும் ஓடச்செய்தது. ஒளி இருள் இரண்டையும் ஓடச்செய்து புத்தொளி படைக்கும் ஆற்றல் கொண்டவை அவை. அது வலியவர்களிடம் முரண்பட்டும், தன் பெண்களிடம் தாழ்கையிலும் அந்த மணிமுடிகளில் எப்படி வருகிறது?
போர்க்கோல வர்ணனையில் சட்டென்று வேறொரு பாதை எடுத்து இது அகத்துறைக்குச் செல்கிறது. மகளிர்க்கும் அவனுக்குமான மிக அந்தரங்கமான ஒன்றை, பொதுவெளியில் வாள்தாழ்த்தி தன்னைவிட வல்லான் அல்லது மேலான இன்னொருவருக்கு பணிவதை ஒப்பிடுகிறது.
நீரும் நிழலது இனிது புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
ஓடைக்கரையை ஒட்டி கிளைவிரித்துள்ளது ஒரு பெருமரம். மரத்தை ஒட்டி ஓடும் நீர் அதன் நிழலால் குளிர்ந்து இனிதாயிருக்கிறது. புலவுதல், ஊடுதல் அதை எதிர்நோக்கி வந்து அதில் இணைந்து கொள்பவரிடத்தில் இனிதானது. வீழுநர் என்ற சொல்லால் அதைக் குறிக்கிறார். ஓங்கி கிளைவிரித்த அந்த மரம் நீருக்காக நிழலென தரையில் விழுந்து கிடக்கிறது.
அரசர்கள் அசுரர்கள் தேவர்கள் மும்மூர்த்திகள் கடவுளர் எவருக்கும் முன் பணியாத தலைகள் கொண்டவன் இராவணன். அதற்கென்றே பத்தென தலைகள் பெருகியவன். ஆனால் பூஞ்சிலம்பினரின் முன்னிலையில் வீழும் நிழல் கொண்டவனாகிறான். இரண்டுமே ஒரே மனிதன். அரற்றும் பூஞ்சிலம்புகள் எனும் படிமம் மிக அழகானது. காதல், வீரம் இவையெல்லாம் தாண்டி சூரியன் நிலவு, கருடன் நாகம், அமுதம் விஷம், இவற்றிலெல்லாம் சொல்லமுடியாத ஒரு ஆணுலகின் இருமையை இந்த அணி சொல்கிறது. எந்த ஒரு உலகியலாளனும் யதார்த்தம் என வாழ்ந்துகொண்டிருப்பது. குறளில் ஊடலுக்கு மட்டுமென வந்த அணி இங்கு முற்றிலும் வேறான புறவுலக ஆளுமைக்கு அருகில் வைக்கப்பட்டு இன்னும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
‘வயங்கு’ இருள் என்பது ஒளிவிடுவது, உலகமெங்கும் வியாபித்திருப்பது, எல்லை கடந்தது. அந்த பிரகாசம் ஒருவேளை அவனது வெற்று அகங்காரம் அல்ல. தன்னிலிருந்து ஒருவன் இத்தனை ஒளியை பத்தென பெருக்கிக் கொள்ள முடியுமெனில், அது உலக எல்லைகள் வரை இருளை ஓட்ட வல்லதெனில், ஏன் இருக்கும் ஒற்றைச் சுடரை பணிய வேண்டும். அல்லது உலக எல்லைகள் வரை இருளை ஓடச் செய்த மணிமுடிகள் தனக்கு கீழே இருக்கும் தலைகளின் கருமையை ஓட்ட இயலவில்லையா? பூஞ்சிலம்புகளில் தலைகளை வைக்கையில் மட்டுமே அந்த காரிருள்கள் அகன்று சென்றனவா? அப்படி அந்த இறுதி இருளும் நீங்கும் படியாக தேடிச் சென்றது சனகியின் அடிகள்.
இராமன் தன்முன் மரபென வருபவற்றின் முன் வணங்கிக்கொண்டே இருக்கிறான். தந்தை, தாயர், ஆசிரியர், மூத்தோர், முனிவர், நூல்கள் அனைவரிடமும். அது பணிவென கொள்ளப்பட்டு அவன் மாட்சியின் ஒரு பகுதியாகிறது. ஆனால் அவன் ஏற்கனவே சக்கரவர்த்தி திருமகன் என்பதும் காரணம்.
தந்தை வழி வராத அரசுரிமையை குபேரனிடமிருந்து கவர்ந்து, எண்டிசைகளை வென்று, இனித்தான் அரசமைத்து தன்னை நிலைநாட்டிக்கொள்ள வேண்டிய ஒருவனுக்கு இராமனுடைய பணிவு இயல்வதல்ல. தன்னுடையதனைத்தையும் தானே வென்றெடுக்கும் ஒருவன் எங்கும் எவருக்கும் பணிந்து கொண்டிருப்பதில்லை. அப்படியொருவன் காதலிலும் கரைந்து முதிர்ந்ததன் லௌகீக விவேகத்தைச் சொல்கின்றன அந்த ஒளிரும் மணிமுடிகள். அதுவே உலக எல்லைகளின் வயங்கு இருளையும் அகற்றுவதாகிறது.
*
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன்பு அணிந்த
வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி;
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி;
(9657)
பாதாளம் பூலோகம் பிரம்மலோகம் என தான் விரும்பிய மூன்று உலகங்களையும் கைபற்றி, முன்னர் தேவர்கள் அணிந்திருந்த வாகை மாலையை வரி வண்டுகள் சூழுமாறு சூட்டி, தோகையர்கள் விழிகள் தொடரும் தும்பை மாலையையும் அணிந்துகொள்கிறான்.
இரண்டு மாலைகள் போரில் ஒருவன் அணிந்து செல்வது அத்தனை வழக்கமில்லை. வாகை அதுவரையிலான வெற்றியை பறை சாற்றுகிறது. இதுநாள் வரை தான் யாரோ அதை இன்னும் இழக்காமல் செல்கிறான். அதிரப்பொருவது தும்பை. இதற்குமேல் போரில்லை எனும் நெஞ்சத்துடன் வரவிருக்கும் வெற்றி பேரழிவு அனைத்தையும் எதிர்நோக்கி அணிவது.
அவனது அதுநாள் வரையான வெற்றியை வாகை மாலையில் வண்டுகள் போன்ற முகம் தெரியாத மாந்தர்கள் அவனில் பார்க்கிறார்கள். வண்டுகள் நாகம் நானிலம் சத்யம் என முவுலகங்கள் வழியாக சுற்றி அமர்ந்து எழுந்து அவ்வெற்றிகள் வழியாக பறக்கிறது. வெற்றியின் தேனைக் களித்து.
தும்பைத்தாரில் அவனது அணுக்கப் பெண்டிர்கள் காண்பது வரவிருக்கும் அழிவை. விழிகளும் வண்டுகளே. ஆனால் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டவை. பறப்பதில்லை, அவை முகத்தமைந்து இல்லத்திலிருக்கின்றன. தேன் களிக்கவில்லை. இறுதிப்போரின் விளைவை எண்ணி அவை இங்கு இமைத்திருக்கின்றன, வெறுமே பின்தொடர்கின்றன. முதன்முதலில் அவன் தொழுது வணங்கியபோது நாம் கண்ட இமையாத முக்கணானின் விழிகளைப்போல. கடவுளும் குலமும் விழிகள் பின்தொடரச் செல்லும் ஒருவன்.
சென்ற பாடலில் எந்த மகளிரின் முன் விழுந்தானோ அதே மகளிரின் விழிகள் இவை எனக் கொண்டால் இரண்டு பாடல்களிலும் ஒரு பொதுவான கருப்பொருள் திரள்கிறது. குடும்பத்தை குலத்தை மையமாகக் கொண்ட, ஒருவரையொருவர் ஒன்றி நிரப்பிக்கொள்ளும் ஒரு பரஸ்பர உறவு. இதுவரை பிரபஞ்ச ரூபனாக, அதன் நீள அகலங்களின் குறியீட்டுத் தன்மையுடன் செய்யப்பட்ட அணிக்கோலம், இதில் குலமகளிரின், அன்னையரின் கண்களால் பூர்த்தியாவது விந்தையான ஒரு நிறைவுணர்வை தருகிறது. அந்த நாட்டங்கள் வழியாக என்றும் வாழும், இன்னும் இன்னுமென பெருகும் ஒரு தளத்திற்கு அந்த அணிக்கோலம் வழி அவன் சென்றுவிட்டது போல.
இமையாத முக்கணான் என்பது யோகத்தில் திறந்த மூன்றாம் விழிக்கான குறிப்பாக இருக்கலாம். ஆனால் தன்னை வணங்குபவனுக்கு ஒன்றும் செய்ய இயலாது பின்தொடரும் அந்த விழிகள், என்றும் இமையாது அவனை நோக்கிக்கொண்டிருப்பவை, இன்னும் துயர் நிறைந்தவை அன்னை விழிகள் என்றே எனக்கு பொருளாகின்றன.
*
அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத
புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி;
(9658)
ஆழமான கடலை, காலத்தை, கடற்கரையில் விரிந்து கிடக்கும் நுண்மையான மணலை, வானில் திகழும் விண்மீன்களை, கல்வியை எல்லாம் எதற்கு எண்ண வேண்டும்? இந்த உலகத்தின் கட்டுமானத்திற்கு அடிப்படையாக அமைந்த அந்த அழிவற்ற ஐம்பூதங்கள் அழிந்தாலும், அழியாது நீடிக்கும் புகழ் போல, என்றும் குறையாத சரங்கள் கொண்ட அம்பறாத்தூணியையும் பூட்டினான். இதன் பிறகு ‘வருக தேர்’ என்கிறான் இராவணன். அந்த தேர் இப்படியொரு உடலை தாங்கும் தன்மையை கொண்டுள்ளதைச் சொல்லி, அதில் அவன் ஏறி போர்க்களம் காண்பது வரை இப்படலத்தின் கதை செல்கிறது.
பால காண்டத்தில் குரு விஸ்வாமித்திரருடன் கிளம்புகையில் முதன்முதலில் இராமன் தனது ஆயுதங்களைப் பூண்கிறான். அந்த புகழ்பெற்ற வரியில் அம்பறாத்தூணி மெய்ம்மை போல் என்றும் தேய்வுறாத் தூணி யாத்து என்று சொல்லப்பட்டது. மெய்ம்மை ஒரு அமுத சுரபி போல அள்ள அள்ள குறையாத ஒரு கொள்கலனாக வரும் பிரமிப்பூட்டும் கற்பனை. உண்மை, ஞானம் என மெய்மையை எடுப்பது ஒரு வாசிப்பு. Reality எனும் பொருளில் இவ்வுலக கட்டுமானத்தின் மாறாத யதார்த்தம் என எடுப்பது தேவாசுரப் போரின் மையமோதலை சுட்டி, அதன் பிரதிநிதியாக இராமன் இங்கு எழுவதையும் காட்டும். ஊழி இறுதிக்கு, திசைகளின் எல்லைக்கு என முடிவுகளின் தொலைவுக்கு அவன் அம்புகள் சென்றாலும் மீண்டு அவனிடமே வருவது அதன் வழியாக தொடர்ந்து கற்று முன்னகரும் அவன் பாத்திரத்தின் இயல்பையும் காட்டுகிறது. விஞ்சையை நினைப்பது என் என்ற சொற்கள் நாவில் உதிக்கையில் இராமனின் கல்விக்கு அப்பால் செல்வது என்றும் இராவணன் புகழை கவி உத்தேசித்தரா என ஒருவர் கேட்டுக்கொள்ளலாம்.
நேரடியாக இராவணன் தானழிந்து அழியாப்புகழ் கொள்ளவிருக்கிறான் என்பதே இப்பாடலின் மையம். அவனது பூத உடல் கடலாக, காலமாக, மறை வடிவாக, விண்ணையும் மண்ணையும் இணைப்பதாக இதுவரையான முந்தையப் பாடல்கள் சொன்னது. அவை அனைத்தும் இப்போது இந்த இறுதிப் பாடலில் அந்த தூணிக்குள் அம்புகளாக நிறைந்திருக்கின்றன என்று எடுக்கலாம். அதாவது இதுவரை அவனென திரண்ட அனைத்தும் தூணிக்குள் அம்புகளாக என்று. அது அழியாப்புகழாக அவன் முதுகில் உள்ளது என்பது, அதுவரையிலான புகழ் அனைத்தையும் தானென நினைத்திருக்கும் ஒருவன் ஒரு சுமை போல அவனே அவனுக்கு பூட்டிக்கொள்கிறான் என்று. அல்லது அவனால் அதைப் பார்க்க முடியாது, பிறர் நோக்க அவனில் திகழ்வது, இறப்புக்கு பின் வளர்வது என்பதாக. நினைப்பது என் – எனும் கூற்று சொல்லிச் சொல்லி அந்த இறுதி மலைப்புக்கு கவி வந்திருப்பதை காட்டுகிறது.
ஆனால், சென்ற பாடலின் தொடர்ச்சியென இதை எடுக்கையில் அந்த தூணியின் அம்புகள் இன்னொன்றை நமக்கு காட்டுகின்றன. இத்தனை விஷயங்களை நினைப்பது ஏன், அந்த அம்புகள் அவன் தூணியில் ஊறுவது அவை திகழும் ஐந்து பருப்பொருட்களின் வெளியால் அல்ல, அவற்றை இயற்றும் அவனது இருபது கரங்களாலோ கூட அல்ல, அவனைப் பின்தொடரும் கண்நிறையும் பார்வைகளால் என்று ஒருவர் நீட்டிக்கொள்ளமுடியும். அன்பின் பார்வைகளே அந்த குன்றா அம்புகள். அவற்றை ஈட்டிக்கொண்டதே அந்த புகழ். இமையாத ஈசனின் விழிகளையும், கண்ணீர் மினுமினுக்க அவனைப் பின்தொடரும் அன்னையர் விழிகளையும் ஒருவர் அளப்பது எப்படி?

Leave a Reply